விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பிப்ரவரி 17, 2013
காமராசர் (1903-1975) ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர். 1954 இல் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசு எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காமராசர் அமைச்சரவையில் 8 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார். காமராசர் காலத்திலேயே பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, இரயில் பெட்டித் தொழிற்சாலை, நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை, கிண்டி மருத்துவச் சோதனைக் கருவிகள் தொழிற்சாலை போன்ற பல திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டன. கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்ற இவரது திட்டம் "காமராசர் திட்டம் என்றே அழைக்கப்பட்டது. மேலும்...
உதட்டுச் சாயம் என்பது நிறப்பசைகள், எண்ணெய்கள், மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு, பல்வேறு நிறங்களில் அமைந்த, உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள். உதட்டுச் சாயங்கள் பல்வேறு நிறங்களில், வகைகளில் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெண்கள் தங்களின் அன்றாட ஒப்பனையில் இதனைப் பயன்படுத்துகின்றனர். கிமு 3300 – கிமு 1300களிலேயே உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன்முதலில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினர். சிந்துவெளி நாகரிகத்தின் ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண விழாக்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்கச் சில ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் ஒன்று உதட்டுச்சாயமாகும். இவர்கள் தேன்மெழுகு, தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிறமிகள் என்பனவற்றைக் கலந்து திரவ வடிவில் கிடைத்த கூழ்மத்தைத் தங்களது உதடுகளில் பூசிக்கொண்டனர். மேலும்...