சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946

சென்னை மாகாணத்தில் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான இரண்டாம் தேர்தல் 1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று த. பிரகாசம் சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.

சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1946

← 1937 மார்ச் 30, 1946 1952 →

சட்டமன்றக் கீழவைக்கான 215 இடங்கள்
மேலவைக்கான 46 இடங்கள
  First party Second party
 
தலைவர் காமராஜர் காயிதே மில்லத்
கட்சி காங்கிரசு முஸ்லீம் லீக்
தலைவரின் தொகுதி சாத்தூர்-அருப்புக்கோட்டை தொகுதி
வென்ற தொகுதிகள் கீழவை : 163
மேலவை : 32
கீழவை : 28
மேலவை : 7

முந்தைய சென்னை மாகாண முதல்வர்

ஆளுனர் ஆட்சி

சென்னை மாகாண முதல்வர்

த. பிரகாசம்
காங்கிரசு

மாநில சுயாட்சி தொகு

இந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் ஏற்படவும் சுயாட்சி வழங்கவும் பிரிட்டிஷ் அரசாங்கம், இந்திய அரசாங்கச் சட்டம், 1935 ஐ இயற்றியது. இதற்கு முன்னர் வழக்கில் இருந்த இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாவல், நிதி போன்ற முக்கிய துறைகள் தவிர மற்ற பொறுப்புகள் இந்தியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. இப்புதிய ஆட்சி முறை மாநில சுயாட்சி என்றழைக்கப்பட்டது. இதன் கீழ் 1937 இல் மத்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் முதல் தேர்தல் நடத்தப்பட்டது.

தொகுதிகள் தொகு

தொகுதி வகைகள்[1][2]
தொகுதிகள் மேலவை கீழவை
பொது 35 116
முஸ்லிம்கள் 7 28
இந்திய கிருத்துவர்கள் 3 8
ஐரோப்பியர்கள் 1 3
ஆளுனர் நியமனம் 8-10 0
தலித்துகள் 0 30
பெண்கள் 0 8
நிலச்சுவான்தார்கள் 0 6
வர்த்தக அமைப்புகள் 0 6
தொழிற்சங்கங்கள் 0 6
ஆங்கிலோ இந்தியர் 0 2
பல்கலைக்கழகங்கள் 0 1
பிற்படுத்தப்பட்டோர் 0 1
மொத்தம் 54-56 215

1937இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1935 இன் படி, சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. அசம்பிளி என்றழைக்கப்பட்ட கீழவையில் 215 உறுப்பினர்களும், கவுன்சில் என்றழைக்கப்பட்ட மேலவையில் 54 முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவர்களுள் கீழவையின் அனைத்து உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதிகளுள் முஸ்லீம்கள், தலித்துகள்., ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர் மற்றும் தொழில் முனைவோர், இந்திய கிருத்துவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.

அரசியல் நிலவரம் தொகு

1937 தேர்தலில் படு தோல்வியடைந்த நீதிக் கட்சி, 1937-40 இல் நடை பெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது சுயமரியாதை இயக்கத் தலைவர் பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்தது, 1944 இல் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது. அக்கட்சி இனிமேல் தேர்தல்களில் போட்டியிடாது என்று பெரியார் அறிவித்தார். எனவே 1946 தேர்தலை நீதிக்கட்சியினர் புறக்கணித்தனர். காங்கிரசு உட்கட்சிப் பூசல்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றது. காயிதே மில்லத் முகமது இஸ்மயீல் தலைமையிலான முஸ்லீம் லீக் காங்கிரசுக்கு முக்கிய போட்டிக்கட்சியாக இருந்தது. ஆனால் அது பாகிஸ்தான் உருவாவதை ஆதரித்ததனால் அதற்கு முஸ்லீம்களைத் தவிர வேறு பிரிவினரிடையே ஆதரவு இல்லை. இவை தவிர, 1934-1942 இல் தடை செய்யப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இத்தேர்தலில் போட்டியிட்டது.

தேர்தல் முடிவுகள் தொகு

தேர்தல் முடிவுகள்:[3][4][5][6]

கீழவை தொகு

காங்கிரசு இடங்கள் முஸ்லிம் லீக் இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
இந்திய தேசிய காங்கிரசு 163 முஸ்லிம் லீக் 28 சுயேட்சை கட்சி 7
ஐரோப்பியர் 6
சுயேட்சைகள் 6
இந்திய கம்யூனிஸ்ட் 2
போட்டியிடாத இடங்கள் 2
மொத்தம் (1946) 163 மொத்தம் (1946) 28 மொத்தம் (1946) 24

மேலவை தொகு

காங்கிரசு இடங்கள் முஸ்லிம் லீக் இடங்கள் மற்றவர்கள் இடங்கள்
காங்கிரசு 32 முஸ்லிம் லீக் 7 மற்றவர்கள் 7
மொத்தம் (1946) 32 மொத்தம் (1946) 7 மொத்தம் (1946) 7

ஆட்சி அமைப்பு தொகு

இந்திய தேசிய காங்கிரசு மிகப்பெரும்பான்மையான தொகுதிகளில் வென்றிருந்தாலும் உட்கட்சி பூசல்களால் உடனடியாக முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறியது. தங்குதுரி பிரகாசத்தின் ஆந்திர கோஷ்டி, காமராஜரின் பிராமணரல்லாத தமிழர் கோஷ்டி, ராஜகோபாலாச்சாரியின் பிராமணத் தமிழர் கோஷ்டி, மாதவ மேனனின் கேரள கோஷ்டி என பல பிரிவினர் காங்கிரசில் இருந்தனர். இவர்களுள் காங்கிரசின் தேசியத் தலைவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த ராஜகோபாலாச்சாரி முதலில் முதல்வராக முயன்று தோற்றுப் போனார். பின்னர் உட்கட்சி தேர்தலில் பிரகாசம் காமராஜரின் வேட்பாளர் முத்துரங்க முதலியாரை வென்று சென்னை மாகாணத்தின் முதல்வரானார். ஆனால் காங்கிரசில் உட்கட்சி பூசல்கள் தொடர்ந்து நீடித்ததால் அடுத்த ஆறாண்டுகளில் மீண்டும் இருமுறை முதல்வர்கள் மாறினர்.

மேற்கோள்கள் தொகு

  1. "The State Legislature - Origin and Evolution:Brief History Before independence" இம் மூலத்தில் இருந்து 2010-04-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100413233934/http://www.assembly.tn.gov.in/history/history.htm. 
  2. "Tamil Nadu Legislative Assembly". Indian Government இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100102222439/http://legislativebodiesinindia.gov.in/States/tamilnadu/tamilnadu-w.htm. பார்த்த நாள்: 25 November 2009. 
  3. Kurup, K. K. N (1989). Agrarian struggles in Kerala. CBH Publications. பக். 13. ISBN 81-85381-01-1, ISBN 978-81-85381-01-5. http://books.google.com/books?lr=&id=JdxwAAAAMAAJ&dq=1946+madras+election+164+215&q=Muslim+League+28#search_anchor. 
  4. Dash, Shreeram Chandra (1968). The Constitution of India; a comparative study. Chaitanya Pub. House. பக். 532. http://books.google.com/books?lr=&client=firefox-a&id=SoRaAAAAIAAJ&dq=1946+congress+165+muslim+league+28&q=165#search_anchor. 
  5. Saroja Sundararajan (1989). March to freedom in Madras Presidency, 1916-1947. Madras : Lalitha Publications. பக். 623–636. 
  6. Baliga, B. S (2000). Madras District Gazetteers: Coimbatore. Superintendent, Govt. Press. பக். 138. http://books.google.com/books?id=JhxuAAAAMAAJ&q=1946+elections+madras+council&dq=1946+elections+madras+council&client=firefox-a&cd=6.