பறக்கும் இடியாப்ப அரக்கன்

பறக்கும் இடியாப்ப அரக்கன் (Flying Spaghetti Monster) என்பது ”பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபை” அல்லது ”பாசுத்தாஃபாரியனியம்” (Pastafarianism) என்ற பகடி சமயத்தின் கடவுள். இச்சமயமும் கடவுளும் 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாபி எண்டர்சன் என்ற கல்லூரி மாணவரால் உருவாக்கப்பட்டன. அமெரிக்காவின் கேன்சசு மாநிலத்தில் கல்வி வாரியம் அம்மாநிலப் பள்ளிகளில் படிவளர்ச்சிக் கொள்கைக்கு மாற்றாக நுண்ணறிவு வடிவமைப்புக் கொள்கையைப் பாடமாக அனுமதித்தற்கு தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் எண்டர்சன் இவற்றை உருவாக்கினார். கேன்சசு வாரியத்துக்கு ஒரு திறந்த கடிதம் எழுதிய எண்டர்சன், அதில் நுண்ணறிவு வடிவமைப்பைப் பாடமாக்கினால், தான் நம்பும் “பறக்கும் இடியாப்ப அரக்க”னையும் பாடமாக்க வேண்டும் என்று நையாண்டி செய்தார். இந்த அரக்கன் இடியாப்பம் மற்றும் இறைச்சி உருண்டைகளால் செய்யப்பட்டதென்றும் தனது சமய நம்பிக்கையின் பெயர் பாசுத்தாஃபாரினியம் (பாசுத்தா (மாச்சேவை) + ராசுத்தாஃபாரினியம்) என்றும் அக்கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

மைக்கலாஞ்சலோவின் புகழ்பெற்ற ஆதாமின் படைப்பு ஓவியத்தில் கடவுளுக்குப் பதிலாகப் பறக்கும் இடியாப்ப அரக்கனைப் புகுத்தியுள்ள இப்படம் பாசுத்தாஃபாரினியத்தின் (Pastafarianism ) அடையாளச் சின்னமாக நிலைபெற்றுவிட்டது.

எண்டர்சனின் இணையதளத்தில் வெளியான அக்கடிதம் விரைவில் உலகப் புகழ்பெற்று, ஒரு இணையத் தோற்றப்பாடாகவே ஆகிவிட்டது. பின் இடியாப்ப அரக்கனைப் பற்றி எண்டர்சன் ஒரு நூலையும் எழுதினார். பல்வேறு மதங்களின் புனித விசயங்களை நையாண்டி செய்து இப்பகடி மதத்தின் மைய நம்பிக்கைகளும், புனித புத்தகங்களும், விழா நாட்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்க இறைமறுப்பாளர்களும், சமய அடிப்படைவாதத்தை எதிர்ப்பவர்களும் இடியாப்ப அரக்கனை வரவேற்று நுண்ணறிவு கோட்பாட்டை எதிர்க்கும் இயக்கத்தின் சின்னமாகவே அதை மாற்றிவிட்டனர். அமெரிக்காவில் நுண்ணறிவுக் கோட்பாட்டை பாடமாக மாற்றும் முயற்சிகள், பொதுவெளியில் சமயத்தைப் புகுத்தும் முயற்சிகள் ஆகியவற்றை நையாண்டி மூலம் எதிர்கொள்ள தற்போது இடியாப்ப அரக்கன் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு தொகு

பறக்கும் இடியாப்ப அரக்கன் என்ற தோற்றப்பாடு முதன்முதலில் ஜனவரி 2005ம் ஆண்டு வெகுஜன கவனத்துக்கு வந்தது. அப்போது கேன்சசு மாநில கல்வி வாரியம் அம்மாநிலப் பள்ளிகளில் படிவளர்ச்சிக் கொள்கைக்கு மாற்றாக நுண்ணறிவு வடிவமைப்புக் கொள்கையை உயிரியல் வகுப்புகளில் பாடமாக்குவது குறித்து விசாரணை செய்து வந்தது. பாபி எண்டர்சனுக்கு அப்போது 24 வயது. ஒரேகான் மாநில பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்துக் கொண்டிருந்தார். கேன்சசு கல்வி வாரியத்தின் செயல்பாடுகளைப் பற்றி கேள்விப்பட்ட அவர், தன் எதிர்ப்பைக் காட்ட அதற்கு கிண்டலான ஒரு திறந்த கடிதத்தை எழுதினார். தனது பறக்கும் இடியாப்பக் கோட்பாடும், நுண்ணறிவு வடிவமைப்பும் ஒரே அளவு சரியானவையென்றும், நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாடு பாடமாக்கப்படுமானால், தனது கோட்பாட்டுக்கும் பாடத்திட்டத்தில் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.[1][2][3]

இம்மூன்று கோட்பாடுகளுக்கும் நமது அறிவியல் வகுப்புகளில் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதற்கு பின்னர் இவ்வழக்கம் உலகமெங்கும் பரவும். வகுப்புகளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை நுண்ணறிவு வடிவமைப்புக்கும், மூன்றில் ஒரு பங்கினை எனது பறக்கும் இடியாப்ப அரக்கன் கோட்பாட்டிற்கும் மீதியிருப்பதை மட்டும் ஆணித்தரமான சான்றுகளைக் கொண்ட அறிவியல் கோட்பாட்டுக்கு [அதாவது படிவளர்ச்சிக் கொள்கைக்கு] கொடுப்போம்.

— கடிதத்தில் பாபி எண்டர்சன்[4]

நுண்ணறிவுக் கோட்பாட்டினர், வடிவமைப்பாளர் (கடவுள்) யார் என்பதைத் தெளிவாக வரையறுக்கவில்லை. அவர்களது வரையறைகளின்படி எதை வேண்டுமானாலும் வடிவமைப்பாளராகக் கொள்ள முடியும்; அந்த வடிவமைப்பாளர் ஒரு “பறக்கும் இடியாப்ப அரக்கனாக” ஏன் இருக்கக்கூடாது என்பது எண்டர்சனின் வாதம். நான் சமயங்களை எதிர்ப்பவனல்ல, ஆனால் சமயக் கோட்பாடுகள் அறிவியல் வேடமிடுவதை எதிர்க்கிறேன். கடவுள் ஒருவர் இருந்து அவருக்கு நுண்ணறிவு இருந்தால், கண்டிப்பாக அவருக்கு நகைச்சுவை உணர்வுமிருக்கும் [எனவே அவர் எனது கிண்டலைத் தவறாக எடுத்துக்கொள்ளமாட்டார்]” என்று தன் நிலைப்பாட்டை விளக்கினார் எண்டர்சன்.[5][6]

இக்கடிதத்திற்கு கேன்சசு கல்வி வாரியம் பதிலளிக்காததால், மே 2005இல் தனது வலைத்தளத்தில் அதனைப் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டார் எண்டர்சன். வெகு விரைவில் அது ஒரு இணையத் தோற்றப்பாடாகவே ஆகிவிட்டது. அதன் புகழ் பரவிய பின்னர், கேன்சசு கல்வி வாரிய உறுப்பினர்கள் அவருக்கு பதிலளித்தனர். நுண்ணறிவுத் தோற்றப்பாடு பாடமாக்கப்படுவதை எதிர்த்த மூன்று உறுப்பினர்கள் எண்டர்சனுக்கு சாதகமாக பதிலளித்தனர். ஆனால் அதனை ஆதரித்த ஒரு உறுப்பினர் “கடவுளைப் பகடி செய்வது கடும் குற்றம்” என்று எண்டர்சனை எச்சரித்தார். இப்பதில்களை எண்டர்சன் தனது தளத்தில் வெளியிட்டார். மேலும் தன்னைத் திட்டி வரும் கடிதங்கள், கொலை மிரட்டல்கள் அனைத்தையும் தனது தளத்தில் வெளியிட்டார். அவர் தனது கடிதத்தை வெளியிட்ட ஓராண்டுக்குள் அவருக்கு ஆயிரக்கணக்கில் கடிதங்கள் வந்தன. இதுவரை 60,000 கடிதங்கள் இது குறித்து தனக்கு வந்துள்ளதாகவும், அவற்றுள் 95% ஆதரவாகவும் மீதியுள்ளவை, “நீ நரகத்துக்குத் தான் போவாய்” என்று சபிப்பதாகவும் எண்டர்சன் தெரிவித்துள்ளார். அவரது வலைத்தளம் இதுவரை பல லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது.[7][8][9][10]

 
கிறித்துவத்தின் மீன் (Ichthys) சின்னத்தைப் பகடி செய்து உருவாக்கப்பட்ட பறக்கும் இடியாப்ப அரக்கன் திருச்சபையின் சின்னம்

எண்டர்சனின் கடிதம் குறித்த செய்தி உலகமெங்கும் விரைவில் பரவி அவருக்கு ஆதரவு பெருகியது. அவரது அங்கதமும் நையாண்டியும் இணையத்தின் நகைச்சுவைத் தளங்களிலும் வலைப்பதிவர்கள் மத்தியிலும் அவருக்குப் புகழ்பெற்றுத் தந்தன. போயிங் போயிங், சம்திங் ஆஃபுல், ஃபார்க்.காம், அன்சைகிளோப்பீடியா போன்ற பிரபல இணைய தளங்கள் பறக்கும் இடியாப்ப அரக்கனைப் பற்றி செய்தி வெளியிட்டன. இடியாப்ப அரக்கனுக்கு ரசிக தளங்களும் உருவாகின. சில நாட்களில் வெகுஜன ஊடகங்களும் இதனைக் கேள்விப்பட்டுச் செய்தி வெளியிடத் தொடங்கின. பள்ளிகளில் நுண்ணறிவு வடிவாக்கக் கொள்கையினைப் பாடமாக்குவதை எதிர்ப்போரின் அடையாளச் சின்னமாக இடியாப்ப அரக்கன் மாறிப்போனது. எண்டர்சனின் கடிதத்தை த நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், சிகாகோ சன் டைம்ஸ் போன்ற முன்னணி செய்தித்தாள்கள் மறுபிரசுரம் செய்தன. எண்டர்சன் சற்றும் எதிர்பாராத அளவுக்கு அவரது படைப்பின் புகழ் பெருகிவிட்டது. செய்தித்தாள்களில் அரக்கனைப் பற்றிய செய்திகளைப் படித்த புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், அதனைப்பற்றி புத்தகமொன்றை எழுத எண்டர்சனை அணுகின. நவம்பர் 2005ல் வில்லார்ட் பதிப்பகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட எண்டர்சன், பறக்கும் இடியாப்ப அரக்கனின் நற்செய்தி என்ற நூலை எழுதினார்.[10][11][12][13]

நவம்பர் 2005ல் கேன்சசு கல்வி வாரியம் பள்ளிகளில் படிவளர்ச்சிக் கோட்பாட்டை விமர்சிக்கும், நுண்ணறிவுக் கோட்பாட்டை முன்வைக்கும் பாடத்திட்டத்தை பரிந்துரை செய்தது. ஆனால் 2007ல் இம்மாற்றங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.[14][15]

நம்பிக்கைகள் தொகு

எங்களுக்கு இலட்சக்கணக்கில், ஏன் ஆயிரக்கணக்கில் கூட தீவிர பக்தர்கள் இருக்கிறார்கள்; எங்கள் மதம் வேறு எந்த மதத்திற்கும் சளைத்ததல்ல. இதை எங்கள் எதிர்ப்பாளர்கள் - பெரும்பாலும் கிறித்தவ அடிப்படைவாதிகள் - கூட ஏற்றுக்கொண்டுவிட்டனர். அவர்களது கடவுளை விட எங்கள் கடவுளுக்குத் தான் பெரிய விரைகள் உள்ளன என்பதையும் அவர்கள் ஒத்துக் கொள்கின்றனர்.

–பாபி எண்டர்சன்[11]

 
பறக்கும் இடியாப்ப அரக்கன், ”நீங்கள் செய்யாதிருந்தால் நான் சந்தோசப்படும் விசயங்கள்” எழுதப்பெற்ற களிமண் பலகைகளை கேப்டன் மோசிக்கு அளிக்கும் காட்சி

நுண்ணறிவு வடிவமைப்புக் கோட்பாட்டின் ஆதரவாளர்கள் பொதுவாக முன்வைக்கும் வாதங்களுக்கு எதிர்வினையாற்றும் வகையில் எண்டர்சன் தனது பகடி சமயத்தின் ஒழுக்கநெறிகளை வடிவமைத்தார். எண்டர்சனின் திறந்த கடிதத்திலும், பறக்கும் இடியாப்ப அரசனின் நற்செய்தி நூலிலும், எண்டர்சனின் இணையதளத்திலும் இம்மதத்தின் கட்டளை விதிமுறைகள் வெளியாகியுள்ளன. இவை பொதுவாக படைப்புவாதத்தை நையாண்டி செய்வதாக அமைந்துள்ளன.[16][17][18][19]

பறக்கும் இடியாப்ப அரக்கனை எவராலும் காணவோ உணரவோ முடியாது; ஒரு நாள் அது அளவுக்கு அதிகமாக மது அருந்திய போதையில் பேரண்டத்தைப் படைத்தது. இவையே பாசுத்தாஃபாரியனியத்தின் மைய நம்பிக்கைகள். மேலும் அரக்கனின் போதையே படைப்பில் உள்ள வழுக்களுக்குக் காரணம். பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள படிவளர்ச்சிக் கொள்கைக்கான சான்றுகள் அனைத்தும் தனது பக்தர்களின் நம்பிக்கையை சோதிப்பதற்காக அரக்கன் வேண்டுமென்றே உருவாக்கியவை. (விவிலியத்தை வார்த்தைக்கு வார்த்தை உண்மையென நம்புபவர்களை கிண்டலடிப்பதற்காக) பாசுத்தாஃபாரியர்களின் நம்பிக்கையின் படி சொர்க்கத்தில் பியரைக் கக்கும் எரிமலையும் உள்ளது, ஆடையவிழ்த்து ஆடுபவர்களும் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர். அதே போல நரகத்திலும் உண்டு - ஆனால் பியர் கெட்டுப்போயிருக்கும், ஆடையின்றி ஆடுபவர்கள் அனைவரும் பால்வினை நோய்கள் உடையவர்களாக இருப்பர். பாசுத்தாஃபாரியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையினையும் புனித நாளாகக் கருதுகிறார்கள். அவர்களது வழிபாட்டுக் கூட்டங்கள் “ரா’ஆமேன்” என்ற முழக்கத்துடன் முடிவடைகின்றன. (ஆமென் என்ற சமயச்சொல்லையும், “ராமென்” என்ற இடியாப்ப உணவுப் பெயரையும் சேர்த்து உருவாக்கப்பட்டது.)[12][18][20]

கடற்கொள்ளையர்களும் புவி சூடாதலும் தொகு

பாசுத்தாஃபாரினியர்கள் கடல் கொள்ளையர்களை தெய்வீகப் பிறவிகளாக வழிபடுகிறார்கள். கடல் கொள்ளையர்களுக்கு தற்போது உள்ள “திருடர்கள் மற்றும் “கொடியவர்கள்” என்ற பிம்பம் வேண்டுமென்றே கிறித்துவ இறையியலாளர்களாலும் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினராலும் மத்திய காலத்தில் பரப்பப்பட்ட அவதூறு என்று கருதுகிறார்கள். பழங்காலக் கடல் கொள்ளையர்கள் அமைதி விரும்பிகள், சிறுவர்களுக்கு இலவசமாக மிட்டாய் கொடுத்தவர்கள், தற்கால கடற்கொள்ளையர்களைப் போலத் திருடர்கள் இல்லை எனக் கருதுகிறார்கள். பெர்முடா முக்கோணத்தில் கப்பல்கள் காணாமல் போவதற்கும் அவர்களது ஆவிகள் தான் காரணம் என சொலுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 19, இவர்களால் கடற்கொள்ளையர்களைப்போலப் பேசும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.[21]

 
எண்டர்சனின் கடிதத்தில் இணைக்கப்பட்ட விளக்கபடம்; கடற்கொள்ளையரின் எண்ணிக்கை எதிர் பூமியின் வெப்பநிலை

எண்டர்சனின் திறந்த கடிததத்தில் கடற் கொள்ளையர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்ததால், பாசுத்தாஃபாரினியத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது. எண்டர்சன் "தொடர்பு இருந்தால் தூண்டுகாரணமாகவும் இருக்கத் தேவையில்லை” (correlation does not imply causation ) என்ற விதியை கேன்சசு கல்வி வாரியத்துக்கு உணர்த்துவதற்காகக் கடற்கொள்ளையர்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்தியிருந்தார். 19ஆம் நூற்றாண்டில் கடற்கொள்ளையர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதிலிருந்து உலகில் புவி சூடாதல், நிலநடுக்கங்கள், புயல்கள், இயற்கைப் பேரழிவுகள் ஆகியவை அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கடற்கொள்ளையர்களின் எண்ணிக்கை குறைவால் எப்படி புவியின் வெப்பம் அதிகரித்துள்ளது என்பதை விளக்க ஒரு விளக்கப்படத்தையும் தன் கடிதத்தில் எண்டர்சன் இணைத்திருந்தார். உலகின் சில சமயக்குழுக்கள், தங்கள் கடவுளுக்கு மதிப்பும் பக்தர்களும் குறைந்து விட்டதால்தான் உலகில் துன்பங்களும் இடர்களும் அதிகரித்துவிட்டன என்று நம்புவதை நையாண்டி செய்யும் வகையில் இது அமைந்திருந்தது. 2008ஆம் ஆண்டு, சோமாலிய கொள்ளையர்களின் செயல்பாடுகள் ஏடன் வளைகுடாவில் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டிய எண்டர்சன், சோமாலியாவில் தான் உலகில் மிக அதிக எண்ணிக்கையில் கொள்ளையர்களும் மிகக் குறைவான கரிம உமிழ்வும் உள்ளதாகக் கூறினார்.[17][22]

சிறப்பு நாட்கள் தொகு

பாசுத்தாஃபாரினியர்கள் பல சமயங்களின் சிறப்பு நாட்களை நையாண்டி செய்யும் விதத்தில் சில சிறப்பு நாட்களை கொண்டாடுகின்றனர். திசம்பர் மாத இறுதியில் கிறித்துமசு, ஹனுக்கா போன்ற சிறப்பு நாட்கள் வரும் காலத்தில் பாசுத்தாஃபாரினியர்கள் “விடுமுறை” என்ற சிறப்பு நாளைக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு கட்டுக்கோப்பான மத விதிமுறைகளின் மீது நம்பிக்கை கிடையாதாகையால் யார் எப்படி வேண்டுமென்றாலும் “விடுமுறை”யைக் கொண்டாடலாம். யூதர்களின் ”பாசோவர்” பண்டிகையை கிண்டலடித்து “பாஸ்டோவர்” என்ற பண்டிகையையும் (பாசுதா உணவு வகைகளை அதிக அளவில் உண்ணும் நாள்), இசுலாமியர்களின் ரமலானைக் கிண்டல் செய்யும் வகையில் ராமெண்டான் (ராமென் நூடுல்சு உண்ணும் மாதம்) ஆகியவையும் இவர்களால் கொண்டாடப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 19ஆம் தேதியன்று (சர்வதேச கடற்கொள்ளையர்களைப் போல பேசும் நாளன்று) அவர்கள் கடற்கொள்ளையர்களைப் போல உடையணிந்து அவர்களைப் போலவே பேசுகிறார்கள். தங்கள் சமயத்தின் ஆதி பக்தர்கள் கடற்கொள்ளையர்களே என்பதை நினைவு கூற இப்படி செய்து காட்டுகிறார்கள்.[23][24][25][26][27][28]

நூல்கள் தொகு

பறக்கும் இடியாப்ப அரக்கனின் நற்செய்தி தொகு

 
பறக்கும் இடியாப்ப அரக்கனின் நற்செய்தியின் முன்னட்டை

டிசம்பர் 2005இல் வில்லார்ட் பதிப்பகம் பாபி எண்டர்சனுக்கு பாசுத்தாஃபாரியனியம் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத 80,000 அமெரிக்க டாலர்களை முன்பணமாக அளித்தது. மார்ச் 2006 இல் “பறக்கும் இடியாப்ப அரக்கனின் நற்செய்தி” என்ற பெயரில் அப்புத்தகம் வெளியானது. எண்டர்சனின் திறந்த கடிதத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டிருந்த பாசுத்தாஃபாரியனிய நம்பிக்கைகள் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டன. இப்புத்தகத்தில் மத அடிப்படைவாதிகளைப் போலவே படிவளர்ச்சி உயிரியலில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து, அவற்றுக்கு இடியாப்ப அரக்கனைக் கொண்டு விளக்கங்கள் அளிக்கிறார் எண்டர்சன். மேலும் 30 நாட்கள் சோதனை அடிப்படையில் பாசுத்தாஃபாரினியத்தை பின்பற்றிப் பார்க்குமாறு வாசகர்களை அழைக்கிறார். பிடிக்கவில்லையென்றால், வாசகர்கள் திரும்பி அவர்களது பழைய மதங்களுக்கே சென்று விடலாமென்றும், கண்டிப்பாக அவை அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளுமென்றும் சொல்லுகிறார். இதுவரை அரக்கனின் நற்செய்தி 1,00,000 படிகள் விற்பனையாகியுள்ளது.[13][29][30][31][32]

சயிண்டிஃபிக் அமெரிக்கன் இதழ் இப்புத்தகத்தை “நுண்ணறிவு வடிவமைப்பு மீதான ஒரு விரிவான நையாண்டி” என்றும் “நல்ல நகைச்சுவை” என்றும் பாராட்டியுள்ளது. 2006ஆம் ஆண்டு இந்நூல் குவில் விருதுக்கு நகைச்சுவைப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டது. பல நூல் விமர்சகர்களும் இதனைப் பாராட்டினர். ஆனால் பழமைவாத கண்டுபிடிப்புக் கழகத்தின் (நுண்ணறிவு வடிவமைப்பு கோட்பாட்டை உருவாக்கியவர்கள்) கேசி லசுகின், இந்நூல் புதிய ஏற்பாட்டை அவமதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.[31][33][34]

ஒழுங்கற்ற திருமுறைகள் தொகு

அரக்கனின் நற்செய்தி நூல் எழுதப்படுவதற்கு முன்பே, பாசுத்தாஃபாரினியத்துக்கு ஒரு புனித நூலொன்றை உருவாக்கும் முயற்சி தொடங்கிவிட்டது. செப்டம்பர் 2005இல் வென்கான்சா இணைய மன்றத்தின் பாசுத்தாஃபாரினிய உறுப்பினர் ஒருவர் தன் சக பாசுத்தாஃபாரினியர்களின் கருத்துகளைத் திரட்டி ”ஒழுங்கற்ற திருமுறைகள்” என்ற பெயரில் தொகுக்கும் திட்டத்தை அறிவித்தார். சோலிப்சி என்ற அந்தப் பயனர் தொடங்கிய அத்திட்டம் 2010இல் முடிவடைந்தது; ஒழுங்கற்ற திருமுறைகள் - பறக்கும் இடியாப்ப அரக்கனின் திருச்சபையின் புனித நூல் (Loose Canon, a Holy Book of the Church of the Flying Spaghetti Monster) என்ற பெயரில் வெளியான அந்த நூல் இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்யும்படி வெளியிடப்பட்டது.[35][36]

ஒழுங்கற்ற திருமுறைகளிலிருந்து சில வாசகங்கள்:

நான் தான் பறக்கும் இடியாப்ப அரக்கன். எனக்கு முன் வந்த அரக்கர்கள் எவருமிலர். என்னைப்பற்றிக் குறிப்பிடும் போது மட்டும் தான் பெரிய எழுத்துகளை நீ பயன்படுத்தலாம். போலி அரக்கர்களைக் குறிக்கையில் சிறிய எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தக் கடவ.

யோசனைகள் 1:1

“இப்படி அரையும் குறையுமாய் வேலையைச் செய்திருக்கும் உனக்கு ஒரு அரைக் கழுதையைப் பரிசாகத் தருகிறேன்” என்று சொல்லிய பெருங் கடற்கொள்ளையர் சாலமன், தன் விசேஷ வாளை எடுத்து தனது கழுதையை இரண்டாக வெட்டினார்.

சோம்பேறிகள் 1:51–52

தாக்கம் தொகு

பண்பாட்டு தோற்றப்பாடு தொகு

 
2009ல் சியாட்டில் நகரில் ஒரு பண்பாட்டுப் பேரணியில் இடியாப்ப அரக்கன் பொம்மை

தற்போது ஆயிரக்கணக்கானோர் பறக்கும் இடியாப்ப அரக்கனின் திருச்சபையை பின்பற்றுகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் அமெரிக்க கல்லூரி மாணவர்களும் ஐரோப்பியர்களும் ஆவர். எண்டர்சனின் இணையதளம், ”நுண்ணறிவு வடிவமைப்பை எதிர்ப்போர் கூடும் இணைய டீக்கடை பெஞ்சு போல உள்ளது” என அசோசியேட்டட் பிரெசு செய்தி நிறுவனம் வர்ணித்துள்ளது. அங்கு பாசுத்தாஃபாரினியர்கள் தங்கள் கூட்டங்களை ஒருங்கிணைப்பதுடன், கார்களின் பின்புறம் ஒட்டும் ஒட்டிகள், தங்கள் இயக்கத்தின் கருத்துகளைச் சொல்லும் சிறிய சாமான்கள் ஆகியவற்றை விற்கவும் அத்தளத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். பிற சமய இணையத்தளங்களை கிண்டலடிக்கும் வகையில் இடியாப்ப அரக்கன் பூமியில் தோன்றுவதை “மெய்ப்பிக்கும்” ஒளிப்படங்களும் இங்கு வெளியிடப்படுகின்றன.[37][38]

2005ஆம் ஆண்டு சுவீடிய கருத்தாக்க வடிவமைப்பாளர் நிக்லாசு யான்சன் மைக்கலாஞ்சலோவின் புகழ்பெற்ற ஆதாமின் படைப்பு ஓவியத்தைப் பின்புலமாகப் பயன்படுத்தி பாசுத்தாஃபாரினியர்களுக்காக ஒரு ஓவியத்தை உருவாக்கினார். அதில் மைக்கலாஞ்சலோவின் ஓவியத்தில் கடவுள் இருந்த இடத்தில் பறக்கும் இடியாப்ப அரக்கனின் படம் உள்ளவாறு செய்திருந்தார். பெரும் வரவேற்பைப்பெற்ற இவ்வோவியம் பறக்கும் இடியாப்ப அரக்கன் இயக்கத்தின் அடையாளச் சின்னமாகவே மாறிவிட்டது. டிசம்பர் 2006இல் ஹங்கர் ஆர்டிஸ்ட்ஸ் நாடக நிறுவனம், பறக்கும் இடியாப்ப அரக்கனின் விடுமுறைக் கொண்டாட்டம் என்ற நாடகத்தை அரங்கேற்றியது. அதன் வெற்றிக்குப்பின்னர் அதன் இரண்டாம் பாகமான பறக்கும் இடியாப்ப அரக்கனின் புனித மதுக்கோப்பை வெளியானது. இது போன்ற சமூக நிகழ்வுகளால் கவரப்பட்ட ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தின் சமய அறிஞர்கள், 2007 அமெரிக்க சமயக் கழக மாநாட்டில், இடியாப்ப அரக்கன் இயக்கத்தை பற்றிய ஒரு குழு விவாதத்திற்கு ஏற்பாடு செய்தனர். அந்த மாநாட்டில் பாசுத்தாஃபாரினியம் குறித்து சில ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன, சில விவாதங்களும் நடைபெற்றன. 2008 முதல் மிசோரி மாநிலக் கல்லூரியின் பாசுத்தாஃபாரினியக் கிளை ஆண்டுதோறும் ஸ்கெப்டிகான் என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இதில் ஐயமுறலாளர்களும் இறைமறுப்பாளர்களும் கலந்துகொண்டு பேசுவதுடன், கிறித்துவ அறிஞர்களுடன் தருக்கமும் செய்கின்றனர்.[38][39][40][41][42][43]

விமர்சனங்கள் தொகு

 
2007ல் டிராகன்கான் நூல்/வரைகதை ரசிகர்கள் மாநாட்டில் இடியாப்ப அரக்கன் வேடமணிந்தவரும், கடற்கொள்ளையர் வேடமணிந்தவரும்

இடியாப்ப அரக்கனை ஒரு புத்திசாலித்தனமான வாதம் என புகழ்ந்த அசோசியேட்ட பிரசு செய்தி நிறுவனத்தின் ஜஸ்டின் போப், அரக்கன் இயக்கத்தைப் பற்றி பின்வருமாறு எழுதினார்:

கூர்ந்து கவனிப்போமானால், எண்டர்சனின் கடிதத்தின் சாரம் இது தான் - நுண்ணறிவுக் கோட்பாட்டுக்கு எந்த அறிவியல் அடிப்படையும் கிடையாது. அறிவியல் நோக்கில் அதுவும் இடியாப்ப அரக்கன் கோட்பாடும் ஒன்றே. அப்படியிருக்கையில், நுண்ணறிவு வடிவமைப்பு இயக்கத்தினர் அறிவியல் வகுப்புகளில் தங்கள் கோட்பாட்டை சொல்லித் தரச்சொல்லிக் கேட்டால், பிறரும் ஏன் அதே போல கேட்கக் கூடாது? அப்படி ஆளுக்காள் கேட்டால் என்ன செய்வது? இதற்கு ஓரே தீர்வு, அறிவியல் வகுப்புகளில் உண்மையான அறிவியலை மட்டும் சொல்லித்தர வேண்டும். அறிவியல் அடிப்படை இல்லாத எதையும் உள்ளே புக விடக்கூடாது.

— ஜஸ்டின் போப்[38]

டெய்லி டெலிகிராஃப் இதழில் “நுண்ணறிவு கோட்பாட்டின் அற்பத்தனத்தை வெளிக்கொணர இடியாப்ப அரக்கன் ஒரு அட்டகாசமான வழி” என்று வர்ணித்த சைமன் சிங், அறிவியலுக்காகவும், பகுத்தறிவுக்காகவும் ஒரு கூட்டத்தைத் திரட்டிய எண்டர்சனுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் பல வெகுஜன ஊடகங்களிலும், ஆய்வுக் கட்டுரைகளிலும் இடியாப்ப அரக்கன் தோற்றப்பாடு குறிப்பிடப்பட்டுள்ளது. படிவளர்ச்சி குறித்த விவாதம் வெகுஜன பண்பாட்டில் வெளிப்படுவதையே இத்தோற்றப்பாடு குறிக்கிறது என கருதப்படுகிறது. எண்டர்சனின் இணையத்தளத்தில் பல குறிப்பிடத்தக்க அறிவியலாளர்கள் இடியாப்ப அரக்கன் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.[31][44][45][46]

இவ்வியக்கம் சமய பழமைவாதிகளாலும், நுண்ணறிவுக் கோட்பாட்டு இயக்கத்தினராலும், கடுமையான கண்டனங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகி உள்ளது. படைப்பு போன்ற ஆழமான விசயத்தை மேலோட்டமாகப் பகடியாகப் பார்க்கிறார்கள், நுண்ணறிவுக் கோட்பாட்டை, பழைய படைப்புவாதத்தைப் போலவே பாவிக்கிறார்கள், கடவுளை அவமதிக்கிறார்கள், தங்கள் உலக நோக்கைத் தவிர மற்ற உலக நோக்குகளை மதிக்க மறுக்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் இடியாப்ப அரக்கன் இயக்கத்தினரின் மீது சுமத்தப்படுகின்றன.[19][47][48][49]

பறக்கும் இடியாப்ப அரக்கனுக்கு கிடைத்துள்ள புகழால், அது ரசலின் தேனீர் கேத்தல் என்ற இறைமறுப்பு வாதத்தின் தற்கால மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. இதைப் பயன்படுத்துபவர்கள், எந்தவொரு மாந்தரல்லாத மீஇயற்கைப் பொருளும் (கடவுள்) இல்லை என்று மெய்ப்பிப்பது எவராலும் இயலாதாகையால், அவை இருக்கின்றன என சொல்லுபவர்களே அதனை நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என வாதிடுகின்றனர். ”நான் கடவுள், பறக்கும் இடியாப்ப அரக்கன், தேவதைகள் போன்றவற்றை நம்புகிறேன் என்று ஒருவர் சொன்னால், அவை இருக்கின்றன என மெய்ப்பிக்கும் சுமை அவரையே சாரும்” என ரிச்சர்ட் டாக்கின்சு கூறியுள்ளார். மேலும் கடவுள் இருக்கிறார் என சொல்லும் எந்தவொரு வாதமும் தெளிவில்லாத வாதங்களே. அவற்றை அப்படியே எடுத்துப் பறக்கும் இடியாப்ப அரக்கன் இருக்கிறது என்றும் மெய்ப்பிக்கப் பயன்படுத்தலாம் என்பதே இறைமறுப்பாளர்களின் கூற்று. இதனையே சமயம் மற்றும் நாடக ஆய்விதழின் ஆசிரியர்களுள் ஒருவரான லான்சு கராவியும், தி காட் டெலூஷனில் டாக்கின்சும் முன்வைக்கிறார்கள்.[19][50][51][52][53]

பிற சர்ச்சைகளில் தொகு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் போல்க் கவுண்டியின் கல்வி வாரியம் நுண்ணறிவு வடிவமைப்பை அறிவியல் வகுப்புகளில் புகுத்த முயன்ற போதும் கேன்சசு கல்வி வாரிய சர்ச்சையில் நிகழ்ந்தது போன்றே நடந்தது. 2007இல் போல்க் கல்வி வாரிய உறுப்பினர்கள் நுண்ணறிவு வடிவமைப்பை வகுப்புகளில் புகுத்தக்கூடும் என்ற செய்திகள் வெளியாகின. அதை எதிர்த்தவர்கள் உடனடியாக பறக்கும் இடியாப்ப அரக்கனைப் பற்றிய குறிப்பும் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என்று கடிதம் எழுதத் தொடங்கினர். இது குறித்த செய்தி வெகு விரைவில் நாடெங்கும் பரவியதால், போல்க் கல்வி வாரிய உறுப்பினர்கள் அமெரிக்க தேசிய ஊடகங்களில் கேலிப் பொருட்களாகினர்; நுண்ணறிவு வடிவமைப்பை பாடமாக்கும் முயற்சியினையும் கைவிட்டனர். 2008ல் டென்னிசி மாநிலத்தில், ஒரு நீதிமன்றத்துக்கு வெளியே சமய அடிப்படையிலான சிலைகளும் நினைவுச் சின்னங்களும் அமைக்கப்பட்டுள்ளதை எதிர்க்க அங்கு பறக்கும் இடியாப்ப அரக்கனின் சிலையை நிறுவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் எழுந்த சர்ச்சையால் அங்கு நிறுவப்பட்டிருந்த அனைத்து சிலைகளும் அகற்றபட்டன.[54][55]

குறிப்புகள் தொகு

 1. Boxer, Sarah (2005-08-29). "But Is There Intelligent Spaghetti Out There?". த நியூயார்க் டைம்ஸ் Arts article. http://www.nytimes.com/2005/08/29/arts/design/29mons.html?ex=1178251200. பார்த்த நாள்: 2007-02-05. 
 2. "Verbatim: Noodle This, Kansas". The Washington Post. 28 August 2005. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/08/27/AR2005082700019.html?nav=most_emailed. 
 3. Page, Clarence (15 November 2005). "Keeping ID out of science classes". The Dallas Morning News இம் மூலத்தில் இருந்து 2008-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080604052700/http://www.dallasnews.com/sharedcontent/dws/dn/opinion/balance/stories/111505dnedicyberpage.b4d5bd9.html. 
 4. "Discussion of the Open Letter". Henderson, Bobby. பார்க்கப்பட்ட நாள் 2007-04-07.
 5. "Church of the Flying Spaghetti Monster". James Randi Educational Foundation article September 16, 2005. பார்க்கப்பட்ட நாள் 2007-02-05.
 6. Pitts, Russ (2005-09-16). "In His Name We Pray, Ramen". Escapist magazine இம் மூலத்தில் இருந்து 2013-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131031104651/http://www.escapistmagazine.com/articles/view/issues/issue_142/3048-In-His-Name-We-Pray-Ramen.5. பார்த்த நாள்: 26 November 2009. 
 7. "The Flying Spaghetti Monster". h2g2. BBC. 2007-02-01. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
 8. Frauenfelder, Mark (2006-07-31). "FSM hate mail". BoingBoing. பார்க்கப்பட்ட நாள் 31 December 2009.
 9. Scrivener, Leslie (2007-01-07). "In praise of an alternate creation theory: The Church of the Flying Spaghetti Monster gains infamy and faith". Toronto Star. http://www.thestar.com/sciencetech/article/168629. பார்த்த நாள்: 31 December 2009. 
 10. 10.0 10.1 Henderson, Bobby (2006-08). "Comment on the Open Letter". Church of the Flying Spaghetti Monster. பார்க்கப்பட்ட நாள் 30 December 2009. {{cite web}}: Check date values in: |date= (help)
 11. 11.0 11.1 Henderson, Bobby. "About". The Church of the Flying Spaghetti Monster. பார்க்கப்பட்ட நாள் 2009-09-20.
 12. 12.0 12.1 "In the beginning there was the Flying Spaghetti Monster". த டெயிலி டெலிகிராப் (London). 11 September 2005. http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/1498162/In-the-beginning-there-was-the-Flying-Spaghetti-Monster.html. பார்த்த நாள்: 2009-12-19. 
 13. 13.0 13.1 Wolff, Eric (16 November 2005). "The Case For Intelligent Design: Spaghetti as the Creator". New York. http://nymag.com/nymetro/news/people/columns/intelligencer/15011/. 
 14. Slevin, Peter (9 November 2005). "Kansas Education Board First to Back "Intelligent Design"". தி வாசிங்டன் போஸ்ட். http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/11/08/AR2005110801211.html. பார்த்த நாள்: 2010-05-02. 
 15. "Kansas board boosts evolution education". MSNBC. 14 February 2007. http://www.msnbc.msn.com/id/17132925/. 
 16. Thierman, Jessica (18 September 2005). "Touched by his Noodly Appendage". Gelf Magazine. http://www.gelfmagazine.com/mt/archives/touched_by_his_noodly_appendage.html. 
 17. 17.0 17.1 Henderson, Bobby (2005). "Open Letter To Kansas School Board". பார்க்கப்பட்ட நாள் 2007-01-09.
 18. 18.0 18.1 DuBay, Tim (2005). "Guide to Pastafarianism" (Shockwave Flash). பார்க்கப்பட்ட நாள் 2006-08-26.
 19. 19.0 19.1 19.2 Vergano, Dan (2006-03-27). ""Spaghetti Monster" is noodling around with faith". USA Today Science & Space article. http://www.usatoday.com/tech/science/2006-03-26-spaghetti-monster_x.htm. பார்த்த நாள்: 2007-02-05. 
 20. The Gospel of the Flying Spaghetti Monster, p.83.
 21. Savino, John (2007). "Wrath of the Gods". Supervolcano: The Catastrophic Event That Changed the Course of Human History: Could Yellowstone Be Next. Career Press. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781564149534. பார்க்கப்பட்ட நாள் 2009-11-25. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
 22. "Somalia — Lots of pirates, low carbon emissions". www.venganza.org. 14 April 2008. பார்க்கப்பட்ட நாள் 10 December 2008.
 23. Henderson, Bobby (2006-12-01). "Happy Holiday Season Everyone". Church of the Flying Spaghetti Monster. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.
 24. Cooperman, Alan (2005-12-07). "'Holiday' Cards Ring Hollow for Some on Bushes' List". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2005/12/06/AR2005120601900.html. பார்த்த நாள்: 25 November 2009. 
 25. "Questions on FSM Holidays". Venganza.org. 2008. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
 26. "A question about Pastover". Venganza.org. 2010. Archived from the original on 2015-08-15. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
 27. "Ramendan". Venganza.org. 2008. Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
 28. "Talk Like a Pirate Day". Venganza.org. 2008. Archived from the original on 2011-09-25. பார்க்கப்பட்ட நாள் 2011-03-29.
 29. Craig, Katleen (22 December 2005). "Passion of the Spaghetti Monster". Wired News இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120629093326/http://www.wired.com/politics/law/news/2005/12/69905. 
 30. Brenner, Wayne (2006-04-14). "The Gospel of the Flying Spaghetti Monster". The Austin Chronicle. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
 31. 31.0 31.1 31.2 Singh, Simon (2006-09-03). "Was the world created by god, evolution or pasta?". The Daily Telegraph (London). http://www.telegraph.co.uk/culture/books/3655035/Was-the-world-created-by-god-evolution-or-pasta.html. பார்த்த நாள்: 28 November 2009. 
 32. The Gospel of the Flying Spaghetti Monster, p.xiv.
 33. Henderson, Bobby (2006). "The FSM Book". Church of the Flying Spaghetti Monster. Venganza.org. பார்க்கப்பட்ட நாள் 2009-10-18.
 34. Luskin, Casey (2006-12-25). ""Celebrating" Christmas at the "Church of the Flying Spaghetti Monster"". Evolution News & Views (Discovery Institute). http://www.evolutionnews.org/2006/12/celebrating_christmas_at_the_c.html. பார்த்த நாள்: 26 November 2009. 
 35. "Official Site of the Loose Canon". fsm-consortium.com. 2010. Archived from the original on 2011-09-18. பார்க்கப்பட்ட நாள் 2010-06-14.
 36. "The Big Announcement". Venganza.org. 2005. Archived from the original on 2010-04-27. பார்க்கப்பட்ட நாள் 2010-04-25.
 37. "Religious Scholars to Discuss 'Flying Spaghetti Monster'". Associated Press. Fox News. 2007-11-16. http://www.foxnews.com/story/0,2933,311925,00.html. பார்த்த நாள்: 26 November 2009. 
 38. 38.0 38.1 38.2 Pope, Justin (2007-11-16). "Pasta monster gets academic attention". Associated Press. MSNBC. http://www.msnbc.msn.com/id/21837499//. பார்த்த நாள்: 2009-10-25. 
 39. Narizny, Laurel (October 2009). "HA HA, ONLY SERIOUS: A PRELIMINARY STUDY OF JOKE RELIGIONS". Department of Religious Studies And the Honors College of the University of Oregon. University of Oregon. pp. 42–49. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.
 40. "The Flying Spaghetti Monster Holiday Pageant". Hunger Artists Theatre Company. 2006. Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2010-09-19. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
 41. "Hunger Artists Theatre Company's 2008 Season". Hunger Artists Theatre Company. 2007. Archived from the original on 2008-05-28. பார்க்கப்பட்ட நாள் 2010-09-19. {{cite web}}: Unknown parameter |month= ignored (|date= suggested) (help)
 42. "Flying Spaghetti Monster Inspires Wonky Religious Debate". Associated Press. Wired. 2007-11-20. 
 43. "Atheists to gather at MSU for Skepticon this weekend", The News Leader, 19 November 2009, archived from the original on 17 ஆகஸ்ட் 2014, பார்க்கப்பட்ட நாள் 21 December 2009 {{citation}}: Check date values in: |archive-date= (help)
 44. Lee, Brendan (2006). "Kitzmiller v. Dover Area School District: Teaching Intelligent Design in Public Schools". Harvard Civil Rights-Civil Liberties Law Review (Harvard Law School) 41: 10. http://www.law.harvard.edu/students/orgs/crcl/vol41_2/lee.pdf. பார்த்த நாள்: 2009-12-27. 
 45. "Pass notes No 2,637 The Flying Spaghetti Monster". The Guardian (London). 2005-09-01. http://www.guardian.co.uk/education/2005/sep/01/schoolsworldwide.world. பார்த்த நாள்: 28 December 2009. 
 46. Schofield, Jack (2005-08-20). "'Intelligent Design' and Pastafarianism". The Guardian (London). http://www.guardian.co.uk/technology/blog/2005/aug/20/intelligentdes. பார்த்த நாள்: 2010-09-19. 
 47. Luskin, Casey (2008-08-13). "The Proper Rebuttal to the Flying Spaghetti Monster: Cartoon Satire on South Park". Evolution News & Views. Discovery Institute. பார்க்கப்பட்ட நாள் 26 November 2009.
 48. Jacoby, Jeff (2005-10-02). "The timeless truth of creation". The Boston Globe (Globe Newspaper Company). http://www.boston.com/news/globe/editorial_opinion/oped/articles/2005/10/02/the_timeless_truth_of_creation/. பார்த்த நாள்: 26 November 2009. 
 49. Gallings, Peter (2008-01-22). "The Flying Spaghetti Monster: A harmless joke, a substantial misunderstanding, or a sacrilegious quasi-caricature of the one true God?". Answers in Genesis. பார்க்கப்பட்ட நாள் 23 December 2009.
 50. Wolf, Gary (14 November 2006). "The Church of the Non-Believers". Wired News. http://www.wired.com/wired/archive/14.11/atheism.html. 
 51. MacKenzie, Richard (2007). "Is Faith the Enemy of Science?". arXiv:0807.3670. 
 52. Dawkins, Richard (2006). "The God Hypothesis". The God delusion. Houghton Mifflin Harcourt. p. 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-618-68000-9. பார்க்கப்பட்ட நாள் 2009-11-24. I have found it an amusing strategy, when asked whether I am an atheist, to point out that the questioner is also an atheist when considering Zeus, Apollo, Amon Ra, Mithras, Baal, Thor, Wotan, the Golden Calf and the Flying Spaghetti Monster. I just go one god further.
 53. Fernandes, Phil (2009). "The New, Militant Atheism". The Atheist Delusion. Xulon Press. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60791-582-9. பார்க்கப்பட்ட நாள் 2009-11-24. The new atheists have made their choice—apparently, no amount of evidence for God will change their minds. They claim that the existence of God is as ridiculous as the existence of a flying spaghetti monster.
 54. Billy Townsend (2007-12-22). "Polk Needled, Noodled In Evolution Flap". The Tampa Tribune. பார்க்கப்பட்ட நாள் 2007-12-23.
 55. Nelson, Gary (2008-04-15). "Courthouse No Longer Hosting Free Speech Displays". The Crossville Chronicle இம் மூலத்தில் இருந்து 2009-04-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090415033557/http://www.crossville-chronicle.com/cnhi/crossvillechronicle/homepage/local_story_106193650.html?keyword=leadpicturestory. பார்த்த நாள்: 10 July 2008. 

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு