விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 15, 2012

சந்திரசேகர ஆசாத் (1906–1931) பரவலாக அறியப்படும் இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் ஒருவர். இந்துத்தான் குடியரசு அமைப்பு மீளுருவாக்கம், ககோகி தொடருந்துக் கொள்ளை, பகத் சிங் போன்றவர்களை வழிநடத்துதல், இந்துத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு உருவாக்கம், பிரித்தானிய அதிகாரி சான்டர்சு படுகொலை போன்றவற்றில் பங்களித்தவர். இவரது தாயான தேவி இவரை காசியில் உள்ள வித்யா பீடத்தில் சமக்கிருதம் கற்பிக்க அனுப்புமாறு அவருடைய தந்தையிடம் கூறி ஏற்கச் செய்தார். ஆனால் இவரது பதினைந்தாவது வயதில் இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக கைது செய்யப்பட்டு குற்றவியல் நடுவரிடம் கொண்டு செல்லப்பட்டார். அந்த நடுவரிடம் செய்த எதிர்வாதங்களுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் என்று புனை பெயரால் மக்களால் அதிகம் அறியப்படும் அளவுக்கு ஆசாத்தின் எதிர்வாதங்கள் அமைந்தது. மேலும்...


இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இசுரோ இந்திய அரசின் முதன்மை தேசிய விண்வெளி முகமை ஆகும். இசுரோ உலகின் மிகப்பெரும் விண்வெளி ஆய்வு மையங்களில் ஆறாவதாக உள்ளது. இதன் முதன்மை நோக்கமாக விண்வெளித் தொழில்நுட்பத்தில் மேம்பாடுகளை ஆராய்வதும் அவற்றை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவதும் ஆகும். 1975 இல் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ஆரியபட்டா இசுரோவால் அமைக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தால் விண்ணேற்றப்பட்டது. 1980 இல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட ஏவுகலம் (எஸ்.எல்.வி-3) மூலமாக முதல் செயற்கைக் கோள், ரோகினியை விண்ணேற்றியது. தொடர்ந்து செயற்கைக் கோள்களை முனையச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க முனைய துணைக்கோள் ஏவுகலம் மற்றும் புவிநிலைச் சுற்றுப்பாதைகளில் ஏவத்தக்க ஜி.எச்.எல்.வி என்ற இரு ஏவுகலங்களை வடிவமைத்துக் காட்டியது. இந்த ஏவுகலங்கள் மூலம் பல தொலைதொடர்பு செயற்கை கோள்களையும் புவி கூர்நோக்கு செயற்கைக்கோள்களையும் இசுரோ ஏவியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக 2008ஆம் ஆண்டில் நிலவை நோக்கிய இந்தியாவின் முதல் பயணமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது. மேலும்...