விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 4, 2014
தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு அல்லது ஆசியான் என்பது தென்கிழக்காசியாவின் 10 நாடுகளின் பொருளாதார, மற்றும் புவியியல் சார்ந்த அரசியல் கூட்டமைப்பு ஆகும். இதனை ஆகஸ்ட் 8, 1967 இல் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து அமைத்தன. அதன் பின்னர் புரூணை, மியான்மர், கம்போடியா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டன. பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தல், உறுப்பு நாடுகளிடையே சமூக, மற்றும் பண்பாட்டு உறவுகளைப் பேணல், பிராந்தியத்தில் அமைதி பேணல், உறுப்பு நாடுகளுக்கு ஏனைய நாடுகளுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பத்தை வழங்குதல் என்பன இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்களில் அடங்குகின்றன. மேலும்...
மெசொப்பொத்தேமியா என்பது, தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பிரதேசமாகும். இன்றைய ஈராக், ஈரான், மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. மெசொபொதேமியாவானது, மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் ஸக்ரோஸ் மலைகளினாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்கூறிய இரண்டு ஆற்றுச் சமவெளி முழுவதையும், சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய நாகரிகமாகத் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்றாகும். இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று. மேலும்...