விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டெம்பர் 28, 2008

பேராசிரியர் முகமது யூனுஸ் (Muhammad Yunus, வங்காள மொழி: মুহাম্মদ ইউনুস; பிறப்பு: ஜூன் 28 1940), வங்காளதேசத்தைச் சேர்ந்த வங்கி முதல்வர், பொருளியலாளர். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவரும் ஆவார். ஏழைத் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் Banker to the Poor எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.


பல்லவர்களும் பாண்டியர்களும் போற்றி வளர்த்த கலை மரபை, அவர்களுக்குப் பின் வந்த சோழர்களும் தொடர்ந்து ஆதரித்து மேன்மேலும் அது வளர்ச்சியடையச் செய்தார்கள். இவ்வாறு சோழர்காலத்தில் சிறப்பு பெற்ற கலைகளை சோழர் கலைகள் எனலாம். கட்டடக்கலையும் சிற்பக் கலையும் வண்ண ஓவியக்கலையும் பெரும்பாலும் பொதுக் கட்டடங்களிலும் குறிப்பாகக் கோயில்களிலுமே வளர்க்கப்பட்டன. கோயில்கள் அல்லாத ஏனையவைகளான அரண்மனைகளும் மாளிகைகளும் பெரும்பாலும் அடியோடு அழிந்துவிட்டன. விதிவிலக்காக உத்தரமேரூர் போன்ற இடங்களில் இவற்றை விரிவாக ஆராய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.


பகடிப்பட இயற்பியல் (Cartoon physics) என்பது பொதுவாக அறியப்பட்டுள்ள இயற்பியல் கோட்பாடுகளும் விதிகளும் இயக்கமூட்டப்பட்ட பகடிப்படங்களில் நகைச்சுவை பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை புவியீர்ப்பு விசை செயல்படாதிருத்தலும் ஆகும். புதிய விஞ்ஞானி அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற கொயாடசு இன்டெரப்டசு ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது.