விராலிமலை முருகன் கோயில்

விராலிமலை முருகன் கோயில், தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், விராலிமலையில் உள்ளது. விராலிமலை புதுக்கோட்டைக்கு வடமேற்கில் 41 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சிக்கு தெற்கே 34 கிலோ மீட்டர் தொலைவிலும்; மதுரைக்கு வடக்கே 107 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

விராலிமலை முருகன் கோயில்
விராலிமலை முருகன் கோயிலின் வெளிப்புறத் தோற்றம்

அமைவிடம்

தொகு

திருச்சி - மதுரை வழித்தடத்தில் திருச்சியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர்கள் தொலைவிலும், புதுக்கோட்டைக்கு வடமேற்காக சுமார் 40 கிலோமீட்டரிலும் விராலிமலையில் அமைந்துள்ள, முருகப்பெருமானின் ஒரு பாடல் பெற்ற தலம்.[1][2]


கோயில் பற்றிய சிறு விபரங்கள்

பிற பெயர்கள் சொர்ணவிராலியங்கிரி
மூலவர் சண்முகநாதர் (ஆறுமுகம்)
அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை
தல மரம் காசி வில்வம்
தீர்த்தம் சரவணப் பொய்கை; நாக தீர்த்தம்
தொன்மை 1000-2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
சிறப்பு முருக வாகனமான மயில்கள் நடமாடும் கோயில்
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் விராலிமலை மாநிலம் தமிழ்நாடு
இணையதளம்

தல வரலாறு

தொகு

தற்போது கோயில் இருக்குமிடத்தில் குரா மரம் ஒன்றிருந்ததாகவும், வேடன் ஒருவன் துரத்தி வந்த வேங்கை அக்குரா மரத்தினுள் மறைந்து விட்டதாகவும், அவ்விடமே ஆறுமுகனாரின் உறைவிடமாகக் கொண்டு வழிபடத்துவங்கியதாகவும் கூறுவர். முனிவர்களும், சித்தர்களுமே அக்குரா மரவடிவில் தவமியற்றி வந்தனர் என்றும் கூறுவதுண்டு. அருணகிரிநாதரைத் தடுத்தாட்கொண்ட முருகப்பெருமான், அவருக்கு விராலிமலை இருக்குமிடத்தைக் காட்டவே இவ்வாறு வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்ததாகவும் கூறுவர்.

தலச் சிறப்புக்கள்

தொகு
  • வசிஷ்டரும் அவர்தம் இல்லாள் அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமிருந்தனர்.
  • இம்மலையில்தான் பரகாயப்பிரவேசம் என்னும் சித்தியை அருணகிரிநாதருக்கும் பெம்மான் வழங்கியதாகப் புராணம் உண்டு. இத்தலம் குறித்துத் திருப்புகழில் சுமார் 16 பாடல்கள் உள்ளன.
  • நோய் மற்றும் துன்பங்கள் நீங்க, கல்வி, செல்வம், மற்றும் ஆயுள் நீடிக்கவும் இங்குள்ள முருகனாரை வேண்டிச் செல்வர்.
  • இத்தலத்தின் மீது, விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார்.
  • பங்குனி உத்திரம், கந்த சஷ்டி ஆகியவை இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள்.

தவிட்டுக்குப் பிள்ளை

தொகு

பிள்ளைச் செல்வம் வேண்டுவோருக்கு நேர்த்திக் கடன் கழிக்கும் பழக்கம் இங்கு உள்ளது. பிள்ளை பிறந்ததும், அதை ஆறுமுகனாரிடமே அவரது பிள்ளையாகக் கொடுத்து விட்டுப் பிறகு பிள்ளையின் மாமன் அல்லது சிற்றப்பன்மார்கள் ஆறுமுகனாருக்குத் தவிட்டைக் கொடுத்துப் பிள்ளையை பெற்றுச் செல்லும் சடங்கு இங்கு பிரபலமானது.

முருகனுக்கு சுருட்டுப் படையல்

தொகு

எந்த ஒரு முருகன் கோயிலிலும் அல்லாத ஒரு விசித்திர வழக்கம், சுருட்டை நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் ஒன்று இக்கோயிலில் உண்டு. இதற்குப் பின்னால் ஒரு கதையும் உண்டு. சூறாவளிக் காற்றிலும், வெள்ளத்திலும் துன்புற்று வீடு செல்ல இயலாது கருப்பமுத்து என்னும் அடியவர் நிற்கையில், அருகையில் மற்றொருவர் குளிரில் நடுங்கி நிற்பதைக் கண்டு, குளிருக்கு இதமாக இருக்கட்டும் என்று சுருட்டு ஒன்றைக் கொடுத்தாராம். பின்னர் இருவருமாக ஆற்றைக் கடந்து செல்கையில் அவர் காணாமற் போய்விட்டது கண்டு வியப்புற்ற கருப்பமுத்து, கோயிலை அடைந்ததும் அங்கு முருகனாருக்கு முன்னர் சுருட்டு இருப்பதைக் கண்டு, தம்மிடம் சுருட்டு பெற்றவர் எம்பிரானே என உணர்ந்தார் எனவும், அன்று முதல் சுருட்டு படைக்கும் பழக்கம் உருவானதாகவும் கூறுவர். ஒரு முறை, இதற்கு புதுக்கோட்டையை மன்னர் தடையிடவும், பெம்மான் அவர் கனவில் தோன்றி சுருட்டு நிவேதனம் பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்கும் குறியீடுதான் எனவும், புகைப் பழக்கத்தை ஊக்குவிப்பது அல்ல எனவும் கூறியதாகவும், மன்னர் தமது தடையை நீக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.

திருத்தலப் பாடல்கள்

தொகு

திருப்புகழ் தொகுப்பினில், 58ஆம் எண் கொண்ட பாடலும், 69 முதல் 83ஆம் எண்வரை கொண்ட பாடல்களும், விராலிமலையில் வீற்றிருக்கும் பெம்மானைக் குறித்து அருணகிரியார் பாடிய பாடல்கள். அவற்றில் ஒரு பாடலின் ஒரு பகுதி கீழே:

மாயா சொரூப முழுச்ச மத்திகள்
ஓயா வுபாய மனப்ப சப்பிகள்
வாணா ளையீரும் விழிக்க டைச்சிகள் முநிவோரும்
மாலா கிவாட நகைத்து ருக்கிகள்
ஏகா சமீது தனத்தி றப்பிகள்
வாரீ ரிரீரென் முழுப்பு ரட்டிகள் வெகுமோகம்
ஆயா தவாசை யெழுப்பு மெத்திகள்
ஈயா தபோதி லறப்பி ணக்கிகள்
ஆவே சநீருண் மதப்பொ றிச்சிகள் பழிபாவம்
ஆமா றெணாத திருட்டு மட்டைகள்
கோமா ளமான குறிக்க ழுத்திகள்
ஆசா ரவீன விலைத்த னத்திய ருறவாமோ

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு