வேலணை

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

வேலணை (Velanai) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தெற்கே உள்ள வேலணைத்தீவில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

வேலணை

வேலணை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°41′06″N 79°54′29″E / 9.685°N 79.908°E / 9.685; 79.908
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பெயர் வரலாறு தொகு

வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது[1]. வேல் + அணை = வேலணை; "வேல் அணைந்த இடம்" என்றும் முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்தனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றது.[1][2]. மேலும் கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்னாட்டு இளவரசன் வந்து தரையிறங்கிய இடம் வேலணை என்றும் “வெண்ணிலவுப் பெண்ணரசி” என்ற நாவலில் மீ.ப.சோமு குறிப்பிட்டுள்ளார்.[3]

புவியியல் அமைவிடம் தொகு

 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வேலணைக் கிராமத்தின் அமைவிடம்
 
கடற்கரை

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குத் தென்மேற்காக உள்ள வேலணைத்தீவில் வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்பானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15சதுரகிமீ பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம்.

வானிலையும் காலநிலையும் தொகு

வானிலையும் காலநிலையும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலைகளுடன் ஒத்துக் காணப்படினும் இங்கு வெப்பநிலை சற்று உயர்வாகவும் சோளக வாடைக்காற்றின் தாக்கம் அதிகமாகவும் மழைவீழ்ச்சி, பனித்தாக்கம் சற்றுக் குறைவாகவும் உள்ளது. சராசரி வெப்பநிலை 31OC யாகவும் மார்கழி-தை மாதங்களில் 29-30OC யாகவும் இருக்கும். மேலும் இங்கு கடலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் இரவு வெப்பநிலை வேறுபாடு மிகவும் குறைவாக இருக்கின்றது. புரட்டாதி பிற்பகுதியிலிருந்து மார்கழி வரை கூடிய மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. சராசரி மழைவீழ்ச்சி 35-50மிமி இடைப்பட்டதாகும்.

வரலாற்றுக் குறிப்புக்கள் தொகு

வரலாற்று ரீதியாக வேலணைக் கிராமத்தின் குடிசன வளர்ச்சியினை நோக்கின் இந்தக் கிராமம் யாழ்ப்பாண இராச்சிய காலத்திலேயே முக்கியம் பெற்று விளங்கியது. போர்த்துக்கேயர் காலத்தில் இக்கிராமத்திற்கு அருகாமையில் அமைந்திருந்த ஊர்காவற்றுறை, கரம்பொன், நாரந்தனை போன்ற கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பலர் கத்தோலிக்க மதத்தினைத் தழுவ, வேலணை மக்கள் சைவ சமயத்தவர்களாக விளங்கினர். பின்னர் வந்த ஒல்லாந்தர் காலத்தில் இந்தக் கிராமத்தில் மாற்றங்கள் நிகழ்ந்ததாக வரலாறு இல்லை. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 1860-1875 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை தாக்கிய வாந்திபேதி நோயினால் வேலணைக் கிராமத்தில் பலரும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் தமிழர்கள் வழிபட்டுவரும் கோவில்களிலே மிகப் புராதனமானவற்றில் வேலணை கிழக்கில் உள்ள வேலணை, பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோவிலும் ஒன்று எனக் கருதப்படுகிறது. ஒல்லாந்தர் காலத்துப் பழமையான பத்திரங்களிலிருந்து தொகுக்கப்பட்டு ஆங்கிலேயரினால் சேமித்துவைத்திருக்கும் அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகளிலே இந்தக் கோவில் பற்றிய குறிப்புக்கள் உள்ளது. மேலும் பண்டுதொட்டு இந்தக் கோவிலிலே மிருகபலி இடப்பட்டு வழிபடும் வழக்கம் இருந்தாக அரசாங்கக் கச்சேரிப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன[2].

பொருளாதாரம் தொகு

வேலணைக் கிராமத்தின் பொருளாதாரத்தில் விவசாயம், மீன்பிடி, பனைசார் தொழில் மற்றும் கைவினைத் தொழில்கள் பல நூற்றாண்டுகால முக்கியத்துவம் பெறுகின்றது. பலதுறைப் பொருளாதாரம் இருந்தும் இங்கு விவசாயம் முக்கியம் பெறுகின்றது. அண்மைய தசாப்தங்களில் புகையிலைப் பயிர்ச்செய்கை வேலணைக் கிராமத்தின் மொத்த உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது.

வேலணையில் புகழ் பூத்தவர்கள் தொகு

கோயில்கள்/தேவாலயங்கள்/பள்ளிவாசல்கள் தொகு

 
வேலணை வங்களாவடி முருகன் கோயில்

அவற்றுள் சில:[4]

  • வங்களாவடி முருகன் கோவில்
  • சிற்பனை முருகன் ஆலயம்
  • வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கோயில்
  • வேலணை துறையூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
  • ஆலம்புலம் கந்தபுராண மரம்
  • கோபுரத்தடி ஞானவைரவர் கோவில்
  • செம்மணத்தி நாச்சியார் ஆலயம்
  • அம்பிகை நகர் ஸ்ரீ மகேஸ்வரி அம்மன் ஆலயம்
  • தெப்பக்குளம் நால்வர் மடம்
  • தனித்திரு அன்னம்
  • வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் (முடிப்பிள்ளையார்) ஆலயம்
  • வேலணை இலந்தைவனம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்
  • பள்ளம்புலம் முருகமூர்த்தி திருக்கோவில்
  • வேலணை துறையூர் இலந்தைவனம் ஹரிஹரபுத்திர ஐயனார் ஆலயம்
  • மயிலைப்புலம் ஐயனார் ஆலயம்
  • செட்டிபுலம் காளவாய்த்துறை ஐயனார் ஆலயம்
  • வேலணை கிழக்கு தவிடுதின்னிப் பிள்ளையார் கோவில்
  • வேலணை கிழக்கு அரசபுரம் பெரும்படை ஐயனார் கோவில்
  • வேலணை விழாப்புலம் காளிகா பரமேஸ்வரி அம்பாள் தேவஸ்தானம்
  • நடராசப் பெருமான் கோவில்
  • சாட்டி சிந்தாத்திரை மாதா கோவில்
  • வேலணை வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தேவாலயம்

துணை நூல்கள் தொகு

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமேகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். டொரண்டோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு வெளியீட்டாண்டு-1989
  2. 2.0 2.1 மாணிக்கவாசகர், ச, வேலணை - ஒரு வரலாற்று அறிமுகம் வெளியீட்டாண்டு-2006, வெளியீட்டாளர்-வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை
  3. மீ.ப.சோமு, வெண்ணிலவுப் பெண்ணரசி பதிப்பு:சென்னை,பாரி நிலையம், 1967
  4. "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலணை&oldid=3907030" இலிருந்து மீள்விக்கப்பட்டது