அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயர் (1711-1779) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுகள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர்.[1]

வாழ்க்கை வரலாறுதொகு

அருணாசலக் கவிராயர் கி.பி.1711-இல் தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்ல தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.[2] இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்துக் குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.[2]

சீர்காழியில் வாழ்ந்ததால் சீ[1] காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்ததுடன் பல நூல்களையும் இயற்றினார். இவர் படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779-இல் தமது 67-ஆவது வயதில் மறைந்தார்.

படைப்புகள்தொகு

ஆகியவை கவிராயரது படைப்புகள், இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது.

  • கைவல்ய நவநீதம் - தாண்டவராய சுவாமிகள் இயற்றியது இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார். இவ்வுரையே மிகச் சிறந்தது என ஞானத்தேடலில் உள்ள சாதகர்களுக்கு (பயிற்சியாளர்) மிகவும் அத்தியாவசியமானது என பலரும் கூறுகின்றர்.

அரங்கேற்றம்தொகு

அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார்.[2] ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.[1][2]

மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "இராமாயணக் கவிஞன்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்கீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது.

புகழ் பெற்றவைதொகு

"இராம நாடகக் கீர்த்தனை" என்ற நூல் பல பதிப்புகளில் வெளிவந்தது. தோடி, மோகனம், பைரவி, ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இராம நாடகக் கீர்த்தனைகள் பாடப்பெறுகின்றன.

சில இசைப்பாடல்கள்தொகு

பாடல் தொடக்கம் இராகம் தாளம்
1. யாரோ என்றெண்ணாமலே சங்கராபரணம் ஆதி தாளம்
2. யாரோ இவர் யாரோ பைரவி, சாவேரி ஆதி தாளம்
3. ராமனுக்கு மன்னன் இந்தோளம் ஆதி தாளம்
4. யாரென்று ராகவனை யதுகுலகாம்போதி ஆதி தாளம்
5. ஸ்ரீராம சந்திரனுக்கு மத்தியமாவதி ஆதி தாளம்
6. எனக்குன்இரு இராகமாலிகை ஆதி தாளம்
7. ஏன் பள்ளி கொண்டீர் மோகனம் ஆதி தாளம்
8. தில்லைத் தலம் போல சௌராஷ்டிரம் ஆதி தாளம்
9. துணை வந்தருள் புரிகுவாய் மேசகல்யாணி மிஸ்ரசாப்பு தாளம்
10. வந்தனர் எங்கள் கலியாண மத்தியமாவதி அடசாப்பு தாளம்

அருணாசலக் கவிராயருடைய கீர்த்தனைகளை எம். எஸ். சுப்புலட்சுமி, டி. கே. பட்டம்மாள், திரைநடிகையும் பாடகியுமான பானுமதி, என். சி. வசந்தகோகிலம் ஆகியோர் பாடிச் சிறப்பு சேர்த்தனர்.

உசாத்துணைதொகு

  • லேனா தமிழ்வானன் (பதிப்பாசிரியர்), தமிழ் மும்மணிகளின் கீர்த்தனைகள், மணிமேகலைப் பிரசுரம், சென்னை 600 017, முதற்பதிப்பு 1987. பக்கங்கள் 1-108.
  • மு.அருணாசலம், தமிழ்நாட்டில் பண்டை இசை மரபுகள் (பதிப்பு தெரியவில்லை, 1990க்கு முன வெளியிட்டது. டாக்டர் நா.மகாலிங்கம் அவர்களால் அச்சிட்டு நீதிபதி சிவசுப்பிரமணியத்தால் ராணி சீதை ஹாலில் வெளியிட்டது). மு. அருணாசலம், சித்தாந்தம் என்னும் மாத இதழில் (மாதிகையில்) ஏப்ரல் 1990, பக். 98-99ல் ஒரு கட்டுரையில் குறிப்பிட்ட படி முத்துத்தாண்டவர் வாழ்ந்த காலம் 1525-1625.

மேற்கோளும் குறிப்புகளும்தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்". Tuesday, August 26, 2008. நவம்பர் 25, 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
  2. 2.0 2.1 2.2 2.3 பேரா. ஞானாம்பிகை குலேந்திரன். "அருணாசலக் கவிராயர் அறிமுகம்". thamivu. org. நவம்பர் 25, 2012 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாசலக்_கவிராயர்&oldid=3380346" இருந்து மீள்விக்கப்பட்டது