விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 7, 2013
நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயிலின்படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். மேலும்...
வை. கோவிந்தன் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இதழியலாளரும் எழுத்தாளரும் ஆவார். கோவிந்தன் 'சக்தி அச்சகம்' என்ற அச்சகத்தை நிறுவி, இதழ், மலர், பதிப்பகம் ஆகியவற்றை உருவாக்கியதால் 'சக்தி வை. கோவிந்தன்' என அழைக்கப்படுகிறார். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இவர் 'தமிழ்ப் பதிப்புலகின் தந்தை' எனப் புகழப்படுகிறார். குழந்தை எழுத்தாளர் சங்கம் என்னும் சங்கத்தை நிறுவி அதன் தலைவராகச் சிறிது காலம் பணியாற்றியவர். 1935ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்து 'சக்தி' என்னும் அச்சகத்தையும் 1935ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுத்தானந்த பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு 'சக்தி' என்னும் 'திங்கள் இதழையும்' தொடங்கினார். இந்த இதழ் 1950ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் வரை தொடர்ந்து வெளிவந்தது. சற்று இடைவெளிக்குப் பின்னர், 1953 ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி 1954ஆம் ஆண்டில் சில மாதங்கள் வரை இவ்விதழ் வெளிவந்தது. சுத்தானந்த பாரதியாருக்குப் பின்னர், இவ்விதழின் ஆசிரியர்களாக தி. ஜ. ரங்கநாதன், சுப. நாராயணன், கு. அழகிரிசாமி, விஜய பாஸ்கரன் ஆகியோர் பணியாற்றினர். மேலும்...