மானிப்பாய்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்

மானிப்பாய் (Manipay) யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். புராதன காலத்தில் பெரிய புலமென வர்ணிக்கப்பட்ட மானிப்பாய், யாழ். மாவட்டத்தின் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் அமைந்துள்ள சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. யாழ். மாவட்டத்தில் மக்கள்தொகை அடிப்படையில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவின் மக்கள்தொகை, 56 ஆயிரத்து 510 ஆகும்[1].

மானிப்பாய்
மானிப்பாய் is located in Northern Province
மானிப்பாய்
மானிப்பாய்
ஆள்கூறுகள்: 9°43′0″N 80°0′0″E / 9.71667°N 80.00000°E / 9.71667; 80.00000
நாடுஇலங்கை
மாகாணம்வடக்கு
மாவட்டம்யாழ்ப்பாணம்
பி.செ. பிரிவுவலிகாமம் தென்மேற்கு

மானிப்பாய் யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 12 கிலோமீட்டர் (5 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. யாழ் நகரில் இருந்து வடமேற்குத் திசையில் செல்லும் முக்கிய வீதியான மானிப்பாய் வீதி இவ்வூருக்குச் செல்கிறது. சண்டிலிப்பாய், நவாலி, சுதுமலை, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய ஊர்கள் மானிப்பாயின் எல்லைகளில் அமைந்துள்ளன.

இடப்பெயர்

தொகு

மானி + பாய் = மானிப்பாய். மாணி என்பதன் திரிபே மானி ஆகும். மானி = மானமுள்ளவர், மாமன், மானியம் என்ற பொருள் குறிக்கும் சொல்லாகும். மானியம் என்பது இறையிலி நிலம். மானியக்காரன் = கிராமத்தில் இனாம் நிலம் முதலியவற்றின் பரம்பரைப் பாத்தியத்திற்குரியவன் (த.லெ.5:3191) என்ற அடிப்படையிலும் இப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம். மானிப்பாயில் பண்டை நாளிற் பிராமணக் குடியிருப்பு பெரிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. மானி என்பது பிராமணரையும் பிரமச்சாரியையும் குறிக்கும் சொல்லாக வழங்கியுள்ளது[2].

மேலும் தென்னிந்தியக் கல்வெட்டுக்களின் சான்றுகளை நோக்கும்போது 'மானி' என்பது கோயில்களுடன் தொடர்புபட்டிருந்த பிரமச்சாரிகளைக் குறிப்பிடுவதையும், இப்பிரமச்சாரிகள் கோயில் தொண்டுகளை மேற்கொண்டு வந்தனர் என்பதையும் அறியக்கூடியதாக இருக்கிறது[3]. தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்வெட்டைச் சான்று காட்டி, மானி என்பது பிராமணர், பிரமச்சாரி, கோயிற்றொண்டர் என்ற பொருள் தந்து நிற்கின்றது என்கிறார் பேராசிரியர் நாகசாமி. அந்நிலையில் அத்தகையோர் (மாணி , மானி) இருந்த இடம் (மானி+பாய்) மானிப்பாய் எனப் பெயர் பெற்றதெனல் பொருத்தமாகும்.

கோயில் அல்லது அரண்மனைச் சமையற்காரர் என்ற நிலையில் மானி என்போர் மடப்பளியர் எனவும் அழைக்கப்பட்டனர். மடப்பள்ளி, மடப்பள்ளியார் என்பவற்றிகு நூலோர் தரும் பின்வரும் விளக்கங்களை அறிந்து கொள்ளுதல் சமூகநிலை நோக்கிய பயனுறு செயலாம்.

  • "ஐந்தாறு கிராமங்களுக்கு தலைமை பெற்றது மடப்பம், அளித்தல் = காப்பாற்றுதல், மடப்பத்தை அளிப்பதால் மடப்பளி என்பாதாம்"[4].
  • "கலிங்கதேசத்து மட்பள்ளியூரினின்று வந்த அரச குடும்பத்தவர்களே மடப்பள்ளியார் என்றழைக்கப்பட்டனர்"[5].
  • சில சரித்திர ஆசிரியர்கள் மடப்பளி என்னும் மொழியை மடைப்பள்ளியாக்கி அரச குடும்பங்களுக்குச் சமையல் செய்தவர்களின் சந்ததியார் எனக் கூறுவாருமுளர்" என்கிறார் குல சபாநாதன்[4].
  • "மடப்பளியார் தமிழரசர் காலத்திற் பிராமணரின் சமையற்கூட உதவியாட்களாக இருந்தனர். பின்பு அரச குடும்பத்தினருக்குச் சமையல் செய்தனர்"[6].
  • இவர்கள் கலிங்க நாட்டு நந்தவாடிப் பிரிவிலுள்ள மடப்பளி எனும் ஊரிலிருந்து வந்தவர்கள் என்கிறார் சுவாமி ஞானப்பிரகாசர்[7].

மானி, பாய் என்னும் இரு திராவிடச் சொற்களின் இணைவால் அமைந்த இவ்விடப்பெயரை குமாரசாமி (1918:160), மானப்பாய, அல்லது மானிப்பாய ( M'anayi or Mani.....a plant justicis) என்ற சிங்களப் பெயரின் திரிபு என்று எழுதியுள்ளார். இவற்றோடு வீமன்காமத்தில் மாந்தப்பாய், தனப்பாய், மல மண்டலப்பாய் (மலை + மண்டலப்பாய்) ஆகிய குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன. தையிட்டியில் தண்டலப்பாய், சவங்கடப்பாய், தொங்களப்பாய், என்பனவும், உரும்பிராயில் தோலப்பாய், சுதுமலையில் கச்சப்பாய், சுழிபுரத்தில் இயக்கடப்பாய், மானிப்பாயில் கிணாப்பாய், தொல்புரத்தில் தலக்கடப்பாய் என்பனவும் குறிச்சிப் பெயர்களாக வழங்குகின்றன. இப்பெயர்கள் அனைத்திற்கும் சி்ங்கள விளக்கம் கொடுக்கிறார் குமாரசாமி (1918:160-161). ஆயினும் பாய் ஈற்று இடப்பெயர்கள் அனைத்தும் தமிழ்மொழியின் மூலமும் பொருளும் கொண்டவை என்பதற்கு தக்க விளக்கங்கள் மேலே தரப்பட்டுள்ளமை காண்க[8].

வரலாறு

தொகு

யாழ்ப்பாணத்தில் பிரித்தானியர் ஆட்சியின் தொடக்க காலத்தில் அமெரிக்க சமயப் போதகர்களின் (அமெரிக்க மிசன்) மையங்களில் ஒன்றாக இது விளங்கியது. இம் மிஷனின் சார்பில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவரான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் என்பார் 1864 ஆம் ஆண்டில் இங்கே ஒரு மருத்துவமனையை நிறுவியதுடன், மாணவர்களுக்கு மேனாட்டு மருத்துவத்திலும் தமிழ் மொழியில் பயிற்சியும் கொடுத்து வந்தார். இது ”மானிப்பாய் கிறீன் நினைவு மருத்துவமனை” என்னும் பெயருடன் இன்றும் செயற்பட்டு வருகிறது.

பாடசாலைகள்

தொகு

மானிப்பாய் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க பின்னணியைக் கொண்டுள்ளது. 89 சதவீதமான மக்கள் எழுத்தறிவு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். ஆங்கில மிசனறிகள் சில பாடசாலைகளையும் இங்கே நிறுவினர். இப் பாடசாலைகள் தவிரப் பிற்காலத்தில் நிறுவப்பட்ட பல பாடசாலைகளும் இங்கே உள்ளன. இவற்றுள் மானிப்பாய் மெமோறியல், மானிப்பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி என்பன முக்கியமானவை. இவை மட்டுமல்லாது மானிப்பாய் நூலகமும் கல்வித் துறைக்கு போதுமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

வழிபாட்டு இடங்கள்

தொகு

மானிப்பாய் கிறித்தவரின் சமயப் பிரசார மையமாக இருந்து வந்ததால் இங்கே அச் சமயத்தவரின் புனித பேதுரு பவுல் ஆலயம், அங்கிலிக்கன் திருச்சபை தேவாலயம் உட்படப் தேவாலயங்கள் பல காணப்படுகின்றன.

தவிர பல இந்துக் கோயில்களும் இங்கே உள்ளன. தென் இந்தியக் கட்டடக் கலை சிற்ப வடிவமைப்பைக் கொண்டு அமைக்கப்பட்ட மானிப்பாய் மருதடி விநாயகர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இது மட்டுமல்லாது மானிப்பாயில் இருந்து வடக்கே அமைந்துள்ள சுதுமலை புவனேசுவரி அம்மன் கோயில் பழைமை வாய்ந்த வரலாற்று ரீதியில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலாக விளங்குகின்றது.

விளையாட்டு

தொகு

இங்குள்ள மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானமானது இளைஞர்கள் மட்டுமல்ல முதியோர் மத்தியிலும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.

மானிப்பாயின் சிறப்புகள்

தொகு
  • மானிப்பாயில் நவாலிக் கிராமத்தில் வயல் வெளிகளின் நடுவே இடிகுண்டென அழைக்கப்படும் பெரியதொரு குழி காணப்படுகின்றது. முன்னொரு காலத்தில் இடி விழுந்ததன் காரணமாகவே ஆழம் காண முடியாத இக்குழி ஏற்பட்டதாகவும் இக்குழிக்கும் கீரிமலைக் கடலிற்கும் இடையே நிலத்திற்கடியிலான தொடர்பு இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
  • மானிப்பாயிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வழுக்கியாறு எனப் பிரசித்தி பெற்ற பருவ மழைக் காலங்களில் பொங்கி வழிந்தோடும் சிறிய ஆறு ஆகும்.

மானிப்பாயைச் சேர்ந்தவர்கள்

தொகு

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. மனதை அள்ளும் மானிப்பாய் பரணிடப்பட்டது 2012-01-29 at the வந்தவழி இயந்திரம், சிறிமால் பெர்னாண்டோ, தினகரன், மே 23, 2010
  2. "The word* Maani* stands for a Brahmin. In Kannada language, the word *maani* stand for a waiter…The word* maani* was derived from Sanskrit *maanava* 'a youth, a student'. Rajaraja the Great annexed South Canara to the Cola Empire. It may be that Brahmins from the area brought usage of the word *maani*, 'a Brahmin' to Ceylon" (A. Veluppillai: 1972:54-55)
  3. South Indian Inscriptions Vol.3.p.227
  4. 4.0 4.1 யாழ்ப்பாண வைபவமாலை:64)
  5. யாழ்ப்பாண வைபவகெளமுதி: 148-149
  6. யாழ்ப்பாணச் சரித்திரம்:61
  7. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்:148
  8. இ. பாலசுந்தரம்: ஈழத்து இடப்பெயர் ஆய்வு – யாழ்ப்பாண மாவட்டம், தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறொன்ரோ, கனடா, 2002

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானிப்பாய்&oldid=3742964" இலிருந்து மீள்விக்கப்பட்டது