சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952

இந்தியக் குடியரசில் சென்னை மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை நடைமுறைக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி 152 தொகுதிகளில் வென்று ஆட்சியமைத்தது. சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி முதல் அமைச்சராகப் பொறுப்பேற்றார். இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டே நடைபெற இருந்தது. ஆனால் நிருவாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு 1952 இல் நடைபெற்றது. எனவே இத்தேர்தல் சில ஆவணங்களில் "சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1951" என்றும் குறிப்பிடப்படுகிறது.

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952

← 1946 2 - 25 ஜனவரி, 1952 1957 →

சென்னை மாநில சட்டமன்றத்திற்கான 375 இடங்கள்
  First party Second party
 
தலைவர் இராஜாஜி எம். கல்யாணசுந்தரம்
கட்சி காங்கிரசு இந்திய கம்யூனிஸ்ட்
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- திருச்சி வடக்கு
வென்ற
தொகுதிகள்
152 62


முந்தைய சென்னை மாநில முதல்வர்

பி. எஸ். குமாரசுவாமிராஜா
காங்கிரசு

சென்னை மாநில முதல்வர்

சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி
காங்கிரசு

தொகுதிகள்

தொகு

1952 இல் சென்னை சட்டமன்றத்தில் மொத்தம் 375 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 309 தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 66 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 62 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) நான்கு தொகுதிகள் பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்தது.[1][2][3] ஒரு இலட்சத்திற்கும் கூடுதலான வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4] இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
  • பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் (இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலாம், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்)

இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் (எ.கா. 1957 தேர்தலில் கோவை -2 தொகுதி) இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித்தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.[5]

ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்து பின்வருமாறு உறுப்பினர்கள் தெர்ந்தெடுக்கப்பட்டனர்: (முழுமையான எண்ணிக்கை அல்ல)

தற்கால மாநிலம் தமிழ் நாடு ஆந்திர பிரதேசம் கர்நாடகா கேரளா (மலபார்)
எண்ணிக்கை 190 143 11 29

மூன்று உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 372 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

கட்சிகள்

தொகு

1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாகாணத்தை ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரசு காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. பி. எஸ். குமாரசுவாமிராஜா முதல்வராக இருந்தார். முக்கிய எதிர் கட்சிகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னாள் காங்கிரசு முதல்வர் தங்குதுரி பிரகாசத்தின் கிசான் மசுதூர் பிரஜா கட்சியும் இருந்தன. பெரியார் ஈ. வே. ராமசாமியின் திராவிடர் கழகமும் கா. ந. அண்ணாத்துரையின் திராவிட முன்னேற்றக் கழகமும் (திமுக) நேரடியாக தேர்தலில் பங்கு பெறவில்லை. இக்கட்சிகளைத் தவிர மாணிக்கவேல் நாயக்கரின் காமன்வீல் கட்சி, ராமசாமி படையாச்சியின் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, சென்னை மாநில முஸ்லிம் லீக், பி. டி. ராஜனின் நீதிக்கட்சி, முத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வார்டு ப்ளாக், அம்பேத்கரின் பட்டியல் ஜாதிகள் கூட்டமைப்பு போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.

அரசியல் நிலவரம்

தொகு

காங்கிரசில் உட்கட்சிக் குழுக்கள்

தொகு

1946 முதல் ஆட்சியில் இருந்த காங்கிரசு உட்கட்சிப் பூசல்களால் தத்தளித்தது. ஆறாண்டுகளில் மூன்று முதல்வர்கள் மாறி இருந்தார்கள்.

காங்கிரசில் நான்கு முக்கிய உட்குழுக்கள் இருந்தன –

  • தங்குதுரி பிரகாசம் தலைமையில் தெலுங்கு உறுப்பினர்கள்
  • காமராஜர் தலைமையில் பிராமணர் அல்லாத தமிழ் உறுப்பினர்கள்
  • ராஜகோபாலச்சாரியை ஆதரித்த பிராமணர்கள்
  • பட்டாபி சீத்தாராமையா, கால வெங்கடராவ், பேசவாடா கோபால ரெட்டி பிரிவினர்

இவர்களுள் பிரகாசம் கோஷ்டியினர் 1951 இல் காங்கிரசை விட்டு வெளியேறி ஹைதராபாத் ஸ்டேட் பிரஜா பார்டி என்ற தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கினர். தனி ஆந்திர மாநிலம் அவர்களது கோரிக்கை. தேர்தலுக்கு முன் இக்கட்சி ஆச்சார்யா கிருபாளினியின் கிசான் மசுதூர் ப்ரஜா பார்ட்டியுடன் இணைந்தது. பின்னர் கால வெங்கடராவும் வெளியேறி தனிக்கட்சி தொடங்கி விட்டார்.[6][7][8]

தேர்தல் ஜனநாயகத்தில் பொதுவுடைமைக் கட்சிகள்

தொகு

1946 முதல் இந்திய பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்டு) கட்சி தெலங்கானா, மலபார், தஞ்சாவூர் பகுதிகளில் ஆயுதமேந்திப் போராடி வந்தது. இவ்வாயுதப் புரட்சி காங்கிரசு ஆட்சியாளர்களால் கடுமையான நடவடிக்கைகளைக் கொண்டு அடக்கப்பட்டது. போராட்டம் தோல்வி அடைந்ததால் 1951 இல் பொதுவுடைமைக் கட்சி வன்முறையைக் கைவிட்டு, தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. கட்சியின் குறிக்கோள் மக்கள் ஜனநாயகத்திலிருந்து தேசிய ஜனநாயகமாக மாற்றப்பட்டது. தெலங்கானா ஆயுதப் புரட்சி தோல்வியடைந்தாலும், அருகிலுள்ள ஆந்திரத்தில் கம்யூனிஸ்டுகள் பெரும் செல்வாக்கு பெற்றிருந்தனர். மொழி அடிப்படையில் ஆந்திரா தனி மாநிலமாக வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையும், கம்மா சாதியினரின் ஆதரவும் அவர்களது செல்வாக்குக்குக் காரணமாக இருந்தன. நில உரிமையாளர்களான ரெட்டிகள் காங்கிரசை ஆதரித்ததால், கம்மவார்கள் கம்யூனிஸ்டுகளின் ஆதரவாளர்களாயினர். அதுவரை நடந்த தேர்தல்களில் வாக்குரிமை நில உரிமை/சொத்து வரி அடிப்படையில் குறுக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்தலின்போது இந்தியக் குடியரசில் 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டதால், நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள் போன்ற கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் முதல் முறையாக வாக்குரிமை பெற்றனர்.[9][10][11][12][13] விவசாயிகள் நிறைந்த தஞ்சை மாவட்டத்திலும் அவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர்.[14]

திராவிட இயக்கத்தில் பிளவு

தொகு

பெரியாரின் திராவிடர் கழகம் (திக) 1949 ஆம் ஆண்டில் பிளவுபட்டது. அண்ணாதுரையின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) உருவானது. இரு கட்சிகளும் தனி திராவிட நாடு கொள்கையைக் கொண்டிருந்தன. தி.க தஞசாவூர் மாவட்டத்தில் மட்டும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்தது. திமுக தேர்தலில் போட்டியிடாமல், திராவிட நாடு கொள்கையை சட்டமன்றத்தில் எழுப்புவோம் என்று உறுதியளித்து உடன்படிக்கையில் கையெழுத்திடும் கட்சியினரை ஆதரிப்பதாக அறிவித்தது. வன்னிய சாதியினரின் ஆதரவு பெற்ற காமன்வீல் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி ஆகிய கட்சிகளும் சில கட்சிசாரா (சுயேச்சை) வேட்பாளர்களும் அவ்வாறு கையெழுத்திட்டு திமுகவின் ஆதரவைப் பெற்றனர். இவர்களைத் தவிர பெரியாரின் தலைமையை ஏற்காத பழைய நீதிக்கட்சித் தலைவர்கள் சிலர் பி. டி. ராஜனின் தலைமையில் "நீதிக்கட்சி" என்ற பெயரில் "தராசு" சின்னத்தில் போட்டியிட்டனர்.[15][16]

தேர்தல் முடிவுகள்

தொகு

வாக்குப்பதிவு ஜனவரி 2 முதல் 25 வரை ஒன்பது கட்டங்களில் நடைபெற்றது. மொத்தம் 58 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. முடிவுகள் பிப்பிரவரி மாத இறுதிக்குள் வெளியாகின.[17]

இந்திய தேசிய காங்கிரசு இடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 152 இந்திய கம்யூனிஸ்ட் 62 கிசான் மசுதூர் பிரஜா கட்சி 35
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19
கிரிஷிகார் லோக் கட்சி 15
பொதுவுடமை கட்சி 13
காமன்வீல் கட்சி 6
சென்னை மாநில முஸ்லிம் லீக் 5
ஃபார்வார்டு ப்ளாக் (மார்க்சிஸ்ட் குழு) 3
தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு 2
நீதிக்கட்சி 1
சுயேச்சைகள் (கட்சிசாரா வேட்பாளர்கள்) 62
மொத்தம்(1952) 152 மொத்தம்(1952) 62 மொத்தம்(1952) 161

ஆட்சி அமைப்பு

தொகு

ராஜகோபாலாச்சாரி

தொகு

காங்கிரசு 152 இடங்களில் வென்றாலும், அக்கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிட்டவில்லை. மேலும் முதல்வர் குமாரசாமி ராஜா உட்பட 6 அமைச்சர்கள் - பெஜவாடா கோபால ரெட்டி, கால வெங்கட ராவ், கல்லூரி சந்திரமளலி, கே. மாதவ மேனன், பக்தவத்சலம் - தேர்தலில் தோற்றுப் போனார்கள். காங்கிரசு தமிழகத் தொகுதிகளில் 96-இலும், கன்னடத் தொகுதிகளில் 9-இலும் வென்றது. ஆனால் அதனால் மலபாரில் 4-இலும் ஆந்திரத்தில் 43-இலும் மட்டுமே வெல்ல முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், எதிர்க்கட்சிகள் சென்னையில் கூடிக் கூட்டணி அமைத்து, பிரகாசத்தை தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். ஐக்கிய ஜனநாயக முன்னணி என்று பெயரிடப்பட்ட அந்தக் கூட்டணிக்கு 166 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது (கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஆதரவு வேட்பாளர்கள் - 70, கிசான் மசுதூர் - 36, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி - 19, காமன்வீல் கட்சி - 6, ஃபார்வார்டு ப்ளாக் - 3, தாழ்த்தப்பட்டோர் கூட்டமைப்பு -1, நீதிக்கட்சி - 1, பிற கட்சிசாரா வேட்பாளர்கள் - 30). பிரகாசம் சென்னை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அனுமதி கோரினார். ஆனால், ஆளுநர் ஸ்ரீ பிரகாசாவும் மத்தியில் ஆண்ட காங்கிரசும், ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவு அரசு அமைவதை விரும்பவில்லை. ஆளுநரின் தலைமையில் குடியரசுத்தலைவர் ஆட்சி ஏற்படுவதையும் விரும்பவில்லை. காங்கிரசு ஆட்சி அமைய அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடைய ஒரு முதல்வர் தேவைப்பட்டதால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ராஜகோபாலாச்சாரியை ஆட்சி அமைக்க அழைத்தனர்.[18][19][20][21][22] தமிழக காங்கிரசு தலைவர் காமராஜருக்கு இதில் உடன்பாடில்லை. எதிர்க் கட்சிக் கூட்டணிக்கு அரசமைக்க முதலில் வாய்ப்பளிக்க வேண்டும். அக்கூட்டணியால் வெகுகாலம் ஒற்றுமையாக இருக்க முடியாதென்று அவர் கருதினார். ஆனால் டி. டி. கிருஷ்ணமாச்சாரி, ராம்நாத் கோயங்கா ஆகியோரின் வற்புறுத்தலால் ராஜகோபாலாச்சாரி ஆட்சியமைக்க அழைக்கப் பட்டார்.[23]

ஏப்பிரல் 1, 1952 அன்று ஆளுனரால் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டு ராஜகோபாலாச்சாரி ஏப்ரல் 14 அன்று பதவியேற்றார். அவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாததால் பிரகாசா அவரை மேலவையின் உறுப்பினராக நியமித்தார். இரு மாதங்களுக்குள் எதிர் கட்சிகளின் கூட்டணியை உடைத்தும், சுயேச்சைகளை காங்கிரசில் சேர்த்தும் காங்கிரசின் சட்டமன்ற பலத்தை பெருக்கினார் ராஜகோபாலாச்சாரி. மே 6 ஆம் தேதி பேரவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது; காங்கிரசின் சிவசண்முகம் பிள்ளை, கட்சிசாரா உறுப்பினர் சுயம்பிரகாசத்தை 206-162 என்ற கணக்கில் வென்று பேரவைத் தலைவரானார். முதல்வர் ராஜகோபாலாச்சாரி ஜூலை 3 ஆம் தேதி சட்டமன்றத்தில் 200 உறுப்பினர்களின் ஆதரவுடன் தன் பெரும்பான்மையை நிரூபித்தார். எதிர்க் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 162 ஆகக் குறைந்திருந்தது. இந்தியக் குடியரசில் ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மையை நிரூபித்தது இதுவே முதல் முறை.[7][19][24][25][26][27][28][29] அரசு ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வரும் நிகழ்வுகளால் 152-இல் இருந்து 200 ஆக உயர்ந்தது:

  • காமன்வீல் கட்சியின் தலைவர் மாணிக்கவேல் நாயக்கருக்கு அமைச்சர் பதவியளித்ததால் அக்கட்சியின் 6 உறுப்பினர்கள் ராஜகோபாலாச்சாரியை ஆதரித்தனர். 19 உறுப்பினர்களைக் கொண்ட மற்றொரு வன்னியர் கட்சியான தமிழ் நாடு உழைப்பாளர் கட்சியும் காங்கிரசுக்கு ஆதரவளித்தது.[30][31]
  • பல கட்சிசாரா உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்தனர். ஆரம்பத்தில் 152 ஆக இருந்த காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மே 3 ஆம் தேதி 165 ஆகவும் செப்டம்பர் 30 ஆம் தேதி 167 ஆகவும் உயர்ந்தது.[32]
  • ராஜகோபாலாச்சாரி கிரிஷிகார் லோக் கட்சியை உடைத்து திம்ம ரெட்டி, நீலாதிரி ராவ் ரெட்டி, குமிசெட்டி வெங்கடநாராயண டோரா ஆகிய உறுப்பினர்களை காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.[33][34]
  • கம்யூனிஸ்டுகள் பதவியேற்பதை விரும்பாத சென்னை மாநில முஸ்லிம் லீகின் 5 உறுப்பினர்களும் ராஜகோபாலாச்சாரிக்கு ஆதரவளித்தனர்.[35]

ராஜகோபாலாச்சாரி அமைச்சரவை

தொகு
அமைச்சர் துறை[36]
சி. இராஜாஜி முதலமைச்சர்,பொதுத்துறை, காவல்துறை
ஏ. பி. செட்டி சுகாதாரம்
சி. சுப்பிரமணியம் நிதி, உணவு, தேர்தல்
கே. வெங்கடசாமி நாயுடு அறநிலையம், பதிவு
என். ரங்காரெட்டி பொதுப்பணி
எம். வி.கிருஷ்ணா ராவ் கல்வி அரிசன நலம் செய்தி
வி. சி. பழனிச்சாமி கவுண்டர் மதுவிலக்கு
யு. கிருஷ்ண ராவ் தொழில், தொழிலாளர் நலம், போக்குவரத்து, புகைவண்டி, துறைமுகம், விமான போக்குவரத்து
ஆர். நாகன கவுடா வேளாண்மை, வனம், கால்நடை, மீன் வளம், சின்கோனா
என். சங்கர ரெட்டி உள்ளாட்சி
எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் நிலவருவாய்
கே. பி. குட்டி கிருஷ்ணன் நாயர் நீதி, சிறை, சட்டம்
சண்முக ராஜேஸ்வர சேதுபதி வீட்டு வாடகைக் கட்டுப்பாடு
எஸ். பி. பி. பட்டாபி ராம ராவ் ஊரக வளர்ச்சி, வணிகவரி, அரிசன நலம்
டி.சஞ்சீவையா கூட்டுறவு வீட்டு வசதி
மாற்றங்கள்
  • 1 அக்டோபர் 1953-இல் தனி ஆந்திர மாநிலம் உருவானது. 30 செப்டம்பரில் ஆந்திர அமைச்சர்கள் (சங்கர ரெட்டி, கவுடா, பட்டாபிராம ராவ், சஞ்சீவய்யா மற்றும் ரங்கா ரெட்டி) பதவி விலகினர்.[37] அவர்களுக்குப் பதில் பக்தவத்சலத்திடம் விவசாயம், வனங்கள், மீன்வளம், கிராம நலன் துறைகள் ஒப்படைக்கப் பட்டன. ஜோதி வெங்கடாசலம் மதுவிலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சரானார். ராஜாராம் நாயுடுவிடம் உள்ளாட்சித் துறை கொடுக்கப்பட்டது. சி. சுப்ரமணியம் கல்வி, தகவல் துறை அமைச்சரானார். பழனிச்சாமி கவுண்டருக்கு கால்நடை மற்றும் ஹரிஜன நலத்துறைகள் அளிக்கப்பட்டன.[38]

காமராஜர்

தொகு

அக்டோபர் 1 ஆம் தேதி தெலுங்கு மொழி பேசும் பகுதிகள் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து "ஆந்திரா" என்ற தனி மாநிலம் உருவானது. சென்னை சட்டமன்றத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 230 ஆகக் குறைந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஆந்திர மற்றும் மைசூர் சட்டசபைகளுக்கு முறையே 140 மற்றும் 5 உறுப்பினர்கள் மாற்றப்பட்டனர். இவ்வாறு வெளியேறிய உறுப்பினர்களில் பெரும்பான்மை காங்கிரசு அல்லாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மீதமிருந்த 230 உறுப்பினர்களில் காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தது. ஆனால் காங்கிரசு உறுப்பினர்களில் பெரும்பாலோனோர் காமராஜரின் ஆதரவாளர்கள். ராஜகோபாலாச்சாரி பெரும் சர்ச்சைக்குள்ளான குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்ததனால் அவர்களின் அதிருப்திக்கு ஆளாகி இருந்தார். அவர் பதவி விலக வேண்டுமென கட்சிக்குள் குரல்கள் எழுந்தன. எதிர்ப்பு வலுத்ததால் மார்ச் 1954 இல் அவர் உடல்நிலை காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். மார்ச் 31 இல் நடந்த காங்கிரசு சட்டமன்றத் தலைவர் தேர்தலில் சி. சுப்ரமணியத்தை காமராஜர் வென்றார். ஏப்ரல் 13 ஆம் நாள் முதல்வராகப் பதவியேற்றார்.[23][39]

காமராஜர் அமைச்சரவை

தொகு

(ஏப்ரல் 13, 1954 - எப்ரல் 13, 1957)

அமைச்சர் துறை
முதல்வர் காமராஜர் காவல் மற்றும் உள்துறை
ஏ. பி. ஷெட்டி சுகாதாரம் (நலத்துறை), கூட்டுறவு மற்றும் வீட்டு வசதி
பக்தவத்சலம் விவசாயம், வனங்கள், மீன்வளம், கிராம நலன், பெண்கள் நலன், தொழில், தொழிலாளர் நலன் மற்றும் கால் நடை
சி. சுப்ரமணியம் நிதி, உணவு, கல்வி, தேர்தல், தகவல் தொடர்பு மற்றும் சட்டம்
எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர் நில வருவாய் மற்றும் விற்பனை வரி
சண்முக ராஜேஸ்வர சேதுபதி பொதுப் பணிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் அச்சு
பி. பரமேஸ்வரன் போக்குவரத்து, ஹரிஜனர் நலம், அறநிலையம், பதிவு மற்றும் மதுவிலக்கு
எஸ். எஸ். ராமசாமி படையாச்சி உள்ளாட்சி
மாற்றங்கள்
  • 1 மார்ச் 1956 இல் கேரள மாநிலம் உருவான பின் ஷெட்டி பதவி விலகினார். அவரது துறைகள் மற்ற அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

தாக்கம்

தொகு

1957-இல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் காமராஜர் மாநில காங்கிரசு குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். அவருக்கு பதில் ப. சுப்பராயன் தலைவரானார்.[23] ராஜகோபாலாச்சாரி மேலவையில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரமான பி. ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அரசியலமைப்புச் சட்டதின் கூறியுள்ளபடி ஒருவரை மேலவைக்கு ஆளுனர் நியமிக்கும் முன் அமைச்சரவையின் பரிந்துரை வேண்டும். ஆனால் பிரகாசா ராஜகோபாலாச்சாரியை நியமிக்கும் போது அமைச்சரவை அமைக்கப்படவில்லை. எனவே அந்த நியமனம் செல்லாது என்பது அவரது வாதம். அவரது மனுவை விசாரித்த தலைமை நீதிபதி பி. வி. ராஜமன்னார் மற்றும் நீதிபதி வெங்கடராம அய்யர் இத்தகைய விஷயங்களில் நீதிமன்றம் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்து தள்ளுபடி செய்தனர்.[40][41][41] இச்செயல் பிற்காலத்தில் மத்தியில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாநில ஆளுநர்கள் செயல்பட ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்தது. பிற்காலத்தில் மத்திய மாநில அரசுகளின் உறவை சீர்திருத்த அமைக்கப்பட்ட சர்க்காரியா குழு பிரகாசாவின் செயல் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு புறம்பானது என்று கருத்து தெரிவித்தது.[24]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "1952 Election" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  2. "The Representation of People Act, 1950" (PDF). Archived from the original (PDF) on 2015-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  3. "The State Legislature - Origin and Evolution". Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  4. "Constituent Assembly of India Debates Vol IV, Friday the 18th July 1947" (PDF). Archived from the original (PDF) on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  5. Hasan, Zoya; Sridharan, Eswaran; Sudharshan, R (2005). India's living constitution: ideas, practices, controversies. Anthem Press. pp. 360–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1843311364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843311362.
  6. Forrester, Duncan B. (1970). "Kamaraj: A Study in Percolation of Style". Modern Asian Studies, (Cambridge University Press) 4 (1): 43–61. http://www.jstor.org/stable/311752. பார்த்த நாள்: 21 November 2009. 
  7. 7.0 7.1 I. N. Tewary (1999). Political system: a micro perspective. New Delhi: Anmol Publications PVT. LTD. p. 13.
  8. Kumar, Prasanna A. (1978). Dr. B. Pattabhi Sitaramayya: a political study. Andhra University Press. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170996198, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170996194.
  9. Namboodiripad, E.M.S. (1994). The Communist Party in Kerala: six decades of struggle and advance. National Book Centre. p. 273. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  10. Welch, Claude Emerson (1980). Anatomy of rebellion. SUNY Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873954416, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780873954419.
  11. Kude, Uttam Laxmanrao (1986). Impact of Communism on the working class and peasantry: a case study of Maharashtra. Daya Books. pp. 173–177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170350271, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170350279.
  12. Sundarayya, P (2006). Telangana People's Struggle and Its Lessons. Foundation Books. pp. 102–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8175963166, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788175963160.
  13. "Foreign News: Shocking Truth, Time Magazine 10 February 1947". Archived from the original on 1 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  14. Gough, Kathleen (2008). Rural Society in Southeast India. Cambridge University Press. pp. 141–146. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521040191, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521040198.
  15. "The Decline and Fall of Tamil Seccessionism in India Part 3 by DBS Jeyaraj, The Daily Mirror 10 October 2009". Archived from the original on 13 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  16. "Celebrating a half century, The Hindu 26 September 1998". Archived from the original on 29 மார்ச் 2005. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2010. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  17. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  18. Baliga, B.S (2000). Madras District Gazetteers: Coimbatore. Superintendent, Govt. Press. pp. 155–6.
  19. 19.0 19.1 T. V. R. Shenoy (22 August 2001). "From Rajaji to Jayalalithaa". Rediff. http://www.rediff.com/news/2001/aug/22flip.htm. 
  20. accessdate = 20 November 2009 "Indian Election Results". Far Eastern Survey, (Institute of Pacific Relations) 21 (7): 61–70. 7 May 1952. http://www.jstor.org/stable/3024481 accessdate = 20 November 2009. 
  21. Deva, Narendra (1999). Selected Works of Acharya Narendra Deva: 1948-1952. Radiant Publishers. p. 409. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170271762, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170271765.
  22. Walch, James (1976). Faction and front: party systems in South India. Young Asia Publications. p. 160.
  23. 23.0 23.1 23.2 P. Kandaswamy (2001). The political career of K. Kamraj. New Delhi: Concept publishing company. p. 50.
  24. 24.0 24.1 C. V. Gopalakrishnan (2001-05-31). "Of Governors and Chief Ministers". தி இந்து. The Hindu Group. Archived from the original on 2013-01-03. பார்க்கப்பட்ட நாள் 2009-12-17.
  25. Kaliyaperumal, M (1992). The office of the speaker in Tamilnadu : A study (PDF). Madras University. p. 91. Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  26. "A review of the Madras Legislative Assembly 1952-1957" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  27. Eastern Economist, Annual Number. Eastern Economist. 1965. p. 1172.
  28. Subramaniam, Chidambaram (1993). Hand of destiny: memoirs, Volume 1. Bharatiya Vidya Bhavan. p. 166. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  29. "A Review of the Madras Legislative Assembly (1952-1957) : Section I, Chapter IV" (PDF). தமிழ்நாடு சட்டமன்றம். Archived from the original (PDF) on 4 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  30. Susanne Hoeber Rudolph (15 July 1984). The Modernity of Tradition: Political Development in India. The University of Chicago Press. pp. 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0226731377.
  31. Rao, Ramesh N. (2001). Coalition conundrum: the BJP's trials, tribulations, and triumphs. Har Anand Publications. pp. 32–33.
  32. "A review of the Madras Legislative Assembly (1952 - 1957) Section II" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-16.
  33. Sharma, Sadhna (1995). States politics in India. Mittal Publications. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170996198, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170996194.
  34. Rao, Vadakattu Hanumantha (1983). Party politics in Andhra Pradesh, 1956-1983. ABA Publications. p. 128.
  35. Aziz, Abdul M. (1992). Rise of Muslims in Kerala politics. CBH Publications. pp. 41, 44.
  36. "Council of Ministers and their Portfolios (1952-1954)" (PDF). A Review of the Madras Legislative Assembly (1952-1957). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 17 October 2013.
  37. "A Review of the Madras Legislative Assembly (1952-1957) : Section I" (PDF). தமிழ்நாடு சட்டமன்றம். Archived from the original (PDF) on 4 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 11 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  38. Justice Party golden jubilee souvenir, 1968. Justice Party. 1968. p. 58. ISBN.
  39. James Walch. Faction and front: Party systems in South India. Young Asia Publications. pp. 162–163.
  40. Fighter all the way, Frontline Magazine Oct 25 - Nov 27 2008[தொடர்பிழந்த இணைப்பு]
  41. 41.0 41.1 வைகை இராமமூர்த்தி (2008-09-20). "A daughter remembers P. Ramamurti". தி இந்து. The Hindu Group. Archived from the original on 2008-09-22. பார்க்கப்பட்ட நாள் 2009-12-17.

வெளி இணைப்பு

தொகு

1951 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்