ஹாத்திகும்பா கல்வெட்டு

(ஹத்திகும்பா கல்வெட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹாத்திகும்பா கல்வெட்டு அல்லது அத்திக்கும்பா கல்வெட்டு (Hathigumpha inscription, "யானைக்குகை" கல்வெட்டு) என்பது ஒரிசாவில் புவனேசுவரம் அருகே உதயகிரியில், அன்றைய கலிங்கப் பேரரசர் காரவேலன் என்பவரால் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஆகும். தமிழில் இது பெரும்பாலும் அத்திக்கும்பா கல்வெட்டு என வழங்கப்படுகிறது. பண்டைய பிராமி எழுத்துகளில் ஆழமாகப் பொறிக்கப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட அத்திக்கும்பா கல்வெட்டு ஒரிசா மாநிலத்தில் புவனேசுவரம் நகரத்திற்கு மேற்கில் உள்ள உதயகிரி-கண்டகிரி இரட்டைமலைகளில் உதயகிரியின் தென்புறத்தில் உள்ள ஒரு குகையில் குடைந்த சமணக் குடைவரைக் கோவிலில் உள்ளது. இது ஆறு மைல்கள் தள்ளித் தௌலியில் உள்ள அசோக மாமன்னரின் கல்வெட்டுகளுக்கு நேர் எதிரில் உள்ளது.

அத்திக்கும்பா கல்வெட்டு. இந்தியத் தொல்பொருளாராய்ச்சித் தொகுப்பு. கி.பி. 1892ல் வில்லியம் ஹென்றி கோர்னிஷ் எடுத்த படம்.
உதயகிரிக் குன்றில் அத்திக்கும்பா, புவனேசுவரம்
கலிங்கத்துக் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, உதயகிரிக் குன்று
உதயகிரிக் குன்றில் காரவேல மாமன்னரின் அத்திக்கும்பா கல்வெட்டு, "Corpus Inscriptionum Indicarum, Volume I: Inscriptions of Asoka by அலெக்சாண்டர் கன்னிங்காம்", 1827 நூலில் வரைந்த படி

இந்தக் கல்வெட்டு பிராகிருத மொழியில் மிகவும் பழைமையான கலிங்க பிராமி எழுத்துகளில் இருப்பதும் அதன் தொன்மையைக் கி.மு. 150க்கு நெருங்கிய காலம் என்று கணிக்கத் துணைபுரிகிறது.[1]

இந்தக் கல்வெட்டின் காலம் மௌரிய மன்னர்களின் ஆட்சி தொடங்கிய 165 ஆம் ஆண்டு என்றும், காரவேலன் மன்னரின் 13ம் ஆட்சியாண்டு என்றும் கணிப்பதால், சந்திரகுப்த மௌரிய மன்னர் முடி சூட்டிக் கொண்ட ஆண்டாகக் கருதப்படும் கி.மு. 321 ஐக் கணக்கில் எடுத்துக் கொண்டால், காரவேலர் அரியணை ஏறிய காலத்தைக் கி.மு. 170 என்றும், யவன மன்னர் திமெத்ரியசுவுடன் நடந்த போரைக் கி.மு. 162 என்றும் கணிக்க முடிகிறது.[2]

பின்புலம்

தொகு

உதயகிரி - கந்தகிரி குடைவரைக்கோவிலில் உள்ள அத்திக்கும்பா கல்வெட்டுகள் தான் கலிங்க மன்னர் காரவேலன் பற்றிய செய்திகளைத் தருகிறது. வேறு எங்கும் இந்த மன்னரைப் பற்றியும் அவரது வரலாறு பற்றியும் ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. தொன்மைப் பிராமி எழுத்தில் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பதினேழு வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி குடைவரைக்கோவிலின் முகப்பிலும், எஞ்சியது அதன் கற்கூரையிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டைக் கண்டுபிடித்தபோதே பல பகுதிகள் மங்கிச் சிதைந்து போயிருந்ததால் இதைப் படிப்பது கடினமாகி வீணான பல சச்சரவுகளுக்கு வழிவகுத்தது. என்றாலும், இது ஒரு நிறைவான வரலாற்று ஆவணம் என்றும், நிகழ்ச்சிகளை மிகைப்படுத்தாமல் நேரடியாகத் தெளிவாகவும், நடந்ததை நடந்தபடியான காலவரிசையிலும் இதில் சொல்லியிருப்பது போல அதன் சம காலத்தில் இந்தியாவில் வேறு எந்தக் கல்வெட்டிலும் சொல்லியதில்லை என்கிறார் சசிகாந்து[3]. சாணக்கியரின் அர்த்தசாத்திரத்தில் ஒரு பொது அறிவிப்புக்கு இருக்க வேண்டிய அறுவகை இலக்கணங்களான ஒழுங்கு, தொடர்பு, நிறைவு, இனிமை, மாட்சிமை, தெளிவு(அர்த்தக்கிரமம், சம்பந்தம்,பரிபூர்ணம், மதுரம், ஔதார்யம், ஸ்பஷ்டத்வம்) என்ற அனைத்துக்கும் இலக்கணமாகத் திகழ்கிறது இந்தக் கல்வெட்டு என்று போற்றுகிறார் சசிகாந்து.

இந்தக் கல்வெட்டை ஸ்டர்லிங் 1825ல் முதன்முதல் பார்த்துப் பதிவு செய்தார்[4]. பின்னர் கிட்டோ கண்ணால் பார்த்து எழுதியதை ஜேம்ஸ் பிரின்செப் 1837ல் பதிப்பித்தார். பிரின்செப் இந்தக் கல்வெட்டை ஐரா என்ற மன்னனுடையது என்று தவறாக எழுதினார். பின்னர் 1871ல் எச். லாக் என்பவர் எடுத்த இந்தக் கல்வெட்டின் மாக்கட்டுப் படியை (plaster-cast) இன்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர். 1877ல் அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தக் கல்வெட்டின் எழுத்துப்படியை (tracing) Corpus Inscriptionum Indicarum Vol. I என்ற நூலில் பதிப்பித்தார். அதைத் தொடர்ந்து 1880ல் ராஜா ராஜேந்திர லாலா மித்ரா இதன் திருத்திய வடிவத்தைப் பதிப்பித்தார் (Antiquities of Orissa, Vol. II.).

இந்தக் கல்வெட்டை ஆழமாக ஆராய்ந்து பொருத்தமான வடிவத்தை வெளியிட்ட பெருமை வரலாற்றாளர் பகவன்லால் இந்திராஜி என்பவரையே சேரும். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் அரசன் காரவேலர் என்பதை முதன்முதலில் அவர்தான் 1885ல் ஆறாவது பன்னாட்டுக் கீழைநாட்டாய்வாளர்கள் மாநாட்டில் (Sixth International Congress of Orientalists) அறிவித்தார்.[5] மேலும் பல ஆய்வுப்பதிப்புகளுக்குப் பிறகு 1930ல் ஓரளவுக்கு நிறைவான பதிப்பை ஜெயசுவாலும் பானர்ஜியும் வெளியிட்டனர்.[6] இந்தப் பதிப்பின் கருத்துகளை ஏற்றுக் கொள்ளாத பேரா. பருவா தனது ஆய்வை 1938ல் வெளியிட்டார்.[7] இதைத் தொடர்ந்து பேரா. சர்க்கார் தனது ஆய்வைப் பதிப்பித்தார்.[8] பதினேழே வரிகள் கொண்ட இந்தக் கல்வெட்டு இதற்குப் பின்னரும் பல ஆய்வாளர்களை ஈர்த்திருக்கிறது. முந்தைய ஆய்வுகள் பலவற்றின் முடிவுகளைக் கேள்விக்குள்ளாக்கி முற்றிலும் புதிய பார்வையில் தனது ஆய்வுக் கருத்துகளை வெளியிட்டுள்ளார் சசிகாந்து[9].

இந்தக் கல்வெட்டு பெரும்பாலும் காரவேல மாமன்னர் பட்டத்துக்கு வந்ததிலிருந்து அவரது பேரரசைப் பெருக்கிய வெற்றிகளைப் பட்டியலிடுகிறது. அவர் சமகாலத்தில் மேற்கத்திய இந்தியாவில் பெரிதும் வலிமை பெற்றிருந்த சாதவாகன அரசன் சதகர்ணியையும் பொருட்படுத்தாமல் கலிங்கத்தின் எல்லையிலிருந்த அவர்களுடைய நட்பரசர்கள்மீது படையெடுத்ததாகச் சொல்லும் குறிப்பிலிருந்து இந்தக் கல்வெட்டின் வெற்றிப் பட்டியல் தொடங்குகிறது.

”தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணை(கிருஷ்ணவேணி) ஆற்றை அடைந்ததும் மூசிக நகரத்தைக் கலங்கடித்தார்.”[10]

இந்தக் கல்வெட்டு மேலும் காரவேலர், இந்திய-கிரேக்க யவன மன்னரான திமெத்ரியசு மன்னரைப் பாடலிபுரத்திற்கு 70 கிமீ தொலைவில் உள்ள தென்கிழக்கே இருந்த ராசகிரியிலிருந்து பின்வாங்கி மதுரா பகுதிக்கு விரட்டினார் என்கிறது.

”பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு, ராசகிருகத்துக்கும் நெருக்கடி கொடுத்தார். இந்த வீரப்போர் பற்றிக் கேட்டு அதிர்ந்த யவன (கிரேக்க) மன்னன் டிமி(தா) தன் மனம் தளர்ந்த படையைத் தப்ப வைத்துக் கொண்டு மதுரா நகரப்பகுதிக்குப் பின்வாங்கினான்."[10]

குறிப்பிடத் தக்க செய்திகள்

தொகு

காரவேலன் கல்வெட்டில் பல அரசர்கள், நாடுகள், படையெடுப்புகள் போன்றவை குறிப்பிடப்படுவதால் இது கீழ் வரும் முக்கியத்துவங்களைப் பெறுகிறது.

சாதகர்ணி என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்தாலும் காரவேலரின் காலத்தோடு ஒட்டி வருவது சிறி சாதகர்ணி (ஸ்ரீ சாதகர்ணி) அல்லது நாயநீகாவின் கணவரான முதலாம் சாதகர்ணி என்று அறிஞர்கள் கணிக்கிறார்கள்.[11] மற்ற சாதகர்ணிகள் தம் பெயருக்கு முன்னால் தம் தாயாரின் பெயரையும் சேர்த்துக் கொண்டு சிறி சாதகர்ணியிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இந்தக் கணிப்பு காரவேலரின் காலத்தைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குக் கொண்டு செல்கிறது.

அத்திக்கும்பா கல்வெட்டு சமணர்களின் புனிதமான ணமோகர மந்திரம் என்பதன் ஒரு வடிவில் தொடங்குகிறது: णमो अरहंतानं [।।] णमो सवसिधानं [।।] (ணமோ அரிஹாந்தணம் [।।] ணமோ ஸவஸித்தாணம் [।।]) இதுவும், காரவேலர் தம்மை அருகர் வழிபாட்டில் பித்துள்ள இல்லறத்தார் என்று குறிப்பிடுவதும் இவர் சமண சமயத்தைப் பின்பற்றியவர் என்பதற்கு ஒரு நல்ல சான்று.

கல்வெட்டின் வரிவடிவம், சொற்களை வைத்து இதன் மொழி பிராகிருதம் என்றும், மகதியோ அல்லது ஏனைய கீழை மொழிகளோ அல்ல என்றும் அறிஞர்கள் கணிக்கிறார்கள். கிட்டத்தட்ட சமசுகிருதத்தின் செம்மை வடிவத்தை நெருங்கி, பேச்சு மொழியல்லாமல் எழுத்து மொழியில், சமய நூல்களின் பாலி மொழி வடிவத்துக்கு மிகவும் அணுக்கமான மொழியில் குசராத் அல்லது மராத்திய மாநிலங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட ஒரு சமண முனிவரால் இது எழுதப்பட்டிருக்கலாம் என்பது அவர்கள் துணிபு. அதே நேரத்தில் வரி வடிவங்களைப் பார்க்கும்போது மூன்று வெவ்வேறு ஆட்களால் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. இதனால் எழுத்துகளின் வடிவங்களில் சில வேறுபாடுகள் தெரிகின்றன.[11]

அத்திக்கும்பா கல்வெட்டு குறிப்பிடுவன:[12]

  • மாமன்னர் தம் முதலாம் ஆட்சியாண்டிலேயே முப்பத்து ஐந்து நூறாயிரம் பணம் செலவழித்துப் புயலினால் சேதமுற்றிருந்த கலிங்க நகரின் கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், நகரின் கட்டிடங்களைப் பழுது பார்த்தும், ஏரி, தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும் மக்கள் மனதைக் குளிரவைத்தார்.
  • தன் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் புறக்கணித்து, மேற்கு மாநிலங்களுக்கு வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னவேணியாற்றை அடைந்ததும் மூசிகநகரத்தைக் கலங்கடித்தார்.
  • பிறகு, எட்டாம் ஆட்சியாண்டில், அவர் ஒரு பெரும்படை கொண்டு மகதநாட்டில் ராசகிருகத்தைத் தாக்கினார். யவன (கிரேக்க) மன்னன் திமெத்ரியசுவை மதுரா நகரத்துக்குப் பின்வாங்க வைத்தார்.
  • ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைக் கழுதைகளைப் பூட்டிய ஏர்களால் உழுது அழித்தார்
  • பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த தமிர (தமிழ?) நாட்டுக் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முறியடித்தார்.
  • பாண்டிய மன்னனிடம் குதிரைகள், யானைகளோடு மாணிக்கங்களையும், முத்து, மணி, ரத்தினங்களையும் திறையாகப் பெற்றார்.
  • முந்தையக் கலிங்கப் போர்களில் நந்த மன்னர்கள் கொண்டு சென்ற சமண தீர்த்தங்கரர் சிலையை மீட்டார். மகத மன்னர்கள் கலிங்க அரண்மனையிலிருந்து எடுத்துச் சென்ற மகுடத்தையும், நகைகளையும் மீட்டதோடு அங்க நாடு, மகத நாடுகளில் இருந்த கலிங்கச் சொத்துகளையும் மீட்டார்.

தமிழ்நாட்டு வரலாறு தொடர்பான குறிப்புகள்

தொகு

இந்தக் கல்வெட்டில் தமிழ் மூவேந்தர்கள் கூட்டணி பற்றியும், பாண்டியர்களின் பெருஞ்செல்வத்தைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன. தமிழக வரலாற்றிலும் சிலப்பதிகாரத்திலும் சேரன் செங்குட்டுவனின் நட்பரசராகக் குறிப்பிடப்படும் நூற்றுவர் கன்னர்[13] என்ற சாதவாகன அரசன் முதலாம் சதகர்ணியைத் தோற்கடித்ததாகச் சொல்லும் குறிப்பும், இவர் சமகாலத்து வடபுலத்து அரசர்கள்பற்றிய குறிப்புகளும், தமிழக வரலாற்றின் கால வரிசையைக் கணக்கிடத் துணை புரிகிறது.

கலிங்கத்தின் காரவேலரின் காலத்தைச் சாதவாகன மன்னரான முதலாம் சாதகர்ணி என்னும் நூற்றுவர் கன்னரோடும், மௌரியப் பேரரசின் வீழ்ச்சியோடும் பொருத்த முடிகிறது. அவர் 1300 அல்லது 113 ஆண்டுகளாகத் தொடர்ந்து வடபுலத்துக்கு எதிராக இருந்த தமிர தேக சங்காத்தம் என்பதை முறியடித்தேன் என்று சொல்லிக் கொள்கிறார். இந்தத் தமிர தேக சாங்காத்தம் என்பதே தமிழ் அரசர்களின் கூட்டணியென ஆய்வாளர்களால் கருதப்படுவதால் தமிழ் அரசர்களின் வரலாறு பற்றியும் அவர்கள் தொன்மை பற்றியும் சில வரலாற்றுக் குறிப்புகள் இதில் கிடைப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தமிழரசர்கள் கூட்டணியை முறியடித்ததோடு மட்டுமல்லாமல் மதுரைப் பாண்டியர்களிடமிருந்து பெருஞ்செல்வத்தைக் கொண்டு வந்ததாகக் கல்வெட்டில் இருப்பதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

இந்தக் கல்வெட்டில் 113 அல்லது 1300 ஆண்டுகளாகத் தம் கொற்றத்துக்கு இடைஞ்சல் கொடுத்துக் கொண்டிருந்த தமிர தேக சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்ததாகப் பெருமை கொள்கிறார் மன்னர் காரவேலர். இந்தக் கூட்டணி எத்தனைக் காலம் நீடித்தது என்பதில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அசோகர் கல்வெட்டுகள் குறிப்பிடும் சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களோடு சத்தியபுத்திரர் அல்லது அதியமான் என்னும் அரசர்களையும் சேர்த்துக் கொண்டால் ஒரு தமிழரசர் கூட்டணி தமிழக எல்லைக்கு அப்பால் அரண் அமைத்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. ”தமிழ்கெழு மூவர் காக்கும் மொழிபெயர்த் தேஎத்த பல்மலை” என்று மாமூலனார் குறிப்பிடுவது (அகநானூறு 31), பண்டையத் தமிழகத்தின் வேங்கட மலை வடக்கே, மொழிபெயர்த் தேயம் அல்லது தமிழ் மொழி மயங்கி வேறு மொழிகள் புழங்கத் தொடங்கும் நிலம் தமிழ் மூவேந்தர் கட்டுப்பாட்டில் இருந்திருக்கலாம் என்ற கருத்துக்கு அடிகோலுகிறது.[14] தமிர தேச சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் உடன்பாடு என்று இந்தக் கல்வெட்டு குறிப்பிடுவது மாமூலனாரின் கூற்றோடு இசைந்து வருவது நோக்கத்தக்கது.

தமிழ் மூவேந்தர் கூட்டணியை (தமிர தேச சங்காத்தம்) உடைத்தேன் என்றும் பாண்டிய மன்னர்களிடமிருந்து பெரும்பொருளைப் பெற்றேன் என்றும் இந்தக் கல்வெட்டில் காரவேலர் பெருமைப்பட்டிருந்தாலும், பொதுவாகத் தென்னக மன்னர்கள் இவரிடம் நட்பு பாராட்டினார்கள் என்று ஜெயசுவால் கருதினார். தமிழ் மூவேந்தர்களில் வலிமை மிக்கவர்களும் செல்வந்தர்களுமான பாண்டியர்கள் காரவேலருக்குக் கொடுத்த செல்வங்களை நட்பு பாராட்டி அன்பளிப்பாக அனுப்பியது என்று அவர் கருதினார்.[15] இதற்கு நேர் மாறாக, மூவேந்தர் கூட்டணியைப் பேச்சுவார்த்தைமூலம் காரவேலர் உடைத்திருக்க வேண்டும் என்னும் சசிகாந்து, அதற்குப் பின்னர் பாண்டியர்மீது தரைப்படை, கடற்படை என்று இரண்டின் மூலமும் தாக்கிப் பெருஞ்செல்வத்தைக் கவர்ந்து வந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்.[16].

  • பல நூறு ஆண்டுகளாய்க் கலிங்கத்துக்குத் தொல்லையாக இருந்த தமிழ் மூவேந்தர் கூட்டணியை உடைத்தேன் என்று சொல்லும் காரவேலர், மகத நாட்டையும் கலிங்கத்தின் அருகில் இருந்த அரசுகளையும் தோற்கடித்ததைக் காட்டிலும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைத்தான் “அற்புதம் ஆச்சரியம்” என்று கொண்டாடுகிறார். சோழநாட்டைக் கடந்துதான் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடியும் என்றாலும், சோழநாட்டின்மீது படையெடுத்ததாகக் குறிப்பிடாமல் பாண்டியர்மீது வெற்றி கொண்டு பெருஞ்செல்வத்தைத் திறையாகப் பெற்றது பற்றிச் சொல்வதால் தமிழ் மூவேந்தர் கூட்டணியை இவர் (சோழர்களோடு செய்த) ஒப்பந்தங்களால் உடைத்திருக்க வேண்டும்.[17]
  • பாண்டியர்கள் இவர் காலத்தில் அணிகலன்கள், முத்து, மாணிக்கம், வைடூரியங்கள் என்று பெருஞ்செல்வத்தைக் கொண்டிருக்கும் வல்லமையுள்ள அரசாகத் திகழ்ந்திருக்கிறார்கள். தென்னகத்தில் மாணிக்க, வைடூரியச் சுரங்கங்கள் இல்லை என்பதால் இவை ஈழம், பர்மா அல்லது பாரசீக நாடுகளிலிருந்து வந்திருக்கலாம். பாண்டியர்களின் குதிரைகளையும் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவதால் மாணிக்கம், வைடூரியங்கள் மட்டுமல்லாமல் குதிரைகளையும் பாண்டியர்கள் கடல்வழி வாணிகத்தில் இறக்குமதி செய்திருக்க வேண்டும்.

கல்வெட்டு வரிகள்

தொகு

கல்வெட்டு வரிகள் பிராகிருதத்தில் உள்ளன. பிராகிருத மூலத்தை ரோமனுருக்களிலும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அறிஞர்கள் ஜெயசுவாலும் பானர்ஜியும் தொல்பொருளாராய்ச்சித் துறையின் வெளியீட்டில் பதிப்பித்திருக்கிறார்கள்.[18] இவற்றை மேலும் ஆராய்ந்து இந்த வரிகளைத் திருத்திப் படித்தும், வேறு பொருள் கொண்டும், தம் புதிய ஆய்வுக் கருத்தை அண்மையில் வெளியிட்டார் சசிகாந்து.[19] கல்வெட்டு வரிகளைத் தேவநாகரி எழுத்துகளில் வெளியிட்டு வேறு விதமாகப் படித்தவர் சதானந்த அகர்வால்.[20] கீழே உள்ள தமிழ் மொழிபெயர்ப்பு, பெரும்பாலும் ஜெயசுவால், பானர்ஜியின் ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில் வந்திருந்தாலும், சில இடங்களில் பிராகிருதத்தில் உள்ள சொற்களையும், பொருளையும் கொண்டு ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து விலகியுள்ளது. இதில் சசிகாந்து, அகர்வால் அவர்களுடைய பார்வையில் இணைந்து செல்கிறது.

வரி தமிழ் ஆங்கிலம் பிராகிருதம்
1 அருகர் தாள் போற்றி. சித்தர் தாள் போற்றி. சேதராச மரபின் மாட்சியின் பெருமை, மங்கலகரமான அரசக் குறிகளையும் குணங்களையும் ஒருங்கே பெற்ற, நான்கு திசைகளும் நயக்கும் நற்குணங்களைக் கொண்ட, ஆரிய மாமன்னர், மகாமேகவாகனரின் வழித்தோன்றல், கலிங்காதிபதி, பெரும்புகழ் கொண்ட சிறி காரவேலர் (எழுதுவித்தது) Salutation to the Arhats (Arihats = lit. 'Conquerors of Enemies,' i.e., Jinas). Salutation to all the Siddhas. By illustrious Kharavela, the Aira (Aila), the Great King, the descendant of Mahameghavahana, the increaser (of the glory) of the Cheti (Chedi) dynasty, (endowed) with excellent and auspicious marks and features, possessed of virtues which have reached (the ends of) the four quarters, overlord of Kalinga, •ணமோ அரஹந்தாநம்ʼ [।।] ணமோ ஸவஸிதா₄நம்ʼ [।।] ஐரேண மஹாராஜேந மஹாமேக₄வாஹநேந சேதராஜ வஸ வத₄நேந பஸத₂ ஸுப₄லக₂லேந சதுரந்தலுட₂ன கு₃ணஉபேநேத கலிங்கா₃தி₄பதிநா ஸிரி கா₂ரவேலேந
2 செவ்வுடலும் பேரெழிலும் பொருந்தியவர், பதினைந்து ஆண்டுகளாக இளைஞர் விளையாட்டுகளில் பயின்று, பின்னர் அரசுப் பேச்சுவார்த்தை, நாணயவியல், கணக்கியல், பொதுச்சட்டவியல் (விவகாரங்கள்), சமயவிதிகள் என்று எல்லாக் கல்வி கேள்விகளிலும் தேர்ச்சி பெற்று, ஒன்பது ஆண்டுகளாகப் பட்டத்து இளவரசராக ஆண்டார். குழந்தைப் பருவத்திலிருந்தே பெருவளத்துடன் திகழ்ந்தவர், வேநா மாமன்னரைப்போல் பெருவெற்றிகளைக் காணப் பிறந்தவர், இருபத்து நான்கு வயது முதிர்ந்த பின்னர், for fifteen years, with a body ruddy and handsome were played youthsome sport; after that (by him who) had mastered (royal) correspondence, currency, finance, civil and religious laws (and) who had become well-versed in all (branches) of learning, for nine years (the office of) Yuvaraja (heir apparent) was administered. Having completed the twenty-fourth year, at that time, (he) who had been prosperous (vardhamana) since his infancy (?) and who (was destined) to have wide conquests as those of Vena, பந்த₃ரஸ வஸாநி ஸிரி கஃ‌டா₃ர ஸரீரவதா கீஃ‌டி₃தா குமார கீஃ‌டி₃கா [।।] ததோ லேக₂ ரூப க₃ணநா வவஹார விதி₄ விஸாரதே₃ந ஸவவிஜாவதா₃தேந நவ வஸாநி யோவராஜம்ʼ பஸாஸிதம்ʼ [।।] ஸம்புணம்ʼ சதுவிஸதி வஸோ ததா₃னீ வத₄மாந ஸேஸயோ வேநாபி₄ விஜயோ ததியே
3 பருவம் எய்தியவுடன் கலிங்க அரச மரபின் மூன்றாவது வழித்தோன்றல் பேரரசராக முடி சூடிக்கொண்டார். அவர் முடிசூட்டு மங்கலநீராடியவுடனேயே, தம் முதலாம் ஆட்சியாண்டில், புயலினால் சேதமுற்றிருந்த கோட்டை, கோபுரங்கள், சுவர்கள், கதவுகள், (நகரின்) கட்டிடங்கள் எல்லாவற்றையும் பழுது பார்த்தும், கலிங்க நகரின் கிபிர ரிஷி (பெயரால் அழைக்கப்பட்ட?) ஏரி மற்றும் ஏனைய தடாகங்கள், குளங்களின் கரைகளைத் திருத்தியும், நகரத் தோட்டங்களை மீளமைத்தும் then in the state of manhood, obtains the imperial (maharajya) coronation in the dynasty of Kalinga. As soon as he is anointed, in the first (regnal) year (he) causes repairs of the gates, the walls and the buildings (of the city), (which had been) damaged by storm; in the city of Kalinga (he) causes the erection of the embankments of the lake (called after) Khibira Rishi, (and) of (other) tanks and cisterns, (also) the restoration of all the gardens (he) causes to be கலிங்க₃ ராஜவஸே புரிஸ யுகே₃ மஹாராஜபி₄ஸேசநம்ʼ பாபுநாதி [।।] அபி₄ஸித மதோ ச பத₄மேவஸே வாத விஹத கோ₃புர பாகார நிவேஸநம்ʼ படிஸங்கா₂ரயதி கலிங்க₃நக₃ரி கி₂வீர ஸிதல தஃ‌டா₃க₃ பாஃ‌டி₃யோ ச வந்தா₄பயதி ஸம்ʼவுயாந படி ஸண்டபநம்ʼ ச
4 முப்பத்து ஐந்து நூறாயிரம் காசுகள் செலவில் மக்கள் மனதைக் குளிரவைத்தார். தம் இரண்டாம் ஆட்சியாண்டில், சாதகர்ணியைப் பொருட்படுத்தாமல், மேற்கு மாநிலங்களை நோக்கி வலிமையான குதிரை, யானை, காலாள், தேர்ப்படைகளை அனுப்பி கன்னபெண்ணையாற்றின் (கரும்பெண்ணை அல்லது கிருஷ்ணவேணியாறு) கரையை எட்டி மூசிக (ஆசிக?) நகரத்தைக் கலங்க வைத்தார். தம் மூன்றாம் ஆட்சியாண்டில் done at (the cost of) thirty-five-hundred-thousands, and (he) gratifies the People. And in the second year (he), disregarding Satakamini, despatches to the western regions an army strong in cavalry, elephants, infantry (nara) and chariots (ratha) and by that army having reached the Kanha-bemna, he throws the city of the Musikas into consternation. Again in the third year, காரயதி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி பகதியோ ச ரஞ்ஜயதி [।।] து₃தியே ச வஸே அசிதயிதா ஸாதகநிம்ʼ பசி₂மதி₃ஸம்ʼ ஹய க₃ஜ நர ரத₄ ப₃ஹுலம்ʼ த₃ண்ட₃ம்ʼ படா₂பயதி [।।] கந்ஹவேம்ʼணாம்ʼ க₃தாய ச ஸேநாய விதாஸிதி அஸிக நக₃ரம்ʼ [।।] ததியே புந வஸே
5 கந்தர்வ கானத்தில் தேர்ச்சி பெற்ற மாமன்னர் தலைநகரில் இசைவிழாக்கள், மக்கள்கூடல்களில் தபம், ஆடல், பாடல், கருவியிசை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தார். அவரது நான்காம் ஆட்சியாண்டில், அவரது கலிங்க முன்னோர்கள் கட்டுவித்த வித்யாதரக் குடில் ... இடிபடுவதற்கு முன்னர் ...... மாற்றார் மணிமுடிகள் வீழ, தலைக்கவசங்கள்(?) துண்டாக, கொற்றக்குடைகளும் (he) versed in the science of the Gandharvas (i.e., music), entertains the capital with the exhibition of dapa, dancing, singing and instrumental music and by causing to be held festivities and assemblies (samajas); similarly in the fourth year, 'the Abode of Vidyadharas' built by the former Kalingan king(s), which had not been damaged before ………..................... with their coronets rendered meaningless, with their helmets (?) (bilma) cut in twain (?), and with their umbrellas and க₃ந்த₄வ வேத₃ பு₃தோ₄ த₃ப நத கீ₃த வாதி₃த ஸந்த₃ஸநாஹி உஸவ ஸமாஜ காராபநாஹி ச கீஃ‌டா₃பயதி நக₃ரிம்ʼ [।।] ததா₂ சவுதே₂ வஸே விஜாத₄ராதி₄வாஸம்ʼ அஹத புவம்ʼ கலிங்க₃ புவராஜ நிவேஸிதம்ʼ ..... விதத₄ மகுட ஸ .... நிகி₂த ச₂த
6 செங்கோல்களும் தளர, அவர்கள் ரத்தினங்களையும் பெருஞ்செல்வத்தையும் (தம்மிடம்) பறிகொடுத்த ரதிக, போஜக மன்னர்களைத் தம் காலடியில் மண்டியிட்டுப் பணியச் செய்தார். தம் ஐந்தாம் ஆட்சியாண்டில், நூற்றிமூன்றாம் ஆண்டில் நந்தராஜன் வெட்டிய தனசூலியக் கால்வாயைத் தலைநகருக்கு நீட்டுவித்தார்...... ராஜசூய வேள்வி மேற்கொண்டு மங்கலநீராடுகையில் [கொடையாக] எல்லா வரிகளையும் திறைகளையும் விலக்கி bhingaras cast away, deprived of their jewels (i.e., ratana, Skt. ratna, precious objects) all the Rathikas and Bhojakas (he) causes to bow down at his feet. Now in the fifth year he brings into the capital from the road of Tansauliya the canal excavated in the year one hundred-and-three of King Nanda ................... ......... Having been (re-)anointed (he while) celebrating the Rajasuya, remits all tithes and cesses, பி₄ங்கா₃ரே ஹித ரதந ஸாபதேயே ஸவ ரடி₂க போ₄ஜகே பாதே₃ வந்தா₃ பயதி [।।] பஞ்சமே ச தா₃நீ வஸே நந்த₃ராஜ திவஸ ஸத ஓகா₄டிதம்ʼ தநஸுலிய வாடா பநாடி₃ நக₃ரி பவேஸ [ய] தி ... [।।] அபி₄ஸிதோ ச [ச₂டே₂] வஸே ராஜஸேயம்ʼ ஸந்த₃ம்ʼஸயம்ʼ தோ ஸவகரண
7 நகரத்துக்கும் நாட்டுக்கும் பல நூறாயிரம் காசுகளை வாரிக்கொடுத்தார். தம் ஏழாம் ஆட்சியாண்டில், அவருடைய பகழ் பெற்ற மனைவி வஜிரகரவதி புனிதமான தாய்மை அடைந்தார். ..... பிறகு தம் எட்டாம் ஆட்சியாண்டில், அவர் பெரும்படை கொண்டு கோரதகிரியைச் சூறையாடியதோடு bestows many privileges (amounting to) hundreds of thousands or the City-Corporation and the Realm-Corporation. In the seventh year of his reign, his famous wife of Vajiraghara obtained the dignity of auspicious motherhood ………….Then in the eighth year, (he) with a large army having sacked Goradhagiri அநுக₃ஹ அநேகாநி ஸதஸஹஸாநி விஸஜதி போரம்ʼ ஜாநபத₃ம்ʼ [।।] ஸதமம்ʼ ச வஸே பஸாஸதோ வஜிரக₄ரவதி ... ஸ மதுக பத₃ [புநாம்ʼ] ஸ [குமார] ...[।।] அட₂மே ச வஸே மஹதி ஸேநாய மஹத கோ₃ரத₄கி₃ரிம்ʼ
8 ராஜகஹத்துக்கும் (ராஜகிருஹம்) நெருக்கடி கொடுத்தார். மதுரா நகரில் கலக்கத்தோடு பின் வாங்கியிருந்த தம் படைகளையும் வண்டிகளையும் மீட்க வந்த யவன (கிரேக்க) மன்னன் இந்த வீரச்செயல் பற்றிக் கேட்டு அதிர்ச்சியுற்று [சரணடைந்தான்]. மாமன்னர் பெருங்கிளைகளால் causes pressure on Rajagaha (Rajagriha). On account of the loud report of this act of valour, the Yavana (Greek) King Dimi[ta] retreated to Mathura having extricated his demoralized army and transport.… …………….(He) gives……………..with foliage கா₄தா பயிதா ராஜக₃ஹம்ʼ உபபிஃ‌டா₃பயதி [।।] ஏதிநம்ʼ ச கம்ʼம பதா₃ந ஸம்ʼநாதே₃ந ஸப₃த ஸேந வாஹநே விபமுசிதும்ʼ மது₄ரம்ʼ அபாயாதோ யவநராத₄ ... ம... யச₂தி பலவ பா₄ர
9 கற்பக மரம் நிறைந்து நிற்பது போல் தம்மிடம் நிறைந்து இருந்த யானைகளையும், தேர்களையும், குதிரைகளையும், தேரோட்டிகளையும், பாகன்களையும் மாளிகைகளுக்கும், வீடுகளுக்கும், சாவடிகளுக்கும் பெருங்கொடையாக வழங்கினார். போரில் பெற்ற வெற்றிக்குப் பரிகாரமாகப் பிராம்மணர்களுக்கு தீ வேள்வியின்போது வரிகளிலிருந்து விலக்களித்தார். அருகருக்கு .... Kalpa (wish-fulfilling) trees, elephants, chariots with their drivers, houses, residences and rest-houses. And to make all these acceptable (he) gives at a fire sacrifice (?) exemption (from taxes) to the caste of Brahmanas. Of Arhat .................................. கபரூகே₂ ஹய க₃ஜ ரத₄ ஸஹ யதி ஸவத₄ராவாஸ பரிவேஸநே ... ஸவ க₃ஹணம்ʼ ச காரயிதும்ʼ ப₃ம்ஹணாநம்ʼ ஜய பரிஹார த₃தா₃தி [।।] அரம்ʼஹத [பஸாதா₃ய] நவமே ச வஸே
10 .................. (அவர்) முப்பத்து எட்டு நூறாயிரம் (காசு) செலவில் ..... பெருவெற்றி(மகாவிஜய) மாளிகை என்று அழைக்கப்படும் அரசமனை ஒன்றைக் கட்டுவித்தார். தம் பத்தாம் ஆட்சியாண்டில் அமைதி, நட்புறவு, அடக்கு ( சாம, பேத, தண்டம்) (என்னும் முக்கோட்பாட்டுக்கு இணங்க) என்பதைப் பின்பற்றி பாரதநாடெங்கும் (பாரதவர்ஷம்) தம் பெரும்படையை அனுப்பிப் பல நாடுகளைத் தோற்கடித்து ...... தோற்ற நாடுகளிடமிருந்து மணிகளையும் ரத்தினங்களையும் கைப்பற்றினார். ..................(He) causes to be built . . . . a royal residence (called) the Palace of Great Victory (Mahavijaya) at the cost of thirty-eight hundred thousands. And in the tenth year (he), following (the three-fold policy) of chastisement, alliance and conciliation sends out an expedition against Bharatavasa (and) brings about the conquest of the land (or, country) ........ and obtains jewels and precious things of the (kings) attacked. [நக³ரிய கலிங்க³] ராஜநிவாஸம்ʼ மஹாவிஜய பாஸாத³ம்ʼ காரயதி அட²திஸாய ஸதஸஹஸேஹி [।।] த³ஸமே ச வஸே த³ண்ட³ ஸந்தி⁴ ஸாம [மயோ] ப⁴ரத⁴வஸ படா²நம்ʼ மஹீ ஜயநம்ʼ ... காராபயதி [।।] ஏகாத³ஸமே ச வஸே [ஸதுநம்ʼ] பாயாதாநம்ʼ ச மணி ரதநாநி உபலப⁴தே [।।]
11 .............. ஆவா அரசர்கள் கட்டிய பிதும்டா என்ற வணிக நகரத்தைப் பிடித்துக் கழுதைகள் பூட்டிய ஏர்களைக் கொண்டு உழுது அழித்தார்; பதின்மூன்று நூறு ஆண்டுகளாகத் தம் நாட்டுக்கு (ஜனபதம்) தொல்லையாக இருந்து வந்த தமிழ் அரசுகளின் கூட்டணியை (தமிர தேக சங்காத்தம்) முழுதும் உடைத்தார். பன்னிரண்டாம் ஆண்டில் உத்தரபதத்தின் அரசர்களை ஆயிரக்கணக்கான ...... வைத்து அச்சுறுத்தி .................. And the market-town (?) Pithumda founded by the Ava King he ploughs down with a plough of asses; and (he) thoroughly breaks up the confederacy of the T[r]amira (Dramira) countries of one hundred and thirteen years, which has been a source of danger to (his) Country (Janapada). And in the twelfth year he terrifies the kings of the Utarapatha with .................. thousands of கலிங்க³ புவராஜ நிவேஸிதம்ʼ பிது²ட³ம்ʼ க³த⁴வநங்க³லேந காஸயதி [।।] ஜநபத³ பா⁴வநம்ʼ ச தேரஸவஸ ஸத கதம்ʼ பி⁴த³தி தமிர தே³ஹ ஸங்கா⁴தம்ʼ [।।] பா³ரஸமே ச வஸே ..... விதாஸயதி உதராபத⁴ ராஜநோ [ததோ]
12 .................. மகத அரசமனைக்குள்ளே தம் யானைகளை அனுப்பி மகத மக்களை மிரளவைத்து மகதத்தின் மன்னர் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார். நந்த அரசரால் எடுத்துச் செல்லப்பட்ட ”கலிங்கத்தின் சைனர்” என்ற சிலையையும், அதன் அரியணை, ரத்தினங்களையும் மீட்டு ........ (முன்பு கொள்ளையடித்ததற்குப் பரிகாரமாக) அங்கநாடு, மகதநாடுகளின் செல்வங்களையும் (அரச) குடும்ப நகைகளின் காவலர்களையும் கலிங்கத்துக்குக் கொண்டு வந்து .................. .................. And causing panic amongst the people of Magadha (he) drives (his) elephants into the Sugamgiya (Palace), and (he) makes the King of Magadha, Bahasatimita, bow at his feet. And (he) sets up (the image) 'the Jina of Kalinga' which had been taken away by King Nanda .................. and causes to be brought home the riches of Amga and Magadha along with the keepers of the family jewels of .................... மாக³தா⁴நம்ʼ ச விபுல ப⁴யம்ʼ ஜநேதோ ஹத²ஸம்ʼ க³ங்கா³ய பாயயதி [।।] மாக³த⁴ம்ʼ ச ராஜாந ப³ஹஸதிமிதம்ʼ பாதே³ வந்தா³பயதி [।।] நந்த³ராஜ நீதம்ʼ காலிங்க³ஜிந ஸம்ʼநிவேஸம்ʼ [கலிங்க³] [ராஜ] க³ஹ ரதந பரிஹாரே ஹி அங்க³ மக³த⁴ வஸும்ʼ ச நயதி [।।]
13 (அவர்) பல அற்புதமாகச் செதுக்கிய உள்ளறைகளைக் கொண்ட கூட கோபுரங்களைக் கட்டுவித்து அவற்றைக் கட்டிய நூறு கொத்தனார்களுக்கென ஒரு குடியிருப்பையும் அமைத்து மேலும் அவர்களுக்கு நிலவரிகளிலிருந்தும் விலக்களித்தார். யானைகளை ஓட்டுவதற்கான வியப்புக்குரிய கொட்டங்களை அவர் .... மற்றும் குதிரைகள், யானைகள், ரத்தினங்கள், மாணிக்கங்கள், பாண்டிய அரசனிடமிருந்து எண்ணற்ற முத்து, மணி, ரத்தினங்களை கலிங்கத்திடம் திறை கட்டுமாறு செய்தார். .................(He) builds excellent towers with carved interiors and creates a settlement of a hundred masons, giving them exemption from land revenue. And a wonderful and marvellous enclosure of stockade for driving in the elephants (he)...... and horses, elephants, jewels and rubies as well as numerous pearls in hundreds (he) causes to be brought here from the Pandya King. ...தும்ʼ ஜட²ர லகி²ல கோ³புராநி ஸிஹராநி நிவேஸயதி ஸத விஸிகநம்ʼ பரிஹாரே ஹி [।।] அபு⁴த மச²ரியம்ʼ ச ஹதீ²நாவ தம்ʼ பரிஹர [உபலப⁴தே] ஹய ஹதீ² ரத்ந மாணிகம்ʼ [।।] பாண்ட³ராஜா ஏதா³நி அநேகாநி முக்த மணிரத்நாநி ஆஹாராபயதி இத⁴ ஸதஸ [ஹஸாநி]
14 .................(அவர்) அடக்கினார். தம் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில், சமண மதம் நன்கு பரப்பப்பட்ட குமரி மலையின் மீது அருகர் கோவிலில், தம் கடுந்தவத்தால் பிறவிச் சுழற்சியைக் கடந்த சமண முனிவர்களை அவர்கள் சமண நெறியையும், வாழ்வையும், நடத்தையையும் பற்றிப் போதித்து வருவதை போற்றிச் சீனப்பட்டாடையையும், வெள்ளைப் போர்வைகளையும், கோவிலை நடத்தும் செலவுக்கான பணத்தையும் பணிவன்போடு வழங்கினார்.தெரிகிறது. பெரும்புகழ் கொண்ட காரவேலர், பூசைகளில் பெரிதும் ஈடுபாடுள்ள வழிபாட்டாளர்(உபாசகர்), பிறவி, உடலின் தன்மைகளை முற்றும் உணர்ந்தவர். .................(he) subjugates. In the thirteenth year, on the Kumari Hill where the Wheel of Conquest had been well-revolved (i.e., the religion of Jina had been preached), (he) offers respectfully royal maintenances, China clothes (silks) and white clothes to (the monks) who (by their austerities) have extinguished the round of lives, the preachers on the religious life and conduct at the Relic Memorial. By Kharavela, the illustrious, an a layman devoted to worship, is realised (the nature of) jiva and deha [த³கி²ணாபத²] வாஸிநோ வஸீகரோதி [।।] தேரஸமே ச வஸே ஸுபவத குமாரீ பவதே அரஹதே (ஹி) பகி²ந ஸம்ʼஸிதஹி காயநிஸீதி³யாய (...) ராஜபி⁴திநம்ʼ சிநவதாநம்ʼ வாஸாஸிதாநம்ʼ பூஜாநுரத உவாஸக³ (கா²) ரவேல ஸிரிநா ஜீவதே³ஹ ஸாயிகா பரிகா²தா [।।]
15 ................ சிம்மபத அரசி சிந்துலாவின் வேண்டுகோளை ஏற்று சமணத்துறவிகள் உறைவிடத்துக்கு அருகே மலை மேலிருக்கும் அருகர் சிலைக்கருகே பல யோசனைத் தூரத்திலிருந்து ஒப்பற்ற சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த கற்களால் சமணப்பள்ளிகளைக் கட்டி.... ................ bringing about a Council of the wise ascetics and sages, from hundred (i.e., all) quarters, the monks (samanas) of good deeds and who have fully followed (the injunctions) .................. near the Relic Depository of the Arhat, on the top of the hill, ............ with stones .............. brought from many miles (yojanas) quarried from excellent mines (he builds) shelters for the Sinhapatha Queen Sindhula. ................ ......................... ஸகத ஸமண ஸுவிஹிதாநம்ʼ ச ஸவதி³ஸாநம்ʼ யதிநம்ʼ தபஸ இஸிநம்ʼ ஸங்கா⁴யநம்ʼ அரஹத நிஸீதி³யா ஸமீபே பபா⁴ரே வராகர ஸமுதா²பிதாஹி அநேக யோஜநாஹி தாஹி பநதிஸாஹி ஸதஸஹஸேஹி ஸிலாஹி ஸிஹபத² ராநி ஸ [பி⁴லாஸேஹி]
16 .......……..இருபத்து ஐந்து நூறாயிரம் (காசு) செலவில்..........பதலிகத்தில்(?)………(அவர்) வைடூரியத்தில் இழைத்த நான்கு தூண்களை நிறுவினார்; (அவர்) மௌரியர்காலத்தில் கைவிடப்பட்டிருந்த ஆயகலைகள் அறுபத்து நான்கையும் தொகுக்கும் பணியை மீண்டும் துவக்கி உடனடியாக ஏழு நூல்களில் தொகுப்பித்தார். அமைதியின் அரசர், செல்வத்தின் அரசர், துறவிகளின் (பிக்குகளின்) அரசர், அறத்தின் (தருமத்தின்) அரசர், வாழ்த்துகளைப் பார்த்தவர், கேட்டவர், உணர்ந்தவர்- .................Patalaka(?)………(he) sets up four columns inlaid with beryl……..at the cost of twenty-five hundred thousands; (he) causes to be compiled expeditiously the (text) of the seven-fold Angas of the sixty-four (letters). He is the King of Peace, the King of Prosperity, the King of Monks (bhikshus), the King of Religion (Dharma), who has been seeing, hearing and realising blessings (kalyanas)- படலிக சதரே ச வேட்³ட³ரிய க³பே⁴ த²ம்பே⁴ படிதா²பயதி பாநதரிய ஸதஸஹஸேஹி [।।] முரியகால வோசி²நம்ʼ ச சோயடி² அங்க³ ஸந்திகம்ʼ துரியம்ʼ உபாத³யதி [।।] கே²மராஜா ஸ வத⁴ராஜா ஸ பி⁴கு²ராஜா ஸ த⁴மராஜா பஸம்ʼ தோ ஸுநம்ʼ தோ அநுப⁴வந்தோ கலணாநி
17 ........ வியத்தகு நற்பண்புகளில் முழுமைபெற்றவர், ஒவ்வொரு மக்கட்தொகுதியையும் மதிப்பவர், அனைத்து கோவில்களையும் சீரமைப்பவர், தடுத்தற்கரிய தேரையும் படையையும் கொண்டவர், தமது பேரரசை அதன் தலைவரே (தானே) பேணிக்காப்பவர், அரசமுனிவர் வசுவின் குடும்ப வழி வந்தவர், மிகப்பெரும் வெற்றியாளர், வேந்தர், சிறந்த புகழ்பெற்ற காரவேலர். ................ accomplished in extraordinary virtues, respector of every sect, the repairer of all temples, one whose chariot and army are irresistible, one whose empire is protected by the chief of the empire (himself), descended from the family of the Royal Sage Vasu, the Great conqueror, the King, the illustrious Kharavela. -... கு³ண விஸேஸ குஸலோ ஸவ பாஸண்ட³ பூஜகோ ஸவதே³வாயதன ஸங்கார காரகோ அபதிஹத சக வாஹந ப³லோ சகத⁴ரோ கு³தசகோ பவத சகோ ராஜஸி வஸுகுல விநிஸிதோ மஹாவிஜயோ ராஜா கா²ரவேல ஸிரி [।।]••

சச்சரவுகளும் கருத்துவேறுபாடுகளும்

தொகு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கையின் தாக்கத்தால் விளைந்த சேதங்கள் மட்டுமின்றி, சில எழுத்துகளின் மாறுபட்ட வடிவம், உளிக்குறிகளையும் எழுத்துகளையும் வேறுபடுத்த முடியாத குழப்பம், குளவிகளாலும், மழைநீராலும் சிதைந்த எழுத்துகள் என்று பலவற்றால் இந்தப் பதினேழு வரிகளைப் படிப்பதிலேயே பல கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. கல்வெட்டு குறிப்பிடும் மன்னர்களின் அடையாளம், நிகழ்ச்சிகள் நடந்த காலம், மொழி, எழுத்துகளைப் படிப்பதில் உள்ள வேறுபாட்டால் நிகழும் பொருள் மாற்றங்கள், இடங்கள், ஆறுகளின் அடையாளங்கள், சமயப்பழக்க வழக்கங்கள் போன்ற பலவேறு செய்திகளைப் பற்றி அறிஞர்களிடையே சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகளும் நிலவுகின்றன. 1933ல் ஜெயசுவாலும் பானர்ஜியும் எபிகிராஃபியா இண்டிகாவுக்காகத் தொகுத்த கட்டுரையே அதற்கு முற்பட்ட பல கருத்து வேறுபாடுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்குத் தீர்வு காண முயன்றது. அதற்குப் பின்னர் சதானந்த அகர்வால், சசிகாந்து, சாகு[21], போன்றோர் இந்தக் கல்வெட்டில் அவர்கள் கண்ட குழப்பங்களுக்குத் தீர்வு காண முயன்றார்கள். இந்தப் புதிய முயற்சிகளை ஏ. எல். பாஷம் போன்ற அறிஞர்கள் வரவேற்றிருந்தாலும், 1933 ஜெயசுவால்-பானர்ஜி பதிப்பையே இன்றும் செம்பதிப்பாக மதிக்கிறார்கள்.

கல்வெட்டு குறிப்பிடும் காலம்

தொகு

இந்தியக் கல்வெட்டுகளிலேயே வரலாற்று நிகழ்ச்சிகளை அவை நடந்த ஆண்டுகளைக் குறிப்பிடும் முதல் கல்வெட்டு அத்திக்கும்பா கல்வெட்டாகத்தான் இருக்கக்கூடும். தனசூலிய கால்வாயை நீட்டியது பற்றிய குறிப்பில் நந்தராசன் 103ம் ஆண்டு கட்டியது என்றும், தமிழ் மூவேந்தர் உடன்பாடு பற்றிய குறிப்பில் 113 அல்லது 1300 ஆண்டு நீடித்திருந்த கூட்டணி என்றும், இந்தக் கல்வெட்டு ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. தனசூலியக் கால்வாய் கட்டிய ஆண்டைப் பற்றிக் குறிப்பிடும் “நந்த₃ராஜ திவஸ ஸத” (नंदराज तिवस सत) என்பதை நந்தராசன் ஒருவனில் தொடங்கிய ஆண்டுக்கணக்கில் கொள்வதா[22] அல்லது சமண சமயத்தைச் சார்ந்த காரவேல மன்னனுக்கு முக்கியமான வர்த்தமான மகாவீரர் மறைந்த ஆண்டிலிருந்து தொடங்கிய மகாவீரர் ஆண்டுக்கணக்கில் கொள்வதா[23] என்பதில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதே போல “திவஸ ஸத” (மூன்று நூறு) என்பதை முந்நூறு என்று படிக்காமல் நூற்றுமூன்று என்று படிக்கிறார்கள். மகாவீரர் மறைந்த நாளான கி.மு. அக்டோபர் 15, 527ஐக் கணக்கில் கொண்டால் இந்தக் கால்வாயை முதலில் கட்டிய ஆண்டைக் கி.மு. 424 எனக் கொள்ள வேண்டும்.

தமிர தேஹ சங்காத்தம் அல்லது தமிழ் மூவேந்தர் கூட்டணிபற்றிய குறிப்பிலும் இந்தக் கூட்டணி 113 ஆண்டுகள் நீடித்ததா, 1300 ஆண்டுகள் நீடித்ததா அல்லது மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு தோன்றிய கூட்டணி என்று கொள்வதா என்ற கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. தமிழ் மூவேந்தர் கூட்டணிக்காலத்தைப் பற்றிக் குறிப்பிடும் ”தேரஸவஸ ஸத” (तेरसवस सत) என்பதை த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். த்ரயோதஸ என்பதைப் பதின்மூன்று என்று கொண்டால், த்ரயோதஸ வர்ஷ ஸதம் என்பதைப் பதின்மூன்று நூறு வருடங்கள் அல்லது 1300 ஆண்டுகள் என்று கொள்ளலாம். அவ்வளவு பெருங்காலத்துக்கு ஒரு கூட்டணி நீடித்திருக்க முடியுமா என்று ஐயங்கொள்ளும் ஆய்வாளர்கள் இதை நூற்றுப் பதின்மூன்று அல்லது 113 ஆண்டுகள் நீடித்த கூட்டணியாகக் கொள்கிறார்கள்.[24] ஆனால், சசிகாந்து இதையும் மகாவீரர் ஆண்டுக்கணக்கில் 113ம் ஆண்டு என்று கொள்கிறார். அதாவது தமிழ் மூவேந்தர் கூட்டணி கி.மு. 414ல் தோன்றியது என்று அவர் கருதுகிறார்.[23]

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கருதும் சசிகாந்து மகாபத்ம நந்த மன்னர் பதவியேற்ற கி.மு. 424லிலேயே கலிங்கத்தின் மீது படையெடுத்துக் கால்வாயைக் கட்டியிருக்க வேண்டும் என்றும் கல்வெட்டு மேலும் குறிப்பிட்டுள்ளது போலக் கலிங்கத்திலிருந்து ஜினர் சிலையையும் பல பொருள்களையும் செல்வங்களையும் கவர்ந்து சென்றிருக்க வேண்டும் என்றும் இவற்றைத் தொடர்ந்து தமிழ் மன்னர்கள் எதிர்பாராத சமயத்தில் தமிழகத்தையும் தாக்கியிருக்க வேண்டும் என்று கொள்கிறார். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இது போன்ற வடபுலத்துத் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காக்கத் தமிழ் மூவேந்தர்கள் ஓர் உடன்பாட்டைக் கி.மு. 414ல் ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கருதுகிறார். இந்தக் கூட்டணியின் வலிமையால்தான் நந்தர்களின் மகதப் பேரரசு மற்றும் மௌரியப் பேரரசின் தாக்குதல்களைத் தமிழகத்தால் சமாளிக்க முடிந்திருக்கும் என்கிறார் சசிகாந்து. நந்தர்களைப் பற்றியும் ”புதிதாக வந்த” மௌரியர்களைப் பற்றியும் உள்ள குறிப்புகள் பண்டைத் தமிழ்ச் சங்க நூல்களில் இருப்பதை இவர் இந்தக் கோட்பாட்டுக்குச் சான்றாகக் கொள்கிறார்.[25]

சமண சமய மன்னர்கள் மகாவீரர் ஆண்டுக்கணக்கைப் பின்பற்றும் மரபைக் குறிப்பிட்டுக் காரவேல மாமன்னரின் கல்வெட்டையும் அதற்குச் சான்றாகக் காட்டுகிறார் ஜோதி பிரசாத் ஜெயின்[26] வட இந்தியாவில் வழங்கும் விக்கிரம ஆண்டும் மகாவீரர் ஆண்டுக் கணக்கைப் பின்பற்றிக் கார்த்திகை மாதம் முதல் பிறையன்று தொடங்குவதை இவர் சுட்டிக் காட்டுகிறார்.[27] பெரும்பாலும் தென்னிந்தியாவில் வழங்கும் இன்னொரு ஆண்டுக்கணக்கான சாலிவாகன சக ஆண்டுக்கணக்கு சமயச் சார்பற்றதாக இருந்தாலும், சைத்திர மாதம் முதற்பிறையில் தொடங்குவதாக இருந்தாலும் அதற்கும் மகாவீரர் ஆண்டுக்கணக்குக்கும் தொன்று தொட்டு தொடர்பு இருந்ததாகவும் கருதுகிறார். இந்தக் கருத்துகள் காரவேலரின் ஆண்டுக்கணக்கு பற்றிய சசிகாந்தின் கோட்பாட்டுக்குச் சான்றாய் அமைகின்றன.

கல்வெட்டில் இரண்டு இடங்களிலும் திவஸ ஸத (மூன்று நூறு), தேரஸவஸ ஸத (பதின்மூன்று நூறு) என்பவற்றை முறையே நூற்றுமூன்று, நூற்றுப் பதின்மூன்று என்று ஒரேபோல்தான் மாற்றிப் படித்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசர்களின் அடையாளங்கள்

தொகு

கல்வெட்டின் தொடக்கத்தில் காரவேல மாமன்னரை ஐரா என்று குறிப்பிடுவது புராணங்களில் குறிப்பிடப்படும் ஐலா அரசரின் மரபில் வந்தவர் என்பதற்கு அடையாளம் என்று ஜெயசுவால் குறிப்பிடுகிறார். ஆனால், காரவேலரின் பெயரைக் குறிப்பிடும் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போற்றுதல் அடைமொழியைப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இது உயர்குடியில் பிறந்த என்று பொருள்தரும் ஆரிய என்றுதான் இருந்திருக்க வேண்டும் என்கிறார் சசிகாந்து. அப்படிப் படித்தால் “ஆரிய மஹாராஜ மஹாமேகவாஹன கலிங்காதிபதி ஸ்ரீ காரவேல” என்று அந்தப் பெயரைப் படிக்க வேண்டும் என்கிறார் அவர்.

எட்டாம் வரியில் ”யவனராஜா திமி(தா)” என்ற குறிப்பு கிரேக்க மன்னன் பாக்திரியாவின் முதாலாம் திமெத்ரியசுவைக் குறிப்பிடுகிறது என்று ஜெயசுவாலும் அவருக்கு முந்தைய அறிஞர்களும் ஊகித்திருக்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் திமெத்ரியசு தலையெடுத்திருக்க முடியாது என்று கூறி அந்த வரிகளை ”யமனா நாதிம்” என்று படித்து அது யமுனை நதிக்கரையைக் குறிக்கிறது என்கிறார் சசிகாந்து.

பன்னிரண்டாம் வரியில் மகத நாட்டைப் படையெடுத்து அதன் மன்னன் பகசதிமிதத்தைத் தன் கால் பணிய வைத்தார் என்ற குறிப்பில் உள்ள பகசதிமிதம் என்ற மன்னன் யார் என்பதில் கருத்து வேற்றுமை நிலவுகிறது. மௌரியப் பேரரசை வீழ்த்தியதாகக் கருதப்படும் புஷ்யமித்திர சுங்க மன்னன்தான் மகதத்தின் மன்னனாக இருந்திருக்க வேண்டும் என்று ஜெயசுவால் கருதுகிறார். ஆனால், நாணயங்கள், மற்ற கல்வெட்டுகளின் அடிப்படையில் காரவேலர் வாழ்ந்த காலத்தில் பிருஹஸ்வாதிமித்ர என்ற மன்னன் மகதத்தை ஆண்டிருக்கலாம் என்று சசிகாந்து கருதுகிறார்.

சமயப் பழக்கவழக்கங்கள்

தொகு

பதினான்காம் வரியில் சமணத் துறவிகளுக்குச் சீனப்பட்டாடையையும் (சினவதாநம்), வெள்ளைப் போர்வைகளையும் (வாஸாஸிதாநம்) கொடுத்தார் என்ற குறிப்பில் சமய நம்பிக்கை தொடர்பான சில சிக்கல்கள் எழுகின்றன. ஆடைகளை முற்றும் துறந்த துறவிகள் (திகம்பரர்), வெள்ளாடை உடுத்த துறவிகள் (சுவேதாம்பரர்) என்று சமணமதம் இரண்டாகப் பிரிவதற்கு முன்பே துறவிகளுக்குத் துணியைக் கொடையளிப்பது பற்றிய குறிப்பு இதில் இருக்கிறது என்று இதை முந்தைய ஆய்வாளர்கள் கொள்கிறார்கள். அது சரியாக இருந்தால், சமணத்துறவிகள் வெள்ளாடையை உடுத்தும் பழக்கத்தையும் மேற்கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கும் தொன்மையான கல்வெட்டு இதுவாக இருக்கலாம். ஆனால், கொல்லாமையைத் தீவிரமாக வலியுறுத்தும் சமண சமயத்தில், பட்டுப்பூச்சிகளைக் கொன்று நெய்த பட்டுத்துணிகளைச் சமணத்துறவிகளுக்கே ஒரு சமண மன்னர் கொடுத்திருக்கக்கூடுமா என்ற கேள்வியை எழுப்புகிறார் சசிகாந்து[28]. வெள்ளை ஆடை என்று சொல்வதையும் அவர் ஏற்கவில்லை. இந்த வரியை அவர் “நோன்புகளால் (பெற்ற தெய்வீக ஆற்றலால்) ஒளிர்கின்ற” என்று பொருள் கொள்கிறார்.

சமணர்களின் சரசுவதி இயக்கம்

தொகு

சமண சமயத்துக்குத் தீர்த்தங்கரர்கள் கற்பித்த கோட்பாடுகளைத் தொகுத்துத் தம் சமயத்தைப் பரப்புவது என்பது ஒரு தலைமையான பணி. மகாவீரரின் மறைவுக்குப் பின்னர் அவரது போதனைகளை வாய் வழியே பரப்பிக் கொண்டிருந்ததனால் நாளடைவில் அவை நலியத் தொடங்கின. கிடைத்தவற்றைத் தொகுத்து அவற்றை எழுத வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு நிலவிய காலத்தில் கலைமகள் அல்லது சரசுவதி இயக்கம் தோன்றியது என்பது சமணர்களின் நம்பிக்கை. இப்படிச் சமண ஆசிரியர்களின் கோட்பாடுகளைத் தொகுக்கும் முதல் முயற்சியாகக் காரவேலரின் கல்வெட்டில் 16ஆம் வரியில் குறிப்பிட்டிருக்கும் செய்தியைக் கொள்கிறார் ஜோதி பிரசாத் ஜெயின்[29].

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் முக்கியக் குறிப்புகள்

தொகு

கல்வெட்டு வரிகளைப் பொருள் கொள்வதிலிருந்து பல செய்திகளை அறிய முடிகிறது. இவற்றில் சில முக்கியக் குறிப்புகளைத் தொல்பொருள் ஆய்வாளர்களின் கருத்துகளில் காணலாம்[30][31]

  • ஐரா என்ற சொல் ஐலா என்ற சொல்லைக் குறிப்பது போலவே த்ரமிர அல்லது தமிர என்ற சொல்லையும் தமில என்று கொள்ள வேண்டும். த்ரவிட, த்ரமில என்ற சொற்களின் மூலமும் தமிழ் என்ற சொல்தான் என்று முன்பே ஆய்வாளர்கள் குறித்திருக்கிறார்கள்.[32]
  • கல்வெட்டின் தொடக்கத்தில் ஒன்றின் மீது ஒன்றாய் இரண்டு குறியீடுகள் உள்ளன. மகுடத்தைப் போலிருக்கும் முதல் குறியீடு வத்தமங்களக் குறியீடு என்றும் இரண்டாவது குறியீடு ஸ்வஸ்திகா என்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். கல்வெட்டின் முடிவில் உள்ள குறியீடு ஒரு சதுரக்கட்டம் அல்லது வேலிக்குள் உள்ள பூசைமரம் போல் உள்ளது.
  • சொற்களுக்கு இடையே இடைவெளி விட்டுப் பொறித்திருக்கிறார்கள். முற்றுப்புள்ளி இருக்க வேண்டிய இடத்தில் இடைவெளி கூடுதலாகவே இருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தனிப்பெயர்களுக்கு முன்பும் இடைவெளி இருக்கிறது.
  • கூடுமானவரைக்கும் கூட்டெழுத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடன் தவிர்த்து எழுதியிருக்கிறார்கள்.
  • தன் பதின்மூன்றாம் ஆட்சியாண்டில் சமண முனிவர்களைப் போற்றிச் சீனப்பட்டாடையும், வெள்ளைப் போர்வையையும் கொடுத்ததாகக் கூறுவதால் அந்த முனிவர்கள் சுவேதாம்பர (வெள்ளாடை) சமணர்கள் என்று தெரிகிறது. (இதைச் சசிகாந்து மறுக்கிறார்.)
  • ரூபா என்ற சொல்லை நாணயம் அல்லது பணம் என்ற பொருளில் இன்றைக்கும் வழக்கில் இருக்கும் ரூபாய் என்பது போலவே புழங்கியிருக்கிறார்கள். புத்தகோசரும், சாணக்கியரும்கூட ரூபா என்ற சொல்லை இதே பொருளில் புழங்கியிருக்கிறார்கள்.
  • காரவேலர் தம்மை “வழிபாட்டுப் பித்தன்” என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சமண சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடுள்ள மன்னர். இருப்பினும் மற்ற சமயங்களையும் ஆதரித்திருக்கிறார். தம்மை “எல்லா மதங்களையும் போற்றுபவன்”, “எல்லா வழிபாட்டுக் கோவில்களையும் மேம்படுத்தியன்” என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறார். இந்து மன்னர்களைப் போலவே சில யாகங்களை நடத்தி அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் மரபைப் பின்பற்றியிருக்கிறார். தன் முன்னோர்கள் வழிபட்ட அருகர் சிலையைக் கவர்ந்து சென்ற நந்த மன்னரிடமிருந்து அதை மீட்டதாகக் குறிப்பிடுவதிலிருந்து இவர் சமணக் குடும்பத்தில் பிறந்தவர் என்றும், கலிங்கத்திடமிருந்து கவர்ந்த சிலையைப் பூசிக்கத் தக்க நிலையில் பாதுகாத்திருந்ததால் நந்தர்களும் சமணர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
  • பட்டத்து இளவரசர்களுக்கு ஆட்சிப்பயிற்சி கொடுப்பது பழக்கம் என்பதையும், அந்தப் பயிற்சியில் எதையெல்லாம் கற்பிக்கிறார்கள் என்பதையும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
  • காரவேலருக்குப் பட்டத்தரசி சிம்மபாதத்தின் சிந்துளா (வரி 15), தன் ஏழாம் ஆட்சியாண்டில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்த இல்லத்தரசி வஜிரகரவதி என்று குறைந்தது இரண்டு மனைவியர் இருந்திருக்கிறார்கள்.

இதனையும் காண்க

தொகு

குறிப்புகளும் மேற்கோள்களும்

தொகு
  1. Silabario Dravidi O Kalinga
  2. Rapson, "Catalogue of the Indian coins of the British Museum. Andhras etc...", p XVII.
  3. Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Revised Edition, 2000, p 3
  4. Stirling, Asiatic Researches, XV
  5. HOERNLE, A. F. RUDOLF (2 பெப்ரவரி 1898). "Full text of "Annual address delivered to the Asiatic Society of Bengal, Calcutta, 2nd February, 1898"". ASIATIC SOCIETY OF BENGAL. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. K. P. Jayaswal, R. D. Banerji: Epigraphia Indica, Vol. XX (1929–30), pp. 71-89. Delhi: Manager of Publications, 1933
  7. B. M. Barua, Indian Historical Quarterly, XIV, 3 (pp.459-85)
  8. D. C. Sircar, Select Inscriptions, I (pp. 206-13, No. 91)
  9. Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 1971. 2nd Revised Edition 2000
  10. 10.0 10.1 எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 86
  11. 11.0 11.1 எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக்கம் 75
  12. "Full text of the Hathigumpha Inscription in English" (PDF). Archived from the original (PDF) on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2014-09-02.
  13. சிலம்பின் காலம், இராமகி, தமிழினி பதிப்பகம், 2011, பக். 59-60. திசம்பர் 2009ல் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் செம்மொழித் தமிழ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய செவ்விலக்கியப் பயிலரங்கில் அளிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையின் விரிவாக்கம். (பார்க்க: சிலம்பில் வரலாறு, இராமகி [1])
  14. சிலம்பின் காலம், இராமகி, தமிழினி பதிப்பகம், 2011, பக்: 24-48. திசம்பர் 2009ல் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் செம்மொழித் தமிழ் நிறுவனமும் சேர்ந்து நடத்திய செவ்விலக்கியப் பயிலரங்கில் அளிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரையின் விரிவாக்கம். (பார்க்க: சிலப்பதிகாரமும் பஞ்சதந்திரமும், இராமகி [2]
  15. K. P. Jayaswal, "Hāthīgumphā Inscription revised from the Rock", J. of Bihar and Orissa Research Society, Vol IV, p. 368
  16. Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, pp. 56-57
  17. Sashi Kant, op cit., p56
  18. Epigraphia Indica, Vol. XX (1929–30). Delhi: Manager of Publications, 1933.
  19. Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 2nd Revised Edition, 2000.
  20. Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.
  21. Sahu, N. K., Khāravela, 1984
  22. எபிகிராபிக்கா இண்டிக்கா, இருபதாம் வெளியீடு, பக்கம் 87, அடிக்குறிப்பு 7
  23. 23.0 23.1 Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, pp. 35-46.
  24. எபிகிராபிக்கா இண்டிக்கா, இருபதாம் வெளியீடு, பக்கம் 88, அடிக்குறிப்பு 5
  25. Sastri, K. A. N., A History of South India, (2nd Edition), 1958. pp. 85-86
  26. Jain, Jyoti Prasad, The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900), Munshiram Manoharlal Publishers, New Delhi. 2005
  27. ibid, p37
  28. Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, 2nd Ed., 2000, p. 66, Footnote 2
  29. ஜோதி பிரசாத் ஜெயின், பண்டைய இந்திய வரலாற்றின் சமணச் சான்றுகள் (கி.மு. 100 - கி.பி. 900), முன்சிராம் மனோகர்லால் பதிப்பகம், புது தில்லி, 2005. பக். 74
  30. எபிகிராஃபியா இண்டிகா, தொகுப்பு 20, பக். 71-89
  31. சசிகாந்து, காரவேலரின் அத்திக்கும்பா கல்வெட்டும், அசோகரின் பபுரு கட்டளையும்-ஓர் ஆய்வு நோக்கு, இரண்டாம் பதிப்பு, 2000, பக். 1-73
  32. [Ind. Ani., Vol. XLIII, P. 64]

உசாத்துணை

தொகு
  • K. P. Jayaswal, R. D. Banerji: Epigraphia Indica, Vol. XX (1929–30), pp. 71–89. Delhi: Manager of Publications, 1933.
  • B. M. Barua, Indian Historical Quarterly, XIV, 3 (pp. 459–85)
  • Shashi Kant: The Hᾱthīgumphᾱ inscription of Khᾱravela and the Bhabru edict of Aśoka—a critical study, Delhi: Prints India, 1971. 2nd Revised Edition 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-246-0139-9.
  • Sadananda Agrawal: Śrī Khāravela, Published by Sri Digambar Jain Samaj, Cuttack, 2000.
  • Kishori Lal Faujdar: Jat Samaj Monthly Magazine, Agra, January/February (2001) page-6.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாத்திகும்பா_கல்வெட்டு&oldid=3573740" இலிருந்து மீள்விக்கப்பட்டது