அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்

தமிழ்நாட்டில் உள்ள கோயில்
(அய்யர் மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

தேவாரம் பாடல் பெற்ற
திருவாட்போக்கி (அய்யர் மலை) இரத்னகிரீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவாட்போக்கி (ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, ரத்னகிரி,
பெயர்:திருவாட்போக்கி (அய்யர் மலை) இரத்னகிரீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:அய்யர் மலை, (அல்லது) ரத்னமலை, ரத்னகிரி
மாவட்டம்:கரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ரத்னகிரீஸ்வரர் (ராஜலிங்கர், வாள்போக்கி நாதர்), அரதனாசலேஸ்வரர், மாணிக்கீசர், முடித்தழும்பர்.
தாயார்:சுரும்பார்குழலி
தல விருட்சம்:வேம்பு
தீர்த்தம்:காவேரித்தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்
அய்யர்மலை

வரலாறு

இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி. காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். மணி முடி இழந்த ஆரிய மன்னன் ஒருவன் இத்தலத்திலுள்ள இறைவனுக்கு அபிசேக ஆராதனைகள் செய்கின்ற போது அங்குள்ள கொப்பரையில் காவேரி தீர்த்தம் ஊற்றி நிரப்பப்பட்டது. ஆனால் தீர்த்தம் ஊற்ற ஊற்ற கொப்பரை நிரம்பவே இல்லை.

ஊர் மக்கள் அனைவரும் ஊற்றியும் நிரம்பாததால் மன்னன் கோபம் கொண்டு தன் வாளை உருவி சுவாமி மீது வீசினான். இதனால் சுயம்புவில் இருந்து ரத்தம் வந்தது. இதையடுத்து மன்னன் தன் தவறை உணர்ந்து இறைவனை வணங்கினான். இதையடுத்து இறைவன் தோன்றி மன்னனுக்கு அருளாசி வழங்கி இரத்தினங்களை வழங்கினான். அந்த தழும்பு இன்னும் சுவாமியின் முடியில் உள்ளது.

பாடல் பெற்ற தலம்

தொகு

இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். [2] மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

சிறப்புகள்

தொகு
  • மாணிக்கம் வேண்டிவந்த ஓர் ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால் அதை நிரப்பச் சொன்னார் ; மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பவில்லை, நீர்த் தொட்டி நிரம்பாமல் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்டு தனது உடைவாளை எடுத்து மாணிக்கக்கல் வியாபாரியை வெட்ட, உடன் இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார்.
  • சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாட்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து மூலவர் மீது படுகிறது.
  • சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது.
  • இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
  • மூலவர் சுயம்பு மூர்த்தி.
  • கோயில், மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
  • இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)

ஓம் நமச்சிவாய ஓம் பகவான் ரத்தினகிரி திரு தலம் ஆகிய சுரும்பார்குழலி அம்மன் ஆலயம்ஆகிய இந்த ஐவர் மலை (என்ற) அய்யர் மலை ஓம் நமச்சிவாய

மூன்று தலங்கள்

தொகு

காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். [3]

திருத்தலப் பாடல்கள்

தொகு

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார் .
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே. .

விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே

நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே..

இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே

வெளி இணைப்புகள்

தொகு

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற கோயில்கள், தினகரன்". Archived from the original on 2020-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-02-01.
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. கி.ஸ்ரீதரன், ஐயர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.405