விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 20, 2011

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952 சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 152 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி முதல் அமைச்சராகப் பதவி ஏற்றார். 1952 இல் சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1946 முதல் சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரசு காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. பி. எஸ். குமாரசுவாமிராஜா முதல்வராக இருந்தார். முக்கிய எதிர்க்கட்சிகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், கிசான் மசுதூர் பிரஜா கட்சியும் இருந்தன. ஈ. வெ. இராமசாமி நாயக்கரின் திராவிடர் கழகம், அண்ணாவின் திமுக நேரடியாகத் தேர்தலில் பங்கு பெறவில்லை. இக்கட்சிகளைத் தவிர காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சென்னை மாநில முஸ்லிம் லீக், நீதிக்கட்சி, ஃபார்வார்டு ப்ளாக், பட்டியல் ஜாதிகள் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன. காங்கிரசு 152 இடங்களில் வென்றாலும், அதற்கு தனிப் பெரும்பான்மை கிட்டவில்லை. மேலும்..


பேராக் என்பது மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்று. இதன் வடக்கே தாய்லாந்தின் யாலா மாநிலம் உள்ளது. பேராக் மாநிலத்திற்கு வட மேற்கே பினாங்கு மாநிலம் உள்ளது. பேராக் மாநிலம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வடக்கே 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றது. பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போ. வரலாற்றுச் சான்றுகளின் படி வெள்ளீயம் இங்கு அகழ்ந்து எடுக்கப்பட்டு வந்தது. பேராக் என்றால் மலாய் மொழியில் வெள்ளீயம் என்று பொருள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈப்போ மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது. அந்தக் காலக் கட்டத்தில் ஆங்கிலேயக் காலனித்துவ ஆட்சியாளர்கள், ஈப்போவை மலேசியாவின் இரண்டாவது தலைநகரமாகத் தரம் மேம்படுத்தி வழி நடத்தினர். வெள்ளீயத்தின் விலை உலகளாவிய அளவில் குறைந்ததன் காரணமாகப் பேராக் மாநிலத்தின் பொருளாதாரம் மிகவும் பாதிப்பு அடைந்தது. அதனால் அதன் பொருளாதார வளர்ச்சியும் தேக்கம் அடைந்தது. ஈப்போவில் வரலாற்றுப் புகழ்மிக்க பல கட்டடங்கள் உள்ளன. அவற்றில் இரயில்வே நிலையம், மாநகர் மன்றம், கிந்தா இந்தியர் விளையாட்டு அரங்கம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். ஈப்போ நகரத்தின் மக்கள் தொகையில் 70 விழுக்காட்டினர் சீனர்கள் ஆகும். 18 விழுக்காட்டினர் இந்தியர்கள். மேலும்..