அதியமான் நெடுமிடல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அதியமான் நெடுமிடல் என்பவன் சங்ககாலத்தில் தகடூரை ஆட்சி செய்த மன்னரான அதியர் மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. நெடுமிடல் என்பது அரசனின் இயற்பெயர் எனச் சிலர் கருதுவர் வேறு சிலர் இது நெடிய வலிபொருந்திய என்னும் பொருள் குறிக்கும் ஒரு அடைமொழி என்பர். (அகம் 231).இவன் அதிகன் என்றும் இலக்கியங்களில் குறிப் பிடப்படுகின்றான். பசும்பூண் பாண்டியன் என்னும் மன்னனின் சேனைத்தலைவனாக இருந்தவன். பசும்பூண் பாண்டியன், சேரன் செங்குட்டுவனுடைய தமயனான களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரலின் காலத்திலிருந்த பாண்டியன். மேலும், பாண்டிய நாட்டின் அறியனை கைப்பற்றவே பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் போர் புரிந்ததால் பசும்பூண் பாண்டியனும் தலையாலங்கானச் செழியனும் ஒருவனே என நிறுவுவார் மயிலை சீனி. வேங்கட சாமி.
இம்மன்னனைப் பற்றிய தகவல்கள் சங்க இலக்கியங்கள் மூலமே தெரிய வருகின்றன. சங்க நூல்களான பதிற்றுப்பத்து, குறுந்தொகை என்பவற்றில் உள்ள பாடல்களில் நெடுமிடலைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தைப் பாடிய புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் என்பார், சேர மன்னனைப் புகழ்ந்து பாடும்போது இம்மன்னனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னனுடன் இடம்பெற்ற போரில் நெடுமிடல் தோற்றது தெரிய வருகிறது. பசும்பூட் பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் நண்பனான நெடுமிடல் பாண்டியனுக்குச் சார்பாகவே சேர மன்னனுடன் போரிட்டதாகக் கூறப்படுகின்றது.
ஆட்சிப் பகுதி
தொகுஅதியமான் நெடுமிடல் அஞ்சி என்னும் இயற்பெயர் கொண்டவன் இந்த மன்னன். மதுரைக்கு மேற்கே உள்ள பெரியகுளம் பகுதி அக்காலத்தில் நெடுங்களநாடு என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை பிழையா விளையுள் நாடு என்று பதிற்றுப்பத்து புகழ்கிறது. அதன் மன்னனே நெடுமிடல் ஆவான். நெடுங்களநாடு அதியமான்களின் பூர்வீகமாக இருக்கலாம். பசும்பூண் பாண்டியன், கொங்கு நாட்டில் சில இடங்களை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் கீழடங்கினார்கள். அவ்வாறு கைப்பற்றி தகடூரில் நிலையான ஆட்சியை நிறுவினான். இவனே அதியர் மரபின் முதல் மன்னனாக இருக்கலாம் எனக் கருதப்படுவதால் அதியரின் முன்னோர் பாண்டிய நாட்டின் பகுதியாகிய நெடுங்களநாட்டினர் என்பது உறுதியாகிறது. கொங்கு நாட்டுச் சிற்றரசர்களில் முதன்மையானவராக தகடூர் அரசரான அஞ்சியரசர்கள் நிலைகொண்டனர்.
பாடிய புலவர்
தொகு- புலவர் காப்பியாற்றுக் காப்பியனார் பதிற்றுப்பத்து நாலாம் பத்து
சமகாலத்தவர்
தொகு- தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகிய பசும்பூண் பாண்டியன்
- நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி
- மிஞிலி யின்சமகாலத்தவரான
தலையாலங்கானத்து போரில் ஈடுபட்டவர்கள்.
செய்த போர்கள்
தொகுஅரிமணவாயில் உறத்தூர் போர் தற்போது அரிமளம்
பிழையா விளையுள் நாட்டு போர்
துளு நாட்டு பாழிப் போர்
அரிமணவாயில் உறத்தூர் போர்
தொகுபாண்டிய நாட்டின் உட்பிரிவுகளாகிய நாடுகளில் பாரியின் பரம்பு நாட்டுக்கு வடக்கே கோனாடு என்று ஒரு நாடு இருந்தது. அங்கே பெருந்திரலார் என்பவர் வாழ்ந்து வந்தார். மக்கள் தலைவராக இருந்த அவருக்கும் கோனாட்டு மன்னனாக இருந்த எவ்வி என்பவருக்கும் கருத்து வேறுபாடு மிகுந்து இருந்தது. நீடூர் என்னும் எவ்வியின் ஊரக இருந்தது. ஆவுடையார் கோவில் பகுதியில் இருந்த மிழலை நாடு எவ்வியினுடையது. (இது மிழலைக் கூற்றத்தில் உள்ளது. இஃது அறந்தாங்கி வட்டத்துத் தென் பகுதியும் இராமநாதபுர மாவட்டத்தின் கீழ்ப்பகுதியும் தன்கண் கொண்டது.)
எவ்வியின் வேண்டுகோளுக்காக அவரின் நண்பனாக இருந்த நெடுமிடல் சமாதானத்தால் வேறுபாட்டைக் களையமுயன்றார். பெருந்திரலார் தகாது பேசி சினமூட்டியதால் போர் மூண்டது. அரிமணவாயில் உறத்தூர் போர் தற்போது அரிமளம் என்னும் இடத்தில் நடந்தபோரில் எவ்வியின் சார்பாக போரிட்டு வென்றார். பரணர் பாடல் அகநானூறு 266) இல் இந்த செய்தி உள்ளது. பெருந்திரலார்க்குரிய அரிமணம் உறத்தூர் என்பன தற்போது புதுக்கோட்டை வட்டத்தில் இருக்கின்றன.
தலையாலங்கானத்து செறு வென்ற பாண்டியன் நெடுஞ் செழியன் சிறு வயதில் அரியணை ஏறினான். சிறுவன் என்று அண்டை நாட்டு மன்னர் அச்சுறுத்த எண்ணினர். நெடுஞ்செழியன் சிறுவன் என இகழ்ந்து சோழநாட்டைஆட்சி செய்த இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை பொதிகை பகுதியை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவர்கள் அனைவரும் ஒன்றாக பாண்டிய நாட்டின் மீது போர்தொடுத்து தலையாலங்கானம் என்னுமிடத்தில் சண்டை இட்டனர். எதிர்த்துப் போரிட்ட நெடுஞ்செழியன் அனைவரையும் வென்றான் என்பது குறிப்பிடத்தக்கது. தலையாலங்கானத்து போரில் சேனைத் தலைவன் அதிகமான் நெடுமிடல் அஞ்சி ஆவான்.
களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் உடன் போருக்குக் காரணம்
தொகுபசும்பூண் பாண்டியன், கொங்கு தேசத்தின் சில பகுதிகளை வென்று கைப்பற்றிக்கொண்டதனால், கொங்கு நாட்டுச் சிற்றரசர் சிலர் அவனுக்குக் பணிந்தனர். பாண்டியனுக்கு நெடுமிடல் அஞ்சி சேனைத் தலைவனாக அமைந்தான். பசும்பூண் பாண்டியன் கொங்கு பகுதிகளை வென்று கைப்பற்றியதை, அகநானூறு (செய்யுள் 253: 4-5)பேசுகிறது.
அவ்வேளையில் சேர நாட்டு அரசர்கள் கொங்கு நாட்டில் சில இடங்களைக் கைப்பற்றியிருந்ததோடு நிற்காமல் மேலும் ஊர்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். சங்க காலத்திலே பல சிற்றசர்கள் கொங்கு பகுதியை ஆண்டனர். ஆகவே, சேர, சோழ, பாண்டிய அரசர் அச்சிற்றரசர்களை எளிதில் வெற்றிகண்டு கொங்கு நாட்டைச் கொஞ்சம் கொஞ்சமாக கைவசப் படுத்திக் கொண்டு இருந்தனர்.
கொங்குநாட்டை சேர அரசர் கைப்பற்றிக் கொண்டிருக்கும்போது, பசும்பூண் பாண்டியன் கொங்கு நாட்டில் புகுந்து அந்நாட்டு ஊர்கள் சிலவற்றைப் பிடித்துக் கொண்டது காரணமாகச் சேரர், பாண்டியன் மேல் பகை கொண்டனர். ஆகவே, அது காரணமாகச் சேர அரசர், பசும்பூண் பாண்டியனோடு போர் செய்ய நேரிட்டது. பாண்டியன் சேனையை அவன் சேனைத் தலைவனான நெடுமிடல் அஞ்சி தலைமை தாங்கி நடத்தினான்.
பிழையாவிளையுள் நாட்டுப் போர்
தொகுபாண்டிய நாட்டின் மேற்கெல்லையாக பண்டியநாடும் சேரநாடும் சந்திக்கும் எல்லைப்பகுதியில் அளநாடு என்னும் வளம் மிக்க பகுதி இருந்தது. இன்றைய தேனி கம்பம் சின்னமனூர் பகுதியே எவ்வாறு அழைக்கப்பட்டது. அளநாட்டின் வழியாகச் சென்று எல்லை காவல் படையத்தாக்கினான் நெடுமிடல் அஞ்சி. சேரர்படை தோற்று ஓடியது. செய்தியறிந்த சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் பெரும் யானைப்படையுடன் வந்தான். நெடுமிடல் அஞ்சியின் பிழையா விளையுள்நாட்டை யானைப்படையின் கால்களால் மித்திகச் செய்து அழித்தான். பெருவழி என்று அழைக்கப்படும் வழியாக வைகை கரைவழியே படை நடத்திச் சென்று சேரன் அழிவை ஏற்படுத்தினான். வத்தலகுண்டு பெரியகுளம்பகுதி பெறும் அழிவை சந்தித்தது. அவ்வாறு நடந்த சில போரில் நெடுமிடல் அஞ்சி தோல்வியும் அடைந்தான். இச் செய்தியைச் பதிற்றுப்பத்து நாலாம் பதின் வாயிலாக அறிகிறோம்.
பாண்டியனின் துளு நாட்டுப் போர்
தொகுதுளு நாட்டு நன்ன அரசர் வடகொங்கு நாட்டில் ஆதிக்கம் செய்ய முயன்றார்கள். அதனால், வடகொங்கு நாட்டைக் கைப்பற்ற முயன்ற பசும்பூண் பாண்டியனுக்குத் துளு நாட்டரசர் எதிரிகளாயினர். பசும்பூண் பாண்டியன் துளுநாட்டின் மேல் படையெடுத்துச் சென்றான். பாண்டியன் சேனையை, அதிகமான் நெடுமிடல் அஞ்சி நடத்திச்சென்று துளு நாட்டில் புகுந்தான். அவனை நன்னன் (இராண்டாவன்) உடைய சேனைத் தலைவனான மிஞிலி என்பவன் பாழி என்னும் ஊருக்குப் பக்கத்தில் எதிர்த்துப் போர் செய்தான். அப்போரில் அதிகமான் நெடுமிடல் அஞ்சி கொல்லப்பட்டு இறந்தான். மிஞிலி நன்னுக்குத் தான் கொடுத்த வாக்குத் தவறாமல் பெரும்படையுடன் வந்து தாக்கிய அதிகனைப் பாழி நகரில் இருந்த பேய்த்தெய்வத்துக்கு (காளிக்கு) உயிர்ப்பலி கொடுத்தான்.
அதிகமான் நெடுமிடல் அஞ்சி துளு நாட்டில் பாழிப் போரில் மரணமடைந்த செய்தியைக் கேட்டு அவன்மேல் வெறுப்புக் கொண்டிருந்த கொங்கர் மகிழ்ச்சி கொண்டாடினார்கள் என்று குறுந்தொகைச் செய்யுள் கூறுகிறது
இவற்றையும் பார்க்கவும்
தொகுஅடிக்குறிப்பு
தொகு1. • நெடுமிடல் சாய, கொடு மிடல் துமிய, (பதிற்றுப்பத்து 32-10)
நீடூர் கிழவோன்வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண், கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன, (பரணர் பாடல் அகநானூறு 266)
வாடாப் பூவிற் கொங்கர் ஓட்டி நாடுபல தந்த பசும்பூண் பாண்டியன் என்று அகநானூறு (செய்யுள் 253: 4-5)கூறுகிறது ... ...
நெடுமிடல் சாயக் கொடுமிடல் துமியப்
பொருமலை யானையோடு புலங்கடை இறுத்து
(பதிற்றுப்பத்து நாலாம் பத்து2:10-11)
நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் (அகம் 266: 12.)
கறையடி யானை நன்னன் பாழி ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்க் கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞிலி, புள்ளிற் கேம மாகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வான் அமலை ஆடிய ஞாட்பு (அகம் 142:9-14) என்று அகப்பாட்டுக் கூறுகிறது.
- மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 3
- பரணர் – குறுந்தொகை 393
- முனைவர் வ. குருநாதன் (2001, திருவள்ளுவர் ஆண்டு 2032). சங்ககால அரச வரலாறு. தஞ்சாவூர் - 613005: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம். பக். 162 - 177.
- மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (186 - 188)/232.
- அகம் 162, 231, 253, 338 குறுந்தொகை 393
- புறநானூறு 206
- சேரமன்னர் வரலாறு -ஔவை துரைசாமி