விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு
எழுத்துப்பெயர்ப்பு (transliteration) என்பது ஒரு மொழியின் சொல்லை மற்றொரு மொழியின் ஒலிப்பு முறைக்கும் எழுத்து அமைப்புக்கும் தக்கபடி எழுதுவதாகும். ஒவ்வொரு மொழியின் ஒலிப்பு முறையும் எழுத்து அமைப்பும் (Orthography) வேறுபடுவதனால் இது தேவைப்படுகிறது.
எழுத்து என்பது "ஒலி", ஒலியெழுத்து என்றும் வரிவடிவ எழுத்து என்றும் இருபொருள் கொண்டது தமிழில். எழுத்துப்பெயர்ப்பு என்பது ஒருமொழியில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்கும் இன்னொரு மொழியில் ஈடான எழுத்து இன்னது என்று கொண்டு, எழுத்துக்கு எழுத்து மற்றொரு மொழி எழுத்தில் பெயர்ப்பது ஒரு வகை. இப்படி ஒலியைக் கணக்கில் கொள்ளாமல் தமிழ்ச்சொல் "கடல்" என்பதை "katal" என்று பெயர்ப்பது. ஒலியெழுத்துப் பெயர்ப்பு என்பது 'kadal" என்று பெயர்ப்பது. பிறமொழிச்சொற்களைத் தமிழில் பெயர்ப்பது ஒலியெழுத்துப் பெயர்ப்பு அல்லது ஒலிபெயர்ப்பு. எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் walk என்பதை வாக் என்றும் (ஏனெனில்ஆங்கில எழுத்து எல் (L) ஒலியற்றாது அங்கே), Milk என்பதை மில்க் என்றும் ஒலிப்பை ஒட்டி[ பெயர்ப்பது. Physics என்பதை ப்ஹ்ஸிக்ஸ் என்றோ வேறு வகையாக எழுத்துக்கு-எழுத்துப் பெயர்ப்பது இல்லை. பிசிக்சு என்றோ பிசிக்ஃசு என்றோ சிறிது தமிழ்ப்படுத்திப் பெயர்க்கின்றோம்.
வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்பொழுது தமிழ்ச்சூழலில் அச்சொற்களை ஓரளவுக்கு இயல்பாக வழங்கத்தானே அன்றி, அதனை மிகுதுல்லியத்துடன் ஒலித்துக் காட்டுவதற்கு அன்று. இங்கே கூடியமட்டிலும், தமிழ் முறையைப் பின்பற்றி, ஒரு சொல்லின் முதலில் வரும் எழுத்துகள், கடைசியில் வரும் எழுத்துகள், இடையில் கூட்டுசேர்ந்து வரும் எழுத்துகள் இவற்றையும் கணக்கில் கொள்ளுகின்றோம். முற்றிலுமாகவோ, ஒரே சீராகவோ எல்லா இடங்களிலும் பின்பற்றலாம் எனினும், சில இடங்களில் தளர்த்தியே பயன்படுத்துகின்றோம்.
- மொழி (அதாவது சொல்லின்) முதல் வரக்கூடாத எழுத்துகள்: மொத்தம் 8. அவையாவன ட், ண், ர், ல். ள். ழ், ற், ன் ஆகியவற்றின் உயிர்மெய் எழுத்துகள் (இவை தவிர, ய, வ முதலானவற்றுக்கும் சில விதி விலக்குகள் உண்டு).
- மொழி (சொல்லின்) கடைசியில் வரக்கூடாத எழுத்துகள்: க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய மெய்யெழுத்துகள் (ஆனால் இவற்றோடு குற்றியலுகரம் சேர்ந்து முடியலாம்). இறுதியில் வரக்கூடிய 24 எழுத்துகளை நன்னூல் கீழ்க்காணுமாறு கூறுகின்றது:
- ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
- சாயு முகரநா லாறு மீறே
- இடையில் வரக்கூடிய மெய்யெழுத்துக் கூட்டங்கள் பற்றி அறிய தமிழில் மெய்யொலிக் கூட்டம் என்னும் பக்கத்தைப் பார்க்கவும்.
- வேற்றுமொழிச்சொல்லாயினும் தமிழில் வழங்கும்பொழுது மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் கூடாது. ஆனால் மிகு தேவை எனில் மேற்கோள் குறிகளுக்குள் "க்ரை" என்று எழுதிக்காட்டலாம். பொதுவாக இதனைக் "கிரை" என்று தக்கதோர் உயிர் எழுத்தை முதல் எழுத்தோடு சேர்த்து எழுதுதல் வழக்கம். "பிளான்" (plan) என்பது பிளான் என்றும், "க்ளியர்" (clear) என்பது கிளியர் என்றும் மாறும். ஒலித்திரிபுகள், உள்வாங்கும் மொழியின் இயல்புகளால் ஏற்படும் (எடுத்துக்காட்டாக, பிளான், கிளியர் என்பனவற்றில் வழங்கு ள என்பதன் பயன்பாடு)
- எல்லா இடங்களிலும் இவ்விதிமுறைகளைக் கடைபிடிக்கலாம் எனினும், மிகுந்த இறுக்கம் இல்லாது கூடியவாறு பின்பற்ற முனைகிறோம். --செல்வா 00:53, 20 பெப்ரவரி 2012 (UTC)ஒரு விதியை மீறலாம் எனில் எல்லா விதிகளையும் மீறலாம் என்று கொள்ளாமல், கூடிய மட்டிலும் தமிழை வாழ்மொழியாக வைத்திருந்த விதிகளைக் கடைபிடிக்க முயல்வோம்.
|
கூடுமான வரை சொற்களைத் தக்கவாறு மொழிபெயர்க்க முயல வேண்டும். தக்க மொழி பெயர்ப்புக் கிட்டாத பொழுது மட்டும் எழுத்துப்பெயர்க்கவும். எல்லா பிற மொழிப்பெயர்களையும் தமிழ் எழுத்துகளில் பெயர்த்து எழுதுங்கள். அப்பெயர் தமிழ் பேசுவோரிடம் பழக்கம் இல்லாததாக இருக்கும் நேரத்தில் மட்டும் அதன் ஆங்கில எழுத்து வடிவிலோ அல்லது அந்த மூல மொழியின் எழுத்து வடிவத்தையோ அடைப்புக் குறிகளுக்குள் தாருங்கள்.
சில எடுத்துக்காட்டுக்கள்
தொகுஇங்குள்ள சொற்கள் அவற்றின் ஒலிப்பு முறைக்கான எடுத்துக்காட்டுக்களே. இவற்றில் சிலவற்றை மொழிபெயர்க்க முடியும்.
- aspirin - ஆசுப்பிரின்
- bacteria - பாக்டீரியா (இங்கு சிறு விதி மீறல் "க்டீ" வருதல், ஆனால் இளக்கம்),
- carbohydrate - கார்போஐதரேட்டு (இங்கு இடையே உயிரெழுத்து வருதல் விதி மீறல், ஆனால் இளக்கம்)
- delphin - டெல்ஃபின், டெல்ஃவின் (முதலில் டகரத்தில் தொடங்குதல் மீறல்; கூடாது எனில் இடெல்ஃபின்; தமிழ்ச்சொல் ஓங்கில்)
- Empire house - எம்பயர் அவுசு
- Francis - பிரான்சிசு
- glycerine - கிளிசரின்
- industry - (தொழிலகம்) இண்டசிட்ரி, இண்டசிற்றி
- jet airlines - செட் ஏர்லைன்சு
- kaolin - கவோலின்
- lithium - லித்தியம் அல்லது இலித்தியம்
- major - மேச்சர்
- Newton - நியூட்டன்
- Nitrogen - நைட்ரசன், நைதரசன்
- Oedipus - ஓடிபசு
- Pascal - பாசுக்கல்
- quantum - குவான்டம்/குவாண்டம்
- Rexona - ரெக்சோனா (ரெ எனத்தொடங்கல் மீறல்; இரெக்ஃசோனா)
- riboflavin - ரிபோஃபிளவின்
- Sunday Times - சண்டே டைம்சு
- tourist van - டூரிசுட்டு வேன்
- Uranus - யுரேனசு
- Windows 98 - விண்டோசு 98
- Zandu balm - சாண்டு பாம்