விசைப்பொறி

இன்ஜின்
(விசைப்பொறிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விசைப்பொறி (engine) அல்லது இயக்கி (motor) என்பது ஆற்றலை பயனுள்ள இயந்திர இயக்கமாக மாற்றுகின்ற ஓர் இயந்திரம் ஆகும்.[1][2]உள் எரி பொறிகளும் ( நீராவிப் பொறிகள்) போன்ற வெளி எரி பொறிகளும் உள்ளிட்ட வெப்ப எந்திரங்கள் எரிமத்தை எரித்து வெப்பத்தை உண்டாக்கி அவ்வாற்றலை இயக்கமாக மாற்றுகின்றன. மின்சார இயக்கிகள் மின்னாற்றலை இயந்திர இயக்கமாக மாற்றுகின்றன. காற்றழுத்த இயக்கிகள் அழுக்கத்திலுள்ள வளிமத்தை பயன்படுத்தி இயக்கத்தை உண்டுபண்ணுகின்றன. மேலும் சிறுவர் விளையாட்டுக் கருவிகளில் கடிகாரவகை இயக்கிகளில் தேக்கப்பட்ட மீள்மையாற்றலைப் பயன்படுத்துகின்றன. உயிரியல் அமைப்புகளில் தசைகளில் உள்ள மயோசின் போன்ற மூலக்கூற்று இயக்கிகள் வேதி ஆற்றலை இயக்கமுண்டாக்கப் பயன்படுத்துகின்றன.

மெர்சிடீசு தானுந்தின் V6 உள் எரி பொறி

உந்துத் தண்டு பொறிகள்

தொகு
 
விளையாட்டு நீராவிப் பொறி. கீழேயுள்ள தட்டில் எரிமம் எரிக்கப்பட்டு கொதிகலனில் நீராவி உண்டாக்கப்படுகிறது. நீலநிறத்தில் காட்டப்பட்டுள்ள உந்துத்தண்டினை இயக்குவதின் மூலம் சக்கரங்கள் சுழலுகின்றன.

துவக்கத்தில் விசைப்பொறிகள் தங்களுக்கு வெளியே வெப்பத்தைப் பயன்படுத்தி வளிமத்தை உயரழுத்தத்திற்கு கொண்டு சென்றன. பொதுவாக இந்த வளிமம் நீராவியாக இருந்தமையால் இவை நீராவிப் பொறிகள் எனப்பட்டன. நீராவியை குழாய்மூலம் பொறியினுள் செலுத்தி பொறிக்குள்ளிருந்த உந்துத் தண்டுகளை தள்ளுவதன் மூலம் இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. இத்தகைய விசைப்பொறிகள் தொழிற்சாலைகள், படகுகள் மற்றும் தொடருந்துகளில் பயன்படுத்தப்பட்டன.

பெரும்பாலான தானுந்துகள் தங்கள் விசைப்பொறியினுள்ளேயே வேதிப்பொருளை எரிக்கின்றன. பொறிகளுக்குள்ளேயே வெப்ப ஆற்றல் உண்டாக்கப்படுவதால் இவை உள் எரி பொறிகள் எனப்பட்டன. உள் எரி பொறிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அவற்றை எரிபொருள், வீச்சு மற்றும் அமைப்பைக் கொண்டு வகைப்படுத்தலாம்.

  • எரிபொருள்: உள் எரி பொறிகளில் எரிபொருளாக, பொதுவாக, பெட்ரோல், டீசல், ஆட்டோகாசு, சாராயம் ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.
  • வீச்சு: இரு வீச்சு பொறிகள் ஒவ்வொரு சுழற்சிக்கும் ஒருமுறை திறனை வெளிப்படுத்துகிறது. நான்கு வீச்சு பொறிகள் இரண்டு சுழற்சிகளுக்கு ஒருமுறை திறனை வெளிப்படுத்துகின்றன. ஆறு வீச்சு பொறிகளில் ஆறு சுழற்சிகளில் இருமுறை திறன் வெளிப்படுகிறது.
  • அமைப்பு: பெரும்பாலான பொறிகளில் உந்துத்தண்டுகள் உள்ளேயுள்ள குழல்களும் இயக்கத்தை சீராக்கும் மாற்றுத்தண்டும் உள்ளன. பொதுவாக குழல்கள் 1, 2, 3, 4, 6, 8, 10 மற்றும் 12 எண்ணிக்கையில் அமைந்திருக்கும். இந்தக் குழல்களும் பல்வேறு வழிகளில் அமைக்கப்படலாம்; ஒரே வரிசையில், ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கோணத்தில் அல்லது வட்டமாக அமைக்கப்படலாம்.

'சுழற்சி' பொறியில் குழல்கள் எதுவுமின்றி முக்கோண வடிவ சுழலியை நீள்வட்ட அமைப்பினுள் சுழலுமாறு இருக்கும். இது ஓர் உந்துத்தண்டின் இயக்கத்தை ஒத்திருக்கும்.

விசையாழி பொறிகள்

தொகு
 
விசைச்சுழலியனுள்ளே உள்ள தகடுகள்நாராவித் தாரையால் தள்ளப்படுகின்றன.

காற்றாலையில் காற்றினால் சுழற்றப்படுவதுபோலவே வெப்பமடைந்த வளிமத்தைக் கொண்டு விசையாழியையும் சுழல வைக்கலாம். துவக்க கால விசையாழிகள் நீராவித் தாரையைப் பயன்படுத்தின. தற்காலத்தில் எரிபொருளை பயன்படுத்தி வளிமம் ஒன்றை சூடேற்றி விசையாழிகளை இயக்குகின்றனர். வானூர்திகளில் பயன்படுத்தப்படும் தாரைப் பொறிகள் ஒருவகை விசையாழிப் பொறிகளே.

விறிசுப் பொறிகள்

தொகு
 
சூடான வளிமங்களின் தாரைகள் விறிசை உந்துகின்றன.

ஏவூர்தி அல்லது விறிசு ஒரு சிறிய துவாரத்திலிருந்து விரைவாக வெளியேற்றப்படும் வளிமத் தாரைகளால் இயக்கப்படுகிறது. இந்த வளிமம் அழுத்தத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது வேதிப்பொருளை எரிப்பதன் மூலம் மிக உயர்நிலையில் சூடாக்கப்பட்ட வளிமம் வெளிப்படுத்தப்படலாம். இவை இயக்க மிக எளிமையாக இருந்தபோதும் இவற்றின் திறன் மிகவும் வலியது. விண்வெளியின் வெற்றிடத்தில், வேறெந்த உந்துகையும் இல்லாதவிடத்திலும், இவற்றால் இயங்க இயலும்.

மின்சார இயக்கிகள்

தொகு
 
மின்சார இயக்கி

மின்சார இயக்கிகள் எரிபொருளைப் பயன்படுத்துவதில்லை. மின்சார ஆற்றல் கம்பிகள் வழியாகப் பெறப்படுகின்றன. இந்த மின்சாரத்தை வேறெங்காவது தொலைவில் எரிபொருளைப் பயன்படுத்தி உருவாக்கி இருக்கலாம். இந்த மின்னாற்றல் இயந்திர இயக்கமாக மாற்றப்படுகின்றது. மின்னாற்றலால் வலிய காந்தப்புலம் ஏற்படுத்தப்பட்டு இயக்கியின் தண்டினைச் சுழற்ற கட்டுப்படுத்தப்படுகிறது.

தொடருந்து உந்துப் பொறிகள் மின்சார இயக்கிகளால் இயக்கப்படும் மின் பொறியாகும்.

இவற்றையும் காண்க

தொகு

மேற்சான்றுகள்

தொகு
  1. "Motor". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09. a person or thing that imparts motion, esp. a contrivance, as a steam engine, that receives and modifies energy from some natural source in order to utilize it in driving machinery.
  2. Dictionary.com: (World heritage) "3. any device that converts another form of energy into mechanical energy so as to produce motion"

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Engines
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசைப்பொறி&oldid=3527509" இலிருந்து மீள்விக்கப்பட்டது