ஸ்ரீபுராணம்

ஸ்ரீபுராணம் 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைன மத நூல். இந்நூல் ஜினசேனாசாரியார் எழுதிய மகாபுராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகும். குணபத்திராசாரியார் என்பவர் இதனைத் தமிழ் மொழியில் மணிப்பிரவாள நடையில் எழுதியுள்ளார். இவர் விழுப்புரம் மாவடத்திலுள்ள பெருமண்டூர் சிற்றூரைச் சேர்ந்தவர் என்றும் , சரவணபெலகுளா சென்று அங்கிருந்த பேராசிரியர் ஒருவரிடம் கல்வி பயின்று இந்த நூலைச் செய்தார் எனவும் கூறுகின்றனர்.

வட மொழி மூலத்தில் உள்ள வருணனைகள் விலக்கப்பட்டுச் செய்திகள் மட்டுமே இந்த நூலில் கூறப்படுகின்றன. இந்த நூல் பூர்வ-பாகம், உத்தர-பாகம் என இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. சைன முனிவர்கள் இயற்றிய ஏலாதி, அறநெறிச்சாரம் போன்ற பண்டைய நூல்களுக்கு நுண்பொருள் காண இந்த நூல் உதவுகிறது. சைன சமயக் கற்பகம் போல இந்த நூல் திகழ்கிறது.

நூல் உள்ளடக்கம் தொகு

சைனத்தைப் போதித்தவர்களாக கருதப்படுபவர்கள் 24 தீர்த்தங்கரர் ஆவார்கள். அவர்கள் விருஷபநாதர், அஜிதநாதர், சம்பவநாதர், அபிநந்தர், சுமதிநாதர், பத்மபிரபர், சுபார்சுவர், சந்திரப்பிரபர், புஷ்பதந்தர், சீதளர், சிரேயாம்சர், வாசுபூஜ்யர், விமலர், அனந்தநாதர், தர்மநாதர், சாந்திநாதர், குந்துநாதர், அரநாதர், மல்லிநாதர், முனீசுவிரதர், நமிநாதர், நேமிநாதர், பார்சுவநாதர், வர்த்தமான மகாவீரர். இவர்களுடன் 12 சக்கரவர்த்திகள் உட்பட உயர்ந்த 63 மாமனிதர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை இந்நூல் விவரிக்கிறது. சைனத் தத்துவங்கள,கொள்கைகள், வழிபாட்டு முறைகள், ஒழுக்க முறைகள், அறநெறிகள் ஆகியவற்றை ஸ்ரீபுராணம் கொண்டுள்ளது. அனைத்து தீர்த்தரங்கரர்களும் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள். பின் துறவு ஏற்றவர்கள். தீர்த்தரங்கர்களின் முற்பிறவிகள் முதல் அவர்களின் முக்திவரை நிகழ்ந்தவற்றை விவரிக்கிறது. மேலும் இராமாயணம், மகாபாரதம், பாகவதம், முதலிய புராணக்கதைகளும் பரசுராமர், மகாபலி, சிபிச்சக்கரவர்த்தி போன்றோரின் வரலாற்றுச் செய்திகளும் பல கிளைக்கதைகளாக இதிலுள்ளன. சீவகசிந்தாமணி, மேருமந்திரபுராணம், சூளாமணி ஆகிய நூல்களில் உள்ள செய்திகளும் உள்ளன.

பதிப்பு வரலாறு தொகு

இதன் சிறப்பை உணர்ந்த திரு.வெங்கடராஜுலு ரெட்டியார் என்பவர் முயற்சி எடுக்க, 1943-இல் சென்னைப் பல்கலைக்கழகம் மூலம் மேல்சித்தாமூர் சைன மடத்தில் ஸ்ரீபுராணம் வெளியிடப்பட்டது. இரண்டாம் பதிப்பு 1946-இல் வெளியானது. பிறகு இந்நூலை நல்ல தமிழ் நடையில் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் 1977-இல் எழுதி வர்த்தமானன் பதிப்பகம் மூலம் வெளியிட்டார்.[1]

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005

ஆதாரங்கள் தொகு

  1. தி இந்து தமிழ்- ஆனந்த ஜோதி இணைப்பு 30.10.2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீபுராணம்&oldid=3327805" இலிருந்து மீள்விக்கப்பட்டது