ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை

ஆதிகேசவப் பெருமாள் கோவில் என்பது தமிழ்நாட்டின் சென்னை மாநகரம், சிந்தாதிரிப்பேட்டை, ஆதிகேசவபுரம் பகுதி, அருணாசலம் தெருவில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோவிலாகும்.

ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை
ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை is located in தமிழ் நாடு
ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை
ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை
ஆள்கூறுகள்:13°04′34″N 80°16′03″E / 13.076245°N 80.267535°E / 13.076245; 80.267535
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவிடம்:சிந்தாதிரிப்பேட்டை
சட்டமன்றத் தொகுதி:சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
மக்களவைத் தொகுதி:மத்திய சென்னை
ஏற்றம்:57 m (187 அடி)
கோயில் தகவல்
மூலவர்:ஆதிகேசவப் பெருமாள்
தாயார்:ஆதிலட்சுமி
குளம்:உண்டு
சிறப்புத் திருவிழாக்கள்:வைகுண்ட ஏகாதசி,
கிருஷ்ண ஜெயந்தி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கல்வெட்டுகள்:உள்ளன
வரலாறு
கட்டிய நாள்:சுமார் ஐநூறு ஆண்டுகள் தொன்மையானது
அமைத்தவர்:ஆதியப்ப நாராயண செட்டி

நெசவாளர்களின் குடும்பங்களை குடியமர்த்துவதற்காக புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநர் ஜார்ஜ் மார்டன் பிட், [1] உருவாக்கிய சிந்தாதிரிப்பேட்டையில் (சின்ன தறிப் பேட்டை), ஆதிகேசவப் பெருமாள் (விஷ்ணு), ஆதிபுரீஸ்வரர் (சிவன்) மற்றும் ஆதிவிநாயகர் (விநாயகர்) ஆகிய தெய்வங்களை மூலவராகக் கொண்டு மூன்று கோவில்கள் கட்டப்பட்டன. ஆதிகேசவப் பெருமாள் கோவில் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில் ஆகிய இரண்டு கோவில்களும் அருகருகே அமைந்திருப்பதால் அவை 'இரட்டைக் கோவில்கள்' என அழைக்கப்படுகின்றன. கிழக்கிந்திய கம்பெனியின் துபாஷும் வணிகருமான ஆதியப்ப நாராயண செட்டி அளித்த பொருளுதவியால் இந்தக் கோவில்கள் கட்டப்பட்டன.[2] [3] [4]

வரலாறு தொகு

சுங்குராமா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சிறந்த துணி வணிகராகவும் ஆங்கிலேயர்களுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர் ஆவார். இவர் 1711 ஆம் ஆண்டில் தலைமை வணிகரானார். 1717 ஆம் ஆண்டளவில் திருவொற்றியூர், சாத்தன்காடு, எண்ணூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம் ஆகிய ஐந்து கிராமங்களை, ஆண்டுக்கு 1200 பகோடாக்கள் செலுத்தி 12 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயர்களிடம் செல்வாக்குப் படைத்திருந்தார். புனித ஜார்ஜ் கோட்டைக்குள்ளிருந்த வெள்ளை நகரில் வீடு கட்டி குடியேறும் அளவிற்கு உரிமையையும் பெற்றிருந்தார். எனினும் வெள்ளை நகரில் இருந்த வீட்டை துணிக்கிடங்காக மாற்றினார். கூவம் நதி வளைந்து பாயும் இடத்தில் ஒரு தோட்ட வீடு கட்டிக் குடிபுகுந்தார்.[4]

நாளடைவில் ஐரோப்பிய துணி வணிகர்களின் அதிருப்திக்கும் ஆளானார். இந்தச் சமயத்தில் ஜார்ஜ் மோர்ட்டன் பிட் மே 14, 1730 ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுநரானார்.[1] கிழக்கிந்தியக் கம்பெனியினர் காலிகோ துணி வகைகளை மெட்ராஸில் உற்பத்தி செய்து இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பிட்டிற்கு முன்பு ஆளுநராகப் பதவி வகித்த ஜோசப் கொலட் (Joseph Collett) (பதவிக்காலம்: 1717 முதல் 1720 வரை) வடசென்னையின் காலடிப்பேட்டையில் (கொலட் பேட்டை) நெசவாளருக்கான ஒரு குடியிருப்பை ஏற்படுத்தியிருந்தார். மோர்ட்டன் பிட்டும் இது போல ஒரு நெசவாளர் குடியிருப்பை சுங்குராமாவின் தோட்டத்தில் அமைத்தார். மரநிழலும், துணி அலசுவதற்கு கூவம் நதியும் வசதியாக இருக்கும் என்று காரணம் சொல்லப்பட்டது. சுங்குராமா இதனை எதிர்த்து குரல்கொடுத்தார். இதன் பலனாக இவரிடமிருந்து வணிகர் சங்க தலைமைப் பொறுப்பும் பறிக்கப்பட்டது.[4]

1734 ஆம் ஆண்டளவில் மெட்ராஸ் மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து நூல் நூற்போர், நெசவுத் தொழிலாளர்கள், சாயமிடுவோர் சுங்குராமாவின் தோட்டத்தில் குடியேறினர். சின்னத் தறிப் பேட்டை என்ற பெயருடன் தொடங்கப்பட்ட பகுதியில், ஆளுநர் பிட், நெசவாளர்களின் குறியேற்றங்களை நிர்வாகிக்க ஆதியப்ப நாராயண செட்டி, சின்னதம்பி முதலியார் ஆகிய இரண்டு வணிகர்களை (இவர்கள் துபாஷாகவும் பணியாற்றினார்) நியமித்தார். 1737 ஆம் ஆண்டளவில் இங்கு சுமார் 250 நெசவாளர்கள் குடும்பங்கள் இருந்தனவாம். இந்த இரண்டு வணிகர்களும் நெசவாளர்களுக்கு வீடு கட்டிக்கொள்ள வட்டியின்றி கடன் வழங்கினார். இதற்குக் கைமாறாக இந்த இரு வணிகர்களும் நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணிகளை வாங்கி ஆங்கிலேயர்களிடம் விற்று கணிசமான இலாபம் பார்த்தனர்.[4][4][5]

ஆதியப்ப நாராயண செட்டி சிந்தாதிரிப்பேட்டை குடியேற்றத்தை நிர்வாகித்த இரண்டு துபாஷ்களில் ஒருவர் ஆவர். இவர் சிந்ததிரிப்பேட்டையில் ஆதி கேசவப் பெருமாள் கோவிலைக் கட்டினார். இவை மணலி முத்துகிருஷ்ண முதலியின் 'நகரக் கோவில்' (Town Temple) போல் இல்லாத ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதி கேசவப்பெருமாள் ஆகிய இரட்டை கோவில்கள் ஆகும்.[4][5][4]

கோவில் அமைப்பு தொகு

ஆதிகேசவப் பெருமாள் கோவிலின் நுழைவாயிலில் இராஜகோபுரம் இல்லை. வாயில் வரை மட்டுமே கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்ற அமைப்பாகும். இதனையொட்டி அமைந்துள்ள திருக்குளம் அதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் ஆகிய இருகோவில்களுக்கும் பொதுவானது ஆகும். குளத்தைச் சுற்றி உயரமான மதில்சுவர் எழுப்பியுள்ளார்கள். அருகே ஒரு நாற்கால் மண்டபம் அமைந்துள்ளது. கொடிமரம், பலிப்பீடம் மற்றும் விளக்குத்தூண் ஆகியனவற்றை நுழைவாயிலை ஒட்டிக் காணலாம். கருடன் கருவறையை நோக்கிய நிலையில் காணப்படுகிறார்.[2]

மூலவர் கருவறைக்கு இங்குள்ள மகாமண்டபத்தின் வழியாகச் செல்லலாம். மகாமண்டபத்தின் தூண்கள் விஜயநகரக் கலைப்பாணியில் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. தூண்களில் விஷ்ணுவின் பல்வேறு வடிவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் கூரையில் நன்கு மலர்ந்த தாமரை மலரைச் சுற்றி மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.[2]

கிழக்குப் பார்த்த மூலவர் கருவறையில் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியின் துணையுடன் ஆதிகேசவப் பெருமாள் அருள்பாலிக்கிறார். ஆதிகேசவப்பெருமாள் புற்றிலிருந்து தோன்றயவர் என்ற தொன்மைக் கதை இங்கு சொல்லப்படுகிறது. கருவறையின் நுழைவாயிலின் கல் நிலையை ஒட்டி கருங்கல்லில் செதுக்கப்பட்ட இரண்டு துவாரபாலர்களின் உருவங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. கருவறையின் நிலைவிட்டத்தின் ஆதிசேஷன் என்னும் ஐந்துதலை நாகம் படமெடுத்தாடும் படுக்கையில் அரிதுயில் நித்திரை புரியும் அனந்தசயனியைச் சுற்றி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி, தும்புரு மற்றும் பிரம்மன் ஆகியோரது உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.[2]

தாயார் ஆதிலட்சுமி வெளிப்பிரகாரத்தில் உள்ள கிழக்குப்பார்த்த தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். ஆண்டாள், நரசிம்மர், சக்கரத்தாழ்வார்- அனுமன், ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர்,ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபம் கட்டிடக்கலை ரீதியாக அழகுற அமைக்கப்பட்டுள்ளது.[2]

கோவில் திறந்திருக்கும் நேரம் தொகு

கோவில் காலை 07.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 05.00 மணி முதல் இரவு 08.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 George Morton Pitt Wikipedia
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 A deity that came from an anthill Chitra Madhavan The New Indian Express June 13, 2017
  3. The lost charms of Chinna Tari Pettai The New Indian Express, December 01, 2020
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 The dubashes of Chintadripet Muthiah, S. The Hindu, August 10, 2009
  5. 5.0 5.1 நினைவலைகள் தினமலர் ஆகஸ்ட் 19,2019

வெளி இணைப்புகள் தொகு