ஆர். சிவலிங்கம்

ஆர். சிவலிங்கம் (25 மே 1935 - 23 சூலை 2019) ஈழத்தின் மூத்த எழுத்தாளர். உதயணன் என்ற புனைபெயரில் ஏராளமான சிறுகதைகள், புதினங்களைப் படைத்தவர். புலம் பெயர்ந்து பின்லாந்து நாட்டில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இவர் பின்னர் இறுதிக்காலத்தில் கனடாவில் வாழ்ந்து வந்தார். பின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பை இவர் 1994இல் செய்யுள் நடையில் தமிழில் மொழிபெயர்த்தார். பின்னர் 1999 ஆம் ஆண்டு உரைநடையில் கலேவலா ஆர். சிவலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டது.[1][2]

இராமலிங்கம் சிவலிங்கம்
பிறப்புமே 25, 1935(1935-05-25)
உடுவில், யாழ்ப்பாணம்
இறப்புசூலை 23, 2019(2019-07-23) (அகவை 84)
தொராண்டோ, கனடா
மற்ற பெயர்கள்உதயணன்
அறியப்படுவதுஎழுத்தாளர்

ஆரம்ப வாழ்க்கை தொகு

இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உடுவில் என்னும் ஊரில் 1935 சூன் 25 இல் பிறந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். சிவலிங்கம் காங்கேசன்துறை உறோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் அனுராதபுரம் சென் யோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.

பணி தொகு

1955 - 1957 வரை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும், கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் சேவைக்குத் தெரிவாகி கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ்ப்பாணம் மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்று 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் போரை அடுத்து 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார்.

பின்லாந்தில் வாழ்க்கை தொகு

1983 இனக்கலவரத்தை அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் பின்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிய மொழியை இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர்.

எழுத்துலகில் தொகு

இவரது முதலாவது கவிதை 1955ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். 1961ஆம் ஆண்டில் கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது தேடி வந்த கண்கள் சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் சுதந்திரன், வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், கலைச்செல்வி, அல்லி, தம்ழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. இவருடைய இரண்டு புதினங்கள் பொன்னான மலரல்லவோ, அந்தரங்க கீதம் ஆகியவை 'வீரகேசரிப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.

கலேவலா மொழிபெயர்ப்பு தொகு

பின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. உதயணன் பல ஆண்டுகாலமாக பின்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தவர். அப்போது அவர் பின்லாந்து மொழியுடனும் அந்நாட்டுக் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், கலேவலாவின் பின்லாந்து-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது. இம்மொழிபெயர்ப்பை அடுத்து இவர் அந்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். கால்நூற்றாண்டு காலம் இவர் பின்லாந்தில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் புலம் பெயர்ந்து கனடா சென்றார்.[2][3]

வெளியான நூல்கள் தொகு

தளத்தில்
ஆர். சிவலிங்கம் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • பொன்னான மலரல்லவோ (நாவல், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1975)
  • அந்தரங்க கீதம் (நாவல், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1976)
  • கலேவலா, பின்லாந்தின் தேசிய காவியம் - கவிதை நடைத் தமிழ் மொழிபெயர்ப்பு – வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், அச்சுப் பதிவு: The Alternative Press, Hong Kong 1994
  • உரைநடையில் கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - உரைநடைத் தமிழாக்கம் - வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து, அச்சுப்பதிவு: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, தமிழ்நாடு.
  • உங்கள் தீர்ப்பு என்ன? (சிறுகதைத் தொகுதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2010)
  • பிரிந்தவர் பேசினால் (சிறுகதைத் தொகுதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2010)
  • பின்லாந்தின் பசுமை நினைவுகள் ENDLESS MEMORIES OF FINLAND. – 2015 வெளியீடு: தாய்வீடு பதிப்பகம், கனடா.

மேற்கோள்கள் தொகு

  1. "உரைநடையில் கலேவலா". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1999 - 2003). http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0143_01.html. பார்த்த நாள்: 3 ஆகத்து 2015. 
  2. 2.0 2.1 அஸ்கோ பார்பொலா. "கலேவலா (பின்லாந்தின் தேசிய காவியம்)". http://malaigal.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A/. பார்த்த நாள்: 29 ஏப்ரல் 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஆர் சிவலிங்கமும் கலேவலாவும்". ஜெயமோகன். https://www.jeyamohan.in/73565#.WuU0M5e-mMo. பார்த்த நாள்: 29 ஏப்ரல் 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சிவலிங்கம்&oldid=3680577" இருந்து மீள்விக்கப்பட்டது