அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத்

அசர்துவாரி அரண்மனை அருங்காட்சியகம், முர்சிதாபாத், இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத்தின் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகம், முர்சிதாபாத்தில் உள்ள அசர்துவாரி அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சாலைவழியாக 219 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முர்சிதாபாத் வங்காளத்தின் பழங்காலத் தலைநகரமாகும். கிபி 1824 - 1838 காலப்பகுதியில் வங்காளத்தை ஆண்ட நவாப் அசீம் ஹுமாயூன் ஷா என்பவர், புகழ்பெற்ற புகழ்பெற்ற கட்டிடக்கலைஞராக இருந்த மக்லியொட் டங்கன் என்பவரின் வடிவமைப்பில் இந்த அரண்மனையைக் கட்டினார். இக் கட்டிடம் கிரேக்கக் கட்டிடக்கலையின் டொரிக் ஒழுங்கைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டில் இக் கட்டிடத்தை முறையாகப் பேணுவதற்காக இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் கள அருங்காட்சியகங்களில் மிகவும் பெரியதான இந்த அருங்காட்சியத்தில், 20 காட்சிக்கூடங்களும், அவற்றில், 1034 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டும் உள்ளன. இவை தவிர சேகரிப்பில் உள்ள ஏனைய பொருட்களையும் சேர்த்து இங்கே 4742 அரும்பொருட்கள் இருக்கின்றன.

இக் காட்சிப்பொருட்களில், ஆயுதங்கள், ஒல்லாந்த, பிரெஞ்சு, இத்தாலிய ஓவியர்களால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியங்கள்; சலவைக்கற் சிலைகள், உலோகப் பொருட்கள், அரிய நூல்கள், பழைய நிலப்படங்கள், வருமான ஆவணங்கள், பல்லக்குகள் என்பன அடங்குகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை 18 ஆம் நூற்றாண்டையும் 19 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவையாகும்.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு