கப்டன் அக்காச்சி என்ற சிவகுமாரன் சிறீகாந்தன் (இ. செப்டம்பர் 15, 1989) யாழ்ப்பாணம், நீர்வேலி பிரதேச விடுதலைப் புலிகளின் பொறுப்பாளராக இருந்த போராளி.

இளமைக்காலம்

தொகு

யாழ்ப்பாண மாவட்டம், நீர்வேலியைச் சேர்ந்த சிவகுமாரன், கனகமணி ஆகியோரின் இரட்டைக் குழந்தைகளில் ஒருவர் சிறீகாந்தன். மற்றவர் சிறீரஞ்சன் என்றும் பெயரிட்டிருந்தனர். ஸ்ரீரஞ்சன் சிறு வயதிலேயே இறந்து விட்டான். சிறீகாந்தன் விடுதலை இயக்கத்தில் ஜெகன் என்ற பெயரில் இணைந்து கொண்டு அக்காச்சி என்ற பெயரில் நீர்வேலிப் பிரதேசத் தலைவர் ஆனார். அக்காச்சி பாடசாலையில் படிக்கும் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளிலும் கராட்டிப் பயிற்சிகளிலும் குதிரையேற்றப் பயிற்சிகளிலும் மிகுந்த ஆர்வமுள்ளவராக இருந்தார்.

புலிகள் இயக்கத்தில் அக்காச்சி

தொகு

1983 ஆம் ஆண்டுக் கலவரத்தின் எதிரொலிகள் அக்காச்சியை பாதித்தது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போரணியில் ஒர் உறுப்பினனாக இணைந்து கொண்டார். 'அக்காய் டீசேர்ட்' அணிந்து கொண்டு நின்ற ஜெகனைக் கண்ட, கப்டன் பண்டிதர் "அக்காச்சி" என்ற பெயரை வைத்தார். அன்றிலிருந்து அப்பெயரே நிலைத்தது. விடுதலை இயக்கத்தின் இரண்டாம் படைப்பிரிவில் இராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு 1985 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தாயகம் திரும்பிய அக்காச்சி அக்கால கட்டத்தில் புலிகளால் நடத்தப்பட்ட பல இராணுவ நடவடிக்கைகளிலும், 1985 பெப்ரவரியில் இடம்பெற்ற கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதல், 1985 ஏப்ரல் மாதம் நடைபெற்ற யாழ்ப்பாணக் காவல் நிலையத் தாக்குதல், 1985 மே மாதம் நடைபெற்ற மன்னார் காவல் நிலையத் தாக்குதல் என்பவற்றில் பங்கேற்றார்.

1985ஆம் ஆண்டு நடுப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதன் பின் நீர்வேலிப் பிரதேச பொறுப்பாளனாக நியமிக்கப்பட்ட அக்காச்சி இலங்கைப் படைகள் முகாமைவிட்டு வெளியேறாத படி மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளில் பங்குபற்றினான். குறிப்பாக பலாலியிலிருந்த இராணுவ விமானப்படை கூட்டு முகாமிலிருந்து இராணுவம் வெளியேற முயன்றபோது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல எதிர்த் தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றார்.

ஒப்பரேஷன் லிபரேஷன்

தொகு

1987இல் இலங்கை அரசு வடமராட்சி மீது தொடுத்த ஒப்பரேஷன் லிபரேஷன் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்தில் அக்காச்சி பங்குபற்றினார்.

இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட மோதல்

தொகு

இந்திய அமைதி காக்கும் படை 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளுடன் மீது போர் தொடுத்தது. யாழ்ப்பாணம் டச்சுக் கோட்டையில் இருந்து ஒரு பிரிவினர் வெளியேற முயன்று கொண்டிருந்த அதே வேளையில் வேறு படைப் பிரிவினர் பலாலி வீதி, கே.கே.எஸ். வீதி, கண்டி வீதி வழியாக யாழ்ப்பாண நகரை நோக்கி முன்னேற முயன்று கொண்டிருந்தனர். கைதடி - கோப்பாய் வீதி வழியாக கோப்பாய்ச் சந்திக்க வரமுயன்ற இந்திய இராணுவத்தை அந்த இடத்தை நோக்கி நகரவிடாமல் பதினொரு நாட்கள் அக்காச்சியின் அணி தடுத்து நிறுத்தி வைத்துக்கொண்டது. உக்கிரமான போர் இடம்பெற்றது. பலத்த ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த உக்கிரமான போரில் கோப்பாய் சந்திக்கு வரமுடியாத நிலையில் நின்ற இந்திய இராணுவத்தின் ஒரு படைப் பிரிவை அக்காச்சி அணி தடுத்து நிறுத்தி வைத்துக் கொண்ட நிலையில் இன்னுமொரு இந்தியப் படைப்பிரிவு மறுபக்கத்தால் உரும்பிராய் கிருஷணன் கோயிலடிக்கு வந்து வாழைத் தோட்டங்களுக்கூடாக நீர்வேலி வெங்காயக் கூட்டுறவுச் சங்கமருகில் வந்தது. கொமாண்டோ மோட்டார் ஷெல் தாக்குதல்களும் செயின் புளக்கு(டாங்கி) களாலும் தாக்கிய வண்ணம் கோப்பாய்ச் சந்திக்கு இந்திய இராணுவம் நள்ளிரவு கன்னிரண்டு மணிக்கே சென்றடைந்தது. இந்திய இராணுவ நடவடிக்கைளின் போது நீர்வேலிப்பகுதியில் அதிக உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படாமல் அக்காச்சியே ஏற்ற நடவடிக்கைகளையெடுத்து தனது திறமையால் கிராமத்தைக் காப்பாற்றினார் என இப்பகுதி மக்கள் நினைவு கூர்ந்து கொள்கிறார்கள்.

வேறு தாக்குதல்கள்

தொகு

1987 அக்டோபர் தொடக்கம் 1988 மார்ச் வரையுள்ள காலப்பகுதியில் நீர்வேலிப் பகுதியில் இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல்களில் அக்காச்சி பங்கேற்றார். பின்னர் அக்காச்சி அங்கிருந்து தப்பி பிறிதொரு பகுதிக்குள் நுழைந்தார்.

பொதுமகன் காப்பாற்றல்

தொகு

1988 முற்பகுதியில் ஒரு நாள் அச்செழு பகுதிக்கு வந்த இந்திய இராணுவத்தினர் பற்றை மறைவுகளின் பின்னால் படுத்துக் கொண்டு போராளிகளது வருகைக்காகக் காத்துக் கிடந்தனர். முக்கிய போராளிகளான லெப்டினன்ட் கேணல் இம்ரான், கப்டன் நேரு, அக்காச்சி இப்படியாக பல போராளிகள் அங்கே தங்கியிருந்தனர். அதிகாலை ஆகையால் சன நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் இராணுவ நடமாட்டம் பற்றிய தகவல் அன்றைய தினம் போராளிகளுக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஒரு பொதுமகன் மீன் வலைகளைத் தன் தோளில் போட்டுக் கொண்டு வந்து இராணுவ நடமாட்டம் பற்றிய தகவலைக் கொடுத்து போராளிகளைக் காப்பாற்றினார்.

வன்னியில் அக்காச்சி

தொகு

1988 மார்ச் மாதம் தொடக்கம் 1989 தை மாதம் வரை அக்காச்சி வன்னிப் பகுதியில் இந்திய இராணுவத்துடன் பல மோதல்களில் ஈடுபட்டார்.

மீண்டும் குடாநாட்டில்

தொகு

சில மாதங்களை வன்னியில் கழித்துவிட்டு மீண்டும் 1989 தை மாதமளவில் அக்காச்சி குடா நாட்டிற்குள் வந்தார். இக்காலத்தில் அக்காச்சியும் அவனது தோழர்களும் கெரில்லா வாழ்க்கையே மேற்கொண்டனர். வீதிகளைக் கடக்கும் போது அல்லது தனது ஆதரவாளர்களைச் சந்திக்க வரும்போது எதிர்பாராமல் இந்திய இராணுவத்தைச் சந்திக்க நேரிட்டால் மோதல்கள் ஏற்படுவதுண்டு. இவ்வாறான மோதல்களில் பெரும் இழப்புக்களோடு இந்திய இராணுவம் முகாம் திரும்பிய ஒரு மோதல் மே 17, 1989 அன்று நீர்வேலிப் பகுதியில் நிகழ்ந்தது. இதேபோல் மே 30, 1989 அன்று அக்காச்சியும் சிவநேசன் என்ற இன்னொரு போராளியும் எதிரும் புதிருமாக இந்திய இராணுவத்தைச் சந்தித்தபோது பெரும் மோதல் ஒன்று நிகழ்ந்தது. இந்த மோதலின் போது கப்டன் நேரு, லெப்.குட்டி ஆகியோரும் இராணுவத்தினருடன் மோதினர். நீர்வெலி - அச்செழு வீதியில் நிகழ்ந்த இந்த மோதலில் எல்லோரும் சுற்றி வளைப்பை உடைத்து வெளியேறினர். ஆனால் சிவநேசன் நேருக்கு நேர் ஏற்பட்ட மோதலில் மரணம் அடைந்தார். இதே போன்ற பிறிதொரு மோதல் ஆகஸ்ட் 8, 1989 அன்று பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கு அருகே ஏற்பட்டது. இந்த மோதலில் கப்டன் ஒருவர் உட்பட இரண்டு இந்திய இராணுவத்தினர் இறந்தனர். இந்த மோதலில் அக்காச்சி முக்கிய பங்கு வகித்தார். இந்த மோதல் நிகழ்ந்த மறுதினம் காலை 7:15 மணிக்கு ஆகாசவாணி டில்லி தமிழ்ச் செய்தியில் இந்த மோதல் பற்றிக் குறிப்பிட்டு அக்காச்சி தலைமையிலான குழுவே இந்த மோதலில் ஈடுபட்டது என்று அந்தச் செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இறுதித் தாக்குதலும் மரணமும்

தொகு

ஓட்டுமடம் என்ற இடத்தில் கூடாரமடித்து புலிகளுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பினர் செப்டம்பர் 15, 1989 அன்று திலீபனின் அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். திலீபனின் அஞ்சலிப் பிரசுரம் ஒட்டிய மதனா என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவர்களை அக்காச்சி எதிர்த்ததால் அங்கே மோதல் ஒன்று ஆரம்பமானது. அப்போது நீர்வேலி கண்ணாடித் தொழிற்சாலையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் குண்டடி பட்டு அக்காச்சி மரணம் அடைந்தார்.

மேற்கோள்கள்

தொகு


வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்காச்சி&oldid=3230748" இலிருந்து மீள்விக்கப்பட்டது