விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/அக்டோபர் 23, 2011
ஓஊ என்பது ஹவாய் தீவுகளுக்குத் தனிச் சிறப்பான மிக அருகிவிட்ட பறவையினங்களில் ஒன்றாகும். இதனைப் பற்றி மிக அண்மைக் காலத்திய பதிவுகள் எதுவும் கிடைக்கப் பெறாமையால், இது ஒரு வேளை முற்றாக அற்றுப்போயிருக்கலாம். ஓஊ பறவை 7.1 அங் நீளமான, பெரிய, சதைப் பற்றுள்ள ஒரு பறவையாகும். இவற்றின் ஆண் பறவைகள் வெளிச்சமான மஞ்சள் நிறத் தலையையும் கடும் பச்சை நிற முதுகுப் பகுதியையும் இளம் பச்சை நிற வயிற்றுப் பகுதியையும் கொண்டிருக்கும். இவற்றின் பெண் பறவைகள் ஆண் பறவைகளிலும் பார்க்க சற்று நிறங் குறைந்தும் தலை இளம் பச்சை நிறத்திலமைந்தும் இருக்கும். ஓஊ பறவையின் ஒலி தொடர்ச்சியாகக் கூடிக் குறைவதால் தனியான இசை கொண்ட இனிய பாடல் போன்று தோன்றும். ஓஊ பறவையின் தனித் தன்மையதான சொண்டு, இப்பறவையினம் விரும்பி உட்கொள்ளும் ஈஈ பழங்களை உண்பதற்குத் தகைவுள்ளதாக அமைந்துள்ளது. அப்பழங்கள் காய்க்காத காலத்தில் மலைப்பாங்கான பகுதிகளில் வேறு உணவுகளைத் தேடச் சென்றுவிடும். இது பல்வேறு இடங்களிலும் காலத்துக்குக் காலம் கிடைக்கும் பழங்களைத் தேடி நெடுந் தொலைவு பறந்து செல்லும் நாடோடிப் பறவையினமாகும். மேலும்...
சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி (1874-1966) இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவர். 1921 இல் சட்டவாக்கப் பேரவைக்கு வட மாகாணத் தமிழரால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி என்ற பெருமை பெற்றவர். இலங்கை அரசாங்க சபைக்கு 1936 ஆம் ஆண்டு ஊர்காவற்துறை தொகுதியில் இருந்து தெரிவானார். அரசாங்க சபையில் 11 ஆண்டு காலம் சபை முதல்வராகப் பணியாற்றியவர். கல்விமானாகவும் விளங்கியதுடன் சேர் பொன்னம்பலம் இராமநாதனுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் பல சைவப் பள்ளிகளை நிறுவினார். யாழ்ப்பாணம், வேலணையில் பிறந்த இவர் கல்கத்தா சென்று பி. சி. ராய், சேர் ஜகதீஸ் சந்திரபோசு ஆகிய பேராசிரியர்களிடம் கணிதம், அறிவியல் பயின்று பட்டம் பெற்றார். அதன் பின்னர் சட்டம் பயின்று 1902 ஆம் ஆண்டில் வழக்கறிஞரானார். இலங்கைக்கு ஆணிலப்பதம் எனப்படும் டொமினியன் தகுதி வழங்கப்பட வேண்டும் எனவும், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தை சட்டவாக்கப் பேரவையே கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் பேரவையில் கிளர்ச்சியில் இறங்கினார். இவை வழங்கப்படாமையினால் 1931 அரசாங்க சபையை அவர் ஒன்றியொதுக்கல் செய்தார். மேலும்...