பகடிப்பட இயற்பியல்

பகடிப்பட இயற்பியல் (Cartoon physics) என்பது பொதுவாக அறியப்பட்டுள்ள இயற்பியல் கோட்பாடுகளும் விதிகளும் இயக்கமூட்டப்பட்ட பகடிப்படங்களில் நகைச்சுவை பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை புவியீர்ப்பு விசை செயல்படாதிருத்தலும்.[1]

பகடிப்பட இயற்பியல் தோற்றப்பாட்டைப் பற்றிய படக்கதை

"இயக்கமூட்டப்படும் பகடிப்படங்கள் இயற்பியல் பொதுவிதிகளைப் பின்பற்றுகின்றன−வேறு விதமாக இருந்தால் நகைச்சுவை தருமென்றில்லாதபோது (மட்டும்)." என்று ஆர்டு பாப்பிட் என்ற பகடிப்பட வல்லுநர் மொழிந்ததாகக் கருதப்படும் கூற்று இந்த நிகழ்வை வரைவுபடுத்துகிறது. மேலும், பகடிப் படங்களில் வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இசைவுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளதை இவ்விளைவு காட்டுகிறது.

வரலாறு

தொகு

பகடிக் கதைப்பாத்திரங்கள் இயலுலகிலிருந்து மாறுபட்டு நடந்து கொண்டாலும் அவை குறிப்பில்வழியாக அல்லாமல் முன்னறியும் வகையில் இருக்கின்றன என்ற கருத்து இத்துறை துவங்கிய காலம் தொட்டே இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக 1956 ஆம் ஆண்டு வால்ட்டு டிஸ்னி த புளாசிபில் இம்பாசிபில் ("இயலக்கூடிய இயல்தகாமை" ) என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்கமூட்டற் படங்களில் நடக்கமுடியாதவை கூடய உளம் ஏற்கும் வகையில் தென்படுகின்றன என்பதை விளக்கியுள்ளார்.

கார்ட்டூன் ஃபிசிக்சு என்ற சொற்றொடர் முதன்முதலாக 1980 ஆம் ஆண்டு எஸ்கொயர் பருவ இதழில் வெளிவந்த "ஓ டொனெலின் பகடிப்பட நகர்வு விதிகள்" என்ற தலைப்புடைய கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது.[2] அதன் பின்னர் 1994-ம் ஆண்டி ஐஇஇஇ அமைப்பு இக்கட்டுரையின் ஒரு பதிப்பை பொறியாளர்களுக்கான இதழில் வெளியிட்டபின் இக்கருத்து பரவலாக அறியப்படவும் வெகுவாகச் சீர்திருத்தப்படவும் துவங்கியது.

இந்நிலைப்பாடு பரவலாக அறியப்பட்டிருந்ததன் அடையாளமாக 1949இல் வெளிவந்த ஒரு பகடிப்படத்தில் "பக் பன்னி" என்ற முயல் கதாபாத்திரம் "இது புவியீர்ப்பு விசையின் விதிகளை/சட்டத்தை மீறுவது என்பது எனக்குத் தெரியும்; ஆனால், நான் சட்டம் படிக்காததால் அவை என்னைக் கட்டா." என வேடிக்கையாகவும் வழக்கறிஞர்களைக் கேலி செய்யும் வகையிலும் கூறுவதாக வருகிறது. அண்மையில் ரோகர் ரேபிட் மற்றும் போங்கர்ஸ் போன்ற பகடிப்படங்களில் கதாபாத்திரங்களே இந்த இயற்பியலைப் பற்றி கூறுவதும் எந்நேரங்களில் இது நகைச்சுவை விளைவை ஏற்படுத்தும் என்று விளக்குவதும் போன்ற காட்சிகள் அமைந்திருக்கின்றன.

ஸ்டீபன் கௌல்டு என்பவர் புதிய விஞ்ஞானி என்ற இதழில் "... தற்கால பகடிப்படங்களைப் பகுப்பாய்ந்ததில், இவற்றில் காணப்படும் பொருத்தமில்லாமல் தோன்றும் நிகழ்வுகளும் தோற்றப்பாடுகளும் இயலுலகின் இயற்பியல் நெறிகளைப் போன்றே முரணற்ற இசைவுள்ள நெறிகளாலும் கோட்பாடுகளாலும் விளக்கப்படக் கூடும். பொருத்தமற்றதாகவும் பொது அறிவுக்கு முரணாகவும் தோன்றும் இத்தகைய நிகழ்வுகள் பகடிப்படங்களில் மட்டுமல்ல இயலுலகிலும் நடைபெறுகின்றன." என்று குறிப்பிட்டுள்ளார்.[3] இதே அடிக்கருத்தை முனைவர்.ஆலன் சோலோடென்கோ "த நட்டி யுனிவர்ஸ் ஆஃப் அனிமேசன்" ("இயக்கமூட்டல் படங்களின் விளையாட்டுத்தனமான உலகம்") என்ற கட்டுரையில் மேலும் விளக்கியுள்ளார்.[4]

நகைச்சுவை விளைவு

தொகு

படிமலர்ச்சி உளவியல் (Evolutionary psychology) கோட்பாடுகளை ஏற்கும் பலர் இயற்பியல் விதிகளைப் பற்றிய உள்ளுணர்வும் உளவியலின்படியான தன்னுணர்வும் இணைவதால் இங்கு நகைச்சுவை ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். மலைமுகட்டைத் தாண்டிய பாத்திரம் விழும் என்ற பொதுஅறிவு தரும் பரிந்துரையும், தான் அறியாத வரையில் புவியீர்ப்பு தாக்காது என்ற பகடிப்படங்களின் "இசைவான" விதி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஒருசேர அமைவதால் நகைச்சுவை ஏற்படுகிறது என்பது அவர்களின் கணிப்பு.

இவ்வியலின் பயன்பாடு

தொகு

அண்மையில் ஏற்பட்டுள்ள கணினித்துறை வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கமூட்டற் படங்கள் சட்டங்களின் (frames) தொடர்வாக எண்ணப்படுவது குறைந்துள்ளது. மாறாக, பகடிப்பட இயற்பியல் நெறிகளுக்குட்பட்ட சூழலொன்றில் ஒரு திரைக்கதைக்குட்பட்டு பாத்திரங்களை உலவவிடுவது என்ற கட்டமைப்பில் பகடிப்படங்களை வடிவமைக்க ஏதுவாகியுள்ளது. இது வடிவமைப்பாளர்களின் இயல்பான எண்ணுமுறையுடன் ஒத்திருப்பதால் பலக்கிய (complex) படங்களையும் முன்பைக் காட்டிலும் எளிதில் உருவாக்க முடிகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. புதிய விஞ்ஞானி அமைப்பு நடத்திய புதுச் சொல்லாக்கப் போட்டியில் வெற்றி பெற்ற கொயாடசு இன்டெரப்டசு ("coyotus interruptus") என்ற சொற்றொடர் இவ்விளைவைக் குறிப்பதாக ஏற்படுத்தப்பட்டது. இணையப் பக்கம்
  2. O'Donnell's Laws of Cartoon Motion ("ஓ டொனெலின் பகடிப்பட நகர்வு விதிகள்"), Esquire, 6/80, ஐ.இ.இ.இ. அமைப்பின் மறுபதிப்பு, 10/94; V.18 #7 p.12. இணையப் பக்கம் பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம்
  3. Stephen R. Gould, Looney Tuniverse: There is a crazy kind of physics at work in the world of cartoons (1993) New Scientist
  4. Dr. Alan Cholodenko, "The Nutty Universe of Animation, The “Discipline” of All “Disciplines”, And That’s Not All, Folks! பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்" International Journal of Baudrillard Studies Volume 3, Number 1 (January 2006)
  5. "இயக்கமூட்டலை இரு பரிமாணங்களைக் கொண்டுள்ளதாக எண்ணிப்பார்க்க முடியும்: முதலாவது காட்சிசார்ந்த நடைப்பாங்கு (அதாவது உருவம் எப்படி உள்ளது, எப்படி காட்டப்படுகிறது, வரைமாதிரியின் நடை எவ்வாறு உள்ளது போன்றவை.); இரண்டாவது நகர்வுசார்ந்த நடைப்பாங்கு (அதாவது பாத்திரங்கள் எவ்வாறு நகர்கின்றன, மிகையின் அளவென்ன, பகடிப்பட இயற்பியலின் பயன்பாடு மற்றும்இயக்கமூட்டல் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் விதம் ஆகியன.) ."Bregler, Christoph; Lorie Loeb, Erika Chuang, Hrishi Deshpande. "Turning to the masters: motion capturing cartoons". Proceedings of the 29th annual conference on Computer graphics and interactive techniques, 399 - 407, New York, NY, USA:ACM Press. ISSN:0730-0301. 2007-04-24 அன்று அணுகப்பட்டது.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகடிப்பட_இயற்பியல்&oldid=4128434" இலிருந்து மீள்விக்கப்பட்டது