ஆப்பிரிக்கச் சிற்பம்
ஆப்பிரிக்கச் சிற்பம் என்பது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் கீழ்-சகாராப் பகுதியைச் சேர்ந்த பல்வேறு இன மக்களின் சிற்பங்களைக் குறிக்கும். பெரும்பாலான ஆப்பிரிக்கச் சிற்பங்கள் மரத்தினால் அல்லது அழியக்கூடிய பிற பொருட்களால் ஆனவை. அதனால், மிகப் பழைய சிற்பங்கள் இன்றுவரை நிலைத்திருக்கவில்லை. முந்திய மட்பாண்டச் சிற்பங்கள் பல பகுதிகளில் இருந்து கிடைத்துள்ளன. பல மக்களைப் பொறுத்தவரை முகமூடிகளும், மனித உருவங்களும் கலையின் முக்கியமான கூறுகள். பெரும்பாலானவை உண்மைத்தன்மை அற்றவை. பல்வேறுபட்ட பாணிகள் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும், ஒரே தோற்றச் சூழ்நிலைகளுக்குள்ளேயே அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, வேறுபடுகின்றன. அதேவேளை, பல்வேறு பிரதேசம் சார்ந்த போக்குகளும் காணப்படுகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில், நைகர் ஆறு, காங்கோ ஆற்று வடிநிலங்களில் வாழும் வேளாண்மைக் குழுக்களிடையே சிற்பங்கள் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன.[1] இப்பகுதியில் கடவுட்சிலைகள் மிகக் குறைவே. ஆனால், முகமூடிகள் சமயச் சடங்குத் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டன. தற்காலத்தில் முகமூடிகள் சுற்றுலாப் பயணிகளுக்காகச் செய்யப்படுகின்றன.[2] ஐரோப்பிய நவீன ஓவியங்களில் ஆப்பிரிக்க முகமூடிகளின் செல்வாக்கு உண்டு.
பிரதேச அடிப்படையில்
தொகுதற்கால சூடானில் இருந்த நூபிய குஷ் இராச்சியம் எகிப்துடன் நெருக்கமான தொடர்புகளை, பெரும்பாலும் பகைமையைக் கொண்டிருந்ததுடன், சிறப்பான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில், அறியப்பட்ட மிகப் பழைய சிற்பங்கள் நோக் பண்பாட்டைச் சேர்ந்தவை. இப்பண்பாடு, இன்றைய நைசீரியாவில் கிமு 500 முதல் கிபி 500 வரை செழித்திருந்தது. கோண வடிவங்களையும் நீளமான உடலையும் கொண்ட மண் உருவங்கள் இப்பண்பாட்டுக்கு உரியவையாக உள்ளன. பிந்திய மேற்கு ஆப்பிரிக்கப் பண்பாடுகளில், புகழ்பெற்ற பெனின் வெண்கலச் சிற்பங்கள் போன்ற வெண்கல வார்ப்புக்கள் அரண்மனைகளை அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்டன. இவற்றுடன் யொரூபா நகரமான இஃபே பகுதியைச் சேர்ந்த மண்ணிலும், உலோகத்திலும் செய்யப்பட்ட 12-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த இயற்கைத் தன்மையுடன் கூடிய அரசர்களின் தலைகளும் உள்ளன.
கிழக்காப்பிரிக்க மக்களிடையே சிற்பங்கள் பெரும்பாலும் காணப்படவில்லை.[3] ஆனால் இப்பகுதியில் கம்பச் சிற்பங்கள் உள்ளன. மனித வடிவில் செதுக்கப்படும் இச்சிற்பங்கள் வடிவவியல் வடிவங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. மேற்பகுதியில், விலங்குகள், மக்கள் மற்றும் பல உருவங்கள் செதுக்கப்படுகின்றன. இந்தக் கம்பங்கள் பின்னர் புதைகுழிகளுக்குப் பக்கத்தில் நடப்படுகின்றன. இக்கம்பங்கள் இறந்தவர்களுடனும், மூதாதையர் உலகத்துடனும் தொடர்புபடுத்தப்படுகின்றன.
சிற்பப் படங்கள்
தொகு-
நொக் மண்ணுருவங்கள், கிமு 6ம் நூற்றாண்டு–கிபி 6ம் நூற்றாண்டு
-
இஃபே தலை, மண்ணுருவம், கிபி 12–14வது நூற்றாண்டாக இருக்கக்கூடும்.
-
அரசியின் தாயின் சிற்பம், பெனின், 16ம் நூற்றாண்டு.
-
யோம்பே-சிற்பம், 19ம் நூற்றாண்டு.
-
16ம் நூற்றாண்டு யானைத்தந்த முகமூடி, பெனின்.
-
பெனின் வெண்கலச் சிற்பங்களுள் ஒன்று, 16–18ம் நூற்றாண்டு, நைசீரியா.
-
முகமூடி, புர்க்கினா பாசோ, 19ம் நூற்றாண்டு.
-
மாம்பிலா உருவம், நைசீரியா.
-
வகா சிற்பங்கள், எத்தியோப்பியா.