அமர் கோ. போசு

அமர் கோபால் போசு (Amar Gopal Bose) (நவம்பர் 2, 1929  – சூலை 12, 2013) அமெரிக்காவில் பேராசிரியராகவும் தொழில்முனைவோருமாக இருந்தவர். போசு ஒலிபெருக்கிகள் செய்து விற்கும் போசு வணிகநிறுவனத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர். மாசாச்சுசெட்டு தொழிநுட்பக் கழகத்தில் பேராசிரியராக 45 ஆண்டுகள் இருந்தார்[1]. 2011 இல் இவர் போசு வணிகநிறுவனத்தின் பெரும்பான்மைச் சொத்தை மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்துக்கு, பங்குதாரர்-வாக்கில்லாத நற்கொடையாக அதன் கல்விப்பணிக்கும் ஆய்வுக்குறிக்கோள்களுக்குமாக அளித்தார்[2]

அமர் கோ. போசு
படிமம்:Amar gopal bose.jpg
பிறப்புஅமர் கோபால் போசு
நவம்பர் 2, 1929(1929-11-02)
ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா, அமெரிக்கா
இறப்புசூலை 12, 2013(2013-07-12) (அகவை 83)
வேலாந்து, மாசாச்சுசெட்டு, அமெரிக்கா.
இனம்இந்தியவழி அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகம் (MIT)
பணிபோசு வணிகநிறுவன நிறுவனரும் அதன் தலைவரும்.
சொத்து மதிப்பு$1 பில்லியன் (2011)
சமயம்இந்து மதம்
வாழ்க்கைத்
துணை
பிரேமா போசு (மணவிலக்கம்), உர்சூலா போல்ட்ஃசவுசர்
பிள்ளைகள்வானு போசு
மாயா போசு

2007 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஃசு 400 (Forbes 400) என்னும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் இவர் 271 ஆம் இடத்தில் மொத்த சொத்து மதிப்பாக அமெரிக்க $1.8 பில்லியன் கொண்டவராக வரிசைப்படுத்தப்பட்டார்[3] 2009 ஆம் ஆண்டில் இவர் இந்தப் பில்லியனர் பட்டியலில் இடம் பெறவில்லை. ஆனால் மீண்டும் 2011 ஆம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்கத் தாலர் சொத்து உடையவராகப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்[4]

இளமைக்காலமும் கல்வியும்தொகு

போசு, அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஃபிலடெல்ஃபியா நகரில் நோனி கோபால் போசு என்பவருக்கும் ஓர் அமெரிக்கப் பெண்மணிக்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தந்தையார் இந்திய விடுதலைக்கான எழுச்சிகளில் பங்குகொண்ட வங்காளியர்[5], அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை சென்றவர், ஆனால் 1920 இல் பிரித்தானிய அடக்குமுறையில் இருந்து தப்பிக்க கொல்கத்தாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடியேறியவர் [6]. அமர் போசு, தன் 13 ஆவது அகவையிலேயே தொழில்முனையும் தன்மையையும், மின்னணுவியல் (எதிர்மின்னியியல்) துறைகளில் உள்ள ஆர்வத்தையும் காட்டினார்[7].

பென்சில்வேனியாவில் ஆபிங்டன் மேனில உயர்நிலைப்பள்ளியில் இருந்து தேர்ச்சி பெற்ற பின்னர், மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்து இளநிலை அறிவியல் (மின்பொறியியல்) (BS) பட்டத்தை 1950 களில் பெற்றார். அதன் பின் நெதர்லாந்தில் உள்ள ஐண்டோவன் (Eindhoven)இல் உள்ள பிலிப்ஃசு நிறுவனத்தின் ஆய்வுச்சாலையில் ஓராண்டு பணியாற்றினார். பின்னர் ஃபுல்பிரைட்டு (Fulbright) ஆய்வு மாணவராக இந்தியாவில் புது தில்லியில் ஒராண்டு இருந்தார். அப்பொழுதுதான் தன் பிற்கால மனைவியாகிய பிரேமா அவர்களைச் சந்தித்தார். இவர்கள் பின்னாளில் மணவிலக்கு பெற்றனர். இவர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் நோர்பர்ட்டு வீனர் (Norbert Wiener), இயூக்கு-இங்கு இலீ (Yuk-Wing Lee) ஆகியோரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார். இவரின் முனைவர்ப் பட்ட ஆய்வு நேர்சார்பிலா ஒருங்கியங்களப் (non-linear systems) பற்றியது.

பணிவாழ்க்கைதொகு

மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகத்தில் இருந்து பட்டம் பெற்ற பின்னர் அங்கேயே அவர் துணைப்பேராசிரியராகச் சேர்ந்தார். 1956 இல் இவர் உயர்மதிப்புடைய இருசெவிக் கேளொலி தரும் ஒலிபெருக்கிக் கருவிகள் வாங்கிப் பயன்படுத்தியபொழுது அவற்றின் தரம் இவருக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. நேரடியாக நிகழும் நிகழ்ச்சிகளின் இயல்புத்தன்மையைச் சரியான துல்லியத்துடன் மீளுருவாக்கவில்லை என்று உணர்ந்தார். இதுவே இவரை ஒலிபெருக்கிப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டியதாகும். அப்பொழுது ஒலிபெருக்கி நுட்பத்தில் இருந்த குறைபாடுகளை முறையாக ஆய்ந்தார். இவர் செய்த ஒலிசார் ஆய்வுகளின் பயனாய் ஒரு பெரிய அரங்கில் கேட்கக்கூடிய ஒலிகளை (பொருள்களின் மீது பட்டு எதிரும் ஒலிகளின் விளைவுகளையும்) வீட்டில் கேட்கும்படியான இருசெவி கேளொலி தரும் ஒலிபெருக்கிகளைக் கண்டுபிடித்தார். ஒலிக்கேளுணர்வியல் (psychoacoustic) துறையில் இவருடைய குவியம் இருந்ததே இவர் நிறுவிய ஒலிபெருக்கி வணிக நிறுவனத்துக்கு அடிப்படையாக இருந்தது.

போசு தான் நிறுவ விரும்பிய தொழில்நிறுவனத்துக்குத் தேவைப்பட்ட முதலீட்டை நன்னம்பிக்கை முதலீட்டாளர்களிடம் (ஏஞ்சல் முதலீட்டாளர்) இருந்து பெற 1964 இல் அணுகினார். அவர்களுள் இவருடைய முனைவர்ப் பட்ட நெறியாளர் மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் ஒய். தபிள்யூ. இலீ ( Y. W. Lee) அவர்களும் ஒருவர். இன்றளவும் போசு நிறுவனத்திற்கு முக்கியமான புத்தாக்க உரிமங்களை போசு பெற்றிருந்தார். இந்தப் புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் ஒலிபெருக்கியின் வகுதி (design) பற்றியும் நேர்சார்பிலா இரு-நிலை மாறுகையுடைய டி-வகுப்பு மிகைப்பிகள் (Class D Amplifiers) பற்றியதாகும். இன்று இந்த போசு நிறுவனம் உலகளாவிய பரப்பில் ஏறத்தாழ 9,000 பணியாள்களுடன் இயங்கி வரும் ஒரு தனியார் நிறுவனம். போசின் தொழில்நிறுவனம் தனியார் நிறுவனமாகவே இன்றளவும் உள்ளது, இது பற்றி 2004 இல் திரு போசு, பாப்புலர் சயன்சு என்னும் இதழுக்குத் தந்த நேர்காணலில், தான் பணம் ஈட்டுவதற்காக (மட்டும்) இத்தொழில் நிறுவனத்தை நிறுவவில்லை என்றும், தான் தொழிலில் நுழைந்ததற்கான காரணம் இதுவரை முன்பு செய்யாத, ஆர்வமூட்டுவனவற்றைச் செய்யவே என்றும் கூறினார் ("I would have been fired a hundred times at a company run by MBAs. But I never went into business to make money. I went into business so that I could do interesting things that hadn't been done before.")

இவர் போசு நிறுவனத்தின் பொறுப்பாளியாக இருந்த அதே நேரம் எம்.ஐ.டி யில் 2001 ஆம் ஆண்டுவரை பேராசிரியராகப் பணியில் இருந்தார். தன் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்கை (வாக்களிக்கவியலா பங்குகளை), எப்பொழுதும் விற்கலாகாது என்னும் கட்டுப்பாடுடன் எம்.ஐ.டி-க்கு வழங்கினார் [8]

தனக்குத் தோன்றும் சிறந்த கருத்துகள் திடீரென்று தோன்றியவை என்றும், அவை காரணத்தின் அடிப்படையில் எழுந்தவை அல்ல என்றும், உள்ளறிவுணர்வான கருத்துகள் என்றும் கூறியுள்ளார் ("These innovations are not the result of rational thought; it's an intuitive idea."[9]. இவருடைய மகன் வானு போசு இன்னொரு நிறுவனமான வானு நிறுவனம் (Vanu, Inc.) என்பதன் தலைவர். இது கம்பியில்லா தொழில்நுட்பத்துறையில் மென்கலன் பற்றிய பொருள்களைப் பற்றிய நிறுவனம், அலைபரப்பும் நிலையங்களில் இருந்து ஒரே நேரத்தில் கைபேசிகளுடன் தொடர்பு கொள்ளும் "GSM", "CDMA", "iDEN" போன்ற பல்வேறு தொலைதொடர்பாடல் முறைகளின் தொடர்பொழுக்கம் (புரோட்டொக்கால்) பற்றிய துறைகளில் ஒலி, தரவு முதலியவற்றைப் பரிமாறுவது பற்றிய நுட்பங்களின் அடிப்படையில் இயங்கும் நிறுவனம்[10].

பெருமைகளும் பரிசுகளும்தொகு

 • சிறப்பாளர் (Fellow), ஐஇஇஇ, 1972 - ஒலிபெருக்கி சார்ந்த ஆக்கங்களுக்காகவும் வகுதிக்காகவும் (design), இருநிலை மிகைப்பி-மாற்றிகள் (amplifier-modulators), நேர்சார்பிலா ஒருங்கியங்கள் (nonlinear systems) ஆகியவற்றுக்காக வழங்கப்பெற்றது.
 • பெருமைய உறுப்பினர், ஒலியியல் பொறியியல் குமுகம், 1985.
 • 2010 ஐஇஇஇ/ஆர்.எசு.இ உவுல்ஃவுசன் சேம்சு கிளார்க்கு விருது (IEEE/RSE Wolfson James Clerk Maxwell Award), நுகர்வோர் மின்னணுவியல் ஒலியியல் கருவிகளின் துல்லிய ஒலிமீளுருவாக்குமையின் சிறப்பு, தொழிலக முன்னாண்மை, பொறியியல் கல்விப்பணி ஆகியவற்றில் செய்த அரும்பணிகளுக்காக வழங்கப்பட்டது. ("outstanding contributions to consumer electronics in sound reproduction, industrial leadership, and engineering education".)[11]
 • 2011 இல்,மாசாச்சுசெட்டு தொழில்நுட்பக்கழகத்தில் முதல்வரிசையான 150 புத்தாக்குநர்களில்(MIT150)இவர் #9 ஆவதாகக் குறிக்கப்பெற்றார்.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

 1. "Amar G. Bose, Acoustic Engineer and Inventor, Dies at 83" த நியூயார்க் டைம்ஸ். Retrieved 13 July 2013.
 2. "Amar Bose ’51 makes stock donation to MIT". மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம். 2011-04-29. 
 3. "Four Indian Americans make it to Forbes list". www.expressindia. மூல முகவரியிலிருந்து பிப்ரவரி 16, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் February 18, 2008.
 4. "Amar Bose's profile". www.forbes.com. பார்த்த நாள் April 2, 2011.
 5. "Rich & Famous In The US | Padma Rao Sundarji". Outlookindia.com (1996-05-22). பார்த்த நாள் 2012-07-21.
 6. Lemley, Brad (2004-10-01). "Discover Dialogue: Amar G. Bose". Discover Magazine. http://discovermagazine.com/2004/oct/discover-dialogue. பார்த்த நாள்: 2012-02-01. 
 7. Siliconeer: January 2005
 8. Gift to MIT from Amar Bose Raises Tax Questions by Stephanie Strom. New York Times. April 30, 2011.
 9. Popular Science Dec 2004
 10. Shenoy, M. J. A. (1999-07-26). "Bose And Bose Vs MIT". ரெடிப்.காம். http://www.rediff.com/news/1999/jul/26us.htm. பார்த்த நாள்: 2012-02-01. 
 11. "IEEE/RSE Wolfson James Clerk Maxwell Award Recipients". IEEE. மூல முகவரியிலிருந்து 2013-05-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் அக்டோபர் 4, 2011.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்_கோ._போசு&oldid=3319642" இருந்து மீள்விக்கப்பட்டது