திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் ஜிநாலயம்

தமிழ்நாட்டில் உள்ள ஒரு சைனக்கோயில்
(அப்பாண்டைநாதர் ஜிநாலயம், திருநறுங்கொண்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்பாண்டைநாத சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊரான திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவும் அழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள கோயிலாகும். திருநருங்கொண்டை, தற்பொழுது திருநறுங்குன்றம் என அழைக்கப்படுகிறது.உளுந்தூர்பேட்டையிலிருந்து வடமேற்காக 16 கி.மீ அல்லது திருக்கோவிலூரிலிருந்து 21 கி. மீ தென்கிழக்காகவும் அமைந்துள்ளது. இவ்வூருக்கருகில் திருநறுங்குன்றம் என்ற குன்றில் வரலாற்று சிறப்பு மிக்க திகம்பர சமண அப்பாண்டைநாதர் கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் சமண மதத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான பார்சுவநாதருக்கு அமைக்கப்பட்டது ஆகும். மேலும் இந்த மலையில் உள்ள குகையில் 12 சமணப் படுகைகளும் உள்ளன.

அப்பாண்டைநாத சுவாமி கோயில் கோபுரம் மேற்குபுறம்

கோயில் அமைவிடம்

தொகு

திருநறுங்குன்றத்துக்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய சிறு குன்று ஒன்று உள்ளது. குன்றின் மேலே செல்லுமுன் அன்பர்கள் துவக்கத்திலுள்ள சேத்திரபாலகரை வணங்கி படியேறுகின்றனர். கீழே சனிபகவான் உள்ளார். இது இயற்கையே உருவாக்கிய கோயில்போல் இருக்கிறது. இரு பெரும் உருளைக்கற்கள் கிழக்கும் மேற்குமாய் எதிரேதிரே நின்று உச்சியில் இணைந்துள்ளன. கிழக்குப் பாறையில் உட்பகுதியின் கீழே அப்பாண்டநாதர் நான்கடி உயர உருவச்சிலையாக மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். கல்வெட்டுகளில் இம்மண்டபம் மேலைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது. மேலும் இங்கு பகவான் சந்திரநாதர், பத்மாவதி அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. சுனை ஒன்றும் உள்ளது. இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன. இங்கு குணபத்திர முனிவர் என்பவர் ‘வீர சங்கம்’ நிறுவி கல்வித் தொண்டு செய்துள்ளார். அப்பரும் சம்பந்தரும், இவரையும் வீரசங்கத்தையும் போற்றிப் பாடி உள்ளனர்.

பார்சுவநாதர் கோயில்

தொகு
 
பார்சுவநாதர் சிற்பம்

மலையின் மேற்பரப்பில் கிழக்கு மேற்காக இரு பாறைகளுக்கு இடப்பட்ட பகுதியில், கிழக்கிலுள்ள பாறியின் மேற்கு முகப்பில் பார்சுவநாதர் திருவுருவம் புடைப்பு சிற்பமாக வடிக்கப்படுள்ளது. தாமரை மலர் மேல் நின்றகோலத்தில் இருக்கும் இவ்வுருவத்தின் தலைக்கு மேலாக ஐந்துதலை நாகமும்,அதற்கு மேல் முக்குடையும் உள்ளன. இருபுறமும் சாமரம் வீசுவோர் மென்கோட்டுச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளனர். இங்கு பார்சுவநாதரே அப்பாண்டைநாதர் என அழைக்கப்படுகிறார். காலம் பொ.ஊ. 9 ம் நூற்றாண்டு.[1]

சந்திரபிரபர் கோயில்

தொகு
 
சந்திரபிரபர்

சந்திரநாதர் கோயில் சந்திர பிரபர் கோயில் என அழைக்கப்படுகிறது. பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில், சந்திரபிரபர் திருவுருவம் சுதைச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.கல்வெட்டுகளில் இம்மண்டபம் கீழைப்பள்ளியென குறிப்பிடப்படுகிறது.[2] கருவறை அர்த்தமண்டபம் என தொடங்கிய கோயில் பொ.ஊ. 12 ம் நூற்றாண்டில் கோயிலைச்சுற்றி மேடைப்பகுதியும், பொ.ஊ. 13 ம் நூற்றாண்டில் உட்புற திருச்சுற்றும், மகாமண்டபமும் கட்டப்பட்டன.[3] பொ.ஊ. 16ம் நூற்றாண்டில் சித்திரக்கூட மண்டபம், முக மண்டபம் ஆகியவை எழுப்பப்பட்டன.[4] இக்கோயிலுக்கு முன் பலிபீடமும், கொடி மரமும் காணப்படுகின்றன. மேலும் மண்டபத்தின் உள் பகுதியில், தீர்த்தங்கரர் திருவுருவச் சிலைகளூம், தர்மதேவி, பிரம்மதேவர் சிலைகளூம் காணப்படுகின்றன. ஜிநவாணி மற்றும் பத்மாவதி அம்மனுக்கு தனி கோவில்கள் உள்ளன.[5]

ஜினவாணி (சரஸ்வதி) கோயில்

தொகு
 
கஜபிருஸ்ட வடிவ சரஸ்வதி கோயில்

சித்திரக்கூட மண்டபத்திற்க்கு வடக்காகவும், மூலவர் பார்சுவநாதர் உள்ள பாறைக்கு கிழக்காகவும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. இதனை அழகம்மை மண்டபம் என்பர். அம்மண்டபத்தை ஒட்டிக் கிழக்கில் கருவறை, அர்த்த மண்டபம், முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்ட சிறிய கோயில் உள்ளது. இதன் கருவறை அரைவட்ட வடிவில் கஜபிருஸ்ட அமைப்பில் காணப்படுகிறது. இதில் ஜினவாணி எனும் சரஸ்வதி கற்சிலை பாழடைந்த நிலையில் உள்ளது.

பத்மாவதி அம்மன் கோயில்

தொகு

மலையின் தெற்குபுறமாகப் பத்மாவதியம்மன் கோயில் பொ.ஊ. 1996 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் கருவறையில் சலவைக் கல்லாலான பத்மாவதி மற்றும் பார்சுவநாதர் ஆகியோரின் திருவுருவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக பெரிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

கோபுரம்

தொகு

இவ்வணைத்து கோயில்களையும் உள்ளடக்கியவாறு, மதிற்சுவர் கட்டப்பட்டுள்ளது. இம்மதிலுக்கு வலுவூட்டும் வகையில் குன்றின் கிழக்கு பகுதியில் பெரிய வரிக்கற்களை அடுக்கி கோட்டை அரண் போல இவ்வமைப்பு உள்ளது. இப்பிரதான சுவரையொட்டி கிழக்கு புறமாக கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நேர்கிழக்காய் செங்குத்தாக பள்ளம் இருப்பதால் கோபுரம் சற்றுத்தள்ளி தென்கிழக்காக அமைந்துள்ளது. இதன் காலம் பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டு.[6] மலைமீது கோயிலை அடைய 51 பெரிய படிக்கட்டுகள் உள்ளன.[7]

சமணச் சிற்பங்கள்

தொகு

பல்வேறு கற்சிற்பங்களும்,சுதைச் சிற்பங்களும் இக்கோயிலில் உள்ளன.

ரிஷபநாதர்

தொகு
 
ரிஷபநாதர்

அப்பாண்டைநாதர் கோயிலின் வடக்கு மண்டபத்தில் 104 செ.மீ உயரமும் 60 செ.மீ அகலமும் கொண்ட ரிஷபநாதர் சிற்பம் உள்ளது. இச்சிற்பம் அகன்று பரந்த உடலமைப்புடனும், சதுர வடிவ முகத்துடனும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறது. இச்சிலைக் காட்டும் கண் மூடிய தியானம், வடித்த காதுகள். மலர்ந்த முகம், நிமிர்ந்த அசைவற்ற உடல் ஆகிய தன்மைகள் பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கலைப்பாணியாகும்.

சந்திரநாதர்

தொகு

இங்குள்ள சந்திரநாதர் 130 செ.மீ உயரமும் 117 செ.மீ அகலமும் கொண்ட சந்திரநாதரின் பெரிய சுதை வடிவம் காணப்படுகிறது.[8] இவர் தியான்த்தில் பரந்த உடலமைப்பினையும், அகன்ற மார்பினையும், மூடிய கண்களையும் பெற்றுள்ளார். இவரது இருபுறமும் சாமரம் வீசுவோர் சிம்மங்களும் காட்டப்பட்டுள்ளது. இவரது பின்புறம் திண்டும், தலையில் சுருண்ட முடியும், நீண்ட காதுகளும் தெளிவாக உள்ளது. தலையின் பின்புறம் அடைவட்ட பிரபையும், முக்குடையும் காணப்படுகிறது.[9]

உலோகப் படிமங்கள்

தொகு

இக்கோயிலில் பல உலோகப்படிமங்கள் காணப்படிகிறது, பெரும்பாலனவற்றின் காலம் பொ.ஊ. 16 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். சில படிமங்கள் சோழர் காலத்தைச் சார்ந்தவை ஆகும்.

சந்திரநாதர்

தொகு

இவரின் உலோகப்படிமம் பீடம் முதல் 37 செ.மீ உயரம் கொண்டுள்ளது. இவர் நீண்டு ஒடுங்கிய உடலமைப்பையும், தொங்கவிடப்பட்ட கைகளையும், வளைவின்றி அமந்த கால்களையும் கொண்டுள்ளார். சதுர வடிவ முக அமைப்பும், மூடிய கண்கள் என இயற்கையாக காட்சி தருகிறது. பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் இந்த நடுநாட்டு பகுதியை ஆட்சிபுரிந்த ஆளப்பிறந்தான் மோகன்கச்சிராயன் என்னும் காடவராய சிற்றரசன் திருநருங்கொண்டை கீழைப்பள்ளிக்கு இதை வழங்கியுள்ளான். இதனை அப்பீடத்திலுள்ள சாசனம் மூலம் அறியலாம்.[10]

இப்படிமம் கச்சிநாயகர் எனப்பெயர் பெற்றிருந்தது. இக்கோயிலில் உள்ள படிமங்களில் இதுவே பழமையானது.

நேமிநாதர்

தொகு

நேமிநாதர் படிமம் 80 செ.மீ உயரமும் 21 செ.மீ அகலமும் கொண்டது. நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இவரது தோற்றம் கம்பீரமாகவும் வட்ட வடிவ தலையமைப்பும், அதில் முத்துக்கள் கோர்க்கப்பட்டதைப் போன்ற முடியமைப்பும், புன்முருவல் பூத்த முகம், மெல்லிய மூடிய கண்கள், நீண்ட பருத்த உடலமைப்பு கொண்டதாகும். இப்பீடத்தில் கீழ்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது:

தேவலைக்கு முன்பாக உள்ள எழுத்துக்கள் தேந்த நிலையில் உள்ளதால் படித்தறிய இயலவில்லை.

தீர்த்தங்கரர்

தொகு

தீர்த்தங்கரர் படிமம் 43 செ.மீ உயரமும், 29 செ.மீ அகலமும் கொண்டுள்ளது. சதுரவடிவ பீடத்தில் தாமரை மலரில் நின்றவாறு உள்ள இத்தீர்த்தங்கரர் வட்ட வடிவ முகமும் வயிற்றில் மடிப்பும் இயல்பாகப் பெற்றுள்ளார். இதன் பீடத்தில் கீழ்கண்டவாறு எழுதப்பெற்றுள்ளது.

தருமதேவி

தொகு

தருமதேவியின் இரு உலோகப்படிமங்கள் காணப்படுகிறது. இவற்றில் பெரிய தருமதேவியின் படிமம் 60 செ.மீ உயரத்துடன், திரிபங்க உடல் வளைவுடன் பத்ம பீடத்தில் நின்ற நிலையில் உள்ளது. இவரின் தலையில் கரண்ட மகுடம், கந்தமாலை, கழுத்தணிகள், கேயூரம், கைவளை, கங்கணம், பத்ரகுண்டலம், மேகலை முதலியவை அணிந்துள்ளார்.

கல்வெட்டுகள்

தொகு

பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள், முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன், இரண்டாம் இராஜேந்திர சோழன், இரண்டாம் குலோத்துங்கன், மாறவர்ம விக்கிரம பாண்டியன்[13] சடையவர்மன் சுந்தர பாண்டியன், ஏழிசை மோகன காடவராயன் ஆகியோரது காலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் திருநறுங்குன்றம் மலையில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுக்கள் சமணக் கோயிலுக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்ட விவரங்களைத் தெரிவிக்கின்றது. குன்றின் அருகில் உள்ள ஏரியின் பெயர், குந்தவைப் பேரேரி என்பதாகும்.[14]

சமண படுகைகள்

தொகு

அப்பாண்டைநாதர் கோயிலின் தெற்கே 40 அடி நீளமுள்ள கிழக்கு திசை பார்த்த இயற்கை குகையில், பன்னிரெண்டிற்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் 10 அடி நீளமுடையதாகவும், இரண்டறை அடி அகலமுடையதாகவும் உள்ளது.[15][16]

சமண மடம்

தொகு

இக்குகைப்பள்ளியில் வீரசங்கம் என்ற சமணசங்கம் செயல்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படுகிறது.[17] இங்கு இருந்த சமணத்துறவிகள் சமணத்துறவிகள் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று சமணச்சிற்பங்களை செதுக்கியுள்ளனர்.[18] வீரசங்கம் என்ற சமணத்துறவிகளின் சங்கம் மடத்தின் ஒரு அங்கமாகத் திகழ்ந்திருக்க வேண்டும். காலம் பொ.ஊ. 9 ஆம் நூற்றாண்டு. சந்திரநாதர் கோயிலின் திருச்சுற்றின் அடிப்பகுதியில் காணப்படும் மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டு பாடல் இவ்வீரசங்கத்தைப் பற்றி கூறுகிறது.

திருநருங்கொண்டை மலைப்பதிகமும் இந்த வீரசங்கத்தைப் பற்றி பதிகப் பாடலில் குறிப்பிடுகிறது.[20]

இலக்கியங்கள்

தொகு

இக்கோயில் குறித்து அப்பாண்டநாதர் உலா, திருமேற்றிசை அந்தாதி, திருநருங்கொண்டை மலைப்பதிகம், திருநறுங்கொண்டை தோத்திரமாலை ஆகிய நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.[22]

குறிப்புகள்

தொகு
  1. நடுநாட்டில் சமணம்-2016,பக்கம்:43, ஆசிரியர் முனைவர் த. ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  2. S.I.I, Vol VII,No 1016, A.R.E,385-A-/1902
  3. A.R.E,306/1939-40
  4. S.I.T.I, Vol No:77, A.R.E,299,314/1939
  5. நடுநாட்டில் சமணம்-2016,பக்கம்:44, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  6. A.R.E,315 -1939-40
  7. நடுநாட்டில் சமணம்-2016,பக்கம்:45, ஆசிரியர் முனைவர் த. ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  8. A.R.E,319/1939-40
  9. நடுநாட்டில் சமணம்-2016,பக்கம்:68, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  10. ஏ.ஏகாம்பரநாதன் திருநருங்கொண்டை வரலாறு,பக்கம்:44.
  11. நடுநாட்டில் சமணம்-2016,பக்கம்:69, ஆசிரியர் முனைவர் த. ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  12. நடுநாட்டில் சமணம்-2016,பக்கம்:68, ஆசிரியர் முனைவர் த. ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  13. நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த. ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  14. திருநறுங்கொன்றை -அப்பாண்டை நாதர் கோயில்
  15. திருநறுங்கொன்றும் கோயில் வளாக சமணப்படுகைகள் பாதுகாக்கப்படுமா?, தினமலர், 2011 மே, 24
  16. திருநறுங்குன்றம் கோவில் வளாக சமணப்படுக்கைகள்
  17. ஏ.ஏகாம்பரநாதன் தொண்டைநாட்டு சமணக் கோயில்கள்,பக்கம்:30
  18. A.R.E,252/1936-37
  19. S.I.T.I,Vol. I No:71, A.R.E 299/1939-40
  20. நடுநாட்டில் சமணம்-2016, ஆசிரியர் முனைவர் த.ரமேஷ் உதவி பேராசிரியர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, விழுப்புரம் வெளியீடு:www.ncbhpublisher.com
  21. மு.சண்முகம்பிள்ளை, திருநருங்கொண்டை மலைப்பதிகம், பதிகம்-6
  22. அப்பர் போற்றிய அருகர், கட்டுரை, விஜி சக்கரவர்த்தி, இந்து தமிழ், 2020 சூலை, 6

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு