அப்பு (நக்சலைட் தலைவர்)

எல் அப்பு என்கிற அற்புதசாமி இடதுசாரி தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் 1967ல் உருவான நக்சலைட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்திய இருதலைவர்களில் ஒருவர். இன்னொருவர் பாலன்.

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் அமைக்கப்பட்டுள்ள பாலன, அப்பு ஆகியோரின் நினைவுச் சின்னம் மற்றும் சிலைகள்
பாலன, அப்பு ஆகியோரின் நினைவுச் சின்னத்தில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு

துவக்கக்கால வாழ்க்கை

தொகு

அப்புவுக்கு அற்புதசாமி என்பதே இயற்பெயர் ஆகும் அவர் கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர். அவரது தந்தை பெயர் லியோ அற்புதசாமி இளமைப்பருவந் தொட்டே பெதுவுடைமை இயக்க சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர்.

தொழிற்சங்களில்

தொகு

அப்பு நகராட்சி தொழிலாளர் சங்கம், மோட்டார் தொழிலாளர் சங்கம், ஓட்டல் பணியாளர் சங்கம், ஆலைத் தொழிலாளர் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களில் ஈடுபட்டு அவற்றுக்கு முன்னணி பொறுப்பாளராக இருந்தார். தொழிற்சங்க செயல்பாட்டின் ஒரு பகுதியாக நிலமீட்சிப் போராட்டம், பஞ்சாலைப் போராட்டம் என பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை ஏற்று சிறை சென்றார். இதன்வழியாக அவர் மாநில அளவிலான தொழிற்சங்க செயல்பாட்டாளராக வளர்ச்சியடைந்தார்.

கைது

தொகு

இந்திய சீனப் போர் ஏற்பட்டதைத் தொடர்ந்து நேரு தலைமையிலான இந்திய அரசு தேசதுரோக குற்றச்சாட்டின்பேரில் கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது. இதில் நாடு முழுவதும் ஏறக்குறைய 1000 த்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 பேர் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் அப்புவும் ஒருவர். சுமார் ஓர் ஆண்டுகாலம்வரை சிறையில் இருந்த அப்பு, வெளிவந்த பிறகு கோவை தொழிலாளர்களிடம் நிதி திரட்டி, அவரின் முன்முயற்சியால் 'கோவைத் தொழிலாளர் வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்' எனும் வாசகத்தோடு அப்புவை ஆசிரியராகக் கொண்டு தீக்கதிர் வார இதழ் 1963 ஆம் ஆண்டு சூன் 29 ஆம் தேதியன்று வெளிவந்தது. இந்திய பொதுவுடமைக் கட்சி அமைப்பு ரீதியாக பலமுறை பத்திரிக்கையை நிறுத்தக் கோரிய நிலையில் அதை ஏற்காது அப்பு தொடர்ந்து பத்திரிக்கையை நடத்திவந்தார். இந்திய பொதுவுடமைக் கட்சியில் நாடளவில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியை இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட் என பிளவுபட்ட சூழல் ஏற்பட்டது. அப்பு போன்றவர்கள் மார்க்சிய கம்யூனிஸ்டு பக்கம் நகர்ந்தனர். பின்னர் மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் போக்கிலும் திருப்தி ஏற்படாமல் கட்சிக்குள் வாத பிரதிவாதங்கள் ஏற்பட்டு மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி இயக்கம் தோன்றியது. இது தொடர்பாக சி.பி.எம். முடன் நடைபெற்ற விவாதத்தின் போது அப்பு உள்ளிட்ட பலர் கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

நக்சல்பாரி இயக்கத்தில்

தொகு

இந்நிலையில் அப்பு கல்கத்தா சென்று நக்சல்பாரியின் முதன்மைத் தலைவரான சாரு மஜூம்தாரைச் சந்தித்தார். 1967 நாவம்பர் 11 அன்று கல்கத்தாவில் உள்ள ஷாஹித் மினார் மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அப்பு நக்சல்பாரிப் பாதையின் தேவை குறித்து உரையாற்றினார். மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட சி.பி.ஐ.(மா.லெ) மையக் குழுவுக்கு தமிழகத்திலிருந்து உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

கல்கத்தாவிலிருந்து அப்பு வந்தவுடன் பழைய கட்சியின் மீது அதிருப்தியுடன் இருந்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தோழர்களை ஒருங்கிணைத்தார். அவரின் முயற்சியால் 1968 மார்ச் மாதம் 16 பேரைக் கொண்ட தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டது. ஏழத்தாழ ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட மற்றும் கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன.

இதன்பிறகு சாரு மஜூம்தார் தலைமையிலான நக்சலைட் எனப்படும் இ.க.க (மா.லெ) கட்சியின் சார்பில் 1969ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தஞ்சை மாவட்டம் குமணந்துறை கிராமத்தில் முதல் மாநில மாநாடு நடந்தது. அதில் ஒன்பது பேர் கொண்ட மாநிலக் குழு தேர்வு செய்யப்பட்டது. அதில் அப்பு மாநிலச் செயலாளராகவும், புலவர் கலியபெருமாள் துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2] அப்பு காவல் துறையினரால் தேடப்பட்டார். அவர்மீது எந்த பெரிய குற்றப்பதிவும் இல்லாமலேயே அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார்கள். வால்டர் தேவாரம் தலைமையிலான காவல்படை அவரை 1969 செப்டெம்பரில் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள நாயக்கன் கொட்டாய் என்ற ஊரில் கைது செய்தது. தேடுதல் வேட்டை என்ற பேரில் எளியமக்கள் மேல் போலீஸ் நடத்திய தாக்குதலின் விளைவாகவே அப்பு சரண் அடைந்ததாகச் சொல்லப்படுகிறது.

1969 செப்டெம்பர் 17 அன்று அப்பு தருமபுரி பெண்ணாகரம் அருகே ஒகேனேக்கல் காடுகளில் வைத்து சுட்டுக்கொல்லபப்ட்டு புதைக்கப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. அதிகாரபூர்வமாக இப்போதும் இவர்கள் தேடப்படும் தலைமறைவுக் குற்றவாளிகளே. நாயக்கன்கொட்டாயில் இவர்களுக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்ப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

தொகு
  1. பாவெல் இன்பன் (30 ஆகத்து 2017). "தோழர்.எல்.அப்பு - குன்றா பெருநெருப்பு". கட்டுரை. கீற்று. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.57
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பு_(நக்சலைட்_தலைவர்)&oldid=3886041" இலிருந்து மீள்விக்கப்பட்டது