விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 26, 2013

அன்னை தெரேசா (1910-1997) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்திய குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். 1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். 45 ஆண்டுகளுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவரை சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இதற்கு மேல்கம் முக்கெரிட்ச் என்பவரின் சம்திங்க் பியுடிபுல் ஃபார் காட் என்ற ஆவணப்படம் ஒரு முக்கிய காரணமாகும். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். மேலும்...


தி வயர் ஒரு அமெரிக்கத் தொலைக்காட்சி நாடகத் தொடர். அமெரிக்காவின் பால்டிமோர் நகரத்தைக் கதைக்களமாகக் கொண்டது. இதனை உருவாக்கி பெரும்பாலான பகுதிகளை எழுதியவர் எழுத்தாளர் டேவிட் சைமன். ஐந்து பருவங்களும் அறுபது அத்தியாயங்களும் கொண்ட இத்தொடரை அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனம் எச்பிஓ 2002-2008 காலகட்டத்தில் ஒளிபரப்பியது. தி வயரின் ஐந்து பருவங்களும் பால்டிமோர் நகரின் சட்டத்துக்குப் புறம்பான போதைப் பொருள் வணிகம், நகரின் துறைமுகச் சூழல், நகர அரசும் நிர்வாக அமைப்புகளும், பள்ளிச் சூழல் மற்றும் அச்சு ஊடகச் சூழல் இவற்றில் ஏதேனும் ஒரு கூற்றினை மையமாகக் கொண்டவை. மேலோட்டமாகப் பார்க்கையில் தி வயர் ஒரு குற்ற நாடகமாகத் தெரிந்தாலும் அது உண்மையில் ஒரு அமெரிக்க நகரம், அதில் மக்கள் எப்படி வாழ்கின்றனர், தனிமனித வாழ்வில் அமைப்புகளின் தாக்கம், ஒருவர் எப்படி இறுதியில் தனது கொள்கைகளைக் கைவிட்டு தான் சார்ந்திருக்கும் அமைப்பின் பகுதியாகப் போகிறார் என்பன பற்றியானது என சைமன் கூறியுள்ளார். இத்தொடர் அமெரிக்க நகர வாழ்க்கையை யதார்த்தமாக சித்தரிப்பதோடு பல சமூக-அரசியல் கூறுகளை ஆழமாக நோக்குகிறது. மேலும்...