விடுதலை (இதழ்)

(விடுதலை (தமிழ் நாளிதழ்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விடுதலை இதழ் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆகும். இதன் தற்போதைய ஆசிரியர் கி. வீரமணி ஆவார்.[1]

இதழின் முன்பக்கம்

வரலாறு

தொகு

நீதிக் கட்சியால் தோற்றுவிக்கப்பட்டு பிறகு தந்தை பெரியார் அவர்களின் பொறுப்பில் நடத்தப்பட்டது. சூன் 1, 1935ல் வாரம் இருமுறை ஏடாக காலணா விலையில் வெளிவந்தது. சூன் 1, 1937 முதல் நாளேடாக அரையணா விலையில் பெரியார் பொறுப்பில் ஈரோட்டில் இருந்தும் வெளிவந்தது. தொடர்ந்து சென்னையிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் சென்னையில் 14, மௌண்ட் ரோடு என்ற முகவரியிலிருந்தும் பின்னர் ஈரோடு குடியரசு பணிமனையில் விடுதலை அலுவலகத்திலிருந்தும் பின்னர் சென்னை சிந்தாதரிப்பேட்டை பாலகிருட்ண பிள்ளை தெருவிலிருந்தும், 1965 நவம்பர் முதல் சென்னை பெரியார் திடலிலிருந்தும் விடுதலை வெளிவருகிறது. இதில் டி. ஏ. வி நாதன், பண்டித எஸ். முத்துசாமிபிள்ளை, அ. பொன்னம்பலனார், சாமி. சிதம்பரனார், கா. ந. அண்ணாதுரை, குத்தூசி குருசாமி, மணியம்மை, கி. வீரமணி ஆகியோர் ஆசிரியராக பணியாற்றியுள்ளனர். தற்போதைய ஆசிரியராக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி உள்ளார்.

பெரியாரது அண்ணன் மகன் ஈ. வெ. கி. சம்பத், அவரிடமிருந்து விலகும்வரை அதனை நிர்வகித்து வந்தார். பவளவிழா காணும் இந்நாளிதழ் பெரியாரின் பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடையே எடுத்துச் செல்லும் ஊடகமாக விளங்கியது. அவரது கொள்கைகள் காரணமாக விளம்பரங்கள் கிடைக்காதபோதும் ஆர்வமிக்க தொண்டர்களின் சந்தாத்தொகை மூலம் நாளிதழை நடத்தி வந்தார். அவர் 1949இல் மணியம்மையை வாரிசாக அறிவித்ததும் திருமண முடிவை தெரிவித்ததும் விடுதலை மூலமேயாகும். தமிழ் அச்சு எழுத்துகளில் மாற்றம் ஏற்படுத்தியதும் இந்த நாளிதழே.

சமூக நிலைப்பாடுகள்

தொகு

1939ம் ஆண்டிலேயே ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மிக கடுமையான விமர்சனங்களை வைத்தது. இராசாசி கொண்டு வந்த குலகல்வி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்டுரைகள் வெளியிட்டது. தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு குரல் கொடுத்தது விடுதலை.

1987ம் ஆண்டு கடலூர், மதுரை, சிறைகளில் சிறை அதிகாரிகளால் விடுதலைக்கு தடை போடப்பட்டது. உள்துறை தனிச் செயலாளர் அந்த தடை ஆணையை விலக்கிக் கொண்டதால் 27.11.1987ல் வழக்கு விசாரணை தேவையில்லை என்று நீதியரசர் சத்யதேவ் தீர்ப்பு அளித்தார்

விடுதலை பற்றி கருத்துகள்

தொகு

பெரியார்

தொகு

ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக்கூடியதும், தமிழ் மக்களுக்கு சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடு அளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிக்கை விடுதலை. விடுதலைப் பத்திரிக்கை இல்லாதிருந்திருந்தால் மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ஏன் என்று கேட்க நாதியில்லாமல் போயிருக்கும். (விடுதலை 16.6.1964)

அண்ணா

தொகு

தனது இனத்தைத் தட்டி எழுப்ப தன் இனத்தின் இழிவைப் போக்க தன் இனத்தார் அகப்பட்டுள்ள வஞ்சக வலையைக் கிழித்தெறிய பாடுபடும் ஒரே தினசரி விடுதலையே.

கருணாநிதி

தொகு

நான் முதலில் படிக்கும் ஏடு விடுதலையே. அறியாமையிலிருந்து விடுதலை ஆதிக்க வெறியிலிருந்து விடுதலை விடுதலைக்காக களத்தில் வாளேந்தி கடும் போர் புரிந்து வரும் விடுதலையே.

குன்றக்குடி அடிகளார்

தொகு

தமிழன் வீடு என்பதற்கான அறிவிப்புப் பலகை விடுதலை

எஸ்.ஏ.டாங்கே

தொகு

கம்யூனிசக் கொள்கைகளைப் பரப்பும்-உண்மையான தலைவர் பெரியாரும், விடுதலையுமே.

ஏ.கே. கோபாலன்

தொகு

கம்யூனிஸ்டுக் கட்சி அடக்குமுறைக்கு உட்பட்டபோது சனநாயக உரிமைக்காக நிமிர்ந்து நின்று கிளர்ச்சி செய்தது திராவிடர் கழக தோழர்களும் விடுதலையுமே.

கி.ஆ.பெ. விசுவநாதம்

தொகு

விடுதலை நேர்மை உள்ளவர்களுக்கு நீலோற்பல மாலை. விஷமக் காரர்களுக்கு விரியன் பாம்புக்குட்டி.

பத்திரிக்கையாளர் சோலை

தொகு

ரசிய புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர் வாளாக இருந்தது இஸ்காரா (தீப்பொறி). சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது- இன்றும் இருப்பது விடுதலை.

மேற்கோள்கள்

தொகு
  1. Dr. K. VEERAMANI

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை_(இதழ்)&oldid=3894410" இலிருந்து மீள்விக்கப்பட்டது