விக்கிப்பீடியா பேச்சு:நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)/02

Add topic
Active discussions

ரெஸ்ற்தொகு

கோபி, தமிழ்நாட்டில் ரெஸ்ற் என்பதை test என்று வாசிப்பது மிக கடினம். டெஸ்ட் என்று எழுதினால் இலங்கையில் எப்படி உச்சரிப்பார்கள் என்று ஆங்கில எழுத்துக்களில் எழுதிக் காட்ட இயலுமா? நன்றி--ரவி 17:24, 6 ஆகஸ்ட் 2006 (UTC)

நான் desd என்று வாசிப்பேன். ரவி என்பதை நான் tavi என்றுதான் வாசிக்கிறேன். ஆனால் இது பொதுவான இலங்கை வழக்கு என்றும் கூற முடியாது. --கோபி 01:09, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
யாழ்ப்பாணத்தவர்களால் இணையத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரிய குழப்பம் இது ;-) அவர்கள் ர என்ற எழுத்தை tra என்றுதான் உச்சரிக்கிறார்கள். cat இனை உச்சரிக்கும் போது அந்த t ஐ நாம் எப்படி உச்சரிப்போமோ அப்படுத்தான் ர வினை உச்சரிக்கிறார்கள். ra என்று உச்சரிப்பதில்லை. இது யாழ்ப்பாணத்திலும் அதைச்சூழவுள்ள சிறிய பிரதேசத்திலும் மட்டுமே இருக்கின்ற ஒரு வழக்கு. பெரும்பாலான இலங்கைத்தமிழர்கள் ர வினை ra என்றே உச்சரிக்கிறார்கள். சிறு தொகையினர் பயன்படுத்தும் வழக்கை இலங்கை வழக்கு என்று பொதுமைப்படுத்த முடியாது. இலங்கை என்பது யாழ்ப்பாணம் மட்டும் அல்ல. t இற்கு பதிலாக ரி போடுவது பொருத்தமற்றது. tax இனை எவ்வாறு எழுதுவார்கள்? யாழ்ப்பாண வழக்கில் ர பெறும் உச்சரிப்புக்கும் tax இல் t பெறும் உச்சரிப்புக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ட்டொரான்டோ போன்ற சொற்களுக்கு ரொரான்ரோ என்ற எழுத்துக்கூட்டல் (விக்கிபீடியாவிலும்கூட) பயன்படுத்தப்படுவதற்கு காரணம் யாழ்ப்பாணத்தவர்கள் அதிகமாக இருப்பதே. --மு.மயூரன் 07:03, 7 ஆகஸ்ட் 2006 (UTC)--மு.மயூரன் 07:03, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
 1. நான் யாழ்ப்பாணத்தவன் அல்ல.
 2. நான் பேசும் மொழியை நான் இணையத்தில் பயன்படுத்துவதை பெரிய குழப்பம் எனக் கூறுவதை ஆட்சேபிக்கிறேன்.
 3. கனவிலும் கூட tax என்பதை நான் டக்ஸ் என்று எழுத வாய்ப்பில்லை. ரக்ஸ் என்பது அதைவிடப் பொருத்தமானது எனினும் எனக்குத் தெரிந்து அதை வரி என்றுதான் எழுதுவேன். ;-)
 4. ட்டொரான்டோ = ddotAndO. Toranto = ரொறான்ரோ (எனக்கு)
 5. இது பொதுவான இலங்கை வழக்கு என்றும் கூற முடியாது என்பதை மேலே சுட்டிக் காட்டியுள்ளேன். ஆயினும் பெரும்பாலான இலங்கைத்தமிழர்கள் ர வினை ra என்றே உச்சரிக்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
 6. ஆங்கிலதிலோ அல்லது ஏனைய மொழிகளிலோ உள்ள ஒலிக்ளை எல்லாம் தமிழுக்குக் கொண்டுவருவது பற்றியெல்லாம் எனக்கு அதிக கவலையில்லை. ஆனால் கருப்பு என்பது என்னைப் பொறுத்தவரை எழுத்துப்பிழை. கறுப்பு என்பதே சரியானது.
 7. எதேவ்வாறெனினும் பொதுவான தமிழ் வழக்கே விக்கியில் பாவிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடே. முடிந்தவரை அவ்வாறே செய்கிறேன். சில சமயங்களில் தவறுவதை ஏற்றுக் கொள்கிறேன்.
 8. இலங்கை என்பது யாழ்ப்பாணம் மட்டும் என்று யாரும் எங்கும் கூறவில்லை. இது பொதுவான இலங்கை வழக்கு அல்ல என்று கூறிய பின்னர் இலங்கை என்பது யாழ்ப்பாணம் மட்டும் அல்ல என்ற வசனம் வந்தமைக்கு அகக் காரணம் ஏதும் இருக்காது என்றே நம்புகிறேன்.

-- கோபி 15:44, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

நிறைய அகக்காரணங்கள் உண்டு. --மு.மயூரன் 16:52, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

அகக் காரணங்கள் இருக்கலாம். ஆனால் மீளாய்வு செய்யலாம். செய்யத்தான் வேண்டுமென்றில்லை; செய்யலாம். அவ்வளவுதான். --கோபி 17:15, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, இவ்வுரையாடல் இங்கு நீளுமானால், அதை தகுந்த கொள்கை பக்கத்துக்கு பின்னர் மாற்றிக்கொள்ளலாம். உங்கள் மற்றும் உங்களை ஒத்தோரின் உச்சரிப்பை புரிந்து கொள்ளும் நோக்கில் சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. தவறாக எடுத்துக்கொள்ளாமல் பதில் தந்தால் விக்கிபீடியா கொள்கையை வகுக்க உதவும்.

 1. ரவி என்று நான் தமிழில் எழுதுவதை davi என்ற ஆங்கிலச் சொல் உச்சரிப்பு வர நீங்கள் உச்சரித்தால், ravi என்ற ஆங்கிலச் சொல் உச்சரிப்பு வர அதை தமிழில் எப்படி எழுதுவீர்கள்? றவி என்றா? இரவி என்பதை iravi என்று வாசிப்பீர்களா இல்லை itavi என்று வாசிப்பீர்களா?
 2. உயிர் என்பதை uyit என வாசிப்பீர்களா இல்லை uyir என்று வாசிப்பீர்களா? uyir என்று வாசித்தால், ர் r ஒலியைக் கொண்டிருக்கும் போது (flower என்ற சொல்லில் உள்ள r போல்), மட்டும் எப்படி ta ஆனது?
 3. ராணி, ராஜா, அருமை, எருமை, பொறுமை, காற்று, பாட்டு, பாரம், பாடம், விட்டான், விற்றான், தேடினான், தெரு, தேடு, குருவி, குடுமி, பருப்பு, படுக்கை போன்ற சொற்களை எப்படி வேறுபடுத்தி உச்சரிக்கிறீர்கள் என்று ஆங்கில எழுத்துக்களை கொண்டு எழுதிக்காட்டுவீர்களா?
 4. நான் தெரிந்து கொள்ள விரும்புவது எல்லா இடங்களிலும் ர், , மற்ற கர உயிர்மெய்யெழுத்துக்களை ta ஓசை வரும்படி தான் ஒலிக்கிறீர்களா என்பது.
 5. ஆங்கில ra உச்சரிப்பை கொண்டு வர எல்லா இடங்களிலும் என்ன தமிழ் எழுத்தை பயன்படுத்துகிறீர்கள்? என்றால், பின் கரத்துக்கும் கரத்துக்கும் என்ன வேறுபாடு? ஒரே ஒலியை ஒலிக்க எதற்கு இரண்டு எழுத்துக்களா? தமிழில் அப்படி இருப்பதில்லையே? இரண்டு எழுத்துகளுக்கும் இடையே உள்ள ஒலிப்பு வேறுபாடுகள் என்ன?
 6. ற்றோர், பெற்றோர், வெற்றி என்று 'ற'கரம் அடுத்து அடுத்து வரும் இடங்களில் தான் கரத்துக்கு ta ஒலி வருகிறது. தனித்து வரும் இடங்களில் raவுக்கு நெருங்கிய ஒலி தான் வருகிறது. ஆனால், கரமோ அனைத்து இடங்களிலும் ta ஒலி கொண்டு வருகிறது. பின், ஏன் test என்பதை ரெஸ்ற் என்று எழுத வேண்டும்?
 7. நீங்கள் வாழும் பகுதிகளில் இப்படி வேறுபட்ட உச்சரிப்பு வந்தது? வரலாற்றுக் காரணங்கள், தகவல்கள் இருந்தால் தெரிந்து கொள்ள ஆவல்.
 8. பிரச்சினை வேற்று மொழிச்சொற்களை எப்படி மொழிபெயர்ப்பது என்பது அல்ல; தமிழ் எழுத்துக்களின் ஒலிகளை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது. இது குறித்து இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள ஒலிப்பு முறைகளை யாராவது தெரியப்படுத்தலாம்.
 9. நீங்கள் பயன்படுத்தும் ஒலிப்பு முறைகளை, எழுத்துக்கூட்டல்களை இணையத்தில் பயன்படுத்த எந்த தடையும் யாரும் விதிக்க முடியாது. எனினும், விக்கிபீடியா போன்ற அறிவு சார் கூட்டு முயற்சிகளில் எத்தனை பேர் என்று எதை சரி என்று சொல்கிறார்கள் என்று பார்ப்பதை விட, உண்மையில் எது சரி என்று பார்ப்பதும், அதை நடப்பில் கொண்டு வருவதும் தான் முறை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை நம்புகிறேன். --ரவி 17:17, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

பதில்கள்தொகு

எல்லா இடங்களிலும் ர், ர, மற்ற ரகர உயிர்மெய்யெழுத்துக்களை ta ஓசை வரும்படி தான் ஒலிக்கிறோம் என்று கூறுவதற்கில்லை. raja, rANi, atumai, etumai, porumai, kAttu, pAddu, pAtam, viddAn, vittAn, thEdinAn, thetu, thEdu, kutuvi, kudumi, patuppu, padukkai. கோபி 17:24, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

kattOr, pettOr, vetti.

 • da = ட
 • ta = ர
 • ra = ற

--கோபி 17:26, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, நீங்கள் தந்திருக்கும் பதில்களிலிருந்து, என் புரிதல் சரியென்றால், உங்கள் மற்றும் உங்களை ஒத்தோரின் உச்சரிப்புகள் பிழை என்று படுகிறது. என் கருத்து உங்களுக்கு மன வருத்தமோ கோபமோ உண்டாக்குமெனில் வருந்துகிறேன். மேலே உள்ள ஆங்கில சொல் வழி உச்சரிப்பாக்கங்களில் ஒன்றுக்கொன்று நிறைய முரண்பட்டிருக்கின்றன. அவற்றில், சிலவற்றை கீழே சுட்டிக்காட்டுகிறேன் ஒரு எழுத்து பிழையாக உச்சரிக்கப்பட்டாலும், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியாவது உச்சரிக்கப்பட்டாலாவது பொது வழக்கு என்று ஏற்றுக்கொள்ளலாம்.
 1. ராஜா-raja, அருமை-atumai என்று உச்சரிப்பு மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? தமிழ் போன்ற மொழிகளில் எழுத்துக்கள், ஒலிகள் திரியாமல், சிதையாமல் வருவது முக்கியம் தானே?
 2. ற ra என உச்சிரக்கப்படும் எனில் கற்றோர் என்பது katrOr என்றல்லவா இருக்க வேண்டும்? அது எப்படி kattOr ஆனது? மீற்றர் என்பது mItrar என்று தானே இருக்க வேண்டும் அது எப்படி meter ஆனது?
 3. da, ta உச்சரிப்பு வேறுபாடுகளை காட்ட டா, ரா ஆகியவற்றை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

பிற பயனர்களின் கருத்துக்களையும் அறிந்த பின் இது குறித்த விஷயத்தில் கொள்கை முடிவை இறுதி செய்யலலாம்--ரவி 17:56, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

1897இல் யாழ்ப்பாணம், மானிப்பாயிலிருந்து ஸ்ரீமத் ஜே. ஆர். ஆணல்ட் ஆசிரியர் அவர்களின் சீவிய சரித்திரம் என்னும் நூல் வெளிவந்தது. ஜே. ஆர். ஆணல்ட் = J. R. Arnold

நூலாசிரியரின் பெயர் தமிழில் எஸ். ரீ. ஆணல்ட் எனவும் ஆங்கிலத்தில் S. T. Arnold எனவும் உள்ளது. இந்நூலில்,

 • மார்க்கறற் நிற்சி = Margeret Nitchie
 • ஒற்லி மண்டபம் = Otley Hall

ஆகிய ஒலிப்பெயர்ப்புக்கள் காணப்படுகின்றன.

அதாவது, நாம் t என்பதை டீ என்று எழுதுவதோ உச்சரிப்பதோ மிகவும் அரிதானது. d ஐத் தான் டீ என்போம். --கோபி 17:58, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, எங்கள் உச்சரிப்பில் உள்ள முரண் எனக்குத் தெரிந்ததுதான். ஆனால் அது பிழையானது உங்களுக்கே ஒழிய, எனக்கல்ல :-) இதில் எனக்கு எந்த மனவருத்தமோ கோபமோ இல்லை.
மேலே உங்கள் கருத்து da, ta உச்சரிப்பு வேறுபாடுகளை காட்ட டா, ரா ஆகியவற்றை பயன்படுத்துவதை விக்கிபீடியாவில் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று அமைந்தால் மகிழ்வேன். கோபி 18:05, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழிலும் ஒலித் திரிபுகள் உண்டு. காகம் = kaham தான். kakam அல்ல. --கோபி 18:08, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

என் எல்லா உரையாடல்களும் விக்கிமீடியா திட்ட எல்லைக்குள் தான். உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் எங்கும் பயன்படுத்த உரிமை உண்டு. விக்கிமீடியா திட்ட எல்லைக்குள் தான், பொதுக் கருத்தை ஒட்டியும் உண்மையை ஒட்டியும் செயல்படவேண்டும் என வேண்டுகிறேன்.--ரவி 19:46, 7 ஆகஸ்ட் 2006 (UTC)
கோபி, காகம் என்பதை kaagam என்றுதான் சொல்ல வேண்டும், kaaham என்று சொல்வது திரிபு. இதே போல, மகன் என்பதை magan என்றுதான் ஒலிக்க வேண்டும். எனினும் மஹன், மவன் என்றெல்லாம் ஒலிப்பது பிழைபட, கொச்சையாக ஒலிப்பதாகும். தமிழில் ஒலிக்கும் முறை தெளிவாக வரையறை செய்யப்பட்ட ஒன்று. தமிழ் ஒலிப்பு ஆங்கிலம் போன்று ஒழுங்கற்றதல்ல. ஒழுங்கில் இருந்து பிரிந்து நிற்கும் இடங்கள் மிகக்குறைவானதே. Tamil is a phonetic language. எனவே இடையின ரகரத்தை யார் ta என்று ஒலித்தாலும் தவறே. இதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமே இல்லை (பேசும் மொழி தமிழெனில்). இங்கு கருத்து வேறுபாடு எல்லாம் தமிழல்லா வேற்றுமொழிச் சொற்களை தமிழ் எழுத்துக்களில் பெயரத்தெழுதுவதில்தான். நீங்கள் கருப்பு என்பதை கறுப்பு என்று எழுதவேண்டும் என்கிறீர்கள். சரி, கரும்பு, இரும்பு, அரும்பு சிரிப்பு மரம் என்பதெல்லாம் எப்படி ஒலிப்பீர்கள்? சீராக, தரம் செய்யப்பட்டு எழுதும் எழுத்துக்களில், இப்படி எழுதுவது சரியில்லை என்பது என் கருத்து. இலங்கைத் தமிழர்களுக்கு மன வருத்தம் ஏதும் வரக்கூடாதே என்று மிகவும் கவலைப்படுகின்றேன். திறந்த மனப்பான்மையுடன் அணுகுவீர்கள் என்றால், இது பற்றி இன்னும் விரிவாக எழுதலாம். திருசெல்வேலி, கோவை இப்படி பற்பல மாவட்டங்களிலும், பேச்சு மொழி, மொழி வழக்குகள் சற்று மாறுபடும், ஆனால் எழுத்து மொழியில் ஒரு முறை ஒட்டி எழுத்துவது யாவருக்கும் நல்லது. இதில் வேடிக்கை என்னவென்றால், கருத்து வேறுபாடு எல்லாம், வேற்றுமொழியை தமிழில் எழுத்துவதைப்பற்றியது!! என்னைப் பொறுத்தவரை, இது முற்றிலும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. அருள்கூர்ந்து 60-65 மில்லியன் மக்களை எண்ணிப் பாருங்கள். வேற்றுமொழியால் நமக்குள் கருத்துவேறுபாடுகள் இப்படி வரலாமா? நாம் யாவரும் ஒரு மொழி பேசுவோராக இருப்பதே நமக்கு வலுகூட்டுவது சேரநாட்டு மக்கள் இன்று மலையாளிகளாகி விட்டனர் (மிக அண்மையில்தான், சுமார் 14 ஆம் நூற்றாண்டு வாக்கில்; வடமொழி கலப்பால் - இதுவும் எழுத்து மொழியில்தான். பேச்சு வழக்கில் இன்னும் தமிழுக்கு மிக நெஉங்கியவர்களே). தென் கன்னடரும், ராயலசீமை தெலுங்கர்களும் கூட தமிழுக்கு நெருக்கமானவர்கள்தான். சற்று தொலை நோக்கு கொண்டு இவற்றை அணுகினால் நல்லதாய் இருக்கும் என்று நினைக்கிறேன். --C.R.Selvakumar 20:17, 7 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா


செல்வகுமார் சொல்வது போல Tamil is a phonetic language. ஆங்கிலம் போலன்று spelling பற்றி தமிழ் குழந்தைகள் அவ்வளவு கஸ்டப்படுவது கிடையாது. ஆனால் நடைமுறையில் இறுகிய கட்டுப்பாடு கிடையாது. அதுவே, தமிழுக்கு அழகும் கூட. வட்டார மொழி வழக்குகளை புறக்கணிக்க முனைவது அவ்வளவு நன்றாக எனக்கு படவில்லை, புரிந்துகொள்ள முனைவதே நன்று. இன்றும் யாழ்ப்பாணத்தில் ர என்பது ta என்ற உச்சரிப்பு கற்பிக்கப்படுகின்றது, எனவே அதை புறக்கணிப்பது நன்று அல்ல. Ravi என்பது ரவி என்று எழுதி, றவி என்றுதான் உச்சரிப்பேன். இது கேள்வி வழி படிப்பு. ta என்பதை ட என்று கூறுவது முற்றிலும் தவறாக தெரிகின்றது. அப்படியானல், da என்பதை எப்படி தமிழில் வெளிப்படுத்துவது?

ட - da
ற - ra
ர - ta

da, ra, ta என்பதை எப்படி தமிழில் எழுதுவது என்று விரிவாக விளக்கினால் நன்று. இது ஒன்றுதான் முக்கிய முரண்பாடு என்றால் ரவி, செல்வா கூறுவதை மேலும் அலசலாம், ஆனால் இதைப்பற்றிய ஒரு இறுக்கமான முடிவை இப்பொழுது எடுப்பது எவ்வளவு பொருத்தம் என்று தெரியவில்லை. ற, ர, ட என்பதற்கு சரியான உச்சரிப்பு என்ன? ஆங்கில உச்சரிப்பு என்ன? --Natkeeran 23:57, 7 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி செல்வா, இதில் எமக்கு மனவ்ருத்தம் எதுவுமில்லை. மேலும் இது பொதுவான இலங்கை வழக்காகவும் தெரியவில்லை. ஆனால் இதனைப் பிழை என்றும் உண்மையல்ல என்றும் கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே தவிர விக்கிபீடியா போன்றவற்றில் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கோரவில்லை. ta என்பதை ட என நான் எப்போதும் எழுத மாட்டேன். மேலும் நான் எழுத்துப் பிழைகளை முடிந்தவரை தவிர்த்த மொழிநடையிலேயே எழுதுபவன். (உண்மையில் கருப்பு எனக்கு எழுத்துப்பிழை) எனக்குக் கற்பிக்கப்பட்டதையே பின்பற்றுகிறேன். 60 - 65 மில்லியன் மக்கள் பின்பற்றுவதைப் பொதுப் பயன்பாடாக ஏற்க வேண்டும்தான். ஆனால் எனது மொழி எனக்குச் சரியானதே. நான் வடமொழிக் கலப்பை மட்டுமல்ல, ஆங்கில கலப்பையும் அடியோடு வெறுக்கிறேன். முடிந்தவரை தூய தமிழில்தான் எழுதுகிறேன். மேலும் என் பேச்சுமொழியும் எழுத்துமொழியை மிகவும் ஒத்ததேன்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் எம் வழக்க்கில் தமிழகத்திலில்லாத சொற்கள் பாவனையிலுள்ளன. தமிழக சஞ்சிகைகளைப் பார்க்கும்போதுதான் எனக்கு தமிழின் தொடர்ச்சியில் பயங்கள் ஏற்படுகின்றன. எனதுமொழி தமிழ்தான். தமிழ்ச் சொற்களை எழுதுவதில் அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால் உச்சரிப்பதில் (எழுதும்போது எல்லோருக்கும் உச்சரிப்புத்தான். ஆனால் உச்சரிக்கும் போது எமக்கு uchchatippu. uchcharippu அல்ல) வித்தியாசங்களுள்ளன. சில பிரதேச வித்தியாசங்களால் மொழியில் பெரிய இடைவெளி எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. நன்றி. கோபி 00:29, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

செல்வாவின் மறுமொழிதொகு

நன்றி கோபி. என்னுடைய இப்பதில் நற்கீரனுக்கும், பிற யாழ்பாணத்தமிழர்களுக்கும் சேர்த்தே எழுதுகிறேன். ஒன்றை நீங்கள் மறக்கலாகாது. நாங்களும் வழிவழியாய், தமிழ் கற்றவர்கள்தான். அருள்கூர்ந்து தாங்கள் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். தொல்காப்பியத்தில் ஒவ்வொரு எழுத்து ஒலியும் எப்படி எழுப்ப வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. சூத்திரம் 91ல், தொல்காப்பியர் கூறுகிறார்: டகர ணகாரம் நுனிநா அண்ணம். சூத்திரம் 95ல் ரகர ழகரம் பிறப்பது பற்றி கூறுகிறார்:
"நுனிநா அணரி அண்ணம் வருட, ரகார ழகார ஆயிரண்டும் பிறக்கும்".
மேலும் வல்லினம், மெல்லினம் முதலிய எப்படி பிறக்கும் என்பது விரிக்கின்றார். அணரி என்றால் மேலெழுந்து என்று பொருள். எனவே பொருள் மிகத்தெளிவாக விளங்க வேண்டும்.


Ta என்பது வல்லின ட (எகா: பட்ம்) (paTTam)
Da என்பது மெலிந்தொலிக்கும் ட (எ-கா: பம்) (paDam)
ra என்பது இடையின ர (எ-கா: மரம் ) (மடம் வேறு, மரம் வேறு மறம் வேறு). (maram)
Ra என்பது வல்லின ற (எ-கா: மறம் ) (maRam)

ரகரம் நுனிநா அணரி அண்ணம் வருட எழுவது.
றகரம் நுனிநா அணரி அண்ணம் ஒற்ற எழுவது (சூத்திரம் 94: அணரி நுனிநா அண்ணம் ஒற்ற றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்).
ஆகவே Toronto என்பதில் To என்பதற்கு ரகரம் பயன்படுத்துவது தவறு. டகர, ணகர, றகர, னகர, ரகர ஆகிய ஐந்து எழுத்துக்களுக்கும் நுனிநா, அண்ணம் தொழிற்பட்டாலும், எப்படித்தொழிற்படவேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. வழிவழியாய் தமிழகத்திலும் தமிழ் பயின்று வந்திருக்கின்றார்கள். எழுத்தொலிகளை ஒழுங்காக ஒலிக்க, முதலில், டகர வல்லினம் டகர மெல்லொலி என்றால் என்ன என்று தெளிவாய் விளங்கிக்கொள்ளுதல் வேண்டும் (ணகர மெல்லினமும் எவ்வாறு ஒலிக்க வேண்டும் என அறிதல் வேண்டும்). இரண்டாவது ரகர இடையினம் என்பது நுனிநா வருடி எவ்வாறு ஒலியெழுப்ப வேண்டும் என்று உணர்தல் வேண்டும். மூன்றாவது, பட்டு என்பதையும் பற்று என்பதையும் எவ்வாறு தெளிவாய் ஒலிக்க வேண்டும் என்று உணர்தல் வேண்டும். (இதே போல, கட்டு -கற்று, சுட்டு-சுற்று, விட்டு-விற்று, குட்டு-குற்று என பல சொற்கள்). தமிழகத்திலும், பேச்சு வழக்குகள் நிறைய உள்ளன. திருத்தம் இல்லா பேச்சு வழக்கை (கொச்சை வழக்கை) செம்மொழி வழக்காக கொள்ளலாகாது. இங்கு கூறப்பட்டுள்ளதை அருள்கூர்ந்து நடுநிலை நின்று எண்ணிப்பாருங்கள். அன்புடன் --C.R.Selvakumar 01:50, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா உங்கள் கருத்துக்கும் விளக்கங்களுக்கும் மிக்க நன்றி. நான் தமிழை சுயமாகவே பெரும்பாலும் கற்று வருபவன். ஆகையால் உங்கள் விளக்கங்களை ஏற்க என்னால் முடியும். மேலும் எழுத்து தமிழிலில் ஒரே தரம் இருக்கவேண்டும் என்பதில் எனக்கு உறிதியான உடன்பாடு. ஆனால், இதை விக்கி வழக்கமாக இப்பொழுது ஏற்கவேண்டுமா என்பதில் எனக்கு தெளிவு இல்லை. மீண்டும் மிக்க நன்றி. --Natkeeran 02:47, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

தமிழ்ச் சொற்களை உச்சரிப்பதற்கு ஒரு வரைமுறை கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கிலச் சொற்களையோ பிறமொழிச் சொற்களையோ உச்சரிப்பதற்கு அந்தந்த நாட்டவருக்கு (அல்லது மொழியினருக்கு) சுதந்திரம் இருக்கவேண்டும். சில ஆங்கிலச் சொற்களை உச்சரிப்பதில் தான் இங்கு பிரச்சினையே எழுந்தது. ஆனால் அது திசைமாறிவிட்டது போற் தெரிகிறது. ரவி இங்கு சில தமிழ்ச் சொற்களைத் தந்துவிட்டு எப்படி உச்சரிப்பீர்கள் எனக் கேட்கிறார். இந்தக் கேள்வியே இங்கு கேட்பதற்கு அவசியமில்லை என்பது எனது கருத்து.
கரிய, கருமை என்ற சொற்களிலிருந்து கருப்பு வந்திருக்கலாம்.:--Kanags 08:37, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

கனக்ஸ், எல்லாரும் ஆங்கிலச் சொற்களை ஒரு மாதிரி தான் உச்சரிக்கிறோம். ஆனால், தமிழில் ஒலிப்பெயர்த்து எழுதுவது தான் பிரச்சினை. ஆனால், தமிழ்ச் சொற்களை ஒரே மாதிரி எழுதினாலும் வெவ்வேறு மாதிரி உச்சரிக்கிறோம். முதல் பிரச்சினையை விட இரண்டாவது முக்கியப் பிரச்சினை. ஏனெனில் தமிழ் எழுத்துகளை வெவ்வேறு விதமாக உச்சரிப்பதால் தான் ஆங்கிலத்திலிருந்து ஒலிபெயர்க்கும் போதும் பிரச்சினை வருகிறது. எனவே, கோபி சில தமிழ்ச் சொற்களை எப்படி உச்சரிக்கிறார் என நான் அறிந்து கொள்ள விரும்பியது இலங்கை உச்சரிப்பு குறித்த என் புரிதலை மேம்படுத்தியது. இதில் திசை திருப்புதல் ஒன்றுமில்லை. தமிழ்ச் சொற்களை அவர் உச்சரிப்பதில் உள்ள முரண்களை அறிந்து கொள்ள முடிந்தது.

தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள், உச்சரிப்புகள் உண்டென்றாலும் அவை informal ஆகவும், இலக்கியப் படைப்புகளிலும் தான் பயன்படுத்தப்படுகின்றன. செய்தி ஊடகங்களிலும், formal ஆன சூழ்நிலைகளிலும், அறிவு சார் எழுத்து வடிவங்களிலும் செந்தமிழ் அல்லது அதற்கு நெருங்கிய தமிழை பின்பற்றவே முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுவே மரபு. நீர், தண்ணீர், தண்ணி, தண்ணீ என்று ஊருக்கு ஊர் எப்படி அழைத்தாலும், நீர் என்று எழுதினால் யாரும், பிழை என்று தெரிந்தே, ணீர் என வாசிக்க மாட்டார்கள்.

எழுதப்படாத சொல்லை ஊருக்கு ஊர் உச்சரிப்பு மாற்றி பேசுவதை வட்டார வழக்கு என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், எழுதப்பட்ட சொல்லை ஊருக்கு ஊர் மாற்றி மாற்றி உச்சரித்தால் மொழியின் அடையாளமே காலப் போக்கில் மாறி விடாதா? v என்ற எழுத்தை ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் வேறு மாதிரி உச்சரிக்கிறார்கள். அவை இரண்டும் வெவ்வேறு மொழிகள் என்பதால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஒரே தமிழ் மொழி எழுத்தான கரத்தை வெவ்வேறு விதமாக உச்சரிப்பது எப்படி சரியாகும்? தமிழக உச்சரிப்பு சரியோ பிழையோ எல்லா இடங்களிலும் ஒரே போல் தான் உள்ளது. ஆனால், இலங்கை வழக்கிலுள்ள முரணை எப்படி நியாயப்படுத்துவது?

taவை என்று எழுதுவது சரியல்ல என்ற நக்கீரனின் வாதத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், taவை என்று எழுதுவதை விட இது மேம்பட்ட முடிவு என்பது என் கருத்து. இந்தச் சிக்கலை தீர்க்கத்தான், செல்வகுமார் ' குறியப் பயன்படுத்தும் யோசனையை தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே நான் தெரிவித்த காரணங்களால், அவற்றையும் என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. கரத்துக்கும் ta ஓசைக்கும் இருக்கும் நெருக்கத்தை என்னால் விளங்கிக் கொள்ள வில்லை.

test என்ற சொல்லில் முதலிலும் கடைசியிலும் உள்ள இரண்டு tக்களும் ஒரே ஓசை கொண்டவை தான். பின், ஏன் ரெஸ்ற் என்று எழுத வேண்டும்? ரெஸ்ர் என்றோ றெஸ்ற் என்றோ கூட எழுதினால், ஒரு சொல்லுக்குள்ளேயே முரண் இல்லாமல் இருக்குமே? (ரெஸ்ர், றெஸ்ற் ஆகிய பயன்பாடுகளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது தனி)

செல்வா, நீங்கள் தந்த எடுத்துக்காட்டு பின்வருமாறு இருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.

Ta என்பது மெலிந்தொலிக்கும் ட (எகா: பட்டம்) (paTTam)

Da என்பது வல்லின ட (எ-கா: படம்) (paDam)

t, D ஒலிப்பெயர்ப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டல்கள், கொள்கை முடிவுகள் எடுக்க இது சரியான நேரம் தான் என நம்புகிறேன். விக்கிபீடியா அதிகம் வளர்ந்த பின், திருத்தங்களை மேற்கொள்வது கூடுதல் வேலையாகி விடும்.

--ரவி 09:36, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, நான் கூறியதுதான் சரி. பட்டம் என்னும் சொல்லில் டகர ஒற்று வந்துள்ளதால், பட்ம் என்பதில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கும். பம் என்னும் சொல்லில் வல்லின ஒற்று முன்னே வராததால், மெலிந்து ஒலிக்கும். இது பிற வல்லின எழுத்துக்களுக்கும் பொருந்தும். பக்கு - பகு,, குத்து-குதி, பச்சை-பசை, துப்பு-உப. தமிழில் வல்லெழுத்து இரண்டே இரண்டு இடங்களில் தான் வலித்து ஒலிக்கும். (1) சொல்லின் முதல் எழுத்தாக வந்தால் (2) புள்ளி வைத்த வல்லெழுத்துக்குப் பின் வந்தால். பிற இடங்களில் மெலிந்தே ஒலிக்கும். தமிழில் k-g, ch-j, t-d, th-dh,, p-b ஆகிய வேறுபாடுகள் ஒழுங்குடன் அமைந்தது. சகரம் மட்டிலும், மூன்று ஒலிப்புகள் பெற்று விளங்குகிறது. பச்சை-பஞ்சு-பசை (pachchai-panju-pasai). இலக்கணப்படி பசை என்பதை மெலிந்து ஒலிக்கும் பொழுது இரு வேறு மெலிவொலிகள் ஏற்படுகின்றன (ஒன்று மூக்கொலியாகவும், மற்றது காஅற்றொலியாகவும்). இது ஒன்றுதான் விதிவிலக்காக நிகழ்வது. இதே போல காகம், பாகம், நகம் முதலியன kaagam, paagam, nagam என்றுதான் ஒலிக்க வேண்டும், ஆனால் சிலர் kaaham, paaham, naham என்று பேச்சு வழக்கில் திரித்து ஒலிக்கிறார்கள். இது தவறு. இது கொச்சைப் படுத்துவது. எனவே மீண்டும் வலியுறுத்துகிறேன். ரவி, நான் கூறியதுதான் சரி. பட்டம் என்னும் சொல்லில் டகர ஒற்று வந்துள்ளதால், பட்ம் (paTTam) என்பதில் உள்ள டகரம் வலித்து ஒலிக்கும். பம் (paDam) என்னும் சொல்லில் வல்லின ஒற்று முன்னே வராததால், மெலிந்து ஒலிக்குm.--C.R.Selvakumar 11:00, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

ரவி பட்டம், படம் முதலிய சொற்களிடையேயான ஒலிப்புமுறையைக் கண்டிப்பாக அறிந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். ஆனால் தவறுதலாக எது வலிய ஒலிப்பு எது மெலிய ஒலிப்பு என்பதைக் குழப்பிக் கொண்டுள்ளார் போலத் தோன்றுகிறது. இந்த இடத்தில் எனது நெடுநாளுக்கு முந்தைய வேண்டுகோளை மீண்டும் வைக்கிறேன். ஆத்திச்சூடியை எவரேனும் மொழிந்து அதை ஒலிக்கோப்பாக பதிவேற்ற முடியுமா? -- Sundar \பேச்சு 13:06, 8 ஆகஸ்ட் 2006 (UTC)
செல்வா, நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில ஒலிகளை இலக்கணப்படி அலசும் போது கொஞ்சம் குழப்பமாகி தான் உங்களிடம் கேட்டேன் :( விளக்கத்திற்கு மிகவும் நன்றி.--ரவி 13:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபியின் மறுமொழிதொகு

இந்த உரையாடலிலிருந்து எனக்குள்ள புரிதல் இதுதான்.

இங்கே இரு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

 1. ta என்பதை எவ்வாறு எழுதுவது?
 2. ரகரத்தையும் றகரத்தையும் எவ்வாறு உச்சரிப்பது?

என்பவையே அவையாகும்.

taதொகு

ta என்பதற்கு தமிழில் எழுத்து இல்லை. நாம் என்கிறோம். நீங்கள் என்கிறீர்கள். இது இரண்டுமே முழுக்க சரியல்ல. உங்களுக்கு அதனை என உச்சரிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதைவிட எமக்கு என உச்சரிப்பது அதிக ஏற்றுக் கொள்ளக் கூடியது. காரணம் நாம் வை உச்சரிக்கும் விதமாகும்.

ரகரமும் றகரமும்தொகு

தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதில் உள்ள வேறுபாடு. தமிழ் எழுத்துக்களில் ட், டா என்பதை நாம் பொதுவாகவே உச்சரிக்கிறோம். ஆக வித்தியாசமாக உச்சரிக்கப்படுபவை ரகரமும் றகரமும்தான்.

 • ற், ற, றா என்பதை நாம் t, ra, raa எனவும்
 • ர், ர, ரா என்பதை நாம் r, ta, taa எனவும் உச்சரிக்கிறோம்.

(இதனை கா.சிவத்தம்பி அவர்கள் உறுதி செய்தார்) அதாவது மெய்யெழுத்து உயிருடன் இணையும் போது மாறுபட்டொலிக்கிறது. ஆதலால் ரெஸ்ற் என எழுதினேன். றெஸ்ற் என்றோ ரெஸ்ர் என்றோ எழுதுவது எனக்குத் தவறானது.

ஆனால் இங்கே ஒன்றைத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். இது நாம் உச்சரிக்கும் விதம். இதனைக் கொச்சை என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். எமது எழுத்துவழக்கும் பேச்சு வழக்கும் நெருக்கமானவை.

August என்பதை ஆகஸ்டு என்று நான் எழுத மாட்டேன். அது ஆகஸ்ற் அல்லது ஓகஸ்ற் தான். இந்த t ற்கு ற் இனை நூறாண்டுகளுக்கு மேலாக உபயோகித்து வருகிறோம். அதையே மேலே 1897 இல் வெளியான நூல் மூலம் ஆதாரம் காட்டினேன். நூறாண்டுகளுக்கு மேலான எழுத்து வழக்கத்தை ஒரேயடியாக கொச்சை என மறுதலிப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால் விக்கிபீடியாவில் பொதுவான வழக்கமான ஆகஸ்டு என்பதையே உபயோகிக்கிறேன். நான் மாதங்களுக்கான வார்ப்புருக்களை உருவாக்க சிவகுமாரிடம் கேட்கக் காரணம் உங்களது உச்சரிப்பைப் பொதுவானதாகப் பின்பற்ற விரும்பியமையே. நான் முதல் ரெஸ்ற் போட்டி பற்றிய கட்டுரையை முதல் டெஸ்ட் போட்டி என்றே தொடங்கினேன் என்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். (இன்னும் பல உதாரணங்கள் உள்ளன)

என் கருத்துதொகு

இன்னும் குறிப்பாகச் சொல்வதானால் மொழிக்கு எழுத்து வழக்கு பொதுவாகவே இருக்க வேண்டும் என நான் நம்புகிறேன். நாம் எப்படி உச்சரித்தாலும் தமிழ்ச் சொற்களைப் பொதுவான முறையிலேயே எழுதுகிறோம். உச்சரிப்புத்தான் மாறுபடுகிறது. அதனைக் கொச்சை எனபது நியாயமல்ல. உச்சரிப்பு வேறுபாட்டால் மொழிக்கு ஆபத்தில்லை. (அதாவது உச்சரிப்பு மாறுபட்டாலும் எழுதுவது பொதுவானது என்பதால் விக்கிபீடியாவிலும் எந்த சிக்கலும் இல்லை)

ஆனால் இந்த உச்சரிப்பு வேறுபாடு காரணமாக நாம் ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்க்கும்போதுதான் சிக்கல்கள் வருகின்றன. அதனால் மிக அதிகமான தமிழர் உபயோகிக்கும் வழக்கைப் போலவே பயன்படுத்துவதே விக்கிபீடியா போன்ற இடங்களில் நன்றென நான் நினைக்கிறேன். (அதனாலேயே ஆகஸ்டு என்றும் டெஸ்ட் என்றும் கட்டுரைகளைத் தொடங்கினேன்) ஆனால் toranto டொரான்டோ என்று பெயர் பெற வாய்ப்பில்லை. ஏனெனில் அங்குள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் ரொறான்ரோ என்றே எழுதுவார்கள். ஆதலால் அதுதான் பொதுவழக்காகும். -- கோபி 13:21, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, சில விக்கிபீடியா கட்டுரைகளில் டெஸ்ட் என்றும் சிலவற்றில் ரெஸ்ற் என்றும் காணக்கண்டு தான் இந்த விடயத்தை எழுப்ப நேர்ந்தது. இன்னும் சில கட்டுரைகளில் சென்ரி மீற்றர் போன்ற வழக்குகளையும் காண நேர்ந்தது. எதுவாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சீராக இருக்க வேண்டும். அதுவே பெரும்பாலோர் பயன்படுத்தும் வழக்காக இருக்கையில் சொல்ல வந்த விடயத்தை தெரிவிப்பது எளிதாகிறது. இவ்விஷயத்தில் நடைக்கையேட்டில் எதைப் பரிந்துரைப்பது என்பது கொஞ்சம் தலை சுற்றும் விஷயமாகத்தான் இருக்கிறது :(--ரவி 13:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

இதுதான் பிரச்சினைதொகு

தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பதில் உள்ள வேறுபாடு. தமிழ் எழுத்துக்களில் ட், டா என்பதை நாம் பொதுவாகவே உச்சரிக்கிறோம். ஆக வித்தியாசமாக உச்சரிக்கப்படுபவை ரகரமும் றகரமும்தான்.

 • ற், ற, றா என்பதை நாம் t, ra, raa எனவும்
 • ர், ர, ரா என்பதை நாம் r, ta, taa எனவும் உச்சரிக்கிறோம்.

சுந்தர் சுட்டியபடி, இலக்கணம் என்பது "பரிந்துரை இலக்கணமா" அல்லது "பயன்படு மொழியின் விபரிப்பா" என்ற கேள்வி எழுகின்றது. செல்வா சுட்டியபடி என்ன எல்லாம் பயன்படுகின்றதோ அதை இலக்கணம் ஆக்குவது தவறு. எழுத்து தமிழில் ஒரே முறையை பின்பற்றுவது அவசியம். அப்படி இல்லை என்றால் தமிழ் சிதறிவிடும். ஆனால் இந்த பிரச்சினையை "யாழ்ப்பாண மக்கள்" எளிதாக எடுத்துகொள்ள மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். காரணம், இதை அவர்கள் அடையாள பிரச்சினையாக பார்க்க முனைவார்கள். "யாழ்ப்பாணத் தமிழ்" திரைப்படங்களில் கொச்சைப்படுத்தப்படுவது தொடர்பாக பல குமுறல்கள் ஏற்கனவே உண்டு. மேலும், தமிழை தாமே திறமாக உச்சரிப்பதாக (வானொலியில்) ஒரு கருத்தும் உண்டு (தமிங்கிலிஸ் உடன் ஒப்பிடுகையில் அப்படியிருக்கலாம்). எனவே இது நாம் நினைப்பதையும் பார்க்க சற்று பலக்கிய பிரச்சினையே.

என்னை பொறுத்தவரையில் இவ்வேறுபாடுகளை சரியாக புரிந்துகொள்வதும், அதற்குரிய தீர்வுகளை நடு நிலைமையோடு தெளிவாக முன்வைப்பதும் நாம் இப்போது செய்ய கூடிய செயல்பாடுகள். நடைக்கையேட்டில் இவ்வேறுபாட்டை விளக்குதல் ஒரு இடைத்தீர்வாக இருக்கலாம். --Natkeeran 15:10, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

நாப்பழக்கம்தொகு

கோபி, சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்னும் பழமொழியைக் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இன்று தமிழகத்தில், மிகப்பலரும் ழகரத்தைச் சரியாக பலுக்குவதில்லை (எழுத்தொலியை திருத்தமாக ஒலிப்பதில்லை). லகர, ளகர வேறுபாடும் மிகக்குறைபாடுடையதாகவே உள்ளது. தமில் வால்க என்று ஒலிக்கிறார்கள். அது திருந்தாத கொச்சை ஒலிப்புதான். ஒருவர் லகர, ளகர, ழகர ஒலிப்புகளைச் சரியாக சொல்லவில்லை என்றால், அதனை அவர்கள் திருத்திக்கொள்ள வேண்டும். கொச்சை என்பதும், மழலை என்பதும் திருந்தாச் சொல்லிப்புகளைக் குறிக்கும் சொற்கள். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். திருந்திய சொல்லொலிப்பு செந்தமிழ் ஒலிப்பு. செந்தமிழ் நாப்பழக்கம். இரவு, கரவு, உரிமை, அரிசி என்னும் சொற்களை itavu, katavu, utimai, atisi என்று நீங்கள் ஒலிப்பதாக இருந்தால், அது செந்தமிழ் ஒலிப்பில்லை என்பது என் துணிவு. பேச்சு வழக்கில் அவ்வாறு ஒலித்தாலும், திருத்தமாய் சொல்ல வேண்டிய இடங்களிலே iravu, karavu, urimai, arisi என்றுதான் சொல்லவேண்டும். பேச்சு வழக்கில், எம் மவனே எனலாம், ஆனால் என் மகனே என்பதுதான் திருந்திய மொழி. மொழி எனப்பட்டதே திருந்தியதுதான். என் மஹன் என்று சொல்வதும் கொச்சை ஒலிப்பு தான். உங்கள் நண்பர்களிடமும், இதுபற்றி நடு நிலையோடு உரையாடி, பொதுநலம் எதுவென ஆய்ந்து பாருங்கள். எது நலம் பெருக்கும் என பாருங்கள். --C.R.Selvakumar 14:02, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

செல்வா கூறுவது முற்றிலும் உண்மை. மதுரை வட்டாரத்தில் வளர்ந்துள்ள எனக்கு லகர, ளகர, ழகர வேறுபாட்டை சரியாக ஒலிப்பில் கொணர முடிவதில்லை. மதுரைக்குள் இருந்தவரை எனக்கு இது ஒரு குறைபாடாகத் தோன்றவில்லை. பின்னர் பெங்களூரில் நண்பர்களின் நகையாடல் மற்றும் அறிவுறுத்துதலின் விளைவாக மாற்றி வருகிறேன்.
பல நாட்கள் யாழ் தமிழுக்கும் பிறரின் தமிழுக்கும் உள்ள வேறுபாடு வெறும் வேறுமொழி சொற்களின் பயன்பாட்டில் என்று மட்டும் எண்ணியிருந்தேன். பின்னர் ஒருநாள் தமிழ் சொற்களிலும் சில எழுத்துக்களின் ஒலிப்பில் மாற்றம் இருப்பதை அறிந்தேன். அப்போதே எது தொல்காப்பியப் பரிந்துரையை ஒத்த ஒலிப்புமுறை என்று கேட்டிருந்தேன். ஒருவேளை யாழ் தமிழே சரியான பயன்பாடு என்று அறிந்திருந்தால் தற்போதைய பெரும்பாண்மை வழக்கை மாற்றக்கூட (விக்கிக்கு வெளியே) முயலலாம் என்று நினைத்திருந்தேன்.
ஒருவகையில் மொழி என்பது "பரிந்துரை இலக்கணத்தைப்" பின்பற்ற வேண்டுமா அல்லது மொழியின் இலக்கணம் பயன்படு மொழியின் ஒரு விவரிப்பா என்பது ஒரு ஆழமான கேள்வி. இருப்பினும், மொழி சிதைந்து புதுமொழிகளாகப் பிளவுபடாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஒருவர் எண்ணினால் நாம் இதுபோன்ற வட்டார வழக்குகளை செந்தமிழுக்குள் கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும். -- Sundar \பேச்சு 14:37, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

ர, ற, ட - ta, ra, da சிக்கல் தொடர்பாக மயூரநாதனின் விரிவான கருத்துக்கள்தொகு

இங்கே நடைபெறுகின்ற கருத்துப் பரிமாற்றங்களை ஒழுங்காக வாசித்து வந்தேன். போதிய நேரமின்மை காரணமாகப் பங்கு பற்ற முடியவில்லை. இது ஒரு முக்கியமான விடயம். நாங்கள் சிலர் மட்டும் பேசி ஒரு முடிவுக்கு வர இயலாது. ஆனாலும், இங்கே பரிமாறப்பட்ட கருத்துக்களிலிருந்து, இவ்விவாதம் சிலரைத் தவறான முடிவுகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறதோ என்று ஐயுற வேண்டியிருக்கிறது. முக்கியமாக யாழ்ப்பாணத் தமிழின் உச்சரிப்புத் தூய்மை பற்றிய அளவுக்கு அதிகமான சந்தேகங்கள் எழுந்திருப்பதுபோல் தெரிகின்றது. இலங்கைத் தமிழர்கள், தமிழ்நாட்டுச் சினிமாக்கள், சஞ்சிகைகள் மூலமாக தமிழ்நாட்டில் புழங்கும் பலவகைத் தமிழ் உச்சரிப்பு வேறுபாடுகளையும் போதிய அளவுக்குத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு இலங்கைத் தமிழ் பற்றி அறியும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. இலங்கையிலும் புவியியல்ரீதியாகப் பல்வேறு உச்சரிப்பு வழக்குகளும் மொழிவழக்குகளும் உள்ளன. யாழ்ப்பாணத்துக்கு உள்ளே கூட இடம்சார்ந்த வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். பிரதேச வேறுபாடு தவிர தலைமுறை வேறுபாடு, நகர,கிராம வேறுபாடுகள் என்பவற்றின் அடிப்படையிலும் மொழி உச்சரிப்பும், மொழிவழக்கும் யாழ்ப்பாணத்துக்குள்ளேயே வேறுபாடுகளைக் காட்டுகின்றன. இது எல்லா மொழிகளுக்கும், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படையில்தான் இந்த விடயத்தை அணுக வேண்டும்.

ரவி என்பதை tavi என்றுதான் யாழ்ப்பாணத்தில் எல்லோரும் உச்சரிக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல. இவ்வாறு உச்சரிப்பதை நான் கேட்டிருக்கிறேன் என்றாலும், ஒரு சிறு தொகையினர்தான் இவ்வாறு உச்சரிக்கிறார்கள். அவர்களும் எல்லா வையும் ta வாக உச்சரிப்பதில்லை. மிகப் பெரும்பாலானவர்களுக்கு = ra தான். (மரம் = maram, வாரம் = vaaram). தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி, புழங்குகின்ற எந்தவொரு குறிப்பிட்ட தமிழையும், தூய்மையானதென்றோ, சரியானதென்றோ, original என்றோ எவரும் கூறமுடியாது. இருந்தபோதும், கர உச்சரிப்புத் தவிர, கர கர வேறுபாடுகளையும், கர, கர வேறுபாடுகளையும், கர கர வேறுபாடுகளையும் சரியாக உச்சரிப்பதில் யாழ்ப்பாண, திருகோணமலை, மட்டக்களப்புத் தமிழ்மக்கள் முன்னணியில் உள்ளார்கள் என்பதை என்னால் கூறமுடியும். பிபிசி தமிழ் சேவையில் பல இலங்கைத் தமிழ் அறிவிப்பாளர்கள் உள்ளார்கள். அவர்கள் பேசும் தமிழைக் கேளுங்கள். அங்கே அவ்வப்போது சாதாரண இலங்கைத் தமிழ் மக்கள் பேசுவதையும் ஒலிபரப்புவதுண்டு கேட்டுப் பாருங்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஒருமுறை குமுதம் இதழில் வரும் அரசு பதில் பகுதியில் ஒருவர் யாழ்ப்பாணத்தவர் பேசும் தமிழைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டிருந்தார். அதற்கு வழமைபோலவே இடக்கு முடக்கான ஒரு பதில் வந்தது. காலையில் எழுந்ததும், முகம் கழுவிக்கொள்ளாமல் கண்ணாடியில் எங்கள் முகத்தைப் பார்க்கும்போது ஒரு வெட்கம் வருவதை அனுபவித்திருக்கிறீர்களா? என்றவாறு அரசு பதில் கொடுத்திருந்தார். இப்பதிலைப் பலரும் பலவாறு புரிந்து கொண்டு விமரிசனங்களையும் கண்டனங்களையும் தெரிவிக்கவே, சில வாரங்களுக்குப் பின்னர் இதற்கு விளக்கமான பதிலொன்றை அரசு அளித்தார். விளக்கத்தின் இறுதியில் தெற்கே செல்லத் தமிழ் இனிக்கும் என்று முடித்திருந்தார். (இது விவாதிக்கும் விடயத்துக்கு நேரடித் தொடர்பில்லாததாயினும் ஒரு சுவைக்காகச் சொன்னேன்.)

வைச் சிலர் ta ena உச்சரிப்பதற்கும், ரொராண்டோ என்று எழுதுவதற்கும் அதிகம் தொடர்பு கிடையாது. இங்கே முக்கியமாக உணர்ந்து கொள்ள வேண்டியது, தமிழில் ta ஒலியை சொல்லின் முதலில் வர எழுதமுடியாது என்பதுதான். அதற்குத் தமிழில் எழுத்துக் கிடையாது. to வை ரொ என்று எழுதுவது எவ்வளவு பிழையானதோ, அதேயளவுக்கு, டொ என்று எழுதுவதும் பிழைதான். யாழ்ப்பாணத்தவர் Rorando என்று எழுத தமிழ் நாட்டவர் Dorando என்று எழுதுகிறார்கள். இவற்றில் எது உசத்தி என்று எவ்வாறு முடிவு செய்வது? கூடிய தொகையினர் செய்யும் பிழையையே எல்லோரும் செய்யலாம் என்று முடிவு செய்யலாம், அல்லது இருக்கின்ற ஆயிரக்கணக்கான வேறுபாடுகளைப் போலவே இதையும் ஏற்றுக்கொண்டு இரண்டையுமே எல்லாத் தமிழரும் புரிந்துகொள்ள முயலலாம். பிறந்தநாள் என்றாலும் பேர்த்டே என்றாலும் எல்லாத் தமிழருமே புரிந்துகொள்கிறார்கள் அல்லவா?.

ரவி, நீங்கள் ஓரிடத்தில்

ற ra என உச்சிரக்கப்படும் எனில் கற்றோர் என்பது katrOr என்றல்லவா இருக்க வேண்டும்? அது எப்படி kattOr ஆனது? மீற்றர் என்பது mItrar என்று தானே இருக்க வேண்டும் அது எப்படி meter ஆனது?

என்று கேட்டிருக்கிறீர்கள். உண்மையில் பழைய காலத்தில் என்பது ra எனவும் ற்ற என இரட்டித்து வரும்போது tt எனவுமே உச்சரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. யாழ்ப்பாணத்தில் இந்த வழக்கம் இன்னும் தொடர்ந்துவரத் தமிழ்நாட்டில் கைவிடப்பட்டு tra என உச்சரிக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக முனைவர் செ.வை சண்முகம் (இந்தியத் தமிழர்) எழுதிய மொழி ஆய்வு என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட பகுதியைப் பாருங்கள்.

தமிழகத்தில் பேச்சு மொழியில் -ற்ற்- ஒலி கிடையாது. எழுத்து மொழியில் tt (ற்ற்) tr ஆக (நுனி நா அண்ணக்குரலிலா வல்லொலியும் தட்டொலியும் சேர்ந்தது) உச்சரிக்கப்படுகிறது. ஆனால் அது சங்க காலத்தில் நுனி அண்ணக்குரலிலா இரட்டை வல்லொலியாக உச்சரிக்கப்பட்டது. அது ஆங்கில tt ஒலியோடு ஒத்தது. tt என்ற ஆங்கில எழுத்து, தமிழக மக்களால் நாமடி ஒலியாக -ட்ட்- உச்சரிக்கப்படுவதால் தமிழகத்தில் ட்ட் என்று ஒலிபெயர்ப்புச் செய்யப்படுகின்றது. ஆனால் இலங்கையில் நுனி அண்ணக்குரலிலா இரட்டை வல்லொலியாக உச்சரிக்கப்படுவதால் -ற்ற்- என்று ஒலிபெயர்க்கப்படுகிறது.

சுந்தர், நீங்கள்

ஒருநாள் தமிழ் சொற்களிலும் சில எழுத்துக்களின் ஒலிப்பில் மாற்றம் இருப்பதை அறிந்தேன். அப்போதே எது தொல்காப்பியப் பரிந்துரையை ஒத்த ஒலிப்புமுறை என்று கேட்டிருந்தேன். ஒருவேளை யாழ் தமிழே சரியான பயன்பாடு என்று அறிந்திருந்தால் தற்போதைய பெரும்பாண்மை வழக்கை மாற்றக்கூட (விக்கிக்கு வெளியே) முயலலாம் என்று நினைத்திருந்தேன்.

எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலேயுள்ள எடுத்துக்காட்டு ற்ற் தொடர்பான உச்சரிப்பில் பழந்தமிழ் மரபுபற்றி உங்களுக்கு ஓரளவு விளக்கத்தைத் தந்திருக்கும் என எண்ணுகிறேன்.

செல்வாவின் குறிப்புக்கள் சிலவற்றில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. முதலாவதாக கருப்பு என்பதுதான் சரி என்றும் கறுப்பு பிழை என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் கருப்பு என்பதைக் கறுப்பு என்று பிழையாக எழுதுகிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இலங்கையில் கறுப்பைத்தான் கறுப்பு என்று எழுதுகிறார்கள். கருப்பு என்ற சொல் கரும்பைத் தான் குறிக்கும் (எகா: மன்மதனின் கருப்புவில்). இது குறித்து மதராஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட Tamil Lexicon இல் தேடினேன். கிடைத்த பக்கங்களுக்கான இணைப்புகளைக் கீழே பார்க்கவும்.

தவிரவும், மகன் என்பதை magan என்று உச்சரிக்கவேண்டும் என்பதும் சரியாகத் தெரியவில்லை. பொதுவாக ங் போன்ற எழுத்துக்களைத் தொடர்ந்து வரும்போது தான் Ga ஆக ஒலிக்கும் (எகா: சங்கம், மங்கை, தூங்கு). மகன் என்பதை mahan என்றுதான் உச்சரிக்க வேண்டும்.

இந்த முக்கியமான கலந்துரையாடலில், எனக்குச் சரியென்று பட்டதையும், பல நூல்களையும் வாசித்ததன்மூலம் அறிந்துகொண்டவற்றையும் எடுத்துக்கூறுவதுதான் எனது நோக்கமே அன்றி எவரையும் எதிர்த்து வாதம் புரிவதல்ல. நான் முன்வைத்த கருத்துக்கள் பிழையானவை என்று யாராவது ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டினால் என்னுடைய கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ளுவேன். Mayooranathan 19:49, 8 ஆகஸ்ட் 2006 (UTC)

செல்வாவின் மறுமொழிதொகு

 • மயூரநாதன், நான் கருப்பு-கறுப்பு பற்றி நீங்கள் கூறுவ்து போல எங்கும் சொல்லவில்லை. ரகர ஒலிப்பை எப்படி பிற சொற்களில் பயிலுவீர்கள் என்று கேட்பதற்கு பிற சொற்களை எடுத்துக் காட்டினேன்.
 • மகன் என்பதை magan என்றுதான் சொல்லுதல் வேண்டும். வல்லொற்று வராவிடில் மெலிந்தே ஒலிக்க வேண்டும். ங், ன் ஆகிய மெல்லின எழுத்துக்கள் இருந்தால் சற்று மூக்கொலி மிகலாம் ஆனால் அதெல்லாம் நுட்ப் வேறுபாடுகள் - இப்படிப்பட்ட நுண் ஒலி வேறுபாடுகள் மிகப்பலவாம். வல்லின எழுத்துக்கு குற்றியலுகரம், முதலிய தவிர்த்த ஒலிகளில் இரண்டே இரண்டு ஒலிப்புகள்தான் உள்ளன. எ-கா. k-g, p-b, t-d. மூன்று ஒலிகள் ககரத்திற்கு உள்ளதென்று எங்கே கூறப்பட்டுளது? அறிவித்தால் நலம். எடுத்துக்காட்டாக பங்கு, நான்கு, பகு, நகு ஆகிய எல்லா சொற்களிலும், ககரம் மெலிந்தே ஒலிக்கும். pahu, nahu என்று கூறுவது திருந்தா கொச்சை ஒலிப்பு. சிறிதளவு காற்றொலி வருதலும், அதே போல மெல்லின எழுத்துக்குப் பின் சிறிதளவு மூக்கொலி வருதலும் இயல்பு, ஆனால் அவற்றை மிகைப்படுத்தலாகாது. எந்த ஒரு எழுத்தும், இடத்திற்கு ஏற்றவாறு மிகப்பலவாறு திரிபுறும் (வெறும் இரண்டு மூன்று வகை மட்டுமில்லை). அவை எல்லாம் நுட்பத்திரிபுகள்.
 • Tornonto என்பது டொரான்ட்டோ என்று எழுதினால், முதல் எழுத்து வல்லின எழுத்தாகையால் வலித்து To என்று ஒலித்தல் வேண்டும். தமிழில் டகரமும், ரகரமும், றகரமும் ஒரு சொல்லின் முதல் ஒலியாக வரலாகாது. ஆனால், இங்கே உள்ளது வேற்றுமொழிச்சொல். மேலும் ரகரம் நுனிநா வருடுவதால் எழுவது, எனவே To என்பதற்கு பயன்படுத்துவது தவறு. இதனை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நான் தவறு என்பது, தொல்காப்பிய அடிப்படையிலும், பெருவாரியான தமிழர்கள் புரிந்துகொண்டதின் அடிப்படையிலுமே சொல்லுகிறேன்.
 • செ.வை.சண்முகம் அவர்கள் கருத்தை மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது அது சரியானதாக எனக்கு படவில்லை. அவர் கூறவந்ததை, இந்த சிறிய மேற்கோள்வழி நான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்.--C.R.Selvakumar 20:48, 8 ஆகஸ்ட் 2006 (UTC)செல்வா

எழுத்துப்பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்பு குறித்து ஆங்கில விக்கியில் ஒரு திட்டம் முன்வரைவுதொகு

வடக்கன் என்ற அரவிந்த் ஆங்கில விக்கியில் தமிழ் மொழி பற்றிய கட்டுரை உருவாக்கத்தில் மிகக் கூடுதலான பங்களிப்புச் செய்தவர். தமிழ் மொழி, தமிழர் வரலாறு ஆகியவற்றைப் பற்றி நன்கு படித்திருக்கிறார். அவர் ஆங்கிலத்தில் தமிழ் சொற்களை எப்படி எழுத்துப்பெயர்ப்பு/ஒலிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு திட்டம் தீட்ட எண்ணியுள்ளார். அதன் முன்வரைவைப் முன்வரைவைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை அதன் பேச்சுப் பக்கத்தில் இடவும். -- Sundar \பேச்சு 06:44, 26 அக்டோபர் 2006 (UTC)

சுந்தர், நீங்கள் தந்துள்ள இணைப்பில் முன்வரைவு எதையும் காணவில்லையே? பல்கலைக்கழக அகரமுதலிகளில் ஏற்கனவே இது போன்ற சீர் தர ஒலிபெயர்ப்பு முறைகள் இருக்கலாம். அவற்றையும் அனுசரித்து இந்த முன்வரைவு இருப்பது நலம்--ரவி 16:37, 26 அக்டோபர் 2006 (UTC)
தவறுதலாக முன்வரைவுப் பக்கத்திற்குப் பதில் பேச்சுப் பக்கத்திற்கு இணைப்புத் தந்துவிட்டேன். இப்பொழுது பார்க்கவும். -- Sundar \பேச்சு 06:53, 27 அக்டோபர் 2006 (UTC)
சுந்தர், கட்டாயம் பார்க்கின்றேன். பல நாட்களாக தமிழ் விக்கியில் சரிவர பங்கு கொள்ள முடியவில்லை. நவம்பர் 2-3 ஆம் நாள் வரை சற்று கடுமையான வேலை உள்ளது (deadlines கால அத்தப் பணிகள் உள்ளன). அருள்கூர்ந்து சற்று பொறுதிருக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.--C.R.Selvakumar 16:21, 28 அக்டோபர் 2006 (UTC)செல்வா


ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ், மெலிதான ஒப்புநோக்குதொகு

இதையும் பாருங்கள் ஈழத்தமிழ் - தமிழகத்தமிழ், மெலிதான ஒப்புநோக்கு
--Chandravathanaa 21:48, 10 அக்டோபர் 2008 (UTC)

Return to the project page "நடைக் கையேடு (எழுத்துப்பெயர்ப்பு)/02".