வெதரம்பட்டி புதிர்நிலை
வெதரம்பட்டி புதிர்நிலை என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வெதரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புதிர்நிலை ஆகும். இது 1,600 சதுர அடி பரப்பளவில், உலகத்திலேயே பரப்பளவில் மிகவும் பெரிய புதிர்நிலையாக உள்ளது. [1] [2] இந்தியாவிலேயே அளவில் பெரியது என்று கருதப்படும் வெதரம்பட்டி புதிர்நிலையை, 2014-ஆம் ஆண்டில், தொல்லியலாளரான சுகவன முருகன் கண்டறிந்தார். [1][2][3] ஏழு சுற்றுகள் கொண்ட இந்தப் புதிர்நிலையை இந்தக் கிராமத்து மக்கள் அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள். ஏழுசுற்று பிள்ளையார் கோவில் என்று பெயரிட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள். ஆண்டுதோறும் தை மாதம் தைப்பொங்கல் பண்டிகைக்கு அடுத்தநாள், வெதரம்பட்டி கிராம மக்கள் இந்தப் புதிர்நிலையில் ஒன்றுகூடி பொங்கல் வைத்து, இங்கு அமைந்துள்ள கற்சிலைகளுக்கு படையலிட்டு வழிபாடு நடத்துகிறார்கள். [2][1]
சொற்பிறப்பியல்
தொகுLabyrinth என்ற சொல்லுக்கு சிக்கலான வழி அல்லது சிக்குப்பின்னல், இடர்ப்பின்னல் என்று விக்சனரி சொற்பொருள் கொள்கிறது. [4] Maze என்ற சொல்லுக்கு மிகு சிக்கல் வழி; புதிர்பாதை என்று விக்சனரி பொருள் தருகிறது. [5] இத்தகைய கட்டமைப்புகளை தமிழில் "புதிர்நிலை" என்று அழைக்கிறார்கள்.
ஓரொழுங்குப் பாதை மற்றும் பல்லொழுங்குப் பாதை
தொகுLabyrinth மற்றும் Maze ஆகிய இரண்டு சொற்களுக்கும் என்ன வேறுபாடு? Labyrinth-இல் அதன் மையத்திற்கு இட்டுச் செல்ல ஒரே தொடர்ச்சியான பாதை காணப்படும். ஒரே நுழைவு வழி மட்டும் கொண்டது. உள்ளே நுழைந்து தெளிவாக பாதையைக் கடைப்பிடித்து முன்னேறிச் சென்றால் மையத்தை அடைய முடியும். மையத்திலிருந்து இதே வழியாகத்தான் நுழை வாயிலுக்குத் திரும்ப இயலும். [3] [6]இதனை ஓரொழுங்குப் பாதை என்று குறிப்பிடலாம். Maze-இல் பல நுழைவு வழிகள் உள்ளன. பல பாதைகள் உள்ளன. மையத்திற்குச் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் பல்வழிப்பாதைகள் உள்ளன. இதனை பல்லொழுங்குப் பாதை என்று குறிப்பிடலாம். [6]
புதிர்நிலை வடிவங்கள்
தொகுபல்வேறு வடிவங்களுடன் புதிர்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. வட்ட வடிவப் புதிர்நிலைகள், சுருள் வடிவப் புதிர்நிலைகள், நீள்வட்டப் புதிர்நிலைகள், சதுர வடிவப் புதிர்நிலைகள், செவ்வக வடிவப் புதிர்நிலைகள், முக்கோண வடிவப் புதிர்நிலைகள் ஆகிய புதிர்நிலைகள் காணக்கிடைக்கின்றன. வட்டப் புதிர்நிலைகள் சுமார் 5000 ஆண்டுகள் தொன்மை மிக்கவை என்று கருதப்படுகிறது.[7]
வெதரம்பட்டி புதிர்நிலையின் சிறப்பு
தொகுவெதரம்பட்டி புதிர்நிலை எழுசுற்றுக்கள் கொண்ட சதுர வடிவப் புதிர்நிலையாகும். இதனை ஏழு சுற்றுக் கோட்டை என்று உள்ளூர் மக்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். ‘மன்னனால் சிறைபிடிக்கப்பட்ட கணவனை உயிருடன் மீட்ட மனைவியின் கதை’ என்று உள்ளூர் மக்கள் ஒரு தொன்மக் கதையையும் இந்தப் புதிர்நிலையுடன் தொடர்புபடுத்துகிறார்கள். [7] இது கிரேக்கத்தில் பைலோஸ் என்னுமிடத்தில் கண்டறியப்பட்ட சுடுமண் தட்டில் (Pylo Greek Tablet) பொறிக்கப்பட்ட தொன்மையான புதிர்நிலையைப் போன்ற பாங்கு (Pattern) உடையது. [8] இந்த Labyrinth வகை ஓரொழுங்குப் புதிர்நிலை பாதைகளின் வடிவமைப்பு தனித்துவமானது. இதன் உள்ளே நுழைவதற்கான வாயில் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டுள்ளது. பல தொன்மையான மரபுகளில் (several ancient cultures) புதிர்நிலை கருவுறுதல் தொடர்புடைய குறியீடாகத் (Fertility symbol) திகழ்ந்துள்ளது. இங்கு மேற்கொள்ளும் முயற்சிகளை ஒரு ஆழ்நிலை தியானத்துடன் ஒப்பிடுகிறார்கள். மனதில் ஒரு வேண்டுதலுடன் இதில் நுழைந்து, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து நடந்து சென்று மையத்தை அடைந்துவிட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது புதிய கற்காலம் முதற்கொண்டு மக்களிடையே நிலவிவரும் நம்பிக்கை ஆகும். [3][6] குழந்தைப்பேறு வேண்டியோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, இங்கு மக்கள் மையத்தை நோக்கி நடப்பதுண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 நாகரிகத்தை மறக்காத தர்மபுரி மக்கள்- புதிர்நிலைக்கு பூஜையிட்டு வழிபாடு kalyani pandiyan Puthiyathalaimurai 22,January 2021
- ↑ 2.0 2.1 2.2 கற்கால வழிபாட்டை மறவாமல் புதிர்நிலைக்கு பூஜை ETV Bharat January 24, 2021
- ↑ 3.0 3.1 3.2 Second largest maze of ancient stones found M T Saju The Times of India Aug 4, 2015
- ↑ Labyrinth Wiktionary
- ↑ Maze Wiktionary
- ↑ 6.0 6.1 6.2 2,500-year-old rare circular labyrinth found near Hosur M T Saju The Times of India Apr 10, 2018
- ↑ 7.0 7.1 பொற்கால புதிர் நிலை கண்டுபிடிப்பு கிருஷ்ணகிரி ஆய்வாளர்கள் பெருமிதம் தினமலர் அக்டோபர் 08, 2014
- ↑ தர்மபுரி அருகே உலக அளவில் பெரிய புதிர்நிலை: பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் வேண்டுகோள் தினமலர் செப்டம்பர் 30, 2017
வெளி இணைப்புகள்
தொகு- 3000 வருடமா?|உலகிலேயே மிகப்பெரிய புதிர்நிலையா?|largest labyrinth connected mahabharatham|Dharmapuri Tamilar thadam October 4, 2021 YouTube