வழக்கு (இலக்கணம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ் இலக்கணத்தில் வழக்கு என்பது மக்களின் பேச்சு வழக்கிலும், இலக்கிய வழக்கிலும் சொற்கள் வழங்கப்படும் முறை அல்லது பயன்படுத்தப்படும் முறை ஆகும். நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கி வந்தனரோ நாமும் அவ்வாறே வழங்கி வருவதைக் குறிக்கும். வழக்கு என்பது மரபு அல்லது பழக்கம் என்ற பொருளிலும் கையாளப்படுகிறது. ஒரு சில காலத்தில் இலக்கண விதிகளுக்கு மாற்றாகச் சொற்கள் பயின்றுவரின் அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே வழக்காகும்.
வழக்கின் வகைகள்
தொகுதமிழ் இலக்கணத்தில் வழக்கு இருவகைப்படும்.
- இயல்பு வழக்கு
- தகுதி வழக்கு
இயல்பு வழக்கு
தொகுஒரு பொருளுக்கு அமைந்துள்ள இயல்பான சொல்லால் அப்பொருளை வழங்குவது இயல்பு வழக்கு எனப்படும். இது
- இலக்கணம் உடையது
- இலக்கணப்போலி
- மரூஉ அல்லது மரூஉ மொழி
என மூவகைப்படும்.
1. இலக்கணம் உடையது
தொகுஇலக்கண நெறிப்படி முறையாக வரும் வழக்கு இலக்கணம் உடையது எனப்படும். சான்று:
- நிலம், நீர், தீ, வளி, வெளி, மண், மலை. முதலியன.
2. இலக்கணப்போலி
தொகுஇலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும். சான்று:
- இல்முன் → முன்றில்
- கால்வாய் → வாய்க்கால்
- கோவில் → கோயில்
- நகர்ப்புறம் → புறநகர்
- மிஞிறு → ஞிமிறு
- கண்மீ → மீகண்
- தசை → சதை
- கொம்பு நுனி → நுனிக் கொம்பு
தடித்த எழுத்தில் உள்ளவை சரியான சொற்களின் இலக்கணப்போலிகள் ஆகும். நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழையல்ல என்று கருதப்படுகிறது.
இலக்கணப் போலி 1. முதற்போலி 2. இடைப் போலி 3. கடைப்போலி என மூவகைப்படும் சான்று
1. முதற்போலி - மஞ்சு -மைஞ்சு 2. இடைப் போலி - அரசன் - அரைசன் 3. கடைப்போலி - அறம் -அறன்
3. மரூஉ
தொகுதொன்று தொட்டு வழங்கி வருதல் மட்டுமின்றி, இடையில் சில எழுத்துகள் தோன்றியும் திரிந்தும் கெட்டும் இலக்கணம் சிதைந்து, தானே மருவி (மாறி) வழங்குவது மரூஉ என வழங்கப்படும். சான்று:
- அருமருந்தன்ன → அருமந்த
- தொண்டைமாநாடு → தொண்டைநாடு
- தெற்குள்ளது → தெனாது
- மலையமானாடு → மலாடு
- பொழுது → போது
- வாயில் → வாசல்
- குளவாம்பல் → குளாம்பல்
- உறையூர் → உறந்தை
- கும்பகோணம் → குடந்தை
- தஞ்சாவூர் → தஞ்சை
- திருச்சிராப்பள்ளி → திருச்சி
- கோயம்புத்தூர் → கோவை
இவ்வாறுசிதைந்து வருவது மரூஉ எனப்படும்.
2. தகுதி வழக்கு
தொகுபொருள்களுக்கு அல்லது செயல்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை வழங்குவது தகுதியன்று எனக்கருதி, அவற்றை ஒழித்து (மறைத்து) தகுதியான வேறு சொற்களால் அப்பொருள்களை அல்லது செயல்களை வழங்குதல் தகுதி வழக்கு எனப்படும். அனைவரின் முன்னும் பேசத்தாகாத சொற்களுக்குப் பதிலியாக தகுதியான சொற்களைப் பேசுதலாகும்.
தகுதிவழக்கின் வகைகள்
தொகுதகுதி வழக்கு
என மூன்று வகைப்படும்.
1. இடக்கரடக்கல்
தொகுநன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும்.
சான்று:
- மலம் கழுவி வந்தேன் → கால் கழுவி வந்தேன்.
- மலம் என்ற சொல்லின் இடக்கரடக்கலாக 'கால்' என்ற சொல் வழங்கி வருகிறது)
2. மங்கலம்
தொகுமங்கலமல்லாத சொற்களைக் கூறாமல் ஒழித்து, மங்கலமான சொற்களைக் கூறுதல் 'மங்கலம்' எனப்படும்.
சான்று:
- செத்தார் → துஞ்சினார், இறைவனடி சேர்ந்தார்
- சுடுகாடு → நன்காடு
- ஓலை → திருமுகம்
- பொய்யாகிய உடல் → மெய்
- தாலி அறுந்தது → தாலி பெருகிற்று
- கருப்பு ஆடு → வெள்ளாடு
(தடித்த எழுத்தில் உள்ளவை மங்கலமான சொற்களாகும்.)
3. குழூஉக்குறி
தொகுஒரு குறிப்பிட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒரு பொருளை அல்லது செயலைக் குறிக்கும் சொல்லை ஒழித்து, வேறொரு சொல்லால் அப்பொருளை அல்லது அச்செயலைக் குறிப்பிடுவது 'குழூஉக்குறி' எனப்படும். சான்று:
- பொன் → பறி ( பொற்கொல்லர் பயன்படுத்துவது)
- கள் → சொல்விளம்பி (வேடர்கள் பயன்படுத்துவது)
- ஆடை → காரை (யானைப்பாகர் பயன்படுத்துவது)
நூற்பா
தொகு- "இலக்கண முடையது இலக்கணப் போலி
- மரூஉஎன் றாகும் மூவகை இயல்பும்
- இடக்க ரடக்கல் மங்கலம் குழூஉக்குறி
- எனுமுத் தகுதியோ டாறாம் வழக்கியல்." (நூற்பா.267)
மேற்கோள்
தொகு- தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - அண்ணமலைப் பல்கலைக் கழக வெளியீடு.