குத்தூசி குருசாமி

குத்தூசி குருசாமி என அழைக்கப்படும் சா. குருசாமி (23 ஏபிரல் 1906 - 11 அக்டோபர் 1965) விடுதலை இதழில் குத்தூசி என்ற புனைபெயரில் பல அறிவார்ந்த கூர்மையான கட்டுரைகளை எழுதி வந்தவர். 1927 முதல் 1965 வரை பெரியார் ஈ. வே. ராவின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணியில் இருந்து செயல்பட்டார்.

குத்தூசி குருசாமி குடும்பம்

தொடக்க வாழ்க்கை

தொகு

தஞ்சாவூர் மாவட்டம் குருவிக்கரம்பையில் சைவக் குடும்பத்தில் சாமிநாதன், குப்பு அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[1] (இவர் தங்கை காந்தம்மா பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான நெ. து. சுந்தரவடிவேலுவைத் திருமணம் செய்தார்.[2]

கல்வி

தொகு

1923 இல் திருச்சி தேசியக் கல்லூரியில் இடைநிலைப்படிப்பில் சேர்ந்தார் குருசாமி. தேசியக்கல்லூரி சூழ்நிலை குருசாமிக்கு அறிவுப் பசியைத் தூண்டியது. 1925 இல் காந்தி அடிகளைக் கல்லூரிக்கு அழைத்து பணமுடிப்பு அளித்து சிறப்புச் செய்தார். இளங்கலை வரை தேசியக் கல்லூரியில் பயின்றார். சைமன் குழு புறக்கணிப்புக்குத் தலைமைத் தாங்கி கல்லூரி மாணவர்களைத் திரட்டி ஊர்வலம் நடத்தினார்.

பொது வாழ்க்கை

தொகு

பெரியார் தொடங்கிய சுயமரியாதை சங்கத்தின் பத்திரிகையான குடியரசு இதழைப் படித்து சமயம், சாதி முதலிய பாகுபாடுகளையும் மூடப்பழக்கவழக்கங்களையும் எதிர்த்தார். 1927 இல் ஈரோட்டில் பெரியாரைச் சந்தித்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். குடியரசு ஏட்டில் கட்டுரைகளும் அவ்வப்போது தலையங்கங்களும் எழுதினார். பகுத்தறிவுப் பரப்புரையும் செய்தார். அவருடைய எழுத்திலும் பேச்சிலும் கிண்டல் கேலி இருக்கும். அவருடைய கருத்துகள் தெளிவாகவும் தக்கச் சான்றுகளுடன் விளங்கும். அவர் ஒரு பகுத்தறிவாளர் மட்டும் அல்லாமல் பொதுவுடைமைவாதியாகவும் இருந்தார்.

படைப்புகள்

தொகு

மொழிபெயர்ப்பு

தொகு

"நான் ஏன் கிறித்தவன் அல்லன்" என்னும் பெர்ட்ரண்டு ரசல் எழுதிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார்.

இதழாளர்

தொகு

பெரியார் தொடங்கிய ரிவோல்ட் என்னும் ஆங்கில இதழின் துணையாசிரியராகப் பணியாற்றினார்.

விடுதலை ஏட்டின் பொறுப்பாசிரியராகப் பல்லாண்டுகள் பணியாற்றினார். [3] குத்தூசி , அறிவுப்பாதை (வார இதழ்), ஆகிய இதழ்களை நிறுவி அவற்றின் ஆசிரியராக இருந்தார்.

புதுவை முரசு, திராவிடன், பகுத்தறிவு ஆகிய இதழ்களில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்

தொகு

விடுதலை இதழில் 'பலசரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் சில பலசரக்கு மூட்டை (70 கட்டுரைகள்), புதிய குத்தூசித் தொகுப்பு (185 கட்டுரைகள்) என்னும் நூல்களாக வெளிவந்துள்ளன.

அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார்.

திருமணம்

தொகு

தமிழகத்தில் முதன்முதலில் சுயமரியாதைத் திருமணம் செய்து சடங்குகளற்ற சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். தன் பட்டபடிப்பை நிறைவு செய்தபின் ஈரோட்டில் 12 திசம்பர் 1929 அன்று பெரியாரின் முன்னிலையில் இராணி மேரி கல்லூரி இறுதியாண்டு மாணவியான குஞ்சிதம் என்பாரைத் திருமணம் செய்தார்.[2] கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார் குஞ்சிதம். தாலி பெண்களை அடிமைப் படுத்துவதன் அடையாளம் என்ற தன்மான இயக்கக் கருத்தினைக் கேட்டு திருமணமாகி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றிவிட்டார்.[4]

எழுத்துச்சீர்திருத்தம்

தொகு

1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார்.

பெயரிடல்

தொகு

குழந்தையின் பெயருக்கு முன்னால் தன் தந்தையின் முதல் எழுத்தை (initial) போடுவதை எதிர்த்து, தாயின் முதல் எழுத்தையும் போடவேண்டும் என்று வற்புறுத்தி தானே தன் மகளின் பெயருக்கு முன்னால் இரண்டு முன்னெழுத்துகளையும் சேர்த்து அரசுப் பதிவேட்டில் பதியவைத்தார். அவர் மகளின் பெயர் கு.கு.ரஷ்யா. அதாவது குஞ்சிதம் குருசாமி ரஷ்யா.[5]

ஈ. வெ. கி. சம்பத்தின் சகோதரியான தீனதயாளுவுக்கு ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் (The Tempest) நாடகத்தின் நாயகியான மிராண்டாவின் பெயரைச் சூட்டினார் குருசாமி.[5]

புனைபெயர்கள்

தொகு

குத்தூசி , சி.ஐ டி, காலி மணிபர்ஸ், தெப்பக்குளம், பாட்மிண்டன், குகு, சம்மட்டி, சிவப்பழம், தமிழ்மகன், தராசு, கிறுக்கன், மதுரைவீரன், குமி, பென்சில், விடாக்கண்டன், தொண்டைமண்டலம், ஸ்பெக்டேட்டர், பிளைன் ஸ்பீக்கர், எஸ் ஜி; ஆகியன குருசாமியின் புனைப்பெயர்கள் ஆகும்.

மறைவு

தொகு

மேதை பெட்ராண்ட் ரசலைப் பின்பற்றி குருசாமியும் தன்மரணக் குறிப்பை 1959இல் எழுதினார். 11-10-1965 அன்று இறந்தார்.

குத்தூசி குருசாமி பற்றியவை

தொகு
  1. பாரதிதாசன், சுயமரியாதைச்சுடர் (கவிதை)
  2. குருவிக்கரம்பை வேலு. குத்தூசி குருசாமி (வாழ்க்கை வரலாறு)
  3. கழஞ்சூர் செல்வராசு, குத்தூசி குருசாமியை மறந்தது ஏன்? (நினைவுக்கட்டுரைகள்)

மேற்கோள்கள்

தொகு
  1. "குத்தூசி குருசாமி: சுயமரியாதையின் அடையாளம்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  2. 2.0 2.1 பெரியாரும் தமிழ் தேசியமும் | வாலாசா வல்லவன் | மன்றம் உரைகள் | Mantram Talks - Part 1, பார்க்கப்பட்ட நாள் 2022-10-30
  3. Venkatachalapathy, A. R. (2014-09-13). "Arresting portrait". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  4. நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்; பகுதி 1; பக்கம் 314
  5. 5.0 5.1 "கு.கு.ரஷ்யா". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குத்தூசி_குருசாமி&oldid=4129854" இலிருந்து மீள்விக்கப்பட்டது