ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை (Riddle) ஆகும். இதை நொடி என்றும் பழந்தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாகத் "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை இறப்பதும்" வழமையாகும். [1]

பிசி

தொகு

தொல்காப்பியம் இதனைப் பிசி என்று குறிப்பிடுகிறது.

  1. ஒப்பொடு புணர்ந்த உவமம்
  2. தோன்றுவது கிளந்த துணிவு

என்று இரண்டு நிலைகளில் வரும் என்று அது குறிப்பிடுகிறது. [2]

உடல் உண்டு தலை இல்லை
கை உண்டு வரல் இல்லை
அது என்ன

[சட்டை]
இது ஒப்பொடு புணர்ந்த உவமை

கையை வெட்டுவார்
கழுத்தை வெட்டுவார்
ஆனாலும் நல்லவர்
அவர் யார்

[தையல்காரர்]
இது தோன்றுவது கிளந்த துணிவு

விடுகதை வகைகள்

தொகு

முனைவர் ரோஜர் டி.ஆப்ரஹாம் அவர்களும் ஆலன் டஆண்டஇஸ் அவர்களும் தமிழ்ப் பழமொழிகளை ஒன்பது வகையாக வகைப்படுத்துகிறார்.[3]

  1. விளக்க விடுகதைகள் ‌
  2. எதிர்மறை விடுகதைகள்
  3. தலைதப்பும் விடுகதைகள்
  4. கதையமைப்பு விடுகதைகள்
  5. உரையாடல் வகை
  6. சொல் விளையாட்டு
  7. நகை வினாக்கள்
  8. அறிவு வினாக்கள்
  9. புதிர்கள்

விடுகதை உதாரணங்கள்

தொகு
  • சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அஃது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)
  • ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அஃது என்ன? (தேன்கூடு)
  • பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அஃது என்ன? (தவளை)

எண்களுக்கான விடுகதை

தொகு
  • "ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்

டா டா டா டா டா டா அது

டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை

இதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர்.

  • எட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்க்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.

ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்

மூன்றும் நான்கும் சேரில் குளம்

மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை

மூன்றும் ஆறும் சேரில் பெருமை

ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?

-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் "திருவாவினன்குடி" என்ற விடையளிப்பர்.[4]

பாடலாக இருக்கும் விடுகதை

தொகு

சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து
மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,
மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்

  • மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.
  • மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.
  • மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)
அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,
  • மரமது - மீண்டும் அரசு
  • மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.
  • மரத்தினால் - மீண்டும் வேல் -
  • மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை
அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,
  • மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,
  • மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,
  • மரமுடன் - ஆல் மரம்
  • மரமெடுத்தார் - அத்தி மரம்
அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.

இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:

அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.

மேலும் பார்க்க

தொகு

தமிழ் விடுகதைகள் பல நூறு தமிழ் விடுகதைகள்

குறிப்பு

தொகு
  1. ந.வீ.செயராமன். (1980). இலக்கண ஆய்வுக்கோவை. சென்னை: இலக்கியப் பதிப்பகம்.
  2. ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும் \ தோன்றுவது கிளந்த துணிவினானும் \ என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே. (தொல்காப்பியம் - செய்யுளியல் 169)
  3. http://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611003.htm
  4. மணிபாரதி எழுதிய விடுகதை விளையாட்டு பக்234
நாட்டுப்புறவியல் இலக்கிய வடிவங்கள் தொகு
பழமொழி | விடுகதை | உவமை | மரபுத்தொடர் | சொலவடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுகதை&oldid=4171138" இலிருந்து மீள்விக்கப்பட்டது