வெ. சுந்தரராஜ்

தமிழக எழுத்தாளர்

வெ. சுந்தரராஜ் (பிறப்பு: 1943) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். வெள்ளையா மற்றும் தேவகனிக்கு தலைமகனாய்த் தூத்துக்குடி மாவட்டம் கடையனோடை என்ற சிற்றூரில் பிறந்த இவர் சென்னையில் வசித்து வருகிறார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல்வாழ் உயிரியல் பட்ட மேற்படிப்பு பயின்று முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் பேராசிரியராக, ஆராய்ச்சி இயக்குநராக, கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுநராகப் பணியைத் தொடங்கியவர், பல்வேறு கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

மீன், இறால் வளர்ப்புகளில் ஆராய்ச்சிச் சொற்பொழிவாற்றியதுடன் 250 அறிவியல் விரிவாக்கக் கட்டுரைகளையும், 120 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், 35 அறிவியல் நூல்களையும் எழுதியுள்ளார். இவர் முனைவர் சாமுவேல் பால்ராஜ் என்பவருடன் சேர்ந்து எழுதிய “ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. இவரது அலங்கார மீன் வளர்ப்பு, முத்துச்சிப்பி ஆகிய நூல்கள் தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளன. இவரது மீன் வளர்ப்பியல், நன்னீர் இறால் வளர்ப்பு ஆகிய நூல்கள் தமிழக அரசின் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விருதினைப் பெற்றுள்ளன.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._சுந்தரராஜ்&oldid=3277317" இலிருந்து மீள்விக்கப்பட்டது