வைதேஹி ஹெர்பர்ட்

வைதேஹி ஹெர்பர்ட் (ஆங்கிலம்: Vaidehi Herbert) தமிழ் நாட்டின் தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்தவர். இவர் 18 சங்க இலக்கிய தொகை நூல்களை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டதற்காகப் புகழ் பெற்றவர்.[சான்று தேவை][எவ்வாறு?]

வாழ்க்கை

தொகு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் நலவாழ்வு நிர்வாகத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றவர். [1] அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவின் ஹவாயில் வசித்துவருகிறார்.

மொழிபெயர்ப்புப் பணி

தொகு

கல்லூரியில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றவர் இவர். இவர் சங்க இலக்கிய நூல்களை ஐயம் திரிபற கற்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். சென்னை இராணி மேரி கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியை முனைவர் ருக்மணி ராமச்சந்திரனை அணுகி முல்லைப்பாட்டு என்ற தொகை நூலை இவர் கற்றுக்கொண்டார். 18 சங்கத் தமிழ் தொகை நூல்களை மொழி பெயர்க்கும் மகத்தான பணியை அவர் தனியாகவே மேற்கொண்டுள்ளார்.

இவர் பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை ஆகிய 18 சங்க இலக்கிய நூல்கள், ஏழு பதினெண்கீழ்கணக்கு நூல்கள், முத்தொள்ளாயிரம் மற்றும் பாண்டிக்கோவை ஆகிய தமிழ் இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தாகூரின் கீதாஞ்சலியையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவருடைய முல்லைப்பாட்டு மற்றும் நெடுநெல்வாடை ஆகிய இரு நூல்களின் மொழிபெயர்ப்புகளை அமெரிக்க வாழ் தமிழறிஞர் மற்றும் பேராசிரியர் ஜார்ஜ் எல். ஹார்ட்டும் (ஆங்கிலம்: George Luzerne Hart, III), பதிற்றுப்பத்து நூலை, ஜப்பானிய இந்தியவியலாளரும், ஜப்பானின் ஒசாகாவில் உள்ள சர்வதேச புத்த பல்கலைக்கழகத்தின் இந்திய இலக்கியத்தின் இணைப் பேராசிரியருமான முனைவர் டாக்கநோபு டாக்காஹாஷியும் (Dr. Takanobu Takahashi) மேற்பார்வை செய்து சான்று வழங்கியுள்ளார்கள்.[2]

சங்கத் தமிழ் தொகை நூல்களில் இடம்பெறும் சொற்றொடர் அகராதியையும் (ஆங்கிலம்: Concordance) தொகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தனது சங்க இலக்கிய தமிழ் - ஆங்கில மொழிபெயர்ப்புகளுக்காக 20 வலைத்தளங்களையும் (learnsangamtamil.com) உருவாக்கியுள்ளார். மாணவர்களின் நிகழ்நிலை கற்றல் நடவடிக்கைகளுக்காகவும் தொலைதூர கல்வியினை ஊக்குவிக்கவும் இந்த வலைத்தளங்கள் மிகவும் உதவுகின்றன. தமிழ் ஆர்வலர்களுக்காக பல சங்க இலக்கிய பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டில் கரோலினாவின் தமிழ்ச் சங்கம், கிரேட்டர் வாஷிங்டனின் தமிழ்ச் சங்கம், டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம், அவ்வை தமிழ் மையம் மற்றும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை. மிச்சிகன் தமிழ்ச் சங்கம், தமிழ் இலக்கியத் தோட்டம் மற்றும் டோரான்டோ தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் இவர் பல பயிற்சி பட்டறைகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு புறநானூறு செய்யுள்களை கற்பிக்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளார். தொலைபேசி வாயிலாகவும் சிலர் இவரிடம் தொடர்புகொண்டு சங்க இலக்கியம் கற்பதுண்டாம். பள்ளிக்குழந்தைகள் மற்றும் ஏழை பெண்களின் மேம்பாட்டிற்காக 2003 முதல் 2013 வரை கோலம் அறக்கட்டளை என்னும் இலாப நோக்கமற்ற அமைப்பைத் தொடங்கி அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.

மொழிபெயர்ப்பில் சந்தித்த சவால்கள்

தொகு

இவர் தன்னை ஒரு புலவர் என்றோ மொழி அறிஞர் என்றோ கூறிக்கொள்ள விரும்பாமல், ஒரு தமிழார்வலர் என்று அழைத்துக்கொள்ளவே விரும்புகிறார். மொழிபெயர்ப்பதற்காக அரசோ அல்லது தனியார் நிறுவனங்களோ எந்த நிதி உதவியையும் இவருக்கு வழங்கவில்லை என்று பி.பி.சி. தமிழோசைக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியநூல்களில் இடம்பெற்றுள்ள பல சொற்கள் மற்றும் சொல்லடைவுகள் இன்று புழக்கத்தில் இல்லை. எனவே இந்தச் சொற்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் கடினமும் சிக்கலும் மிகுந்திருந்ததாகவும் குறிப்பிட்டுளார். [3]

ஆர்வர்டு தமிழ் இருக்கை

தொகு

ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை அமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில், வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஆங்கிலம்: Federation of Tamil Sangams of North America (FETNA) மிசௌரியின் செயின்ட் லூயிஸில் நடத்திய விழாவில் இவர் விருது பெற்றார். இந்த விழாவில் இதய நோய் நிபுணர் விஜய் ஜானகிராமன் இவருடன் நடத்திய உரையாடலில் ஆர்வர்டு தமிழ் இருக்கை பற்றிய யோசனை வேரூன்றியது. இவரது வேண்டுகோளுக்கு இணங்க, இதய நோய் நிபுணர் விஜய் ஜானகிராமன், மற்றும் புற்றுநோயியல் நிபுணர் சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோர் ஆர்வர்டில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்தனராம்.

விருதுகள்

தொகு

இவருடைய மொழிபெயர்ப்பு பணியை பாராட்டி:

1. தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா 2012 ஆம் ஆண்டுக்கான விருதினை வழங்கியுள்ளது. 2. நல்லி குப்புசாமியின் புரவலில் திசைஎட்டும் இதழ், 2012 ஆம் ஆண்டுக்கான நல்லி - திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதினை அளித்துள்ளது. 3. 2013 ஆம் ஆண்டு மேரிலாந்தின் சில்வர் ஸ்பிரிங்கில் நடந்த புறநானூறு மாநாட்டில் இவர் கௌரவிக்கப்பட்டார். 4. 2014 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவின் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு (ஆங்கிலம்: Federation of Tamil Sangams of North America (FETNA) நடத்திய விழாவில் விருது வழங்கினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "South South Asia Research and Information Institute (SARII) 2015 FeTNA/SARII Event Abstracts and Bios in Tamil Music and Musicians 9 AM – 12 Noon, July 4, 2015, Room San Carlos - கூடல், San Jose Hilton Session Moderator: Mrs. Vaidehi Herbert, M.A." South Asia Research and Information Institute (SARII). பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.
  2. "தமிழ் மொழிபெயர்ப்புகளின் ராணி வைதேகி ஹெர்பர்ட்!". Dravidan. பார்க்கப்பட்ட நாள் 5 April 2022.
  3. "சங்கத் தமிழை மொழிபெயர்ப்பதில் பல சவால்கள் - பிபிசி தமிழோசை நேர்காணல்". பிபிசி தமிழோசை நேர்காணல் ஒலி. பிபிசி செய்தி. ஜூன் 16 , 2013. https://www.bbc.com/tamil/multimedia/2013/06/130616_vaidehiaudio. பார்த்த நாள்: 5 April 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வைதேஹி_ஹெர்பர்ட்&oldid=3412322" இலிருந்து மீள்விக்கப்பட்டது