ஹாப்-லைப் 2 (மெருகூட்டப்பட்ட வடிவம் HλLF-LIFE2) என்பது வால்வ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தன்மை காட்சிக் கோண துப்பாக்கிச் சூட்டு நிகழ்பட விளையாட்டு ஆகும். இது 1998ம் ஆண்டு வெளிவந்த ஹாப் லைப் நிகழ்பட விளையாட்டின் இரண்டாம் பாகம் ஆகும். 2004ம் ஆண்டு வெளியாகிய இவ்விளையாட்டு 40 மில்லியன் டாலர்கள் செலவில் ஐந்து வருடங்கள் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பில் இருக்கும் போதே இதன் பெரும் பகுதி முறையற்ற விதத்தில் இணையத்தில் விநியோகம் செய்யப்பட்டது. இவ்விளையாட்டு வால்வ் நிறுவனத்தின் மாற்றுமிரு தயாரிப்புகளான ஸ்ட்டீம் மென்பொருள் மற்றும் சோர்ஸ் எஞ்சின் ஆகியவற்றுடன் ஒன்றாக வெளியாகியது.

ஹாப் லைப்
ஆக்குனர் வால்வ் நிறுவனம்
வெளியீட்டாளர் வால்வ் நிறுவனம்
எழுத்தாளர் மார்க் லைடோவ்
இசையமைப்பாளர் கெல்லி பெய்லி
தொடர் ஹாப் லைப்
பாணி தன்னிலை காட்சிக் கோண துப்பாக்கி சூடு
வகை தனிநபர் விளையாட்டு


முதல் பாகமான ஹாப் லைப் கதை நிறைவடைந்து சில வருடங்களின் பின் நடைபெறும் நிகழ்வுகளாக இவ்விளையாட்டின் கதையம்சம் உள்ளது. ஜி-மேனால் எழுப்பப்பட்ட கதாநாயகன் கோர்டன் பிரீமேன் வேற்றுக்கிரக அரசால் உலகம் ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருப்பதைக் காண்கிறார். அலிக்ஸ் வான்ஸ் எனும் போராளியுடன் சேர்ந்து மனித இனத்தை மீட்க பலவித ஆயுதங்களின் உதவியுடன் வேற்றுகிரகவாசிகளோடு போரிடுவதே இவ்விளையாட்டின் கருப்பொருள் ஆகும்.

இவ்விளையாட்டின் வடிவமைப்பு, வரைகலை, அசைவூட்டம், சப்தம், முப்பரிமாண காட்சிகள் போன்றவற்றின் சிறப்பால் மிகச் சிறந்த நிகழ்பட விளையாட்டுக்களில் ஒன்றாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. வெவ்வேறு நிகழ்பட வெளியீட்டாளர்களால் வழங்கப்படும் வருடத்தின் சிறந்த நிகழ்பட விளையாட்டு விருதுகள் 39ஐ இவ்விளையாட்டு பெற்றதுடன் 2012ல் நடந்த ஸ்பைக் நிகழ்பட விளையாட்டு விருதுகளில் தசாப்தத்தின் சிறந்த நிகழ்பட விளையாட்டுக்கான விருதையும் தட்டிச் சென்றது. 2011ல் இவ்விளையாட்டு 12 மில்லியன் பிரதிகள் விற்பனையாகின. ஹாப்-லைப் 2 இன் தொடர்ச்சிகள் 2006 (முதல் அத்தியாயம்) மற்றும் 2007 (இரண்டாம் அத்தியாயம்) ஆம் ஆண்டுகளில் வெளியாகின.

விளையாட்டு

தொகு

முதல் பாகத்தைப் போலவே ஹாப்-லைப் 2உம் தனி ஒருவர் விளையாடக்கூடிய தன்னிலை பார்வை கோணம் கொண்ட துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு ஆகும். இரு பாகத்திலும் கதாநாயகனின் பெயர் கோர்டன் பிரீமேன் என்பதாகும். கதாநாயகனின் உடல்நிலை, ஆயுதங்கள் போன்றவை முதல் பாகத்தைப் போல் ஒரே மாதிரியாக இருந்தாலும் ஹாப்-லைப்2ன் மேம்படுத்தப்பட்ட கணினி வரைகலை முதல் பாகத்திலிருந்து இதை வேறுபடுத்துகிறது. விளையாடுபவர் நிராயுதபாணியாகத் தொடங்கி தனக்குத் தேவையான ஆயுதங்களைத் தேடிப் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பது இலக்கு.

திரையில் தோன்றும் பலவிதமான எதிரிகளை எதிர்க்க வெவேறான வழிமுறைகளைப் விளையாடுபவர் பின்பற்ற வேண்டும். சில எதிரிகள் திடீரென பறந்து வந்து தாக்குதல் நடத்துவர்; சில எதிரிகள் கால்நடையாக வந்து தாக்குதல் நடத்துவர். விளையாடுபவர் இவர்கள் அனைவரயும் தான் தேடிப் பெற்ற ஆயுதங்கள் மூலம் வீழ்த்த வேண்டும். சில எதிரிகளை துப்பாக்கி மூலமும் சில எதிரிகளை வெடிகுண்டுகள், புகைக்குண்டுகள் போன்ற ஆயுதங்கள் முலமாகவும் வீழ்த்த வேண்டும். விளையாட்டின் சில பகுதிகளில் கதாநாயகனுக்கு உதவியாக சாரணர்கள், போர் வீரர்கள் ஆகியோர் வருவர்.

விளையாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கதாநாயகனுக்கு ஈர்ப்பு விசை ஆயுதம் கிடைக்கப்பெறும். இதன்மூலம் தூரத்திலுள்ள பொருட்களை அருகே இழுக்கலாம் அல்லது தள்ளலாம். இவ்வாற்றலைக் கொண்டு பிற்பாடு வரும் புதிர்களை விடுவிக்க முடியும்.

இதன் முன்கதை தனியே கூறப்படாது விளையாட்டின் இடையேயும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்திலிருந்தே நாயகன் விளையாடுபவரால் இயக்கப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாப்-லைப்_2&oldid=2701066" இலிருந்து மீள்விக்கப்பட்டது