அந்தாதிகள் ஆறு (நூல்)
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
அந்தாதிகள் ஆறு என்பது சாரதிதாசன் என்னும் கவிஞர் பாடிய 74 நூல்களில் ஒன்று. முந்தைய பாடலின் ஈற்றுப்பகுதி அடுத்த பாடலின் முதலில் வரும்படி அந்தாதித் தொடையாக இந்த நூல் தொகுப்பில் உள்ள ஆறு நூல்களும் அமைந்துள்ளன. [1] வள்ளலார் தெய்வத்தை அருளொளிவடிவமாகக் கண்டு விருத்தம், வெண்பா, யாப்புகளாலும், சிந்து, தாழிசை முதலான இசைப்பாடல்களாலும் போற்றிப் பாடியது போன்று, இந்த நூலாசிரியர் சாரதிதாசன் ஆங்காங்கே கோயில் கொண்டுள்ள தெய்வங்களை மரபுவழி வந்த வெண்பா, கட்டளைக் கலித்துறை யாப்புகளால் போற்றிப் பாடியுள்ளார்.
இவரது பாடல்கள் தெளிவான, எளிய, இனிய தமிழில் அமைந்துள்ளதை அவரது நூல்களுக்கு மதிப்புரை வழங்கிய அறிஞர்கள் [2] [3] பாராட்டியுள்ளனர். இந்த நூலின் பாடல்களில் புராணக் கதைகள் இழையோடுகின்றன.
இந்தத் தொகுப்புப் பதிப்பில் ஆறு நூல்கள் உள்ளன. அனைத்தும் அந்தாதி தொடுப்பு கொண்டவை. காஞ்சி சங்கராச்சாரியார் [4] முதலான சமயப் பெருமக்களும், புலவர் தெ தட்சிணாமூர்த்தி போன்ற தமிழச் சுவைஞர்களும் இந்த நூலைப் போற்றி மதிப்புரை வழங்கியுள்ளனர். சாற்றுக்கவிகள் பல இந்த நூலைப் போற்றுகின்றன. நூலின் தலைப்புகள் வடமொழி கிரந்த எழுத்துக்களைக் கொண்டவையாக இருப்பினும் பாடல்களில் கிரந்த எழுத்துத்துக்கள் யாண்டும் பயன்படுத்தப்படவில்லை. வடசொற்கள் சில தென்படுகின்றன.
ஆசிரியர் சாரதிதாசன்
தொகுஇதன் ஆசிரியர் பெயர் சௌரிராசன். நூல்களில் பதிவேற்றியுள்ள புனைபெயர் சாரதிதாசன். இவர் திருவில்லிபுத்தூரில் 1943, ஏப்பிரல், 6-ஆம் நாள் பிறந்தார். தந்தை பெயர் சடகோபய்யங்கார். தாயார் பெயர் செங்கமலம்.
இவரது 74 நூல்களில் 3074 பாடல்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நிதி [5] மரபு மாமணி [6] போன்றவை இவர் பெற்றுள்ள விருதுகளில் சில.
காந்தி என்னும் தலைப்பில் பாடிய கவியரங்கிற்கு இவர் தலைமை தாங்கியது பற்றித் தினமலர் நாளேடு குறிப்பிடுகிறது.[7]
ஸ்ரீ ஆனைமுகன் திருவந்தாதி
தொகுஇது காப்புச்செய்யுள் 1, பாடல்கள் 100, நூற்பயன் கூறும் பாடல் ஒன்று - என்று 103 வெண்பாப் பாடல்களைக் கொண்டது. எடுத்துக்காட்டுக்கு இரண்டு பாடல்கள்:
- வேறில்லை இங்கே விரும்பும் பிறதெய்வம்
- பேறில்லை நின்புகழைப் பேசாமல் - சோறில்லை
- நீரில்லை தூங்கும் நிலையில்லை நீயில்லா
- ஊரில்லை ஔவியமில் ஓர் (பாடல் 91)
- ஓரானை ஒற்றை மருப்பானைப் பற்பலவாம்
- பேரானை யார்க்கும் பெரியானைச் - சீரானை
- வெற்றித் திருவானை வேழ முகத்தானை
- பற்றிப் பணிசெய் பணிந்து (பாடல் 92)
ஸ்ரீ முருகன் அந்தாதி
தொகுகாப்புச் செய்யுள் 1, நூற்பயன் 1, ஆகியவற்றுடன் 102 வெண்பாக்ககளைக் கொண்டது இந்த நூல். எடுத்துக்காட்டாக இரண்டு பாடல்கள்:
- இங்குமில்லை அங்குமில்லை ஈறாறு கையானே
- எங்குமில்லை ஈடுனக்கே யாவருமே - கொங்குமலி
- தாமரைகள் ஆறில் தவழ்ந்த சரவணனே
- ஏமருசீர் எம்மிறை யே (பாடல் 16)
- ஏகாந்த காக இருந்துனையே யானினைக்க
- மோகாந்தம் முற்றும்நீ முன்னழித்துப் - பாகார்ந்த
- சொல்லி குறவள்ளி தோள்புணரும் தூயமலை
- வல்லி சுத!அருள் வாய் (பாடல் 17)
ஸ்ரீ கலைமகள் அந்தாதி
தொகுஇந்த நூலில் கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்த 100 பாடல்களுடன் வெண்பாவாலான காப்புச் செய்யுள் ஒன்றும், நூற்பயன் கூறும் பாடல் ஒன்றும் உள்ளன. எடுத்துக்காட்டுப் பாடல் ஒன்று:
- புருவம் சிலையாய்ப் பொலியும் அனையே!என் புந்தியிலே
- கருவம் நுழையாக் கதியை அருள்வாய்! கலைமகளே!
- திருவும் அறிவும் திறனுமே வந்தெனைச் சேருதற்குப்
- பருவம் அறிந்து பணிகளை ஆற்றப் பணித்தருளே (பாடல் 94)
திருமால் அந்தாதி
தொகுதிருமாலை இந்த நூல் வெண்பாவால் போற்றுகிறது. காப்பு, நூற்பயன் பாடல்களுடன் 102 வெண்பாக்கள் இதில் உள்ளன. எடுத்துக்காட்டுப் பாடல்:
- புகலாவான் போற்றிப் புகழ்வார்க்கே மற்றோர்க்(கு)
- இகலாவான் இண்டைமலரச் செல்வி - அகலாத
- தண்டுளவ மார்பன்தன் தாயினால் தாம்பினில்கட்
- டுண்டபிரான் நற்குணங்கள் ஓது. (பாடல் 31)
திருமகள் அந்தாதி
தொகு102 வெண்பாக்களைக் கொண்டுள்ள இந்த நூலில் காப்பு, நூற்பயன் பாடல்களும் அடங்ஙகும். பாடல் - எடுத்துக்காட்டு:
- துயரப் பெருவரையைத் தூளாக்கிக் காக்கும்
- அயர்வை ஒழித்துள்ள அன்பை - நயந்துதரும்
- நாரண நம்பிதன் நாயகியுன் கண்ணோக்கே
- தாரணி மீதினில் தான்
ஸ்ரீ வடிவுடையம்மன் அந்தாதி
தொகுசென்னை, திருவொற்றியூர் கோயில் வடிவுடையம்மன்மீது பாடப்பட்ட 100 கட்டளைக் கலித்துறைப் படல்களும், காப்பு, குரு வணக்கம், நூற்பயன் கூறும் பாடல்கள் மூன்றும் இதில் உள்ளன.
- நன்றே நினைக்கவும் நன்றே உரைக்கவும் நற்பணிகள்
- ஒன்றே இயற்றவும் உன்னடி யார்கள் உறைவிடம்நான்
- சென்றே திளைக்கவும் ஒற்றியூர்த் தேவீ! சிறிதருளாய்
- மன்றே நடிப்போன் மனைவீ! வடிவாய்! மரகதமே! (பாடல் 56)
மேற்கோள்
தொகு- ↑ கவிஞர் சாரதிதாசன், அந்தாதிகள் ஆறு, ஸிம்ஹாலயா பதிப்பகம், சென்னை 75, 2020
- ↑ அந்தாதிகள் ஆறு நூலுக்கு புலவர் செ. தட்சிணாமூர்த்தி வழங்கிய அணிந்துரை பக்கம் 7
- ↑ சங்கராச்சாரிய சாமிகள் ‘திருமுகவோலை’ நாள் 19-2-1999, நூல் பக்கம் 5
- ↑ நாள் 19-02-1999
- ↑ சென்னை, கம்பன் கழகம் வழங்கிய விருது
- ↑ புதுச்சேரிப் பாவலர் பயிற்சிப் பட்டறை மன்றம் வழங்கிய விருது
- ↑ அக்டோபர் 23, 2016