இசைத் தூண்
இசைத் தூண் என்பது, இசை எழுப்பும் வகையில் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்ட கற்றூணைக் குறிக்கும். பெரும்பாலும் கோயில் மண்டபங்களின் ஒரு பகுதியாக அமைக்கப்படும் இசைத்தூண்கள் தமிழகத்தின் பல கோயில்களில் காணப்படுகின்றன. இசைத்தூண்கள் கட்டிடக்கலையின் ஒரு அம்சமாகவும் அமைவதால், பல்வேறு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடியவையாக அமைகின்றன. தென்னிந்தியாவில் இசைத் தூண்கள் தமிழ்நாட்டிலும் அயல் மாநிலங்களிலும் காணப்படுகின்றன. எனினும், தமிழ்நாட்டில், குறிப்பாகப் பண்டைய பாண்டிய நாட்டைச் சார்ந்த பகுதிகளிலேயே கூடுதலாகக் காணப்படுகின்றன. அத்துடன் இப்பகுதியில் உள்ள இசைத் தூண்களே மிகவும் சிறப்பு வாய்ந்தவை.[1]
தற்காலத்தில் இவ்வாறான இசைத் தூண்கள் பார்ப்பதற்கு ஆச்சரியம் தருவனவாகவும், அதனால், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகவும் மட்டுமே காணப்பட்டாலும், முற்காலத்தில் சில இசைத் தூண்கள் பூசை நேரங்களில் இசை எழுப்பப் பயன்பட்டன என்றும், வேறு சிலவற்றில் இசை மீட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாகவும் தெரிகிறது.
வகைகள்
தொகுஇசைத் தூண்களை இசை எழுப்பும் முறையைக் கொண்டு இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று தட்டும்போது இசை எழுப்புவன. மற்றது, தூணில் அமைக்கப்படும் துளைகளினூடாக ஊதும்போது இசை எழுப்புவன.[2] ஊதும்போது இசை எழுப்பும் தூண்கள் காற்று இசைக் கருவிகளின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவை "துளை இசைத் தூண்கள்" அல்லது "குழல் இசைத் தூண்கள்" என அழைக்கப்படுகின்றன. இவற்றில் இருந்து சங்கு, எக்காளம் ஆகிய கருவிகளின் ஒலியையே பெற முடியும். இசைத்தூண்களின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அவற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை, சுருதித் தம்பம், கானத் தம்பம், லயத் தம்பம், பிரதார்ச்சண தம்பம் என்பன.
இசைத்தூண்களின் குறுக்கு வெட்டுமுகமும் பல்வேறு வடிவங்களைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றுள், வட்டம், நெல்லிக்கனி, சதுரம், புரி, செவ்வகம், பல்கோணம் ஆகிய வடிவங்கள் குறிப்பிடத்தக்கவை.
அமைப்பு
தொகுபெரும்பாலான இசைத்தூண்கள் நடுவில் ஒரு கனமான தூணையும் அதைச் சுற்றிலும் அமைந்த விட்டம் குறைந்த பல தூண்களையும் கொண்டவை. இவை அனைத்தும் ஒரே கல்லிலேயே செதுக்கப்படுகின்றன. நடுத் தூணே கட்டிடக் கூரையின் சுமையைத் தாங்குமாறு அமைக்கப்படுகின்றன. வெளித் தூண்களே இசை எழுப்பும் தூண்கள். சில இடங்களில் இசைத் தூண்கள் இசை எழுப்பும்போது அருகில் உள்ள மற்றத் தூண்களும் சேர்ந்து ஒத்திசைவாக இசை எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும் நடுத் தூணின் பருமன் காரணமாக அது அதிர்ந்து இசை எழுப்புவதில்லை.[3] இசைத் தூண்கள் மூன்று முதல் ஆறு அல்லது ஏழு அடிகள் வரை உயரம் கொண்டவை.
இசைத் தூண்களைச் செய்வதற்கான கற்கள் சாதாரண கற்களில் இருந்து வேறுபட்டுச் சிறப்பான இயல்புகளைக் கொண்டவை. இவற்றைத் தேடிக் கண்டுபிடித்தே சிற்பிகள் இசைத் தூண்களை மிகுந்த கவனத்துடன் உருவாக்கியுள்ளனர்.[4] இசைத் தூண்கள் செய்யப்பட்ட கற்கள் கறுப்பு, சாம்பல், சந்தன நிறம் எனப் பல்வேறு நிறச் சாயைகளைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன.
தென்னகத்து இசைத் தூண்கள்
தொகுமதுரை, திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, கிருஷ்ணாபுரம், செண்பகராம நல்லூர், தென்காசி, திருக்குற்றாலம், சுசீந்திரம், திருவானைக்கா, தாடிக்கொம்பு, தாராசுரம், திருவனந்தபுரம், திருப்பதி, தாட்பத்திரி, லேபாக்சி, ஹம்பி, விஜயநகர், பங்களூரு, சாமராஜன் பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள கோயில்களில் இசைத்தூண்கள் உள்ளன. இவற்றுள் சில இசைத் தூண்களின் விபரங்கள் வருமாறு:[5][6]
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. இங்குள்ள இசைத்தூண்கள் நடுவில் ஒரு தூணையும் அதைச் சுற்றிலும் பவேறு வடிவங்களைக் கொண்ட 22 தூண்களோடு கூடிய அமைப்புக் கொண்டவை. தட்டும்போது வெவ்வேறு சுரங்களைக் கொடுக்கும் வெளித்தூண்களைப் பயன்படுத்தி நவரோஸ், குறிஞ்சி போன்ற இராகங்களை இசைக்க முடியும் எனச் சொல்லப்படுகின்றது.
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோயிலின் மணிமண்டபத்திலும், அம்பாள் சந்நிதியிலும் இரண்டிரண்டாக மொத்தம் நான்கு இசைத் தூண்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நடுவில் பெரிய தூணையும் சுற்றிலும் 48 சிறிய தூண்களையும் கொண்டு அமைந்தவை. வெளித்தூண்கள் வேறுபட்ட வடிவங்களையும், உயரங்களையும் கொண்டவையாக உள்ளன. சிறிய தூண்களைத் தட்டி வெவ்வேறு இசைச் சுரங்களை எழுப்ப முடியும்.
ஆழ்வார் திருநகரியில் உள்ள ஆதிபிரான் கோயிலிலும் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று தட்டும்போது மூன்று சுரங்களை எழுப்பக்கூடிய இசைத்தூணாக அமைந்துள்ளது. மற்றது ஊதி இசையெழுப்பும் தூணாகும். இத்தூணில் உள்ள இரண்டு துளைகளில் ஒன்று சங்கின் ஒலியையும், மற்றது எக்காள ஒலியையும் கொடுக்கின்றன.
செண்பகராம நல்லூரில் உள்ள பெருமாள் கோயிலில் உள்ள இசைத் தூண் ஊதி இசை எழுப்பும் குழல் இசைத் தூண் ஆகும். இதிலிருந்தும் சங்கு, எக்காளம் ஆகிய இசைக் கருவிகளின் ஒலியைப் பெறமுடிகிறது.
சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் முன்னர் குணசேகர மண்டபம் என்றும் தற்போது அலங்கார மண்டபம் என்றும் அழைக்கப்படும் மண்டபத்தில் நான்கு இசைத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் வடக்குப் பக்கத்தில் அமைந்த இரண்டு தூண்கள் ஒவ்வொன்றிலும், 24 சிறிய தூண்களும், தெற்குப் பக்கத் தூண்கள் ஒவ்வொன்றிலும் 33 சிறிய தூண்களும் உள்ளன. ஏழு சுரங்களையும் எழுப்பக்கூடியதாக இத்தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் இக்கோயிலைச் சேர்ந்த தேவதாசிகள் இத்தூண்களில் இசை மீட்டி நிகழ்ச்சிகளை நடத்தியதாகக் கூறப்படுகிறது.[7]
தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த தாடிக்கொம்பு சுந்தரராசப் பெருமாள் கோயிலில் விழாக்கால நிகழ்ச்சிகள் நடைபெறுகின்ற மண்டபத்தில் இசைத் தூண்கள் உள்ளன. இவை வேதம் ஓதுவது போன்ற ஒலியைத் தர வல்லவை எனச் சொல்லப்படுகிறது.
அழகர் கோயிலிலும் இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இங்கே நடுவில் ஒரு தூணும் அதைச் சுற்றி மூன்று அடிகள் உயரமான தூண்களும் உள்ளன. இவை தட்டும்போது ஒன்றிணைந்து ஒத்திசைவான இசையை எழுப்பக்கூடியன.
மேற்கோள்கள்
தொகு- ↑ இராகவன், அ., தமிழ்நாட்டுக் கோயிற் கட்டடக்கலை-1, அமிழ்தம் பதிப்பகம், 2007. பக் 220
- ↑ பவுண்துரை, இராசு., தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு - தூண்கள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2005. பக். 106
- ↑ இராகவன், அ., 2007. பக் 221
- ↑ இராகவன், அ., 2007. பக் 220
- ↑ பவுண்துரை, 2005. பக். 108-111
- ↑ இராகவன், அ., 2007. பக் 222-229
- ↑ இரவிக்குமார், வா., ஆலயங்களின் அதிசயம் - இசைத்தூண்கள், த இந்து, 24 டிசம்பர் 2015