ஆவூர் பசுபதீசுவரர் கோயில்
ஆவூர் பசுபதீசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வசிட்டரின் சாபம் பெற்ற காமதேனு பிரமனின் அறிவுரைப்படி வழிபட்டு சாபம் நீங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 21ஆவது சிவத்தலமாகும்.
தேவாரம் பாடல் பெற்ற ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | கோவந்தகுடி, ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம், அசுவத்தவனம்) |
பெயர்: | ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்) திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | ஆவூர் (கோவந்தகுடி). |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பசுபதீஸ்வரர், அஸ்வந்தநாதர், ஆவூருடையார். |
தாயார்: | மங்களாம்பிகை, பங்கஜவல்லி. |
தல விருட்சம்: | அரசு |
தீர்த்தம்: | காமதேனு தீர்த்தம், பிரம்ம, காமதேனு, சந்திர, அக்கினி, பொய்கையாறு முதலிய தீர்த்தங்கள் ( காமதேனு தீர்த்தம் வழக்கில் தேனதீர்த்தம் என்று சொல்லப்படுகிறது) |
ஆகமம்: | சிவாகமம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
தல வரலாறு
தொகுபூலோகத்திற்கு வந்த பராசக்தி, தவம் செய்வதற்காக இங்கு தங்கினாள். அப்போது இந்த இடம் வனமாக காட்சியளித்தது. அந்த வனத்திற்கு வந்த தேவர்கள் மரம், செடி, கொடிகளாக மாறி அன்னையை வழிபட்டு வந்தனர். பராசக்தியின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி தந்தார். எனவே இத்தல இறைவனுக்கு "கவர்தீஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. இந்த வனத்தின் பெருமையை காமதேனுவின் கன்றான "பட்டி' என்ற பசு உணர்ந்தது. மேருமலையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அப்போது வாயுபகவானால் வீசி எறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடகிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது. பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது பல ரிஷிகளும் தவமிருந்த தலம். காமதேனு, பிரம்மன், சப்தரிஷிகள், இந்திரன், சூரியன், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தசரதர் போன்றோர் வழிபட்ட தலம். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஐந்தடி உயரம் கொண்டது. ஏழடி உயரத்தில் வில்லும், அம்பும் ஏந்திய நிலையில் முருகப்பெருமான் காணப்படுகிறார்.
மேலும் சில
தொகு- ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.
- வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்.
- காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று
- கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.
- இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை இத்தலத்தில் உள்ள குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் 'பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.
தல சிறப்புகள்
தொகு- கோச்செங்கட் சோழன் திருப்பணி - மாடக் கோயில்.
- மணிகூடம், அசுவத்தவனம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
- சங்கப்புலவர்கள் ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார் முதலிய சான்றோர்களைத் தந்த ஊர்.
- கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.
- இத் தலத்தின் கல்வெட்டுச் செய்தியில் "நித்தவிநோத வளநாட்டைச் சேர்ந்த ஆவூர்க் கூற்றத்தைச் சேர்ந்த பசுபதீஸ்வரமுடையார் " என்று இறைவன் குறிக்கப்படுகிறார்.
திருநல்லூர் சப்தஸ்தானம்
தொகுதிருநல்லூர் சப்தஸ்தானங்களுள் ஒன்று ஆவூர் பசுபதீசுவரர் கோயில் ஆகும். பிற தலங்கள் - திருநல்லூர், கோவிந்தக்குடி, மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்), திருப்பாலைத்துறை ஆகியவையாகும். [1]
திருத்தலப் பாடல்கள்
தொகுஇத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே
தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர் நல்குர வென்னைநீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா ரங்கே அமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி யீச்சரம் பாடுநாவே..
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
வெளி இணைப்புக்கள்
தொகு- தல வரலாறு தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்
- சிறப்புக்கள், அமைவிடம்[தொடர்பிழந்த இணைப்பு]
- சம்பந்தர் பாடிய பதிகம் பரணிடப்பட்டது 2014-01-11 at the வந்தவழி இயந்திரம்
- தின மலர் கோவில் வரலாறு