வைத்தியநாதர் கோயில், தேவ்கர்
வைத்தியநாதர் கோயில், தேவ்கர் அல்லது வைத்தியநாத் கோவில் (Baidyanath Temple) என்பது இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்குட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம்.
இராவணன் தனது பத்து தலையையும் சிவனுக்காக ஒன்றன் பின் ஒன்றாக வெட்ட முன்வந்தான். அவனுடைய பக்தியைக் கண்ட சிவபெருமான் இராவணன் காயம்பட்ட போது வைத்தியராக வந்து காப்பாற்றினார். அவர் மருத்துவராக தோன்றியதால் அவர் இந்த கோவிலில் வைத்யா என்றும் அழைக்கப்படுகிறார். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு.[1]
இந்த ஜோதி லிங்கத்தைச் சுற்றி 21 கோயில்கள் உள்ளன. இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப் பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.
அமைவிடம்
தொகுவைத்தியநாத ஜோதிர்லிங்கத்தின் அமைவிடம் குறித்து வைத்தியநாதம் சித்தபூமௌ (1/21-24)[2] என்ற நூலும் சிவமகாபுராண சதருத்ரா சங்கிதை (42/1-4)[3] எனும் நூலும் செய்யுட்களைக் கொண்டுள்ளன. அவற்றின் படி வைத்தியநாதம் 'சித்தபூமி' எனும் இடத்தில் அமைந்துள்ளது. சித்தபூமி என்பது தேவ்கர் நகரின் பழைய பெயர் ஆகும். ஆதி சங்கராச்சாரியாரின் பன்னிரு ஜோதிர்லிங்கத் துதியில் அவர் வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தைப் பின்வரும் பாடலினால் போற்றிப் பாடியுள்ளார்.[4][5]
பூர்வோத்தரே பிரஜ்வாலிகா நிதனே
சதா வசந்தம் கிரிஜா சமேதம்
சுராசுராராதித பாதபத்மம்
ஸ்ரீ வைத்யநாதம் தமகம் நமாமி
எனினும், துவாதசலிங்க ஸ்மரணம் எனும் நூலில் உள்ள பின்வரும் செய்யுள் 'பராலியம் வைத்தியநாதம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பரளி நகரிலுள்ள வைத்தியநாதர் கோவிலே பன்னிரு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று என்றும் கருதப்படுகிறது.[6][7][8]
சௌராஷ்ட்ரே சோமநாதஞ்சே ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்|
உஜ்ஜயின்யா மகாகாளம் ஓங்காரமமலேஸ்வரம் ||
பரல்யாம் வைத்யநாதஞ்ச தாகின்யாம் பீம சங்கரம்|
சேது பந்தேது ராமேசம், நாகேசம் தாருகாவனே ||
இமாலயேது கேதாரம், கிருஷ்ணேசஞ்ச சிவாலயே ||
ஏதானி ஜோதிர்லிங்கானி, சாயம் ப்ராதா பரேன்னரகா ||
சப்த ஜன்ம க்ருதம் பாபம், ஸ்மரணேன விநாஸ்யதி ||
ஆகவே வைத்தியநாத ஜோதிர்லிங்கம் உள்ள இடமானது சர்ச்சைக்குரியதாக ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் உரிமை கோரப்படுவதாக உள்ளது. அந்த இடங்கள் ஆவன:
- வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்கண்ட்
- வைத்தியநாதர் கோயில், பரளி, மகாராட்டிரம்[9]
- பைஜ்நாத் கோவில், பைஜ்நாத், இமாச்சலப் பிரதேசம்
பவிஷ்ய புராணம் வைத்தியநாத ஜோதிர்லிங்கத்தைப் பின்வருமாறு விபரிக்கிறது: "நாரிகண்டே என்பது காட்டுப்பகுதியில் உள்ள ஒரு நகரம். இது துவாரிகாசுவேரி நதிக்கு மேற்காக உள்ளது. இதன் மேற்குப் பகுதியில் பஞ்சகுட்டா மலையும் வடக்கில் கிக்டாவும் உள்ளன. இந்தக் காடு முதன்மையாக சக்கோட்டா, அருச்சுனா மற்றும் சால் ஆகிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகும். இந்நகரம் வைத்தியநாதருடைய திருவுருவத்தால் புகழ்பெற்றது. வைத்தியநாதர் இக்காலத்தின் அனைத்து நன்மைகளுக்கும் காரணமானவர் என எல்லா வகை மக்களாலும் வணங்கப்படுகிறார்."
ஜோதிர்லிங்கம்
தொகுசிவமகாபுராணத்தின்படி முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும் திருமாலுக்குமிடையில் நானே பெரியவன் என்ற சண்டை மூண்டது.[10] அப்போது சிவபெருமான் ஒரு தொடக்கமும் முடிவுமில்லாத ஒளிப்பிழம்பாகத் தோன்றினார். பிரமா அதன் முடியைத் தேடியும் திருமால் அடியைத் தேடியும் சென்றனர். முடியைக்கண்டதாகப் பிரமா பொய்யுடைத்ததால் அவருக்குத் தனி வழிபாடுகள் இல்லை என்று சிவபெருமான் தண்டித்தார். திருமால் தனது தோல்வியை ஒப்புக்கொண்டதால் அவர் உலகம் உள்ளளவும் வணங்கப்படுவார் என்றும் அருளினார். ஜோதிர்லிங்கமானது சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றிய வடிவமேயாகும்.[11][12]
64 ஜோதிர்லிங்கத் தலங்கள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவற்றுள் 12 தலங்கள் மிகவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன.[10] பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களும் சிவபெருமானின் வெவ்வேறு திருவடிவங்களாக அங்குள்ள முதன்மைத் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகின்றன.[13]
கோவில் விபரம்
தொகுஇங்குள்ள பிரதான கோவிலான சிவன் கோவிலும் தேவி பார்வதி கோவிலும் சிவப்புக் கயிறுகள் கொண்டு இணைத்துக் கட்டப்பட்டுள்ளன.
வைத்தியநாதர் கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள யசிதி தொடருந்து நிலையம் கோவிலுக்கு அண்மையிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது கவுராவிலிருந்து பட்னா செல்லும் வழியில் 311 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
சாதாரண நாட்களில் காலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். 4 மணிமுதல் 5.30 வரையான நேரத்தில் கோவில் பிரதம அர்ச்சகர் இறைவனுக்கு பதினாறு வகை உபசாரங்ககளையும் செய்வார். அதன் பின் புனித நீரால் அபிடேகம் செய்வர். பின்னர் அடியவர்களும் புனித நீரால் அபிடேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்குவர். இந்தப் பூசைகள் பிற்பகல் 3.30 வரை நடைபெறும். பின்னர் நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் சிருங்கார பூசை நடைபெறும். சாதாரண நாட்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். எனினும் ஆவணி மாதத்தில் கோவில் அதிகநேரம் திறக்கப்படும்.
ஆவணி மேளா
தொகுஆவணி மாதத்தில் நடைபெறும் 'சிராவண மேளா' என்ற திருவிழாவில் பெருமளவு அடியவர்கள் கலந்துகொள்வர். இந்தத் திருவிழாவில் சுமார் 8 மில்லியன் முதல் 10 மில்லியன் வரையான அடியார்கள் பங்கேற்கின்றனர். பல அடியவர்கள் தேவ்கரிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகரமான பீகார் மாநிலத்திலுள்ள சுல்தான்கஞ்ச்சிலிருந்து[14] கங்கை நதியின் நீரைக் கொண்டுவந்து இங்குள்ள சிவலிங்கத்திற்கு அபிடேகம் செய்வர். அவர்கள் இரு செம்புகளில் நீரைக்கட்டிக் காவடியாக வெறுங்காலுடன் நடந்துவந்து வழிபடுவர். வைத்தியநாதரை வழிபட்ட பின்னர் அடியார்கள் தும்கா மாவட்டத்திலுள்ள பசுகிநாதர் கோவிலுக்குச் சென்று தரிசிப்பர்.[15][16]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-11-30. பார்க்கப்பட்ட நாள் 2014-11-28.
- ↑ http://imgur.com/DPV9XwK
- ↑ http://imgur.com/FW7VC6M
- ↑ "Dwadash Jyotirlinga Stotram". Archived from the original on March 5, 2012.
- ↑ http://www.shaivam.org/sanskrit/ssdvada2.pdf
- ↑ http://www.shaivam.org/sanskrit/ssk-dvadasha-jyotirlinga-smaranam.pdf
- ↑ http://www.shreehindutemple.net/hinduism/12-jyotirlingas-of-lord-shiv/
- ↑ http://www.shaivam.org/sanskrit/ssdvada1.pdf
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-10-27.
- ↑ 10.0 10.1 R. 2003, pp. 92-95
- ↑ Eck 1999, p. 107
- ↑ See: Gwynne 2008, Section on Char Dham
- ↑ Lochtefeld 2002, pp. 324-325
- ↑ http://www.distance.co.in/bihar/distance-from-sultanganj-to-deoghar-jharkhand/by-road/
- ↑ Chaudhary, Pranavkumar (2004-05-30). "Administration gears up for Shravani Fair". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811055452/http://articles.timesofindia.indiatimes.com/2004-05-30/patna/28348050_1_shrawani-bhagalpur-high-level-meeting. பார்த்த நாள்: 2010-04-06.
- ↑ "Month-long Shrawani Mela ends". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2009-08-06 இம் மூலத்தில் இருந்து 2011-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110811055512/http://articles.timesofindia.indiatimes.com/2009-08-06/ranchi/28156469_1_kumbh-mela-lakh-pilgrims-shrawani-mela. பார்த்த நாள்: 2010-04-06.