வீரப்பூர் எனும் ஊர் திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் திருச்சிராப்பள்ளியிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்புகள்

இவ்வூர் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னர்சங்கர் ஆகியோர் வாழ்க்கை நிகழ்வுகளுடன் தொடர்புடையது.

ஆலயங்கள்

அண்ணன்மார் சுவாமிகள்

அண்ணன்மார் சுவாமிகளின் ஆலயங்களில் மிக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது வீரப்பூர் திருத்தலம். இங்கு நடக்கும் திருவிழாவை ஒட்டியே அண்ணன்மார்களின் மற்றைய திருத்தலங்களில் விழாக் கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் மாசி மாதம் சதய நட்சத்திரத்தில் கொடி ஏற்றி வைக்கப்படும். திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொங்கு நாட்டிலும், அதனோடு இணைந்த திருச்சி போன்ற மாவட்டங்களிலும் அண்ணன்மாரைத் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றனர். இவ்வழிபாட்டுக்கு ஆக்கமும், ஊக்கமும் தருவது பொன்னர்-சங்கர் உடன்பிறப்புகளின் வரலாறும், அவ்வரலாற்றோடு இணைந்த மக்களின் மரபுவழித் தொடர்பும் தான் காரணமாக அமைகிறது.[சான்று தேவை]

அண்ணன்மார் தொடர்புடைய முக்கிய கோவில்கள்

  1. மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில்
  2. வளநாடு
  3. நெல்லிப்பட்டி நெல்லியம்மன்
  4. வெள்ளாய்குளத்தூர்
  5. படுகளம்
  6. கூவன்னாம்பள்ளம்
  7. வெண்முடி
  8. வீரப்பூர்
  9. அணியாப்பூர்
  10. ஸ்ரீ பொன்னர் சங்கர் நல்லதங்காள் திருக்கோவில், நத்தம் தாலுக்கா, திண்டுக்கல் மாவட்டம்.

போன்ற ஊர்களில் அண்ணன்மார் தொடர்ப்புடைய முக்கிய கோவில்கள் உள்ளன.

பொன்னர் - சங்கர் கோவில்

வீரபப்பூரிலுள்ள பொன்னர் - சங்கர் கோவிலில் செம்புகுல ஆசாரி தலையில் காலை வைத்து இருக்கும் நிலையில் பொன்னருக்கும், யானைச் சங்கிலியால் கட்டப்பட்டுள்ள நிலையில் சங்கருக்கும், அருமைத் தங்கை அருக்காணிக்கும், அத்தைப் பிள்ளைகளான அத்தான் பெருமாள், செய்யப் பெருமாள், அய்யன் பெருமாளுக்கும், கன்னிமார் மற்றும் பெரியகாண்டியம்மனுக்கும் அழகிய தெய்வச் சிலைகள் உள்ளன.

கருப்பண்ணசாமி கோவில் திருவிழா

பொன்னர்-சங்கர் சிலைக்குப் பின்னால் கருப்பண்ணசாமி கோவில் உள்ளது.ஆடி மாதம் அமாவாசையின் போது கருப்பண்ணசாமி கோவிலில் உள்ளூர் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவினை வீரப்பூரைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு கோழி, கிடா மற்றும் பன்றியும் காவு கொடுக்கின்றனர். பன்றியைக் கருப்பண்ணசாமிக்கும், கோழி மற்றும் கிடாவினை மகாமுனிக்கும் பலியிடுகின்றனர்.

பெரியக்காண்டியம்மன் கோவில்

வீரப்பூரில் பெரியக்காண்டி அம்மனுக்கென்று தனிக்கோவில் உள்ளது. இக்கோவிலில் வன்னி மரமும், வில்வமரமும் உள்ளன. இங்கு திருமணங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அம்மனே கன்னி என்பதால் திருமணம் நடத்தும் பொருட்டு கோவிலின் பின்புறம் ஒரு வேல் வைத்து அதை முருகன் கோவிலாகப் பாவித்து வணங்கி வருகின்றனர்.

வேடபுரித் திருவிழா

வீரமலைத் திருவிழாவின்போது இரவு முழுவதும் கூத்துக்கள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகளுடன் வேடபுரித் திருவிழா நடைபெறகின்றன.

சான்றுகள்

1. கி.பழனிச்சாமி மற்றும் திருமதி.சாந்தி பழனிச்சாமி, அருள்மிகு பொன்னர் - சங்கர் அண்ணன்மார் வரலாறு, டாக்டர்.வி.என்.லெட்சுமிநாராயணன் நினைவு அறக்கட்டளை, திருச்சி மாவட்டம், பதிப்பு - 2010.

வெளி இணைப்புகள்

  1. வீரப்பூர் தேர்திருவிழா
  2. வீரப்பூர் பெரிய காண்டியம்மன் கோயில்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தி இந்து செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்பூர்&oldid=3877531" இலிருந்து மீள்விக்கப்பட்டது