ஆரோக்கியசாமி வேலுமணி
ஆரோக்கியசாமி வேலுமணி (Arokiaswamy Velumani, பிறப்பு ஏப்ரல் 1959) என்பவர் ஒரு இந்திய தொழில்முனைவோர் ஆவார். நவி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நோயறிதல் மற்றும் தடுப்பு பரிசோதனைக்கூடங்களின் சங்கிலித் தொடரான தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். மேலும் இவர் நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட்டின் நிறுவனரும் ஆவார். இது தைரோகேருடன் இணைந்து கதிரியக்கமுறையில் நோய் கண்டறியும் நிறுவனமாகும்.[1]
ஆ. வேலுமணி | |
---|---|
பிறப்பு | 1959 (அகவை 64–65) கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கோவை சிறீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி
இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா, கோயம்புத்தூர் சென்னைப் பல்கலைக்கழகம் பாபா அணு ஆராய்ச்சி மையம் மும்பை மும்பை பல்கலைக்கழகம் |
பணி | தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தை உருவாக்கியவர் |
அறியப்படுவது | மருத்துவ நோயறிதல், தைராய்டு சோதனை, பகுப்பாய்வு உயிர்வேதியியல், அணு மருத்துவம் |
பெற்றோர் | ஆரோக்கியசாமி (தந்தை) சாயம்மாள் (தாய்) |
வாழ்க்கைத் துணை | சுமதி வேலுமணி (1986–2016) (her death) |
பிள்ளைகள் | ஆனந்த் வேலுமணி (பிறப்பு 1989) அம்ருதா வேலுமணி (பிறப்பு 1991) |
உறவினர்கள் | ஏ.சுந்தரராசு (சகோதரர்) ஏ. ரத்தினசாமி (சகோதரர்) சுசீலா செல்வராஜ் (சகோதரி) |
வலைத்தளம் | |
www |
துவக்ககால வாழ்க்கை
தொகுவேலுமணி 1959 ஏப்ரலில் இந்தியாவின், தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூருக்கு அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி புதூர் என்ற சிற்றூரில் நிலமற்ற விவசாயிக்கு பிறந்தார்.[2] இவரது தந்தை ஒரு விவசாயி, தாயார் ஒரு இல்லத்தரசி, அவர் எருமைகளை வளர்த்து, அதன் பாலை விற்று குடும்பத்தை நடத்திவந்தார்.[3] வேலுமணி அப்பநாயக்கன்பட்டி புதூரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் இவர் 1978 இல் 19 வயதில் தன் இளம் அறிவியல் பட்டத்தை சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்ற இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் பெற்றார்.[2] இவருக்கு மகாராஷ்டிர மாநிலம் பம்பாய் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை கிடைத்தது. அங்கு பணிபுரிந்து கொண்டே முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1995 ஆம் ஆண்டு மும்பை பல்கலைக்கழகத்தில் கேடயச் சுரப்பி உயிர்வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
தொழில்
தொகு1978 தன் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்த பிறகு, வேலுமணி 1979 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஜெமினி காப்ஸ்யூல்கள் என்ற சிறிய மருந்து நிறுவனத்தில் ஷிப்ட் வேதியியலாளராக வேலை செய்யத் தொடங்கினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நிறுவனம் மூடப்பட்டது. பின்னர் இவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் முதலில் ஆய்வக உதவியாளராக, 14 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த நேரத்தில் இவர் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்று அறிவியலாளர் பதவிக்கு உயர்ந்தார். பின்னர் இவர் மகாராட்டிரத்தின், பம்பாயில் உள்ள டாடா நினைவு மருத்துவமனையில் பி. ஏ. ஆர். சி. கதிர்வீச்சு மருத்துவ மையத்தில் பணியமர்த்தப்பட்டார்.[4]
அந்தக் காலகட்டத்தில் தைராய்டு பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. வேலுமணி தன் பணிசார்ந்து ஒரு ஆய்வில் ஈடுபட்டு வந்தார். ஆய்வின் நோக்கம் தைராய்டு பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்கான சாத்தியத்தை ஆராய்வதாக இருந்தது. ஆய்வின் முடிவில் இந்தியாவில் மிகக்குறைந்த செலவில் தைராய்டு பரிசோதனையை செய்யமுடியும் என்பதைக் கண்டறிந்தார்.[5] அதில் உள்ள தொழில் வாய்ப்பை உணர்ந்ததும் வேலையை விட்டு வெளியே வந்த வேலுமணி 1996-ம் ஆண்டு சொந்தமாக தைரோகேர் என்ற தைராய்டு பரிசோதனை மையத்தை நிறுவினார். இவர் தனது பரிசோதனை மையத்தில் கிளைஞர் (franchisee) மாதிரியை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் மலிவு விலையில் பரிசோதனை சேவைகளை வழங்கினார். தைரோகேர் தைராய்டு கோளாறுகளுக்கான பரிசோதனையிலிருந்து தடுப்பு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற நோய்களைக் கண்டறியும் இரத்த பரிசோதனைகள் என விரிவடைந்தது.[4]
இவரது தலைமையின் கீழ் தைரோகேர் இந்தியா, நேபாளம், வங்கதேசம், மத்திய கிழக்கு நாடுகள் என 1000 க்கும் மேற்பட்ட கிளை நிலையங்களின் வலையமைப்பைக் கொண்ட மிகப்பெரிய தைராய்டு பரிசோதனை மையமாக மாறியது.[4] 2016 ஏப்ரலில், தைரோகேர் அதன் முதல் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) வெளியிட்டு, 72.86 மடங்கு மிகு பங்களிப்பை அடைந்தது.[6]
வேலுமணி நியூக்ளியர் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். இது மகாராட்டிரத்தின் நவி மும்பையில் அதன் முக்கிய கிளையைக் கொண்ட கதிரியக்க நோயறிதல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் புற்றுநோய் தொடர்பான இமேஜிங் சேவைகளை மற்றவர்கள் செய்வதில் பாதி செலவில் வழங்கியது.[7] டாக்டர் ஏ. வேலுமணி போகஸ் டிபி மற்றும் ஆரோக்யம், என்ற இரண்டு ஹெல்த்கேர் பிராண்டுகளையும் அறிமுகப்படுத்தினார். அவை மலிவு விலையில், தரமாக காசநோய் கண்டறிதலில் கவனம் செலுத்தின. இவர் பெருநிறுவன நிகழ்வுகளில் ஊக்கமூட்டும் ஒரு வணிக பேச்சாளராக உள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தபோது தன் 27 வயதில் ஜே. கே. ராவ் மற்றும் சரளா ராவ் ஆகியோரின் மகளான சுமதியை மணந்தார். சுமதி பாரத ஸ்டேட் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். தைரோகேரைத் தொடங்க இணையர் இருவரும் தங்கள் வேலைகளை விட்டு வெளியேறினர்.[3] இந்த இணையருக்கு ஒரு மகன் – ஆனந்த் (பிறப்பு 1989), ஒரு மகள் – அம்ருதா (பிறப்பு 1991) ஆகியோர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலுமணி பணிபுரிந்த காலத்தில் பிறந்தவர்கள். சுமதி வேலுமணி 2015 அக்டோபரில் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 13 பிப்ரவரி 2016 அன்று தன் 55 வயதில் இறந்தார். வேலுமணி தன் மகன், மகளுடன் நவி மும்பையில் உள்ள தைரோகேரின் முக்கிய தலைமையகத்தில் அமைந்துள்ள நிறுவன குடியிருப்பில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nueclear Healthcare Limited Secures INR 22 Crores From Norwest Venture Partners (NVP)". www.marketwired.com. marketwired. 8 January 2013. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
- ↑ 2.0 2.1 "The Amazing Story of Thyrocare Technologies". The Second Take. 30 November 2008. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
- ↑ 3.0 3.1 "From 2 lakhs to 3,300 crores! How A Velumani did it!". Rediff.com. 28 July 2016. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
- ↑ 4.0 4.1 4.2 "An Indian farmer's son is now worth more than $300 million after his health care firm's IPO". www.qz.com. Quartz India. 13 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 October 2016.
- ↑ (in ta) சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்; ரூ.5,000 கோடி நிறுவனத்தை கட்டியெழுப்பியது எப்படி? - தைரோகேர் வேலுமணி பேட்டி. 2024-04-08. https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/1227828-interview-with-thyrocare-velumani.html.
- ↑ "Thyrocare IPO oversubscribed 72 times; second-best public issue show in 8 years". New Corp VCCircle. 29 April 2016. http://www.vccircle.com/news/healthcare-services/2016/04/29/thyrocare-ipo-oversubscribed-72-times. பார்த்த நாள்: 21 October 2016.
- ↑ "Now, Thyrocare promoter scans low-cost cancer diagnostics, treatment". The Hindu - Business Line. 25 December 2010. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-marketing/now-thyrocare-promoter-scans-lowcost-cancer-diagnostics-treatment/article1029642.ece. பார்த்த நாள்: 21 October 2016.