விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 10, 2010

வெண் சங்கு (Xancus pyrum) மெல்லுடலிகளில் ஒன்று. இது வலம்புரிச் சங்கு எனவும் சிலுவைச் சங்கு எனவும், தட்சணாமூர்த்திச் சங்கு எனவும் அழைக்கப்படுகிறது. இந்தியச் சங்கு இனமான சாங்கசு பைரம் தற்போது டர்பினல்லா பைரம் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் கடினமான ஓடு சுண்ணாம்பினால் ஆனது. சங்குகள் கூட்டம் கூட்டமாக வாழும் தன்மை கொண்டவை. கடலின் அடி மட்டத்தில் 20 முதல் 25 அடி ஆழமுள்ள சங்குப் படுகைகளில் வாழ்கின்றன. சங்கு ஒரு புலால் உண்ணியாகும். இவை கடலடியிலுள்ள புழுக்களை அதிகம் உண்கின்றன. சங்கு கடல் தரையின் மீது ஊர்ந்து செல்லும்போது, கடினமான பொருள்கள் அதன் மென்தோல் அறையினுள் நுழைந்து விடாமல் தடுக்க, சளி போன்ற நீர்மத்தை வழியில் சுரந்து அதன் மீது செல்கின்றது. சனவரி முதல் மார்ச் வரை மற்றும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை உள்ள காலம் சங்கின் இனப்பெருக்கக் காலம் ஆகும். பெண் சங்கு இனச்சேர்க்கைக்குப் பின் வெளியிடும் முட்டைக்கூடு சங்குப்பூ எனப்படுகிறது. இக்கூட்டின் குறுக்குவாட்டில் ஒன்றின் மீது ஒன்றென 24 முதல் 28 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்குள்ளும் கருவுற்ற முட்டைகள் இருக்கும். அறைகளின் பக்கவாட்டில் உள்ள துவாரத்தின் மூலம் கருவுற்ற முட்டைகளுக்குத் தேவையான உயிர்வளி கிடைக்கிறது. பின்பு கூட்டினுள் இருந்து இளம் சங்குகள் வெளிப்படுகின்றன. மேலும்


புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (1906-1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002 இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 கதைகள் தான் அவர் காலத்திலேயே வெளியிடப்பட்டன. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். மேலும்..