திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது, இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன், திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலேஸ்வரர் கோயில், சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து, காவேரி நதியைக் கடந்து செல்கையில், அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர், ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது, ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

தேவாரம் பாடல் பெற்ற
திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவிங்கநாதமலை, அளகரை, திருஈங்கோய்மலை
அமைவிடம்
ஊர்:திருஈங்கோய்மலை
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், மரகத நாதர்
தாயார்:மரகதாம்பிகை, லலிதா
தல விருட்சம்:புளியமரம்
தீர்த்தம்:அமிர்த தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
திருஈங்கோய்மலை
மலையில் ஏறல்
மலையிலிருந்து இறங்கல்

இந்த மலையை மரகதமலை என்பர். காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும், ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது, சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர், இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.

திருத்தல வரலாறு

தொகு

இத்தல நாதர், மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர், ஆதிசேஷனும், வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட, கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு, மரகதம் (பச்சைக்கல்) வீழ்ந்த இடமே, திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.

ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.

சிறப்புகள்

தொகு
  • அகத்திய மாமுனிவர், ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.
  • பார்வதி தேவி, இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.
  • மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு வருடமும், சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள், இம்மரகத நாதர் மீது படிவது, இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு.
  • இக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.
  • திரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.
  • சோழ மன்னர்கள், இத்திருக்கோயிலுக்கு இறையிலி அளித்ததாகக் கூறப்படுகினறது.

மூன்று தலங்கள்

தொகு

காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும், ஒரே நாளில் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில், இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர். [1]

திருத்தலப் பாடல்கள்

தொகு

63 நாயன்மார்களில், முதன்மையானவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர், இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்:

முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்

070 திருவீங்கோய்மலை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

(மா 5 / காய்)

(1, 5 சீர்களில் மோனை)


வினையா யினதீர்த் தருளே புரியும் விகிர்தன் விரிகொன்றை
நனையார் முடிமேல் மதியஞ் சூடும் நம்பா னலமல்கு
தனையார் கமல மலர்மே லுறைவான் தலையோ டனலேந்தும்
எனையா ளுடையான் உமையா ளோடும் ஈங்கோய் மலையாரே! 7


பரக்கும் பெருமை இலங்கை யென்னும் பதியிற் பொலிவாய
அரக்கர்க் கிறைவன் முடியுந் தோளும் அணியார் விரல்தன்னால்
நெருக்கி யடர்த்து நிமலா போற்றி யென்று நின்றேத்த
இரக்கம் புரிந்தார் உமையா ளோடும் ஈங்கோய் மலையாரே! 8.

இத்திருத்தலத்தின் மீதான பிறிதொரு தேவாரப் பதிகம் கீழே தரப்பட்டுள்ளது:

010 நக்கீரதேவ நாயனார் - திருஈங்கோய்மலை எழுபது!

பதினொன்றாம் திருமுறை

இரு விகற்ப நேரிசை வெண்பா

அடியும் முடியும் அரியும் அயனும்
படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்
இன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்
மன்னதென நின்றான் மலை!.1 - நக்கீரர் சுவாமிகள் அருளிய திருஈங்கோய்மலை எழுபது.

இவற்றையும் பார்க்க

தொகு

குறிப்புதவிகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  1. கி.ஸ்ரீதரன், ஐயர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.405