விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 9, 2014

கோல்கொண்டா தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், புராதன கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது ஐதராபாத் நகருக்கு மேற்கே 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும். குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது. 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய் திகழ்ந்தனர். வடக்கில் முகலாயர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயர கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும். மேலும்...


காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை இறை நம்பிக்கையை அங்கதம் செய்யும் பகடி சமயத்தின் ஒரு பெண் கடவுளாகும். கொம்புக்குதிரை வடிவத்தைக் கொண்டிருக்கும் இக்கடவுளைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும் என்று இறை நம்பிக்கையின் முரண்பாட்டை சுட்டிக்காட்ட, இறைமறுப்பாளர்களும் பிற சமய ஐயப்பாட்டாளர்களும் இக்கருத்துருவைப் பயன்படுத்துகின்றனர். இது ரசலின் தேனீர் கேத்தலின் தற்கால மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் பறக்கும் இடியாப்ப அரக்கனும் ஒப்பு நோக்கக்கூடியவை. காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை, மீயியற்கை நம்பிக்கைகள் அடிப்படையற்றவை என்று வாதிடப் பயன்படுகின்றது. எடுத்துக்காட்டாக இறை நம்பிக்கை பற்றிய எந்தக் கூற்றிலும் “இறைவன்” என்ற சொல்லுக்கு பதில் “காணமுடியாத இளஞ்சிவப்புக் கொம்புக்குதிரை” என்ற பெயரைப் பயன்படுத்தினால் பொருந்தி வரும் என்பது இறை மறுப்பாளர்களின் வாதமாகும். மேலும்...