அமலோற்பவ அன்னை

அமலோற்பவ அன்னை (Our Lady of the Immaculate Conception) என்பது இயேசுவின் தாயாகிய மரியாவுக்கு அளிக்கப்படுகின்ற சிறப்புப் பெயரும், மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மையை (dogma) வெளிப்படுத்தும் போதனையும் ஆகும். இந்த மறையுண்மையைக் கத்தோலிக்க திருச்சபை அறிக்கையிடுகிறது.[1]

மாசற்ற அமலோற்பவ அன்னை. ஓவியர்: பர்த்தலமே எஸ்தேபான் முரில்லோ (1617-1682). காப்பிடம்: எசுப்பானியா

பிறப்புநிலைப் பாவம் (original sin) என்பது பழைய கத்தோலிக்க தமிழ் வழக்கில் "சென்மப் பாவம்" என்று அறியப்பட்டது.

மரியாவின் அமல உற்பவ விழா ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மறையுண்மை

தொகு

இயேசுவின் தாய் மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை கிறித்தவ நம்பிக்கையாகத் தொடக்ககாலத் திருச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். ஆயினும் அந்த மறையுண்மையை அனைத்துலகுக்கும் அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தவர் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ஆவார்.

திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் 1854ஆம் ஆண்டு, திசம்பர் 8ஆம் நாள் இயேசுவின் அன்னையாகிய மரியா பற்றிக் கீழ்வரும் மறையுண்மையை வழுவாவரத்தோடு, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்[2]:

இந்த மறையுண்மை மரியாவின் கன்னிமை (virginity of Mary) மற்றும் இயேசுவின் கன்னிப்பிறப்பு (virgin birth of Jesus) ஆகிவற்றிலிருந்து வேறுபட்டதாகும்.

பிறப்புநிலைப் பாவமும் செயல்வழிப் பாவமும்

தொகு

கத்தோலிக்க திருச்சபை மரியாவை அமலோற்பவ அன்னை என்று அழைக்கும்போது, மரியா முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவா ஆகியோரின் கீழ்ப்படியாமையால் இவ்வுலகில் நுழைந்த பாவமாகிய பிறப்புநிலைப் பாவத்திற்கு உட்படாமல் கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்று போதிக்கிறது. எல்லா மனிதரைப் போலவே மரியாவும் ஒரு மனிதப் பிறவிதான். ஆனால், கடவுள் மரியாவைத் தனிப்பட்ட விதத்தில் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்தார் என்பது கத்தோலிக்க திருச்சபையின் போதனை.[3]

பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட மரியா பிற மனிதரைப்போல செயல்வழிப் பாவத்தில் விழவில்லை. கடவுளுக்கு எதிராக அவர் ஒருபோதும் செயல்படவில்லை. கடவுள் அவருக்கு அளித்த சுதந்திரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. இதற்குக் கடவுளின் தனிப்பட்ட அருள் மரியாவுக்கு வழங்கப்பட்டது.[4]

அமலோற்பவமும் இயேசுவின் கன்னிப்பிறப்பும்

தொகு

இயேசுவின் தாயாகிய மரியா பாவக் கறை படியாமல் கடவுளின் தனி அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை ஒன்று; மரியா இயேசுவை ஆண்துணையின்றி தூய ஆவியின் வல்லமையால் கருத்தரித்து உலகுக்கு ஈந்தார் என்னும் மறையுண்மை மற்றொன்று. சிலர் இந்த இரண்டு மறையுண்மைகளையும் பிரித்தறியாமல் குழப்புவதும் உண்டு.

மரியாவின் பெற்றோர் சுவக்கீன், அன்னா என்பது மரபு. அவர்கள் மரியாவை ஈன்றெடுத்தபோது பிற மனிதர்களைப் போல தாம்பத்திய உறவின் வழியாகவே பெற்றார்கள். ஆனால் அன்னாவின் உதரத்தில் கருவான மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்தினால் பாதிக்கப்படாமல் பாதுகாத்தார். இவ்வாறு மரியா கடவுளின் மகனாகிய இயேசுவைப் பெற்றெடுக்க கடவுளுக்கு உகந்த கருவியாக மாறினார்.

மரியாவைக் கடவுள் பிறப்புநிலைப் பாவத்திலிருந்து பாதுகாத்ததற்கு இயேசுவின் சிலுவைச் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக நிகழ்ந்த மீட்புதான் வழியாக அமைந்தது. வரலாற்றில் இயேசு வந்து தோன்றுவதற்கு முன்னரே கடவுள் அந்த மீட்பின் பலனை மரியாவின் வாழ்வில் எதார்த்தமாக்கினார்.

மரியா அமல உற்பவியாக உள்ளார் என்பதைக் கத்தோலிக்க திருச்சபையும் மரபுவழித் திருச்சபைகளும் ஏற்கின்றன. அமலோற்பவியான மரியாவின் திருவிழா திசம்பர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடடப்படுகிறது. அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிடப்பட்டு மரியாவின் பிறந்தநாள் திருவிழா செப்டபர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மரியாவின் அமலோற்பவத்துக்கு விவிலிய அடிப்படைகள்

தொகு

மரியா பிறப்புநிலைப் பாவத்திலிருந்து கடவுளின் தனிப்பட்ட அருளால் பாதுகாக்கப்பட்டார் என்னும் மறையுண்மை அப்படியே எழுத்துக்கு எழுத்து என்னும் முறையில் விவிலியத்தில் இல்லை. ஆனால் அந்த மறையுண்மையின் அடிப்படைகள் விவிலியத்தில் உள்ளன. கத்தோலிக்க திருச்சபை அந்த விவிலிய அடிப்படைகளையும் வரலாற்றுப்போக்கில் கிறித்தவ நம்பிக்கையாகத் திருச்சபை நடைமுறையில் விசுவாச உண்மையாக ஏற்றவற்றையும் கருத்தில் கொண்டு மரியாவின் அமலோற்பவத்தை ஏற்றுக் கற்பிக்கிறது.

பழைய ஏற்பாடு

தொகு

விவிலியத்தின் முதல் நூலாகிய தொடக்க நூலில் மனிதகுல மீட்புப் பற்றிய முன்னறிவிப்பு உள்ளது. கடவுளால் படைக்கப்பட்ட முதல் பெண்ணாகிய ஏவா மரியாவுக்கு முன்னடையாளமாக உள்ளார்:

முதல் பெண் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்தார். ஆனால் மரியா கடவுளுக்குக் கீழ்ப்படிந்து தம்மை முழுவதும் அவர் கைகளில் ஒப்படைத்தார். இயேசு கிறிஸ்து பாவத்தின்மீது வெற்றிகொண்டதுபோல மரியாவும் அவருக்குக் கீழ்ப்பட்ட நிலையில், அவரோடு இணைந்து, கடவுளின் தனிப்பட்ட அருளால் பாவத்தை முறியடித்தார்.

பழைய ஏற்பாட்டு நூல்களாகிய நீதிமொழிகள் மற்றும் இனிமைமிகு பாடல் ஆகிய நூல்களிலும் மரியாவின் அமலோற்பவம் பற்றிய குறியீடுகள் உள்ளதாகத் திருச்சபை விளக்கம் தருகிறது. எடுத்துக்காட்டாகச் சில பாடங்கள்:

புதிய ஏற்பாடு

தொகு

புதிய ஏற்பாட்டில் குறிப்பாக லூக்கா நற்செய்தி மரியா கடவுளின் அருளால் நிரம்பியிருந்ததைக் குறிப்பிடுகிறது:

இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனை

தொகு

1962-1965இல் நடந்தேறிய வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்[5] மரியா அமலோற்பவியாகப் போற்றப்படுவதைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

அமலோற்பவ அன்னையாக மரியா அளித்த காட்சிகள்

தொகு

கத்தோலிக்க திருச்சபை அன்னை மரியாவை அமலோற்பவத் தாயாக வணங்குவதை உறுதிப்படுத்தும் விதத்தில் இரு தருணங்களில் மரியா காட்சியளித்ததையும் குறிப்பிடலாம்.

  • 1830ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் அன்னை மரியா புனித கத்தரீன் லபோரே என்பவருக்குக் காட்சி அளித்தார். அப்போது அன்னை மரியாவைச் சுற்றி முட்டை வடிவில் தோன்றிய ஒளி வட்டத்தில், "ஓ பாவமின்றி உற்பவித்த மரியாவே, உம்மை அண்டி வரும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்" என்ற வார்த்தைகள் காணப்பட்டன.
  • 1858ஆம் ஆண்டு, மரியா அமலோற்பவ அன்னையாக இருக்கின்றார் என்னும் உண்மை மறையுண்மையாக அறிவிக்கப்பட்ட நான்காம் ஆண்டில், புனித பெர்னதெத் சுபீரு என்பவருக்கு மரியா லூர்து அன்னையாக காட்சியளித்தார். அப்போது மரியா "நானே அமலோற்பவம்" (Que soi era immaculada concepcion - தென் பிரான்சிய நாட்டுமொழி) என்று கூறினார்.

படத் தொகுப்பு

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. மரியாவின் அமலோற்பவம்
  2. "The most Blessed Virgin Mary, in the first instance of her conception, by a singular grace and privilege granted by Almighty God, in view of the merits of Jesus Christ, the Savior of the human race, was preserved free from all stain of original sin": அமலோற்பவம் பற்றிய அறிக்கை பரணிடப்பட்டது 2013-03-14 at the வந்தவழி இயந்திரம்
  3. Encyclical Mystici Corporis, 110
  4. Denzinger 833, old numbering).
  5. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள், தமிழ் மொழிபெயர்ப்பு. திருத்திய நான்காம் பதிப்பு, தேடல் வெளியீடு: தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி 2001.
  • Le Franc, Martin. The Conception of Mary -- A Rhyming Translation of Book V of Le Champion des Dames by Martin Le Franc (1410-1461). Ed. and trans. Steven Millen Taylor. Lewiston, NY: The Edwin Mellen Press, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலோற்பவ_அன்னை&oldid=3735520" இலிருந்து மீள்விக்கப்பட்டது