வானவன் மாதேவி ஈச்வரம்

வானவன் மாதேவி ஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள்,முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.

காலம்

தொகு

இக் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் இராஜேந்திர சோழனின் ஆரம்பகாலக் கல்வெட்டு சான்றைக் கொண்டு, இக்கோயில் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது. இராஜராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் தாயின் பெயர் வானவன் மாதேவி என அறியப்படுகின்றது. எனவே தனது தாயின் பெயராலேயே இந்தக் கோயிலை அவர் அமைத்திருக்கக்கூடும்.

கட்டிடக்கலை

தொகு

வானவன் மாதேவி ஈஸ்வரம், தமிழர் கட்டிடக்கலையின், சோழர் பாணியின் ஆரம்பகாலத்தைப் பிரதிபலிக்கின்றது. சோழர்களின் குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைப் படைப்புகளில் இக் கோயிலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இக் கட்டிடம் தமிழ் நாட்டில் கட்டப்பட்ட கோயில்களைப் போலன்றி அளவில் சிறியதாகக் காணப்படுகின்றது. கருவறையையும், அதன் முன்னால் ஒரு மண்டபத்தையும் கொண்ட இக்கோயிலின் கருவறையின் வெளிப்புறம், 20 அடி 6 அங்குல அளவு கொண்ட சதுர வடிவமானது. உட்புறம், 9 அடி 4 அங்குலச் சதுரம் ஆகும். இதிலிருந்து அதன் கருவறைச் சுவர் 5 அடி 6 அங்குலத் தடிப்புக் கொண்டது என அறிய முடிகின்றது. இதன் முன் மண்டபம் 16 அடி நீளமும், 9 அடி 4 அங்குல அகலமும் கொண்டது. கருவறையின் மீது அமைந்துள்ள விமானம், நிலத்திலிருந்து 31 அடி 9 அங்குல உயரம் கொண்டதாக உள்ளது.

உசாத்துணைகள்

தொகு
  • இந்திரபாலா கா., இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, விஜயலட்சுமி புத்தகசாலை, கொழும்பு, 1970.
  • கொடகும்புர C. E., Architecture of Sri Lanka, கலாச்சாரத் திணைக்களம், இலங்கை, இரண்டாம் பதிப்பு, 1976

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானவன்_மாதேவி_ஈச்வரம்&oldid=3482226" இலிருந்து மீள்விக்கப்பட்டது